சிறப்புக் கட்டுரைகள்

நெல் கொள்முதலில் முறைகேடு: தனியார் நிறுவனத்துக்குத் தமிழக அரசு துணைபோகலாமா?

பி.ஆர்.பாண்டியன்

இன்றைய காலக்கட்டத்தில், காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளுக்கு நடுவே நெல் சாகுபடியைத் தமிழ்நாட்டின் விவசாயிகள் துணிவோடு மேற்கொண்டு வருகிறார்கள். மழை, புயல் போன்ற இயற்கைச் சீற்றங்கள் ஏற்படும் என மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே தெரிந்துகொள்ளும் அறிவியல் தொழில்நுட்பம் தற்போது இருந்தாலும், இத்தகைய அறிவிப்புகளைக் கண்டு அச்சப்பட்டு சாகுபடியை விவசாயிகள் நிறுத்திவிடுவதில்லை.

தங்கள் வாழ்வாதாரம் என்பதைத் தாண்டி, மக்களுக்குத் தேவையான உணவை உற்பத்தி செய்ய வேண்டும் என்கிற நோக்கத்துடன் பல்வேறு இடர்ப்பாடுகளை எதிர்கொண்டு விவசாயத்தைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள். இந்​நிலை​யில், முதலமைச்சர் மு.க.ஸ்​டாலின் தலைமையில் ஆட்சி அமைந்த பிறகு தமிழ்​நாட்டில் கொள்முதலைச் சீர்ப்​படுத்து​வதற்குப் பதிலாக, தனியாருக்குத் தாரை வார்ப்​ப​தற்கான நடவடிக்கைகளே மறைமுகமாக முன்னெடுக்​கப்​படு​கின்றன. இது விவசா​யிகளைப் பெரும் துயரில் ஆழ்த்​தி​யிருக்​கிறது.

மாறிப்போன வரலாறு: 1972இல் தமிழ்நாடு நுகர்​பொருள் வாணிபக் கழகம் (Tamil Nadu Civil Supplies Corporation [TNCSC]) என்கிற பொதுத் துறை நிறுவனத்தை அன்றைய முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி - இந்தியா​விலேயே முதன்​முதலில் - கொண்டு​வந்​தார். மக்களுக்குப் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் தரமான உணவுப் பொருள்களை வழங்கு​வதற்கான அடிப்படை நோக்கோடு இந்த நிறுவனத்தை அவர் அறிமுகப்​படுத்​தி​னார்.

விவசா​யிகளிடம் நேரடியாக நெல் கொள்முதல் செய்து, தரமான அரிசியை மக்களுக்கு விநியோகம் செய்யும் வகையில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை காவிரி டெல்டாவை மையமாக வைத்தே 1975இல் கருணாநிதி தொடங்​கி​னார். அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பரவலாக்​கப்பட்ட கொள்முதல் அமல்படுத்​தப்​பட்டது.

மாவட்​டத்​துக்கு மாவட்டம் கொள்முதல் நடவடிக்கை வேறுபட்​டாலும், தமிழக அரசு முழுப் பொறுப்​பேற்று கொள்முதல் செய்து​வந்தது. விவசா​யிகளுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை, சந்தை உத்தர​வாதத்​துடன் கூடிய கொள்முதல் கொள்கை தமிழ்​நாட்டில் நெல்லுக்கு மட்டுமே இருந்து​வந்தது. இதனால், ஏறக்குறைய 35 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் தமிழகம் முழுவதும் நெல் உற்பத்தியை நம்பிக்கை​யுடன் விவசா​யி
கள் அதிகரித்​தனர். ஆனால், இன்றைக்கு நிலைமை தலைகீழாக மாறியிருக்​கிறது.

தனியாருக்கு அனுமதி: மத்திய அரசின் ‘தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு’ என்கிற கூட்டுறவு நிறுவனத்தைப் பயன்படுத்தத் தமிழக அரசு அனுமதித்தது பல பிரச்சினை​களுக்கு வழிவகுத்​திருக்​கிறது. கடந்த பல ஆண்டு​களாக, சில மாநிலங்​களில் தானியக் கொள்முதலில் இந்நிறுவனம் ஈடுபட்டு​வரு​கிறது. இந்நிறு​வனத்தை வணிக நோக்கோடு பயன்படுத்​திக்​கொள்ள கார்ப்​பரேட் நிறுவனங்களை அனுமதிக்கும் வகையில் சந்தைப்​படுத்தும் சட்டத்தை மத்திய அரசு கொண்டு​வந்தது.

