சிறப்புக் கட்டுரைகள்

சாதிவாரிக் கணக்கெடுப்பு: சமூக நீதிக்கான ஒரே தீர்வு அல்ல! 

ஹரிஷ் எஸ்.வாங்கடே

நீண்ட காலமாக, இந்திய அரசின் பொதுநலக் கொள்கை உருவாக்கத்தில் மக்கள்தொகைக் கணக்கெடுப்புத் தரவுகள் முதுகெலும்பாகத் திகழ்கின்றன. சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, வீட்டு வசதி போன்ற துறைகளில் நுட்பமான திட்டமிடல்களை மேற்கொள்ளும் வகையில் இத்தரவுகள் பெரிதும் உதவிகரமாக இருந்தன. இந்நிலையில், அடுத்த தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போது - சாதிவாரிக் கணக்கெடுப்பையும் சேர்த்துக்கொள்வதாக - நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அண்மையில் தெரிவித்திருப்பது, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பிற்​படுத்​தப்பட்ட மக்களின் தேவைகளை நிறைவுசெய்யும் வகையில் துல்லியமான புள்ளி​விவரத் தரவுகளைச் சேகரிப்பது, பலருடைய நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. இருப்​பினும் சாதிவாரிக் கணக்கெடுப்பைத் தேவைக்கு அதிகமாக வலியுறுத்துவது, ஆளும் கட்சியின் அக்கறை, நோக்கம் ஆகியவை குறித்த கவலையை ஏற்படுத்து​கிறது. துல்லியமான தரவுகள் இல்லாத​தால்தான் விளிம்​புநிலை மக்களுக்கான நலத்திட்​டங்களை உருவாக்கு​வதில் - நியாயப்​படுத்த முடியாத அளவுக்கு - காலதாமதம் ஏற்படு​வ​தாகச் சொல்லப்​படு​கிறது.

மிகைப்​படுத்துவதன் ஆபத்து: பல்வேறு சாதிக் குழுவினர், குறிப்பாக பிற்படுத்​தப்பட்ட சாதியினரின் சமூக, பொருளாதார நிலையைக் கண்டறிய அறிவியல்​பூர்வமான தரவுகள் தேவை என சாதிவாரிக் கணக்கெடுப்பை ஆதரிப்போர் வாதிடு​கின்​றனர். ஆணையங்​களின் பரிந்துரையையும் அரசின் மதிப்​பீடு​களையும் நீதிமன்றம் சில நேரம் கேள்விக்கு உள்ளாக்கு​வ​தால், இத்தகைய தரவுகள் இருப்பது இடஒதுக்கீடு உள்ளிட்ட நலத்திட்​டங்​களைச் சட்டபூர்வமாக வழங்குவதற்கு அரசுக்கு உதவிகரமாக இருக்கும் என்று நம்பப்​படு​கிறது.

கூடுதலாக, பிற்படுத்​தப்​பட்டோர் பிரிவில் உள்ள மிகவும் பிற்படுத்​தப்பட்ட மக்களுக்கான சமூக, பொருளாதார வேறுபாடு​களைக் கண்டறிந்து, அவர்களுக்கு எனப் புதிய நலத்திட்​டங்களை உருவாக்​கவும் இத்தர​வுகள் பயன்படும். இத்தகைய வாதங்கள் எல்லாம் சரியானவைதான்: எனினும், சாதிவாரிக் கணக்கெடுப்​பினால் ஏற்படும் விளைவை மிகைப்​படுத்திக் கூறுவது ஆபத்தானது.

இந்தியா போன்ற பல்வேறு சமுதா​யங்​களைக் கொண்ட ஒரு நாட்டில், அரசின் முறையான சாதிவாரிக் கணக்கெடுப்பு கட்டாயம் தேவைப்​படு​கிறது. ஆனால், சாதிவாரிக் கணக்கெடுப்பைச் சமூக, பொருளாதார நீதிக்கு முன்நிபந்​தனையாக ஆக்குவதோ அல்லது அரசின் பொதுக் கொள்கையை உருவாக்கு​வதற்கான முதன்மை ஆவணமாக மாற்றுவதோ குறைபாடு உடையதாகும். இது மிகவும் ஆபத்தானது மட்டும் அல்ல; சாதிவாரிக் கணக்கெடுப்பின் நோக்கத்தையே தவறாகப் புரிந்து​கொள்​வதும் ஆகும்.

தரவுகளைத் தாண்டி... தலைமைப் பதிவாளர், இந்திய மக்கள்​தொகைக் கணக்கெடுப்பு ஆணையர் ஆகியோரின் பணி, உண்மையான, சார்பற்ற தரவுகளைச் சேகரித்து வழங்கு​வதுதானே தவிர, அரசின் சமூக நலத்திட்​டங்களை வரையறுத்து உருவாக்க வலியுறுத்துவது அல்ல. மக்கள்​தொகைக் கணக்கெடுப்பை அரசியல் சீர்திருத்​தத்​துக்கான ஒரு கருவியாக மாற்றுவது, அந்நிறு​வனத்தின் அதிகாரத்தை மீறிய செயல் என்பதோடு, அந்நிறு​வனத்தை அரசியல்​படுத்தும் ஆபத்துக்கும் அது வழிவகுக்கும்.

