சிவகங்கை மாவட்டம் மல்லாக்கோட்டையில் உள்ள கல்குவாரியில் பாறைச் சரிவு ஏற்பட்டதில் ஆறு தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். கல் குவாரிகளில் அடிக்கடி ஏற்படும் விபத்துகளுக்கு மட்டுமல்லாமல், குவாரிகள் தொடர்பான நீண்ட காலப் பிரச்சினைகளுக்கும் தமிழக அரசு தீர்வு காண வேண்டிய தருணம் இது.
குவாரிகளில் மணல் விற்பனையால் கிடைக்கும் வருமானம் மூலம் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடக்கிறது என்கிற குற்றச்சாட்டின் அடிப்படையில், அமலாக்கத் துறை 2023இல் எட்டு மணல் குவாரிகளிலும் அவற்றுடன் தொடர்புடையோருக்குச் சம்பந்தமான இடங்களிலும் சோதனை நடத்தியது.
திருச்சி, கரூர் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சியர்களிடம் 2024இல் விசாரணை நடத்தியது. ஏறக்குறைய ரூ.4,000 கோடி அளவுக்குச் சட்ட விரோதமாக மணல் அள்ளப்பட்டு வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்தது.
அமலாக்கத் துறையின் சோதனைகளின்போது மூடப்பட்ட மணல் குவாரிகள் தற்போதுவரை இயங்கவில்லை. இதனால், தமிழகம் முழுவதும் நடைபெறும் கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான மணல் விநியோகம் தடைபட்டது.
ஆற்று மணலுக்கு மாற்றாகச் செயற்கை மணல் (எம்-சாண்ட்), பூசுமணல் (பி-சாண்ட்) ஆகியவற்றைப் பயன்படுத்துவது ஏற்கெனவே வழக்கத்தில் உள்ளது. மணல் குவாரிகள் ஒன்றரை ஆண்டுகளாக இயங்காத சூழல், செயற்கை மணல், பூசுமணல் பயன்பாட்டைப் பன்மடங்கு அதிகரித்தது.
பாறைகளை உடைத்துச் செயற்கை மணலாகவும் பூசுமணலாகவும் விற்கும் தொழிலில் உரிமம் பெற்றும் பெறாமலும் பல கல் குவாரிகள் ஈடுபடுகின்றன. மணல் குவாரிகள் தொடர்ந்து இயங்காத நிலை, செயற்கை மணலுக்கும் பூசுமணலுக்கும் இயல்புக்கு மாறான விலையேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கல் குவாரிகளும் விதிமீறல்கள் தொடர்பாகப் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ளன.
அளவுக்கு அதிகமாகப் பாறைகள் வெட்டி எடுக்கப்படுவது, வரையறுக்கப்பட்டதைக் காட்டிலும் கூடுதல் நேரம் இயங்குவது உள்ளிட்ட மீறல்கள் ஊரறிந்த உண்மை. இந்நிலையில், மணல் குவாரிகள் தொடர்ச்சியாக மூடப்பட்டிருப்பது, கல் குவாரிகளின் இயக்கத்தை அசாதாரணமான அளவுக்கு அதிகரித்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
இன்னொரு புறம், கல் குவாரிகளில் பணிபுரியும் தொழிலாளரின் பாதுகாப்பும் கேள்விக்கு உள்ளாகிறது. மல்லாக்கோட்டை குவாரி சம்பவம் சமீபத்திய உதாரணம். இதற்கிடையே, மணல் குவாரிகள் மூடப்பட்டுள்ளதால், தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு உடனடியாக மணல் குவாரிகளை இயக்க வேண்டும் எனவும் தமிழக மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் கூறிவந்தது.
மேலும் பல கோரிக்கைகளை வலியுறுத்தி மே 23 அன்று வேலைநிறுத்தத்தைத் தொடங்கப்போவதாக அறிவித்திருந்த சங்கத்தினருடன், இயற்கை வளத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பேச்சுவார்த்தை நடத்தினார்.
மணல் குவாரிகளை இயக்க மே 19 அன்று அனுமதி அளித்துள்ள உச்ச நீதிமன்ற உத்தரவின் நகல் கிடைத்த பின்னர், தமிழக முதலமைச்சரிடம் கலந்து ஆலோசித்து, விரைவில் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் கூறியுள்ளதை அடுத்து, வேலைநிறுத்த முடிவை மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் கைவிட்டுள்ளது.
ஆற்று மணல் வரைமுறையின்றி அள்ளப்படுவதில் மணல் லாரிகள் முக்கியப் பங்கு வகிப்பதாகப் பொதுச் சமூகம் கருதும் சூழலில், அளவுக்கதிகமாக மணல் அள்ளப்படுவதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என லாரி உரிமையாளர்கள் சங்கமே கோரிக்கை விடுக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஒரு பக்கம், மணல் பற்றாக்குறையால் கட்டுமானத் துறை தீவிரமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. இன்னொரு பக்கம், கல் குவாரிகளில் விதிமீறல்களின் விளைவாக விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன. இவற்றுக்குத் தீர்வு காண்பதோடு, குவாரி தொழிலாளர்களின் பாதுகாப்பு, மீண்டும் அனுமதிக்கப்படுகிற மணல் குவாரிகள் விதிமுறைகளுக்கு உட்பட்டு இயங்குவது ஆகியவற்றை உறுதிப்படுத்தும் பொறுப்பும் அரசுக்கு உள்ளது.