அதை எதிர்த்து விவசா​யிகள் போராடிய நிலையில், அந்தச் சட்டம் திரும்பப் பெறப்​பட்டது. ஆனால், உழவர் - உற்பத்​தி​யாளர் குழுக்கள் மூலமாகக் கொள்முதல் செய்வதற்கான வாய்ப்பினை வழங்கும் வகையில் தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு தொடர்ந்து தானியக் கொள்முதலில் அனுமதிக்​கப்​பட்டது.

பல்வேறு மாநிலங்​களில் கொள்முதல் கொள்கை​களில் பல்வேறு மாற்றங்கள் இருந்​தா​லும், உணவு தானியங்​களைக் கொள்முதல் செய்வதில் இந்த நிறுவனத்​துக்கு மிகப்​பெரும் பங்கு இருக்​கிறது. தமிழ்​நாட்டில் இந்நிறு​வனத்தோடு தமிழக அரசு நெல் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்​தத்தைச் செய்து​கொண்ட நிலையில், கடந்த சில ஆண்டுகளாகச் சில மாவட்​டங்​களில் கொள்முதல் செய்ய அந்நிறுவனம் அனுமதிக்​கப்​பட்டது. அம்மாவட்​டங்​களில் கொள்முதலுக்கு உடனடியாக உரிய தொகை வழங்காமல் இந்நிறுவனம் காலங்​கடத்​தி​ய​தால், அதிகாரிகள் பொறுப்​பேற்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது.

இதற்கிடையே, 2024-25ஆம் ஆண்டு பருவக் கொள்முதலின்​போது, தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு மூலம், ‘தமிழ்நாடு அரிசி உற்பத்​தி​யாளர்கள் கூட்டமைப்பு’ என்கிற ஒரு தனியார் நிறுவனத்தோடு இடைத்​தரகர் ஒப்பந்​தத்தைச் செய்து​கொள்ள முடிவுசெய்​யப்​பட்டது. தமிழக ஆட்சி​யாளர்​களுக்கு நெருக்​க​மானவர் எனக் கருதப்​படுபவரை நிர்வாக இயக்குந​ராகக் கொண்டு இயங்கும் நிறுவனம் இது.

தமிழக அரசின் நிர்ப்பந்​தத்​தாலேயே, நெல் கொள்முதலில் எந்தவொரு முன் அனுபவ​மும், கட்டமைப்பும், நிதித் தகுதியும் இல்லாத இந்நிறு​வனத்​துடன், தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு ஒப்பந்தம் செய்ததாக அதனுடைய மண்டல மேலாளர் தெரிவிக்​கிறார். இதனால், தமிழகம் முழுவதும் நடப்பு 2024-25ஆம் ஆண்டில் கொள்முதலுக்கு அந்நிறுவனம் அனுமதிக்​கப்​பட்டது. இதனை எதிர்த்துத் தமிழகத்தில் போராட்​டத்தைத் தீவிரப்​படுத்​தினோம்.
இதனை அறிந்த முதலமைச்சர்

மு.க.ஸ்​டா​லின், காவிரி டெல்டா தவிர்த்து, தமிழகத்தில் மற்ற மாவட்​டங்கள் முழுவதும் தனியார் கொள்முதல் செய்வதற்கு அனுமதிப்பதாக அரசாணை வெளியிட்​டார். யார் அளித்த அழுத்​தத்தின் பேரில் இந்த அரசாணை வெளியிடப்​பட்டது எனத் தெரிய​வில்லை. இதற்கு உடன்படாத உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்​பட்​டார்கள். தமிழ்​நாட்டில் தனிநபரிடம் ஒட்டுமொத்த தமிழகத்​தினுடைய கொள்முதலையும் ஒப்படைக்க முன்வந்தது மிகப் பெரிய முரண். இதன் மூலம் ஒட்டுமொத்த விவசா​யிகளையும் அழிவுப் பாதைக்குக் கொண்டு​சென்​றிருக்​கிறது தமிழக அரசு.

குளறு​படிகள்: தமிழ்நாடு நுகர்​பொருள் வாணிபக் கழகத்​தினுடைய அனைத்துக் கட்டமைப்பு​களை​யும், பணியாளர்​களையும் கொண்டு கொள்முதல் செய்வதற்கு இந்நிறுவனம் அனுமதிக்​கப்​படு​கிறது. கொள்முதல் செய்யும் நெல், அரிசியின் தரத்துக்கும் சம்பந்தப்பட்ட டிஎன்​சிஎஸ்சி அதிகாரிகளே பொறுப்​பா​வார்கள். இடைத்தரகு ஒப்பந்தம் செய்திருக்கிற தனியார் நிறுவனம் தனது சொந்த நிதியி​லிருந்து விவசா​யிகளுக்கு 48 மணி நேரத்​துக்குள் நெல்லுக்கான பணப்பட்டுவாடா வழங்க வேண்டும்.

