சிறப்புக் கட்டுரைகள்

பெண்களின் பிரச்சினைக்குச் சமூகம் செவிமடுப்பது எப்போது?

கு.சௌமியா

பெண்களுக்கு உடலில் இயற்கையாக நிகழும் மாற்றங்களை அறிவியல்பூர்வமாக அணுகாம‌ல், அவர்களின் உடல் மீது கட்டுக்கதைகளையும் தேவையற்ற அழுத்தங்களையும் சமூகம் திணித்துள்ளது. மாதந்தோறும் நிகழும் மாதவிடாயைப் புனிதம் என்றும் தீட்டு, அசுத்தம் என்றும் வகைப்படுத்தியதால், சமூகத்தில் கடைக்கோடிப் பெண்கள் மாதவிடாய்க் காலங்களில் எதிர்கொள்ளும் சவால்களையும், அவற்றைப் பயன்படுத்திக்கொள்ளும் சந்தைப் பொருளாதாரத்தையும் பற்றி விவாதிக்கத் தவறிவிட்டோம். இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவில் பரவலாக இருக்கும் அவலம் இது!

கட்டுக்​கதைகள்: 19 ஆம் நூற்றாண்டில் உலகளவில் ‘நோய்க்​கிருமிக் கோட்பாடு’ பேசுபொருளானது. இக்கோட்​பாடு, மாதவிடாய் ரத்தத்தைத் தூய்மையற்​ற​தாக​வும், அருவருக்​கத்​தக்​க​தாகவும் வரையறுத்ததன் மூலம், தாங்கள் சுத்தமற்​றவர்கள் என்னும் தாழ்வு மனப்பான்​மையில் பெண்கள் சிக்க வைக்கப்​பட்​டனர். நோய்க்​கிருமிக் கோட்பாட்​டை​யும், பெண்களின் தாழ்வு மனப்பான்​மை​யையும் பயன்படுத்​திக்​கொண்ட பெருநிறு​வனங்கள், சில நறுமண​மூட்டும் பொருள்​களைத் திருமணமான பெண்கள் மத்தியில் திணித்தன.

இப்பொருள்கள் உடலை, குறிப்பாக இனப்பெருக்க உறுப்பை நறுமணத்​துடன் வைத்திருக்கும் தன்மை​ உடையவை. பெண் உடல் புத்துணர்ச்சி​யுட​னும், நறுமணத்​துடனும் இருக்க வேண்டும் என்பது ஆணாதிக்கச் சிந்தனை மட்டுமல்ல, பெருநிறு​வனங்​களின் சந்தைப் பொருளா​தா​ரத்​துக்கும் அது உதவுகிறது.

இச்சமூகம் மாதவிடாய் ரத்தத்தை அசுத்தம் என்று கூறுவதுடன் நிறுத்​திக்​கொள்ள​வில்லை, மாதவி​டாய்க் காலத்தில் பெண்களே அசுத்தம் எனக் கூறி வீட்டை​விட்டுப் பெண்களைத் தள்ளிவைக்​கிறது. இந்தியாவின் கிராமங்கள், சிறுநகரங்​களில் பெண்கள் இக்கொடுமை​களால் அவதிக்கு உள்ளாகிறார்கள். பெண்களை விலங்கு​கள்போல் வீட்டுக்கு வெளியிலும் கொட்டகை​யிலும் தங்கவைக்கும் குடும்​பங்கள் உண்டு.

வீட்டை​விட்டு எவ்வளவு தூரம், எத்தனை நாள் தங்குவது என்பது மட்டும் இடத்துக்​கும், குடும்பக் கலாச்​சா​ரத்​துக்கும் ஏற்றவாறு மாறுபடுமே தவிர, பெண்களை ஒதுக்​கிவைக்கும் பழக்கம் இன்னும் பரவலாகவே காணப்​படு​கிறது. தமிழகத்தின் சில கிராமங்​களில் ஊருக்கு ஒதுக்​குப்புறமான கட்டிடங்​களில் மாதவிடாய் நாள்களில் பெண்களைத் தங்கவைக்கும் பழக்கம் உள்ளது. நாமக்கல் மாவட்​டத்தில் புழக்​கத்தில் இருக்கும் ‘முத்து​வீடு’ கலாச்​சாரம் ஓர் உதாரணம். இவ்வாறான பழக்கவழக்​கங்கள் பெண்களின் மாண்பைச் சீர்குலைக்​கின்றன.

