ஆப்பிரிக்க இலக்கியத்தில் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தியவர் கூகி வா தியாங்கோ. நம் காலத்தின் மாபெரும் இலக்கியவாதிகளில் ஒருவராகத் திகழ்ந்தவர் அவர். காலனியம், நவகாலனியம் ஆகியவற்றுக்கு எதிராகப் போராடிவந்தார். கடந்த புதன் கிழமை தனது 87ஆம் வயதில் காலமானர் என்ற செய்தியை அதிகாரபூர்வமாக அறிவித்த அவர் மகன் எண்டுகா, தன் தந்தை நிறைவான வாழ்க்கை வாழ்ந்ததாகக் கூறினார். 1988இல் எனக்கு வ.கீதாவின் வழியாக அறிமுகமான பல ஆப்பிரிக்க எழுத்தாளர்களில் கூகியும் ஒருவர். சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், கவிதைகள், இலக்கியத் திறனாய்வுக் கட்டுரைகள், நினைவுக் குறிப்புகள், அரசியல் கட்டுரைகள், மொழியாக்கங்கள் என இலக்கியத்தின் ஒவ்வொரு துறையிலும் முத்திரை பதித்து எண்ணற்ற விருதுகள் படைத்த அவருக்கு ஐந்து முறை எதிர்பார்க்கப்பட்ட நோபல் பரிசு கிடைக்கவில்லை.
1964இல் அவர் ஆங்கிலத்தில் எழுதிய முதல் நாவல், ‘அழாதே, குழந்தாய்’ (Weep Not, Child). அவரது தாய்நாடான கென்யாவைத் தங்கள் காலனிகளில் ஒன்றாக மாற்றிய பிரிட்டிஷாரை எதிர்த்துப் போராடிய, ஜோமோ கென்யாட்டாவின் தலைமையில் நடத்தப்பட்ட ‘மாவ் மாவ்’ இயக்கத்தின் காலத்தில் வழ்ந்த இரு குடும்பங்களைப் பற்றிய அரசியல் நாவல். ‘மாவ் மாவ்’ என்பது அந்தக் கிளர்ச்சியை இழிவுபடுத்த ஆங்கிலேயர்கள் வைத்த பெயர். அதன் உண்மையான பெயர் ‘நிலத்திற்கும் சுதந்திரத்திற்குமான கென்ய சேனை’. கென்ய விடுதலைப் போராட்டத்தையும், கிறிஸ்தவ மதத்திற்கும் கென்யாவின் மரபான வழிபாட்டு முறைகளுக்கும் இடையில் இருந்த முரண்பாடுகளையும் மையமாகக் கொண்டு ‘ஒரு கோதுமை மணி’ (A Grain of Wheat). ‘குருதியின் இதழ்கள்’ (Petals of Blood) ஆகிய இரு நாவல்களையும் அவர் ஆங்கிலத்தில் எழுதினார்.
சுதந்திர கென்யாவில் ஆட்சிக்கு வந்த ஜோமோ கென்யாட்டாவின் அரசாங்கமும் நவகாலனியக் கொள்கைகளைப் பின்பற்றியதால் அதையும் கூகி எதிர்த்துவந்தார். கென்யாட்டாவின் மறைவுக்குப் பிறகு கென்யாவில் கொடுங்கோல் ஆட்சியை நிறுவிய டேனியல் அரப் மொய் என்பவரின் அரசாங்கத்தைக் கடுமையாக விமர்சித்துவந்தார். அப்போது அவரும் கூகி வா மாரி என்ற பெண்ணும் இணைந்து ‘நான் விரும்புமபோது மணம் புரிந்துகொள்வேன்’ என்ற நாடகத்தை கிக்கியு மொழியில் எழுதினர். நாடகப் முன் பயிற்சி இல்லாத லிமிரு என்னும் கிராம உழவர்களையே அந்த நாடகத்தில் நடிக்க வைத்தார். அதன் பொருட்டுத்தான் அவர் கைதுசெய்யப்பட்டு, ஓராண்டுக் காலம் சிறையில் அடைக்கப்பட்டார். அங்குச் சரியான உணவோ நாளேடுகளோ, புத்தகங்களோ, காகிதங்களோ தரப்படவில்லை.
ஆனால், சிறைக் கைதிகளுக்குத் தரப்படும் சொரசொரப்பான கழிப்பறைக் காகிதத்தில் எழுதியதாக ‘காவலில்’ (Detained) என்ற கட்டுரைத் தொகுப்பில் கூறுகிறார்: ‘கழிப்பறைக் காகிதம்: (ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபதுகளில் நான் க்வாமே நிக்ருமாவின் (Kwame Nkruma) சுயசரிதையான ‘கானா’வைப் (Ghana) படித்தேன். ஜேம்ஸ் கோட்டைச் சிறைச்சாலையில் தமது ‘செல்’லில் எழுதப் பயன்படுத்துவதற்காகத் கழிப்பறைக் காகிதத்தைப் பதுக்கி வைத்திருந்ததைக் குறிப்பிட்டிருந்தார். அதற்கான புகைப்படச் சான்றுகள் அந்த நூலில் தரப்பட்டிருந்த போதிலும் அது எனக்கு மிகையாகவும் கற்பனை கலந்ததாகவும் பட்டது. கழிப்பறைக் காகிதத்தில் எழுதுவதா? காகிதம், அது எந்தக் காகிதமாக இருந்தாலும் சரி, அரசியல் கைதிக்கு எத்தனை அருமையானது என்பது இப்போது எனக்குப் புரிகிறது. அதுவும் என்னைப் போலத் தனது எழுத்துக்காகச் சிறையில் அடைக்கப்பட்ட அரசியல் கைதியால் எழுதும் உந்துதலைத் தவிர்க்கவே முடியாது’.