அதுவும் முற்றிலும் எதிரெதிர் அரசியல் சூழலில், மக்கள்​தொகைக் கணக்கெடுப்புச் செயல்​பாடு​களின் நோக்கத்தை நிலை நிறுத்துவது மிகவும் முக்கிய​மானது. அரசிடம் உள்ள தரவுகள், அறிவியல்​பூர்வமான ஆதாரங்கள் ஆகியவற்றின் அடிப்​படை​யில், நலிவடைந்த சமூகக் குழுக்​களுக்கான பொது நலத்திட்​டங்களை உருவாக்குவது, ஆளும் அரசில் உயர் பொறுப்பில் உள்ளவர்​களின் கடமையாகும். வரலாற்று அடிப்​படையில் பார்த்​தால், சமூக நீதிக்கான கொள்கைத் திட்டங்கள் முழுமையான தரவுகளுக்​காகக் காத்திருப்​ப​தில்லை.

குறிப்​பிடத்​தகுந்த முன்முயற்​சியான இடஒதுக்​கீடு, நிலச்​சீர்​திருத்​தங்கள், மண்டல் குழு பரிந்துரைகள் ஆகியவற்றை நடைமுறைப்​படுத்​தியது போன்றவை புள்ளி​விவரங்​களின் அடிப்​படையில் மேற்கொள்​ளப்​பட​வில்லை. மாறாக அரசியல் போராட்​டங்கள், பெருந்​திரளான மக்களின் ஒருங்​கிணைப்பு, ஆளும் அரசியல் வகுப்​பினரின் உறுதிப்பாடு ஆகியவற்​றால்தான் அவை சாத்தி​ய​மாகின.

இந்தியாவில் பொதுநலக் கொள்கைகள் மின்னணுத் தரவுகளாலோ, கணக்கெடுப்பு வரைபடங்​களாலோ தீர்மானிக்​கப்​படு​வ​தில்லை; அவை பெரும்​பாலும் தேர்தல் அரசியல் உத்திகள், கொள்கை உறுதி, பொது மக்களின் அழுத்தம் ஆகியவற்​றாலேயே தீர்மானிக்​கப்​படு​கின்றன. எடுத்​துக்​காட்டாக, மோடி அரசாங்​கத்தால் கொண்டு​வரப்பட்ட பொருளாதார அடிப்​படையில் நலிவடைந்த பிரிவினருக்கான இடஒதுக்கீடு திட்டம், உண்மையான புள்ளி​விவரத் தரவுகளாலோ, ஆணையத்தின் பரிந்துரைகளாலோ நடைமுறைப்​படுத்​தப்​பட​வில்லை. மாறாக, அத்தகைய கொள்கைத் திட்டத்தைத் துணிந்து செயல்​படுத்து​வதற்கான அதிகாரம் ஆளும் கட்சிக்கு உள்ளது என்பதையே இது காட்டு​கிறது.

தவிர, சாதிய ஏற்றத்​தாழ்வு​களின் அடிப்​படையிலான விரிவான தரவுகள் ஏற்கெனவே அரசிடம் உள்ளன. சுதந்​திரத்​துக்குப் பிறகு பத்தாண்​டு​களுக்கு ஒருமுறை எடுக்​கப்​படும் மக்கள்​தொகைக் கணக்கெடுப்​பில், பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடி​யினர் குறித்த தகவல்கள் இடம்பெற்று​வந்துள்ளன.

மக்கள்​தொகைக் கணக்கெடுப்பு, தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம், தேசியக் குடும்ப நல்வாழ்வுக் கணக்கெடுப்பு போன்ற பிற கணக்கெடுப்பு​களும் கல்வி, பொருளாதார - சமூகக் குறைபாடு​களைத் தொடர்ச்சியாக வெளிப்​படுத்தி வருகின்றன. பாலியல் வன்கொடுமைகள், பட்டியல் சாதியினர் - பட்டியல் பழங்குடி​யினர் மீதான வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் அடிப்​படையிலான வன்கொடுமைகள் தங்குதடை​யின்றி அதிகரித்து​வரு​வதைத் தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் ஆவணப்​படுத்​தி​யுள்ளது.