விலங்கு​களுக்கான கொட்டகை​யில், ஊருக்கு ஒதுக்​குப்புறமான தனி அறையில் தங்கவைக்​கப்​படும் பெண்கள் விஷக்​கடிகளுக்கும் பாலியல் அச்சுறுத்​தலுக்கும் ஆளாவதாக ஆய்வுகள் தெரிவிக்​கின்றன‌. கொடுமை என்னவென்​றால், குடும்பத்​துக்கு நல்லது எனக் கருதிப் பெண்களே இப்பழக்​கவழக்​கங்​களுக்கு உடன்படு​கின்​றனர். சாதியின் பெயரிலான ஒடுக்​கு​முறையைத் தீண்டாமை என்கிறோம், மாதவி​டாயின் பெயரில் தீட்டு என்கிறார்களே அதற்குப் பெயர் என்ன?

மாதவிடாய் வறுமை: உலகம் முழுவதும் சுமார் 180 கோடி பெண்கள் மாதவிடாயை எதிர்​கொள்​கின்​றனர். அவர்களில் பெரும்​பான்​மை​யினருக்கு நாப்கின்கள், சுத்தமான தண்ணீர், கழிப்பறை வசதிகள் போன்றவை கிடைப்​ப​தில்லை. ஐ.நா.வின் அறிக்கை இதைத் தெளிவுபடுத்து​கிறது. உலகின் 12 நாடுகளில் வாழும் 10 பெண்களில் ஒருவர் மாதவி​டாய்க் காலத்தில் நாப்கின் மாற்று​வதற்​கும், உடலைச் சுத்தப்​படுத்​திக்​கொள்​வதற்கும் இடம் இல்லாமல் அவதியுறுகிறார். இந்தியா, வங்கதேசம், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் வாழும் பெண்கள் நாப்கின்​களுக்குப் பதிலாகத் துணியைப் பயன்படுத்துவதாக ஐ.நா. அறிக்கை கூறுகிறது.

வளர்ந்த நாடு என்று பெருமைப்​பட்டுக்​கொள்ளும் அமெரிக்​காவில் பதின்​பருவப் பெண்களில் நான்கில் ஒருவருக்​கும், வயதுவந்த பெண்களில் மூன்றில் ஒருவருக்கும் மாதவி​டா​யின்போது பயன்படுத்து​வதற்கான பொருள்கள் கிடைப்​ப​தில்லை. லண்டனைச் சேர்ந்த 10 பெண்களில் 3 பேர் நாப்கின் கிடைக்​காமல் வேறு வழியின்றி டாய்லெட் பேப்பரைப் பயன்படுத்துவதாக அரசுசாரா நிறுவனமான ‘பிளான் இன்டர்​நேஷன’லின் ஆய்வறிக்கை கூறுகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை தரமான நாப்கின் வாங்கு​வதற்குக் குறைந்த​பட்சம் 45 ரூபாய் செலவு செய்தாக வேண்டும். ஏழை எளிய பெண்களுக்கு இது சாத்தி​ய​மானதல்ல. திருத்தணி அருகில் உள்ள கிராமங்​களில் வாழும் பழங்குடி​யினப் பெண்கள் பூப்பறிக்கச் செல்வதன் மூலம் 50 ரூபாய் மட்டுமே வருமானமாக ஈட்டு​கின்​றனர். இப்பெண்​களால் 45 ரூபாய் நாப்கினுக்காக மட்டும் எப்படிச் செலவு செய்ய முடியும்? தமிழக அரசு சார்பாக இலவச நாப்கின்கள் வழங்கப்​பட்​டாலும், அனைத்துப் பெண்களையும் இது சென்றடைவ​தில்லை என்பதுதான் உண்மை நிலை.

இந்திய நகரங்கள், பெயரளவில் மட்டுமே நவீனமயம் ஆகியுள்ளன. நகரங்களை உருவாக்கிய உழைப்​பாளர்​களுக்கு அடிப்படை வசதிகள்​கூடக் கிடைக்க​வில்லை. நகரத்தின் பெருவாரியான உழைப்​பாளர்கள் வாழும் குடிசைகளில் கழிப்பறை வசதியும் சுத்தமான தண்ணீரும் இருப்​ப​தில்லை. குடிசைப் பகுதி​களில் வாழும் பெண்கள் வெகுதூரம் பொதுக் கழிப்​பறைக்கு நடந்து சென்றாக வேண்டும். இரவிலும் விடியற்​காலை​யிலும் மட்டும் கழிப்​பறைக்குச் செல்லும் பெண்கள் நம்மிடையே அதிகம்.

