சிறப்புக் கட்டுரைகள்

தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை: ஆய்வுலகத்துக்கு ஒரு நல்வரவு

செ.இளவேனில்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரை ஒட்டி மாநிலத்தில் முதன்முறையாகப் பொருளாதார ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது கவனம் ஈர்த்தது. மாநிலத் திட்டக் குழுவின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள ‘தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை 2024-25’ தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கல்வியாளர்கள், பல்துறை ஆய்வாளர்கள், அரசியல் விமர்சகர்கள், இதழாளர்கள் என்று பல்வேறு தரப்பினருக்கும் பயன்படும் முக்கியமான சான்றாதாரம் இது.

பொருளியலின் அடிப்​படைக் கோட்பாடுகளை அறிந்​தவர்கள் மட்டுமல்​லாது, அனைத்துத் தரப்பினரும் வாசிக்​கத்தக்க வகையில் ஒவ்வொரு அத்தி​யா​யத்​திலும் எளிமையான அறிமுகம் வழங்கப்​பட்​டிருப்பது சிறப்பு. உதாரணத்​துக்கு, பணவீக்கம் குறித்த அத்தி​யாயம், பொருளியலில் அதன் முக்கி​யத்துவம் குறித்து எளிமையான அறிமுகத்தை வழங்கி​யுள்ளது. தொழில் துறை, சேவைத் துறைகளைப் பற்றிக் குறிப்​பிடும் ​போது, அவை ஒவ்வொன்றின் கீழும் இடம்பெற்றுள்ள துணைத் துறைகளைப் பற்றிய அறிமுகங்​களும் இடம்பெற்றுள்ளன.

தேசிய அளவில் ஒப்பீடு: தமிழ்​நாட்டின் பொருளா​தாரம் என்பது இந்தியாவைக் காட்டிலும் சர்வதேசப் பொருளா​தாரப் போக்கு​களோடு இணைந்து இயங்குவதை இந்த ஆய்வறிக்கை எடுத்​துக்​காட்​டி​யுள்ளது. வாகனங்கள், உதிரி பாகங்கள், ஜவுளி, தோல் பொருள்கள் முதலிய துறைகளில் தமிழ்நாடு முன்னணி ஏற்றும​தி​யாளராக இருப்பது சர்வதேசப் போக்குக்கு இணையாகப் பயணிக்க உதவுகிறது.

முதன்மைத் துறையான வேளாண்​மை​யில், வேளாண் கடன்கள் வழங்கு​வ​திலும் அங்கக வேளாண்​மை​யிலும் தமிழ்நாடு முன்னிலை வகிக்​கிறது. தமிழ்​நாட்டின் தனிநபர் வருமான வளர்ச்சி, தேசிய சராசரியைக் காட்டிலும் அதிகமாக உள்ளது. தொழில்​வளர்ச்சி பெற்ற மாநிலங்​களைப் போல, பெருநகரத்தையே மையமிட்டு தமிழ்​நாட்டின் தொழில் துறை இயங்காமல் மாநிலம் முழுவதும் பரவலாக அமைந்துள்ளது.

நகர்ப்பு​ற-ஊரக இடைவெளியும் இங்கே குறைவு. இந்திய அளவில், அதிக எண்ணிக்கையிலான தொழிற்​சாலைகளைக் கொண்ட மாநில​மாகத் தமிழ்நாடு விளங்கு​கிறது. இந்நிலை​யில், மாநிலத்தில் புதிய வேலைவாய்ப்பு​களைப் பெருமளவில் உருவாக்க, தொழில் துறை வளர்ச்சியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

அதற்கு, ஊரகத் தொழில்​முனை​வோருக்கு ஊக்கம் - ஆதரவு தருதல், திறன் மேம்பாடு, பெண்கள் பங்கேற்பு ஆகியவை அவசியம் என்று இந்த ஆய்வறிக்கை பரிந்துரைத்​துள்ளது. தமிழ்​நாட்டின் தொழில் வளர்ச்சியைத் தக்கவைத்​துக்​கொள்ளத் தொழில் துறை 4.0 தொழில்​நுட்​பங்​களில் தொழிலா​ளர்​களுக்கு மறுதிறன் பயிற்சி வழங்கிட வேண்டும் என்றும் இவ்வறிக்கை சுட்டிக்​காட்டு​கிறது.