அந்த கழிப்பறைக் காகிதத்தில் எழுதப்பட்டதுதான் அவரது நான்காவது நாவலான ‘சிலுவையில் சாத்தான்’. அதை அவர் முதலில் கிக்கியு மொழியில் எழுதி வெளியிட்ட பிறகு அவரே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அதன் பிறகு அவர் எழுதிய புனைவிலக்கியப் படைப்புகள் யாவும் கிக்கியு மொழியில் எழுதப்படவையே. ஆனால், தனது கருத்துகளை உலகிற்கு அறிவிக்கும் பிற ஆக்கங்களை ‘விளக்க எழுத்துகள்’ என்றழைத்தார் ‘உணர்விலிருந்து காலனியத்தன்மையை அகற்றுதல்’ (Decolonising the Mind) என்ற கட்டுரைத் தொகுப்பில் ‘பண்பாட்டு வெடிகுண்டு’ என்ற கருத்தை முன் வைக்கிறார்: ‘உலகிலுள்ள ஒடுக்கப்படும், சுரண்டப்படும் மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு முழக்கமிட்டு வருகின்றனர். திருட்டிலிருந்து விடுதலை என்பதுதான் அந்த முழக்கம். ஆனால், மக்களின் கூட்டு எதிர்ப்புக்கு எதிராக ஏகாதிபத்தியம் பயன்படுத்தும், அன்றாடம் கட்டவிழ்த்துவிடும் மிகப்பெரிய ஆயுதம் பண்பாட்டு வெடிகுண்டு ஆகும். மக்கள், தமது பெயர்கள் மீதும், தமது மொழிகள் மீதும், தமது சுற்றுச் சார்புகள் மீதும், தமது போராட்ட மரபுகள் மீதும், தமது ஒற்றுமையின் மீதும், தமது ஆற்றல்கள் மீதும் வைத்திருக்கும் நம்பிக்கையை அழித்தொழிப்பதும் இறுதியில் அவர்களுக்குத் தங்கள் மீது உள்ள நம்பிக்கையையும்கூட அழித்தொழிப்பதும்தான். மொழி ஒரு தொடர்பு ஊடகம், ஒரு பண்பாடு. ஒன்று மற்றொன்றை உருவாக்குகிறது.
மனிதர்களுக்கிடையே உள்ள தொடர்புகள் பண்பாட்டை உருவாக்குகின்றன. பண்பாடு என்பது தொடர்புகொள்வதற்கான ஊடகமாக அமைகிறது. மொழி, பண்பாட்டைத் தாங்கி நிற்கிறது. பண்பாடு - குறிப்பாக வாய்மொழிக் கலைகள், இலக்கியம் ஆகியன. அவை நாம் யார்? இந்த உலகத்தில் நமக்குள்ள இடம் என்ன? என்பதை நாம் புரிந்துகொள்ள ஆதாரமாகவுள்ள விழுமியங்களை தமக்குள் கொண்டுள்ளன. மக்கள் தாம் யார் என்பதைப் புரிந்துணரும் பாங்குதான் அவர்கள் தமது பண்பாட்டை, அரசியலை, சமூக உற்பத்தியை, இயற்கைக்கும் பிற உயிரினங்களுக்கும் தமக்குமுள்ள உறவை எவ்வாறு புரிந்துகொள்கிறார்கள் என்பதைத் தீர்மானிக்கிறது. இவ்வாறாகக் குறிப்பிட்ட வடிவம், இயல்பு, வரலாறு, உலகுடன் உள்ள குறிப்பிட்ட உறவு ஆகியவற்றைக் கொண்ட மானுட சமூகமான நம்மிடமிருந்து பிரிக்க முடியாததாக மொழி உள்ளது’
சிறையிலிருந்து மீண்ட பிறகும் அவர்மீது தொடர்ந்து ஒடுக்குமுறைகள் இருந்ததால், முதலில் பிரிட்டனுக்கும் பின்னர் அமெரிக்காவுக்கும் குடிபெயர்ந்தார். டேனியல் அரப் மொய் இறந்த பிறகு தன் இரண்டாவது மனைவியுடன் கென்யாவுக்குத் திரும்பி வந்த அவர், ஆயுதமேந்திய ஒரு குழுவால் பலமுறை தொல்லைக்குள்ளானர். அவரது மனைவி அவரது கண் முன்பே பாலியல் வன்முறைக்கு உள்ளானார். இதனால் சிறிதுகாலம் மனமுடைந்திருந்த அவர் தன் எழுத்தாயுத்தை மேலும் கூர்மையாக்கினார். கலிஃபோர்னியாப் பல்கலைக்கழகமொன்றில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற பிறகு , நுரையீரல் கோளாறு, சிறுநீரகப் பாதிப்பு, புற்று நோய் ஆகியவற்றால் கடும் பாதிப்புக்குள்ளான நாட்களிலும்கூட தனது புரட்சிகரக் கருத்துகளை இறுகப் பற்றிக் கொண்டிருந்தார்.