உதகையில் தற்போது 127ஆவது மலர்க் கண்காட்சி நடைபெற்று முடிந்திருக்கிறது. நீலகிரியில் கொண்டாடப்படும் பெருவிழா இது. லண்டன் செல்சீ நகரம், அமெரிக்காவின் பிலடெல்பியா, பாஸ்டன் மாகாணங்கள் ஆகிய இடங்களில் நடைபெறும் மலர்க் கண்காட்சிகளைப் போலவே உதகையிலும் 100 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்றுவருகிறது.
ஆங்கிலேயர் காலத்தில் 1896ஆம் ஆண்டு நீலகிரி வேளாண்மை - தோட்டக்கலை நிறுவனத்தால் முதல் மலர்க் கண்காட்சி தொடங்கப்பட்டது. மலர்களைக் காட்சிப்படுத்திக் காணும் ஐரோப்பிய மரபின் தொடர்ச்சியாகவே உதகையிலும் இது ஆரம்பிக்கப்பட்டது.
பேராபத்தின் அறிகுறி: உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதே மலர்க் கண்காட்சி நடத்தப்படுவதன் முதன்மையான நோக்கம். பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த நோக்கம் சரியாக இருந்திருக்கலாம். இப்போது நிலைமை வேறு. நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. உதகைக்கு வருபவர்கள் தங்க இடம் வேண்டும்.
எனவே, நகரம் விரிந்துகொண்டே போகிறது. எத்தகைய சரிவான பகுதிகளிலும் சாலைகள் அமைக்கப்பட்டுக் கட்டிடங்கள் முளைக்கின்றன. மக்கள் குடியிருந்த வீடுகள் பல ‘காட்டேஜ்’களாக மாற்றப்பட்டுவிட்டன. தேயிலைத் தோட்டங்களும், காய்கறித் தோட்டங்களும் கட்டிடமயமாக்கப்பட்டு வருகின்றன. மலைப்பகுதி என்பது, சேதாரமானால் மீண்டும் சரிசெய்ய முடியாத, எளிதில் சிதைந்து விடக்கூடிய (fragile) இயற்கை அமைப்பு. அதற்கென ஒரு தாங்குதிறன் (carrying capacity) உண்டு. நீலகிரி அந்தத் தாங்குதிறனைத் தாண்டி எவ்வளவோ காலமாகிவிட்டது. இது பேராபத்தின் அறிகுறி.
உயிர்ச் சூழலுக்கான பிரச்சினை: யுனெஸ்கோ நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் உயிர்க்கோளக் காப்பகத்தின் (Biosphere Reserve) மையமாக நீலகிரி உள்ளது. இங்கு உருவாகும் மாயாறு, பவானி ஆறுகள் தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களுக்கு வாழ்வாதாரமாகத் திகழ்கின்றன. தனித்துவமான உயிர்ச் சூழல் வளமை கொண்ட இந்த மலை, கட்டுக்கடங்காத கூட்டத்தால் பெரும் சேதாரத்துக்கு உள்ளாகிவருகிறது.
இந்தியாவில் காலனி ஆதிக்கத்தை ஏற்படுத்திய ஆங்கிலேயர்களுக்குப் பிடித்தமான இடமாக ஊட்டி உள்ளிட்ட மலைப் பகுதிகள் அமைந்தன. அவர்களின் ஊரைப் போலவே நிலவும் வானிலையே அதற்கு முக்கியக் காரணம். பெரும்பாலும் பழங்குடி மக்கள் மட்டுமே வாழ்ந்த நீலகிரியின் அமைப்பை மாற்றியவர்கள் அவர்கள்.
இன்று உலகம் வியக்கும் உயிர்ச்சூழல் வளமை மிக்க பகுதியாக மேற்குத் தொடர்ச்சி மலை கருதப்படுகிறது. தனித்துவமான உயிர்ச் சூழல் அமைப்பு அங்கு உள்ளது. ஆனால், ஆங்கிலேயர்கள் அங்கு குடியேறியபோது அதைத் தங்களது ஊரைப் போலவே மாற்ற நினைத்தனர்.
1848இல் ஊட்டி தாவரவியல் பூங்கா உருவாக்கப்பட்டது. அங்கு அவர்கள் பல மரங்களை நட்டு வளர்த்தனர். இன்றும் 100 ஆண்டுகளைக் கடந்த அந்த மரங்களைப் பெயர்ப் பலகையோடு காணலாம். உதகையை ஆங்கிலேயர் குடியிருப்பாக மாற்றிய ஜான் சலிவன், அன்றைய வைஸ்ராய் வெலிங்டன் தம்பதியர் நட்ட மரங்கள் இன்றும் உதகை நகரில் உள்ளன. ஆனால், அவை அனைத்தும் ஐரோப்பாவில் இருந்து கொண்டுவரப்பட்ட அயல் மரங்கள்.
அந்தப் பூங்காவுக்கு மிக அருகிலேயே ஒரு சோலைக் காடு உண்டு. அதில் பல நூறு வருடங்களைத் தாண்டிய மரங்களும் உண்டு. அவற்றின் சிறப்புகளைப் பற்றி அப்போது அவர்களுக்குத் தெரியாது. அவர்களாலேயே தைல மரம், சீகை மரம், பைன் மரம் உள்ளிட்ட அயல் மரங்கள் இந்த மண்ணில் பரப்பப்பட்டுப் பசுமைப் பாலைகள் உருவாகியுள்ளன. அந்த மண்ணின் உயிர்ச் சூழலில் பிரச்சினைக்கான காரணியாக அவை தொடர்கின்றன.