இந்திய அளவில் வறுமை நிலை 11.28%ஆக இருக்​கும்போது தமிழ்​நாட்டின் வறுமை நிலை 1.43% என்ற அளவில் இருக்​கிறது என்று ஆய்வறிக்கை சுட்டிக்​காட்டுவது மிக முக்கிய​மானது. பணவீக்​கத்தின் அழுத்​தத்தைக் குறைப்​பதில் மாநில அரசு நடைமுறைப்​படுத்​தி வரும் சமூகநலத் திட்டங்​களும் பங்காற்றுகின்றன என்பதும் உணர்த்​தப்​பட்​டுள்ளது. காலநிலை மாற்றம் சார்ந்த செயல்​பாட்டில் தமிழ்நாடு முதலிடம் வகிப்பது நிதி ஆயோக் குறியீடு​களின் வழியே எடுத்​துக்​காட்​டப்​பட்​டுள்ளது. செல்ல வேண்டிய தொலைவு இன்னும் இருக்​கிறது. அதற்கான பாதையை இந்த ஆய்வறிக்கை தெளிவுபட எடுத்​துரைக்​கிறது.

சார்புகள் அற்ற ஆய்வு: உள்ளடக்​கத்தில் மட்டுமன்றி வடிவமைப்​பிலும் கவனம் கொண்டிருப்பது ஒவ்வொரு பக்கத்​திலும் தெரிகிறது. குறிப்பாக, தமிழ் மொழிபெயர்ப்பில் கலைச்​சொல்​லாக்​கத்தில் காட்டப்​பட்​டுள்ள அக்கறை. சரக்குப் பெயர்ச்சிமை (Logistics), ஆயத்தநிலை அலுவல​கங்கள் (Pluck and play), ஆளில்லா வான்கலங்கள் (Drones) என்பன போன்று துறைசார் வல்லுநர்​களால் கையாளப்​பட்டு​வரும் சொற்களை​யும், புதிய சொல்லாக்​கங்​களையும் பரவலான வாசகவெளிக்குக் கொண்டு​வந்து சேர்த்திருக்​கிறது இந்த மொழிபெயர்ப்பு.

ஆளுங்​கட்​சியின் சாதனை மலர்களில் ஒன்றாக்​கி​வி​டாமல், பொருளாதார ஆய்வறிக்கையை அத்துறை சார்ந்த முதனிலைச் சான்றா​தாரமாக உருவாக்கி, தமிழ்நாடு மாநிலத் திட்டக்குழு ஒரு முன்னு​தா​ரணத்தை உருவாக்கி​யிருக்​கிறது. இனிவரும் ஆண்டு​களிலும் பக்கச்​சார்​புகள் அற்ற அத்தன்மை தொடர வேண்டும் (பொருளாதார ஆய்வறிக்கையின் தமிழ், ஆங்கில வடிவங்கள் தமிழ் மின்னூல​கத்தில் (https://www.tamildigitallibrary.in/) வாசிக்கக் கிடைக்​கின்றன).

உடனடிச் செயலாக்கம்: ஆய்வறிக்கையின் பல பரிந்துரைகள் நடப்பு நிதிநிலை அறிக்கை​யிலேயே கவனத்தில் கொள்ளப்​பட்​டிருக்​கின்றன என்பதும் குறிப்​பிடத்​தக்கது. முதிய​வர்​களும் பெண்களும் பயன்படுத்த ஏற்றவகையில் வேளாண் இயந்திரங்கள் வழங்க முயற்சிகள் மேற்கொள்​ளப்பட வேண்டும் என்பது பொருளாதார ஆய்வறிக்கையின் பரிந்துரைகளில் ஒன்று.

நடப்பாண்​டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கை​யிலேயே அது கவனத்தில் கொள்ளப்​பட்​டுள்ளது. சிறு, குறு உழவர்கள் சிறிய நிலப்​பரப்பில் தாங்களே வேளாண் பணிகளை மேற்கொள்ள உதவும் வகையில் 7,900 விசைக் கலப்பைகளும் 6,000 விசைக் களையெடுப்​பான்​களும் மானிய விலையில் வழங்கப்​பட​வுள்ளன.

வேளாண்மையை இயந்திரமய​மாக்கும் திட்டத்தின் கீழ் நடவு இயந்திரம், விசைக் களையெடுப்பான் வாங்கு​வதற்கு சிறு, குறு உழவர்​களுக்கான மானியம் 50%இலிருந்து 60%ஆக உயர்த்​தப்​பட்​டுள்ளது. அதிகரித்து​வரும் முதியோர் எண்ணிக்கையைச் சுட்டிக்​காட்டும் ஆய்வறிக்கை, அவர்களுக்கான சுகாதாரம், நிதித் திட்ட​மிடல், உகந்த கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை வலியுறுத்​தி​யுள்ளது.