அதேபோல, பிஹார் மாநிலத்தில் எடுக்​கப்பட்ட சாதிவாரிக் கணக்கெடுப்பு, அதற்கு முன்னர் எடுக்​கப்பட்ட சமூக, பொருளாதார - சாதிக் கணக்கெடுப்பு ஆகியவை பிற்படுத்​தப்பட்ட பிரிவினர் இடையே உள்ள ஆழமான பொருளா​தாரப் பாதிப்பு​களையும் வேறுபாடு​களையும் அம்பலப்​படுத்தி உள்ளன. பெரும்​பாலான பிற்படுத்​தப்பட்ட வகுப்​பினர் முறைசாரா வேலைவாய்ப்பு, பாதுகாப்பற்ற குறைந்த வருவாய் ஈட்டும் பணிகளிலேயே சிக்கி, மிகக் குறைந்த சமூகப் பாதுகாப்புடன் அல்லது சமூகப் பாதுகாப்பு முற்றிலும் இல்லாமல், முன்னேற்​றத்​துக்கு வழி இல்லாத நிலைக்குத் தள்ளப்​பட்​டுள்ளனர் என்று அவ்வறிக்கைகள் தெரிவிக்​கின்றன.

அரசியல் துணிச்​சலின் அவசியம்: தரவுகள் ஏராளமாகக் கொட்டிக் கிடக்கும் நிலையில், மத்திய அரசு துணிச்சலான சீர்திருத்தக் கொள்கைத் திட்டங்களை இதுவரை நடைமுறைப்​படுத்​தவில்லை. குறிப்பாக, பிற்படுத்​தப்பட்ட மக்களைப் பொறுத்​தவரை, தேசிய அளவில் குறிப்​பிடத்தக்க கொள்கை வெற்றிடம் நிலவு​கிறது.

முக்கியமாக, செல்வாக்கு பெற்றுள்ள தனியார் பொருளா​தாரத் துறைகளான பெருநிறு​வனங்கள், தகவல் தொழில்​நுட்பத் தொழிற்​சாலைகள், ஊடக நிறுவனங்​களில் பட்டியல் சாதியினர், பழங்குடி​யினர், பிற்படுத்​தப்பட்ட மக்களின் பிரதி​நி​தித்துவம் மிகக்​குறைந்த அளவிலேயே இருப்​பதாக, பல்வேறு கல்விப் புல ஆய்வு​களும் அறிக்கைகளும் தெரிவிக்​கின்றன.

இருப்​பினும் இத்தகைய அதிகாரம் / சிறப்பு​ரிமையைப் பெற்றுள்ள நிறுவனங்​களில் அம்மக்​களின் பிரதி​நி​தித்து​வத்தை அதிகரிக்க, இதுவரை குறிப்​பிடத்தக்க நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்​ளப்​பட​வில்லை. மேலும், அரசு நிறுவனங்​களில் குறிப்பாக, உயர் கல்வித் துறை, நீதித் துறை, உயர் அதிகாரத் துறையிலும் அம்மக்​களின் பங்கேற்பு இல்லை. தற்போதுள்ள அறிவியல் ஆதாரங்​களின் அடிப்​படையிலான கணக்கெடுப்புகள், அறிக்கைகள், ஆய்வுகள், ஓர் அடிப்​படையான உண்மையை உணர்த்து​கின்றன.

அது, தரவுகள் பொதுநலக் கொள்கையை உருவாக்கு​வ​தில்லை என்பது​தான். மாறாக, ஆளும் வகுப்​பினரின் உள்ளார்ந்த நோக்கமும் மக்களின் ஜனநாயகபூர்வமான அழுத்​தமுமே பொதுநலக் கொள்கை உருவாகக் காரணமாக இருக்​கிறது. சாதிவாரிக் கணக்கெடுப்பு, நோயைக் கண்டறிய உதவலாம்; ஆனால் அதுவே நோயைக் குணப்​படுத்​தி​வி​டாது. தரவுகள் வெறும் வரைபடங்​கள்​தான்; அவை தன்னளவில் பயணத்தை நடத்த முடியாது.

நீதியின் பாற்பட்டு அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிப் பாதையில் இந்தியா முன்னேற வேண்டும் எனில், ஆளும் வகுப்​பினரின் அரசியல் - அறம் சார்ந்த கொள்கை நிலைநாட்​டப்பட வேண்டும் என்பதில் கவனம் செலுத்​தப்பட வேண்டும். அரசியல் உறுதிப்​பாடற்ற அறிவியல் ஆதாரங்கள் செயலற்​றவையே. தற்போதைய மத்திய அரசின் முன்னுள்ள உண்மையான சவால், சாதி அடிப்​படையிலான சமூக, பொருளா​தாரத் தகவல்​களைச் சேகரிப்​பதில் அல்ல; சமூகத்தில் பின்தங்​கிய​வர்​களின் நலனுக்காக, அர்ப்​பணிப்பு​டனும் துணிச்​சலுடனும் நடைமுறைப்​படுத்து​வ​தில்தான் இருக்​கிறது.

நன்றி: ‘தி இந்து’ (ஆங்கிலம்)
தமிழில்: புனித பாண்டியன்

SCROLL FOR NEXT