சிறப்புக் கட்டுரைகள்

முதியோருக்கான கொள்கையில் புதிய மாற்றங்கள் அவசியம்

பெ.நா.மாறன்

இன்றைய வாழ்க்கைச் சூழலில் மூத்த குடிமக்கள், நிதிப் பாதுகாப்பின்மை, மற்றவர்களைச் சார்ந்திருத்தல், எழுத்தறிவின்மை, சமூகப் பாதுகாப்பு தொடர்பான சிக்கல்கள், சுகாதாரச் சவால்கள், முதுமையால் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகள், தனிமை போன்ற பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள்.

இவற்றின் காரணமாக, முதியவர்களுக்கு மிகவும் வலுவான சமூகப் பாதுகாப்பு அமைப்புகள், வருமானம் ஈட்டும் வாய்ப்புகள் ஆகியவை தேவைப்படுகின்றன. நிம்​ம​தி​யான, ஓய்வான எதிர்கால வாழ்க்கைக்​காகச் சொத்து சேர்த்து வைக்​கும் மக்கள், மூத்த குடிமக்​களான பிறகு அப்படிப்​பட்ட நிம்​ம​தியான வாழ்க்கையை அனுபவிக்​கிறார்களா என்பது மிகப் பெரிய கேள்வி. இன்னொரு​புறம், கால மாற்​றங்​கள், மருத்துவ முன்னேற்​றங்​களின் அடிப்​படை​யில் முதி​யோர் என்ப​தற்கான வரையறைகள் இயல்பாக மாறிவரு​கின்றன. இந்தச் சூழலில், முதி​யோர் கொள்​கை​யில் புதிய மாற்​றங்கள் அவசி​யம்.

குடும்பச் சிறை: இன்றைய தேதி​யில், அறுபது வயதைக் கடந்​தவர்கள் ஓரளவுக்​காவது அசையாச் சொத்து வைத்​திருந்​தால் அதன் பின்னணி​யில், ஏராளமான உடல் உழைப்பு இருந்​திருக்​கும். ஏனென்​றால், முப்பது நாற்பது வருடங்​களுக்கு முன்பு வரை நிலம், கட்டிடம் போன்ற சொத்​துக்​களின் மதிப்பு குறைவாக இருந்​தா​லும், உடல் உழைப்​புக்கான ஊதிய​மும் மிக மிகக் குறை​வாகவே இருந்​தது. சம்பா​திப்​ப​தற்​காக, இளமை​யின் இனிமைகள் பலவற்​றைத் தியாகம் செய்ய வேண்​டி​யிருந்​திருக்​கும்.

குழந்தை​களின் பொருட்டு, அரசுப் பணியில் அல்லது தனியார் பணியில் கிடைக்​கும் உபரி வருமானங்​களுக்​காகத் தம்மை வருத்​திக்​கொண்​டிருந்​திருப்​பார்​கள். அலுவலகம் சார்பான வெளியூர்ப் பயணங்​களுக்​குக் கிடைக்​கும் படித்​தொகையை மிச்சம் பிடிப்​ப​தற்​காகச் சாதாரண சுகங்​களை​யும் இழந்​திருப்​பார்​கள். பொழுது​போக்கு அம்சங்​கள், உயர் வகுப்புப் பயணங்​கள், சொந்த வாகனம் போன்ற​வற்றை ஒதுக்கி வைத்​திருப்​பார்​கள். ஆனால், இந்த இழப்புகளை ஈடுசெய்​யும் வகையிலான அந்திமக் காலம் பலருக்கு வாய்ப்​ப​தில்லை.

தம்முடைய நிம்​ம​தியான எதிர்​காலத்​துக்காக என்று சேர்த்து​வைக்​கப்​பட்ட சொத்​துக்​களாலேயே பெரிய​வர்​கள், மற்றவர்​களின் தொந்​தர​வுக்கு ஆளாகிறார்​கள். அதிலும் குறிப்​பாக, தம் வாரிசுகளாலேயே அதிகம் சங்கடப்​படு​கிறார்​கள். குடும்பப் பிரச்சினையை வெளி​யில் சொல்லக் கூடாது எனச் சொந்தச் சிறை​களில் அடைபட்​டபடி ரத்தக் கண்ணீரை மௌனமாக வடித்​துக்​கொண்டு தம்மை வருத்​திக்​கொள்​ளும்
முதி​ய​வர்கள் அதிகம்.

