முன்பொரு காலத்தில் மனிதன் இந்த உலகை அப்படியே உள்வாங்கினான். குழந்தைகளின் சிரிப்பொலி, அந்தி சாயும் நேரத்து மெல்லிய நிழல், குளிர்க்காற்றில் இலைகள் உதிரும் சத்தம் – எல்லாமே அவனுக்கு ஒரு கதை, ஒரு கவிதை, ஒரு வண்ண ஓவியம். மற்றவர் பார்க்கத் தவறியதை அவன் கூர்ந்து கவனித்தான்.
தெருவோரப் பூக்களின் மென்மையை, பறவைகளின் கீச்சொலியை, காற்று வீசும் திசையை உணர்ந்தான். அந்த அனுபவங்களே அவன் கைகளுக்குள் கலையாகவும், எழுத்துகளாகவும், இசையாகவும் உயிர்பெற்று எழுந்தன.
நாம் இழந்தவை... ஆனால் இன்று? கண்கள் திரைக்குள் தொலைந்துவிட்டன. கைபேசியின் ஒளியில், கணினியின் மாயையில், நிஜ உலகை மறந்துவிட்டோம். பக்கத்தில் இருப்பவரின் புன்னகையைக் கவனிக்காமல், மரக்கிளையில் அமர்ந்திருக்கும் பறவையின் பாடலைக் கேட்காமல், இயந்திரத்தனமாக வாழ்க்கையை நகர்த்துகிறோம். உலகின் அழகை, உணர்வுகளின் ஆழத்தை, மனித உறவுகளின் மென்மையை இழந்து தவிக்கிறோம்.
காதல், நட்பு, துக்கம், ஏக்கம் – இவற்றையெல்லாம் நேரில் உணர்வதுபோலத் திரையில் பார்ப்பது இனிமையாக இருக்குமா என்ன? காதலியின் கண்கள் பேசும் மொழியை, நண்பனின் தோளில் சாயும் சுகத்தை, தாயின் கனிவான அரவணைப்பை எந்தத் தொழில்நுட்பமும் தர முடியாது. ஒரு மனிதன் அனுபவிக்கும் வலியை, ஏக்கத்தை, சந்தோஷத்தை, இயந்திரம் எழுதும் கவிதை எப்படிப் பிரதிபலிக்கும்? செயற்கை நுண்ணறிவு உருவாக்கும் இசை, இதயத்தின் ஆழத்திலிருந்து வரும் உணர்வுகளை எப்படித் தொட்டுச் செல்லும்?
இன்றைய தலைமுறை: கலை என்பது வெறும் திறமை மட்டுமல்ல, அது வாழ்வின் சாரம். ஒரு விவசாயி நிலத்தை உழும்போது, ஒரு தொழிலாளி சுத்தியலை ஓங்கும்போது, ஒரு தாய் குழந்தையைத் தாலாட்டும்போது – அந்த ஒவ்வொரு தருணத்திலும் கலை பிறக்கிறது. ஆனால் இன்று, அதிகமான திரை நேரம், உடனடியாகக் கிடைக்கும் தகவல்கள், சுயமாகச் சிந்திக்காமல், படைக்காமல் இருப்பது நம் கற்பனையைக் கறையானாக அரித்துவருகிறது.
நம் மனதில் உருவாகும் எண்ணங்கள், கனவுகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து போகின்றன. செயற்கைத்தனமான படைப்புகள், உழைப்பில்லாத வெற்றிகள், ஆன்மா இல்லாத அழகுகள் நம்மைச் சூழ்ந்துகொள்கின்றன.
உண்மையான கலை பிறப்பது தனிமையில். அது கண்ணீரில் கரையும், வியர்வையில் நனையும். வலியைச் சிரிப்பாக மாற்றும், துயரத்தைப் பாடலாக மாற்றும். வெற்றியைத் தேடி ஓடாமல், உண்மையைத் தேடும் மனங்கள்தான் இந்த உலகத்தை மாற்றும். ஆனால் இன்றைய தலைமுறை வசதிக்கும், வாய்ப்புக்கும், புகழுக்கும் அடிமையாகிவிட்டது. கலை என்ற கடினமான பாதையை, எத்தனை பேர் தேர்ந்தெடுப்பார்கள்? கலை இல்லாமல் மனித வாழ்க்கை வெறும் எலும்புக்கூடு.