கொள்முதல் செய்யப்​படும் நெல்லுக்கான அரிசியை மத்திய அரசின் உணவுக் கழகத்​திடம் வழங்கிவிட வேண்டும். பிறகு, தமிழகப் பொது விநியோகத் திட்டத்​துக்கு இந்நிறுவனம் அரிசியை வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கப்​படும் அரிசிக்கான தொகையை மட்டுமே இந்த நிறுவனத்​துக்குத் தமிழ்நாடு நுகர்​பொருள் வாணிபக் கழகம் வழங்கும் என ஒப்பந்தம் கூறுகிறது.

பல மாவட்ட ஆட்சி​யர்கள் இவ்வாறான கொள்கையில் உடன்பாடு இல்லை என அனுமதிக்க மறுத்து​விட்​டனர். ஆனால், சென்னையைச் சுற்றி இருக்கிற செங்கல்​பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 8 மாவட்​டங்​களின் ஆட்சி​யர்கள் இதற்கு அனுமதி வழங்கி​யிருக்​கின்​றனர். தற்போது ரூ.500 கோடி மதிப்​பிலான நெல் கொள்முதல் செய்யப்​பட்​டிருக்​கிறது. இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் இதுவரை​யிலும் விவசா​யிகளுக்குக் கிரயத் தொகை வழங்கப்​ப​டாமல் நிலுவையில் உள்ளது.

இந்தச் சூழலில், தமிழ்நாடு நுகர்​பொருள் வாணிபக் கழகத்​திடம் இந்நிறுவனம் முன்பண​மாகப் பெற்ற ரூபாய் 170 கோடிக்கான அரிசி​யை​யும், அதற்கான கணக்கு வழக்கு​களையும் சமர்ப்​பிக்க​வில்லை என்றும், விவசா​யிகளுக்கும் உரிய தொகை வழங்கப்படாத நிலை உள்ளதாக அறிந்து, இந்நிறு​வனத்​துக்கு வழங்கப்​பட்​டிருந்த கொள்முதல் அனுமதியைத் தற்காலிகமாக நிறுத்​தி​வைத்​துள்ள​தாகவும் கூறியிருக்கும் டிஎன்​சிஎஸ்சி மேலாண்மை இயக்குநர், உடனடியாக மாவட்ட ஆட்சி​யர்கள் கொள்முதல் நிலையங்​களைத் தங்கள் கட்டுப்​பாட்டில் கொண்டுவர வேண்டும் என்றும் உத்தர​விட்​டிருக்​கிறார். இத்தகைய குளறு​படிகளால் விவசா​யிகள் பாதிக்​கப்​பட்​டிருக்​கிறார்கள். போராட்​டங்​களும் தொடர்​கின்றன.

என்ன செய்ய வேண்டும்? - ரூ.500 கோடி அளவுக்கு விவசா​யிகளுக்கு வழங்க வேண்டிய தொகையை இந்நிறுவனம் மோசடி செய்திருப்​ப​தாகத் தெரிய​வரு​கிறது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்​ளப்பட வேண்டும்.

இந்த நிறுவனத்தைப் பரிந்துரை செய்து, இதற்கான ஒப்பு​தலையும் கொடுத்து, விவசா​யிகள் வாழ்க்கையோடு விளையாடிக்​கொண்டு இருக்கிற உணவுத் துறை அமைச்சர் அ.சக்​கர​பாணி, இதில் நிகழ்ந்த முறைகேடு​களுக்குப் பொறுப்​பேற்க வேண்டும். விவசா​யிகளுக்குக் கொடுக்க வேண்டிய தொகைக்குத் தமிழக அரசு முழுப் பொறுப்​பேற்க வேண்டும்.

மத்திய அரசிடம் ஒரு கிலோ அரிசியை ரூ. 20க்குப் பெற்றுக்​கொண்டு, அதனைத் தமிழக அரசின் பொது விநியோகத் திட்டத்​துக்​காகத் தமிழ்நாடு நுகர்​பொருள் வாணிபக் கழகத்​துக்கு, ஒரு கிலோ 42 ரூபாய்க்கு விநியோகம் செய்வதற்கான ஒப்பந்​தத்தைத் தமிழக நெல் உற்பத்​தி​யாளர் கூட்டமைப்பே செய்துள்ளதாக ஒரு செய்தி வந்துள்ளது.

இவ்வாறான மோசடி ஒப்பந்த நடவடிக்கைகள் பெரும் அதிர்ச்சி அளிக்​கின்றன. இதனால் நெல் உற்பத்தி அடியோடு அழியும் நிலை ஏற்பட்​டதோடு, விவசா​யிகள் வாழ்க்கையும் அழியும் நிலை ஏற்பட்​டுள்ளது. இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும்​.

SCROLL FOR NEXT