இவர்களுக்கு மாதவி​டாய்க் காலம் எவ்வளவு சங்கடங்​களைத் தரும் என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டிய​தில்லை! கிராமங்​களில் பள்ளிக்​கூடம், நூலகம், அரசுக் கட்டிடம் மட்டுமல்​லாமல் கழிப்​பறை​களும்கூட, ஒடுக்​கப்பட்ட சமூகத்​தினர் வாழும் பகுதியில் அமையாதது ஒரு புதிர். என் சொந்த ஊரான பட்டுக்​கோட்டை அருகே​யுள்ள ஆலம்பள்ளம் என்னும் கிராமத்​தில்கூட இதே நிலைதான். பட்டியல் சாதி / பழங்குடிப் பெண்கள் கழிப்​பறையைப் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர். இவர்களின் மாதவிடாய் நாள்கள் மிகவும் கொடுமை​யானவை.

மாதவிடாய் விடுமுறை: மாதவிடாய் நாள்களின் அடிப்​படைத் தேவைகளில் ஓய்வும் அடங்கும். இன்றைய காலக்​கட்​டத்தில் சமூக முன்னேற்​றத்​துக்குப் பெண்களின் உழைப்பு இன்றியமை​யாதது. அப்படி​யிருக்க, ஊதியத்​துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு அவர்களின் உரிமை. பெண் உடலில் நிகழும் இயற்கை மாற்றங்​களுக்கான விடுமுறை என்கிற கருத்​தாக்கம் 19ஆம் நூற்றாண்டின் மத்தியக் காலத்தில் ரஷ்யா​வில்தான் முதன்​முதலில் உருவானது. அதன் பின் 1947இல் ஜப்பானில் பெண்களுக்கான பிரத்யேக விடுமுறைக் கொள்கை அறிமுகப்​படுத்​தப்​பட்ட​போதும், அக்கொள்கை நீண்டநாள் தாக்கத்தை ஏற்படுத்த முடிய​வில்லை.

சீனாவிலும், தென் கொரியா​விலும் மாதவிடாய் விடுமுறையை அந்நாட்டு அரசுகள் சட்டமாக்கி​யுள்ளன. இந்தோ​னேசியா, மெக்சிகோ போன்ற நாடுகளில் மாதவிடாய் விடுமுறைக் கொள்கை அமலில் உள்ளது. ஆனால், இந்திய அரசு சட்டமாகவோ, கொள்கை​யாகவோ மாதவிடாய் விடுமுறையை வரையறுக்க​வில்லை. கேரளத்தின் அனைத்துப் பல்கலைக்கழக மாணவி​களுக்கு மாதவிடாய் விடுமுறையை அம்மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் பிந்து அறிவித்தது, சற்று ஆறுதல் தரக்கூடிய செய்தி.

என்ன செய்ய வேண்டும்? - இந்தியாவில் சில நிறுவனங்கள் மாதவிடாய் விடுமுறையை அறிவித்​துள்ளன. ஆனால், அவற்றின் எண்ணிக்கை மிகச் சொற்பம். அனைத்து மாநிலங்​களிலும் மாதவிடாய் விடுமுறையை அமல்படுத்த வேண்டும். மாதவிடாய் நாள்களில் ஏற்படும் உடல் வலி, மன அழுத்தம் ஆகியவற்றுடன் வேலைச் சுமையையும் சுமப்பது பெண்களுக்கு எளிதான காரியமில்லை. மாதவிடாய் விடுமுறைக்கான பிரச்சார இயக்கத்தை முன்னெடுப்பது சமூகச் செயல்​பாட்​டாளர்​களின் முதன்​மையான கடமை.

வீடு, தொழில் நிறுவனங்கள், பொது வெளிகளில் தங்களின் உழைப்பைப் பெண்கள் அளவுக்கு அதிகமாகவே செலுத்து​கின்​றனர். அப்படி​யிருக்க அவர்கள் சோர்வுறும் நாட்களில் அரவணைக்கும் செயலைச் சமூகமாக முன்னெடுக்க வேண்டும். குறைந்த விலையில் சானிட்டரி நாப்கின்கள், போதுமான ஊட்டச்​சத்து, ஓய்வு ஆகியவை பெண்களுக்குக் கிடைப்​ப​தற்கான வழியை உருவாக்குவது நம் அனைவரின் கடமை.

மாதவிடாய் வறுமையை வெறும் பெண்களின் பிரச்சினையாக மட்டும் கருதிவிட முடியாது; இது சமூகத்தின் அவலநிலை. சமூகத்தைப் பாதிக்கும் எதுவும் அரசியல் பிரச்சினை​தான். மாதவிடாய் வறுமையை அரசியலாக
அணுகக்​கூடிய தெளிவு நம் அனைவருக்கும் அவசியம்.

மே 28: மாதவிடாய் சுகாதார நாள்

- தொடர்புக்கு: sowmi0693@gmail.com

SCROLL FOR NEXT