தேசியக் கொள்கை: பெரிய​வர்​களால் தாம் நினைத்த விதத்​தில் தம் பணத்தையே செலவழிக்க முடி​யாதபடி கண்ணுக்​குப் புலப்​படாத கட்டுக்கள் நம் நாட்​டில் நிறைய உள்ளன. பணமும் வசதி​யும் இருந்தும் சரியான உணவு கிடைக்காத கொடுமை பல முதி​ய​வர்​களுக்கு இருப்பதை மறுக்க முடி​யாது. வயதில் மூத்த பெற்​றோர் தம் வாரிசுகளால் சர்வ​சா​தா​ரண​மாகக் கைகழுவி விடப்​படு​கிறார்​கள்.

பெண் குழந்தைகளை மட்டுமே பெற்று அவர்களை மணமுடித்​துத் தந்த பெற்​றோர்; புதிய சூழல், பழக்​கமில்லாத மொழி, கலாச்சார வேறு​பாடு​களால் - வெளி​நாடு​களில் வசிக்​கும் பிள்​ளை​களுடன் சென்று தங்க இயலாத பெற்​றோர்; வேலைப் பளுவின் காரண​மாக​வும் குடும்பச் சுமை​யின் காரண​மாக​வும் தனிக்​கவனம் செலுத்த நேரமில்லாத பிள்​ளை​களின் பெற்​றோர்; முழுநேரச் செவிலியர் துணை தேவைப்​படும் அளவுக்கு உடல்​நலக் குறை​வானோர் என்று இன்று தனிமை​யில் இருக்​கும் மூத்த குடிமக்​களின் வகைகள் ஏராளம்.

இவற்றை எல்லாம் மனதில் கொண்​டு​தான் 1999இல் முதி​யோர்​களுக்கான தேசியக் கொள்கை மத்திய அரசால் அறிவிக்​கப்​பட்​டது. அதன் விரிவுபடுத்​தப்​பட்ட வடிவத்​தில் மூத்த குடிமக்​களுக்கான தேசியக் கொள்கை (National Policy on Senior Citizens 2011) அமலுக்கு வந்தது. முதி​ய​வர்​கள், குறிப்பாக மூத்த பெண்​களின் நிதிப் பாது​காப்பு, சுகா​தா​ரம், தங்குமிடம் மற்றும் பிற தேவை​களுக்கு அரசு ஆதரவை வழங்கு​வதன் மூலம் அவர்​களுடைய நல்வாழ்வை உறுதி​செய்வது அதன் நோக்​கம்.

துஷ்பிரயோகம், சுரண்டல் போன்ற​வற்றில் இருந்து முதி​யோ​ருக்கான பாது​காப்பை உறுதி​செய்​வதோடு அவர்​களின் திறனை வளர்ப்​ப​தற்கான வாய்ப்புகளை உருவாக்கு​வ​தி​லும், சமூகத்​துக்கு அவர்​களின் பங்களிப்பை நாடு​வ​தி​லும் இது கவனம் செலுத்​தி​யது. இது மட்டும் போதாது. இன்னொரு விஷயத்தை​யும் பரிசீலித்தாக வேண்​டும்.

முதியோர் யார்? - மூத்த குடிமக்கள் என்போர் யார் என்பது குறித்து 06.05.2010இல் மாநிலங்​களவை உறுப்​பினர் விஜயகு​மார் ரூபானி எழுப்பிய கேள்விக்கு அப்போதைய சமூக நீதி - அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் நெப்​போலியன், “இந்தியா​வில் 60 வயதினைக் கடந்த எவரும் மூத்த குடிமக்கள் என்கிற தகுதி​யைப் பெறுகிறார்​கள்” என்று பதில் அளித்​தார். ‘பெற்​றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்புச் சட்டம் 2007’இன் அடிப்​படை​யில் அளிக்​கப்​பட்ட பதில் அது.

இந்தியா​வின் மக்கள்​தொகை 2000இல் 100 கோடி. அந்த ஆண்டில் இந்தி​யர்​களின் சராசரி ஆயுட்​காலம் 62.67 வருடங்​கள். எனவே, 2007இல் 60 வயது கடந்​தோரை மூத்த குடிமக்கள் என்று அறிவித்​திருக்​கலாம். இந்தி​யர்​களின் சராசரி ஆயுட்​காலம் 2021இல் 70.15 ஆண்டு​கள். அது 2025இல் 72.2 ஆக அதிகரித்​திருக்​கிறது. 2030இல் 74 ஆகவும் 2050இல் 80-க்கு மேல் இருக்​கும் என்றும் எதிர்​பார்க்​கப்​
படு​கிறது.