தமிழர்களும் மலர்களும்: தொடங்கப்பட்ட நாளிலிருந்து இன்றுவரை உதகை மலர்க் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படும் மலர்களில் எவையும் இந்த மண்ணில் மலர்ந்த இயல் மலர்கள் அல்ல. ரோஜா, டாலியா, ஆப்ரிக்க சாமந்தி, டெய்சி, சீலியா உள்ளிட்ட சுமார் 260 வகை மலர்கள் அங்கு பல்வேறு வடிவங்களில் காட்சிப்படுத்தப்படுகின்றன.
இந்த மலர்கள் உலகம் முழுவதும் வளர்க்கப்படுபவை. அவற்றை எங்கு வேண்டுமானாலும் காட்சிப்படுத்திக் கண்டு மகிழலாம். அதேநேரம், கூட்டம் சேர்க்க வேண்டும் என்பதற்காக ஊட்டியில் மலர்க் கண்காட்சியை நடத்த வேண்டிய அவசியம் இப்போது இல்லை.
அன்றைய மக்கள் வாழ்ந்த எல்லாத் திணை நிலங்களிலும் பூக்கள் உண்டு. பூக்களுக்கும் தமிழர்களுக்குமான உறவு மகத்தானது. மலர்களின் ஏழு பருவங்களை அரும்பு, மொட்டு, முகை, மலர், அலர், வீ, செம்மல் என நுட்பமாகப் பகுத்துப் பார்த்த பேரறிவு நமக்கு உண்டு. ஒரே பாடலில் 99 மலர்களைப் பட்டியலிட்ட குறிஞ்சிப் பாட்டுக்கு நிகரான இலக்கியத்தை வேறெந்த மொழியிலும் காண இயலாது. போர்க்களத்துக்குப் பூச்சூடிப் போனவர்கள் தமிழர்கள். வெற்றியை ஒரு மலரைச் சூடியே நிறைவு செய்தனர்.
மறக்கடிக்கப்பட்ட மலர்கள்: நீலகிரியில் குருக்கத்தி என்று ஓர் ஊர்ப் பெயர் உண்டு. குறிஞ்சிப்பாட்டு பதிவுசெய்த ஒரு மலர் குருக்கத்தி. அதனைப் ‘பைங் குருக்கத்தி’ எனச் சிறப்பிக்கிறது அது. ஆனால், அந்த ஊர்க்காரர்களுக்குக்கூட அது பற்றித் தெரியவில்லை. நீலகிரி மலை அடிவாரத்தில் மேட்டுப்பாளையம் அருகே குருந்தமலை என்று ஒரு ஊர் உண்டு. முற்றிலும் இல்லாது போயிருந்த அந்த மரத்தின் கன்றுகளை இன்றைய தாவரவியல் ஆய்வாளர்கள்தான் அங்கே நட்டிருக்கிறார்கள்.
குரவம், தளவம், குருந்தம், முல்லை நான்கும் அல்லாதவை பூவே அல்ல என்று புறநானூற்றில் (பாடல் 335) மாங்குடிக் கிழார் பெருமிதத்துடன் குறிப்பிடுகிறார். நீலகிரிக்குக் கீழே சமவெளிப் பகுதியான அவிநாசியில் ஆயிரம் ஆண்டுகள் பழமை கொண்ட சிவன் கோயில் உள்ளது.
அக்கோயில் மரமாகப் போற்றப்படுவது ‘பாதிரி’. அம்மரத்தின் மலரை ‘தேங்கமழ் பாதிரி’ என கபிலர் போற்றுகிறார். இந்த மலர்களுக்கு நாம் உரிய கவனம் கொடுத்திருக்கிறோமா? நீலகிரி முழுக்கக் காடுகளில் உண்ணிச் செடிகள் மண்டிக் கிடக்கின்றன. வண்ண வண்ணமாய்ப் பூக்கும் அதன் மலர்கள் கண்களைக் கவரும். ஆனால், இந்த அந்நியக் களைச்செடி காட்டின் உயிர்ச் சூழலைக் கொல்கிறது.
புதிய சுற்றுலாத் திட்டங்கள்: இந்தப் பார்வையுடன்தான் உதகை மலர்க் கண்காட்சியையும் அணுக வேண்டும். மறந்துபோன நமது மண்ணின் மலர்களைத் தேடிக் கண்டறிந்து காட்சிப்படுத்தி, நம் பிள்ளைகளுக்குக் கற்றுத்தருவோம். உலகெங்கும் கிடைக்கும் மலர்களைக் கொண்டு அமைக்கப்படும் உதகை மலர்க் கண்காட்சி இனியும் தேவையா என்னும் கேள்வியை எழுப்புவோம்.
இவற்றைப் போலவே எல்லா மலைகளிலும் கூட்டம் சேர்ப்பதற்காகக் கொண்டாடப்படும் கோடை விழாக்களையும் மறுபரிசீலனை செய்தாக வேண்டும். மலைப் பகுதிகளில் ஒரு சில நாட்களில் கூட்டம் குவிக்கும் திருவிழாக்களைத் தவிர்க்கலாம்.
அதற்குப் பதிலாக ஆண்டு முழுதும் தொடரும் பயன்மிகு சுற்றுலாவுக்கு வழிவகுப்போம். நீதிமன்ற ஆணைப்படி நீலகிரி, கொடைக்கானல் பகுதிகளுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ‘நுழைவு அனுமதி’ பெற்று வர வேண்டும் என்பது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை மதிப்பிட இயலும். அந்தத் தரவுகளைக் கொண்டு மலைப் பகுதியின் இயற்கை அமைப்புக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத புதிய சுற்றுலாத் திட்டங்களை உருவாக்க வேண்டும். நாம் பார்த்த இயற்கை அழகை, நம் தலைமுறைகளும் காண அவற்றை நாம் பாதுகாக்க வேண்டும்.
- தொடர்புக்கு: pasumaiosai@gmail.com