ஓவியங்கள் இல்லாமல் உணர்ச்சிகளை எப்படிப் புரிந்து கொள்வது? கதைகள் இல்லாமல் ஒருவருக்கொருவர் எப்படி ஆறுதல் சொல்வது? இசை இல்லாமல் இதயத்தை எப்படி அமைதிப்படுத்துவது? நாம் யார் என்பதை மறந்து, எதற்காக வாழ்கிறோம் என்பதே தெரியாமல், வெறும் பொம்மைகளாக வாழ்ந்து மடிவோம்.
இதை உணர்ந்த பலரும், எதிர்காலத்தைப் பற்றி எச்சரிக்கிறார்கள். தொழில்நுட்பம் நம்மை ஆட்டிப்படைக்கும், செயற்கை நுண்ணறிவு நம்மை வழிநடத்தும் என்று பயப்படுகிறார்கள். ஆனால், உண்மை அதுவல்ல. தொழில்நுட்பம் ஒரு கருவி மட்டுமே. அதை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தே அதன் விளைவு இருக்கும்.
கலை பிறக்க வேண்டிய இடம் – அது நம் மனதின் ஆழத்தில், நம் அனுபவங்களின் சாரத்தில், நம் போராட்டங்களின் வலிமையில் இருக்கிறது. அதை இயந்திரங்களிடம் ஒப்படைத்தால், மனிதத்தின் ஆன்மாவே அழிந்துவிடும்.
முடிவு நம் கையில்: இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஒரு கவிஞன் பேருந்தில் கேட்ட ஒரு வார்த்தை, ஓர் ஓவியன் மழையில் நனைந்த நகரத்தைப் பார்த்த ஒரு நொடி – இவை எல்லாம் நம்மைத் தட்டி எழுப்புகின்றன. திரைகளைத் தூக்கி எறிந்துவிட்டு, உலகை நேரில் பார்க்கும்போது, அந்த நொடியே புதிய கலை பிறக்கிறது. இப்போது நாம் ஒரு முக்கியமான முடிவை எடுக்க வேண்டும்.
திரைக்கு அடிமையாகி, நிஜ உலகை வெறுக்கப் போகிறோமா? அல்லது நம் மனக்கண்களைத் திறந்து, உணர்வுகளின் உலகத்துக்குள் பயணிக்கப்போகிறோமா? இயந்திரங்கள் நம்மை ஆள அனுமதிப்போமா? அல்லது நம் ஆன்மாவின் தீயை அணையாமல் பாதுகாப்போமா?
திரை ஒளி – ஒரு மாயக் கடல்,
அதில் தத்தளிக்கும் நம் பார்வைத் தும்பிகள்,
நிஜம் – ஓர் அழகு மலர் வனம்,
குழந்தையின் சிரிப்பு – வெயிலில் மின்னும் நீர்த்துளி,
பறவையின் பாடல் – காற்றில் தவழும் கவிதை.
ஆயிரம் நொடிகள் திரை நதியில் மூழ்கினாலும்,
ஒரு கணம் மண்ணைத் தொட்டால்,
உள்ளத்தில் வேரூன்றும் மரம் நீ,
உன் உணர்வுகள் கிளை விரிக்கும்,
உலகம் உன் வண்ணங்களாய் மலரும்.
திரை – கனவுகளின் பனித்துளி,
நிஜம் – உயிரின் தீப்பொறி,
எந்தப் பக்கம் நீ பறக்க விரும்புகிறாய்?
மாயை வழியா? இல்லை, உண்மை நிலமா?
உன் இதயம் என்ன சொல்கிறது?
- தொடர்புக்கு: anaushram44@gmail.com