இந்தச் சூழ்​நிலை​யில், இப்போதும் 60 வயதினையே மூத்த குடிமக்​களுக்கான தகுதி வரம்பாக நீட்​டிப்பது சரியா என்னும் கேள்வி எழுகிறது. மனிதர்​களின் சராசரி ஆயுள் காலம் 62 என்றிருந்த காலத்​தில் 60 வயதைக் கடந்​தோர் மூத்த குடிமக்கள் என்று கருதப்​பட்டுச் சலுகைகள் பெற்று​வந்​தனர்; ஆனால், இன்று மனிதர்​களில் சராசரி ஆயுள்​காலம் 75ஐ நெருங்​கிக் கொண்டு இருக்​கும்​போதும் மூத்த குடிமக்​களுக்கான வயது வரம்பை ஏன் 60ஆகவே வைத்​திருக்​கிறோம்? அதனை ஏன் 70ஆக உயர்த்தக் கூடாது? இன்னு​மொரு 10 ஆண்டுகள் அவர்​களுடைய மனித சக்தி​யைத் தேச வளர்ச்சிக்கு ஆக்கபூர்​வமாக உபயோகிக்க ஏன் திட்​ட​மிடக் கூடாது?

மாற்​றத்​துக்கான தருணம்: இப்போதைய மருத்துவ உலகின் மேம்​பட்ட சிகிச்சை​களின் உதவி​யுடன் பெரும்​பாலான மனிதர்​களால் சராசரியாக எழுபது வயது வரை வேலைக்கான தகுதித் திறனுடன் இருக்க முடிகிறது. 60 வயதில் பணி ஓய்வு கொடுத்து அனுப்பிய பிறகு, அவர்​களில் தகுதி​யானவர்​களின் அனுபவ அறிவு, வேலைத் திறன்களை அரசுப் பணிகளிலோ, நிறுவன முன்னேற்றப் பணிகளிலோ சரியான வகையில் உபயோகித்​துக்​கொள்​ளும் மனிதவளக் கொள்​கைகள் தேவை.

இத்தனைக்​கும் மத்திய - மாநிலக் கல்வித் திட்​டங்​களில் மூத்த குடிமக்கள் குறித்த அடிப்படை விழிப்பு​ணர்​வைப் பள்ளிப் பருவத்​திலேயே ஏற்படுத்துவது என்கிற அம்சம், மூத்த குடிமக்​களுக்கான தேசியக் கொள்​கைப் பிரகடனத்​தில் இருக்​கிறது. மத்திய - மாநில அரசுகள் இரண்​டும் இணைந்து அந்தக் கொள்​கை​யின் பிரிவுகளை நடைமுறைப்​படுத்தத் தீவிரமான முன்னெடுப்புகளை எடுக்க​வில்லை என்பதே கசப்பான உண்மை. அவை நடைமுறைப்​படுத்​தப்​பட்​டால், மூத்த குடிமக்​களுக்கான கண்ணி​யமான வாழ்க்கைக்கு ஓரளவுக்கு உத்தர​வாதம் இருக்​கும்.

‘பெற்​றோர் - மூத்த குடிமக்கள் பராமரிப்புச் சட்டம் 2007’ பெற்​றோர் - மூத்த குடிமக்​களைப் பாது​காப்பது குடும்பத்​தா​ருடைய தலையாய கடமை என்று வலியுறுத்​திக் கூறுகிறது. அதற்கான விழிப்பு​ணர்வு, வழிகாட்டு​தல், வசதி வாய்ப்புகளை ஏற்படுத்​தித் தருதல் போன்ற​வற்றில் அரசின் பங்கு இன்னும் அதிக​மாகத் தேவைப்​படு​கிறது 2021இல் 100 வயதைக் கடந்து ​வாழ்ந்​தவர்​களின் எண்​ணிக்கை இந்தியா​வில் கிட்​டத்​தட்ட 3 லட்​சமாக இருந்​தது. அது, 2050இல் 20 லட்​சத்தைத் தொடும் என்று எ​திர்​பார்க்​கப்​படு​கிறது. இவர்​களுக்​குக் கௌர​வமான ​வாழ்க்கையை உறு​தி​செய்ய, தேசிய அளவிலான ​கொள்​கை​யில்​ ​மாற்​றங்​கள்​ வரும்​ என எதிர்​பார்​ப்​போம்​!

- மின்னஞ்சல்: pnmaran23@gmail.com

SCROLL FOR NEXT