நடப்பு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்​கப்​பட்​டுள்ள மூத்த குடிமக்​களைப் பராமரிக்கும் பராமரிப்பு மையங்களான ‘அன்புச் சோலை’கள் அத்தகையதொரு தொலைநோக்குத் திட்ட​மிடலையே காட்டு​கிறது. ஆய்வறிக்கையின் பரிந்துரைகளை அடுத்​தடுத்த ஆண்டு​களிலும் இடைவெளி​யின்றிப் பின்தொடர வேண்டும்.

வேளாண்மை, தொழில், சேவை என்று பொருளாதார நோக்கில் மட்டும் அணுகாமல் சமூகநலன், காலநிலை மாற்றம் குறித்தும் தனி அத்தி​யா​யங்கள் இவ்வறிக்கையில் இடம்பெற்றுள்ளன. நீடித்த வளர்ச்சி குறித்து அக்கறை கொள்ளும் இந்த அறிக்கை, நடுத்தரக் கால நோக்கில் பொருளாதார வளர்ச்சிக்கான திட்ட​மிடலுக்கு வழிகாட்​டி​யுள்ளது.

எனினும், வேளாண்மையை அடுத்து அதிக வேலைவாய்ப்பைத் தரும் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் குறித்தும் விரிவான விவாதங்கள் முன்னெடுக்​கப்​பட்​டிருக்​கலாம். அதுபோல, கணிசமான அளவு அந்நியச் செலாவணியை ஈட்டித்​தரும் மருத்​துவச் சுற்றுலாத் துறை குறித்தும் இந்த ஆய்வறிக்கை கவனம் செலுத்​தி​யிருக்​கலாம்.

போட்டித் தேர்வர்​களுக்கு: போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்​களுக்கும் இந்த ஆவணம் பயன்படக்​கூடியது. இந்தியக் குடிமைப் பணித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் முதனிலைத் தேர்வில் சரியான விடையைத் தேர்ந்​தெடுக்கும் வினாக்​களுக்​காகவும் முதன்மைத் தேர்வில் விடையெழுதும் வினாக்​களுக்​காகவும் அவசியம் படிக்க வேண்டிய புத்தகங்​களில் இந்தியப் பொருளாதார ஆய்வறிக்கையும் ஒன்று.

குடிமைப் பணித் தேர்வு எழுதும் தமிழ்​நாட்டு மாணவர்​களுக்கும் தமிழ்நாடு ஆய்வறிக்கை இரண்டு விதங்​களில் உதவக்​கூடும். முதலாவது, பொருளியலின் அடிப்​படைகளைத் தமிழிலேயே படித்துப் புரிந்து​கொள்ளும் வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்​கும். இரண்டாவது, தமிழ்​வழியில் எழுதுபவர்​களுக்குப் பொருளியல் துறைசார்ந்த சொற்கள், அவற்றின் பயன்பாடுகள் குறித்த அறிமுகம் கிடைக்​கும்.

தமிழ்​நாட்டில் இறுதி​யாகப் பள்ளிப் பாடத்​திட்டம் திருத்​தி​யமைக்​கப்​பட்டு, அதன் அடிப்​படையில் பாடநூல்கள் வெளிவந்த பிறகு தேர்வாணை​யங்கள் அவற்றைப் பின்பற்றத் தொடங்​கி​யுள்ளன. இதனால் தேர்வு​களில் கேட்கப்​படும் கேள்வி​களின் தரமும் கூடியுள்ளன.

குடிமைப் பணித் தேர்வு​களைப் போல, மாநிலத் தேர்வாணை​யங்​களும் பொருளாதார ஆய்வறிக்கையி​லிருந்து வினாக்​களைக் கேட்கும்​பட்​சத்தில் பொருளியல் சார்ந்த கேள்வி​களின் தரம் இன்னும் கூடுவதற்கு வாய்ப்​பிருக்​கிறது. தற்போது நடைமுறையில் உள்ள வினாத்தாள் வடிவமைப்பு முறையிலுமே, தமிழ்​நாட்டுப் பொருளா​தாரம் தொடர்​புடைய கேள்வி​களைப் புரிந்து​கொள்ளவும் எளிதில் விடையளிக்​கவும் பொருளாதார ஆய்வறிக்கையை வாசிப்பது உதவியாக அமையும்.

- தொடர்புக்கு: ilavenilse@gmail.com

SCROLL FOR NEXT