ஒரே பெயர் கொண்ட இருவர் சந்தித்துக் கொள்ளும்போது அவர்களை அறியாமலே கூச்சம் வந்துவிடுகிறது. சில நேரம் பெயரின் காரணமாகவே கூடுதல் நெருக்கமும் ஏற்படுகிறது. ஒரே பெயர் வைத்திருப்பதால் இருவரும் ஒன்றுபோல இருக்க மாட்டார்கள். ஆண் பெயர் கொண்ட பெண்களும், பெண் பெயர் கொண்ட ஆண்களும் தனது பெயருக்காகத் தொடர்ந்து குழப்பங்களைச் சந்திக்கிறார்கள்; தவிக்கிறார்கள். பெயரில் என்ன இருக்கிறது, என்று எளிதாக விட்டுவிட முடியாது.
ஆங்கில எழுத்தாளரான சார்லஸ் டிக்கன்ஸ் லண்டனிலுள்ள கல்லறைக்குச் சென்று அங்குள்ள பெயர்களைத் தனது குறிப்பேட்டில் எழுதி வைத்துக் கொள்வாராம். அந்தப் பெயர்களைச் சற்று மாற்றியே தனது கதாபாத்திரங்களுக்கு வைப்பது அவரது வழக்கம். ஒரு முறை டெல்லியில் டாக்சியில் அக்பர் சாலை வழியாகச் சென்றேன். மன்னர்கள் மறைந்துவிட்டாலும் அவர்களின் பெயர்கள் மறையவில்லை என்று காரோட்டி வேடிக்கையாகச் சொன்னார். அவர் சொன்னது உண்மை. சில பெயர்கள் காலம் காலமாக மறையாமல் ஒளிர்ந்து கொண்டிருக்கின்றன. சில பெயர்கள் காலத்தின் கைகளுக்குள் மறைந்து விடுகின்றன.
புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் வைக்கம் முஹம்மது பஷீரின் ‘எங்கள் தாத்தாவிற்கு ஒரு யானை இருந்தது’ நாவலில் அப்படித் தனது பெயரைக்கொண்ட மற்றவர்களைப் பற்றிக் குஞ்சுப்பாத்துமா கோபம் கொள்கிறாள். அவளது வீதியில் அவளது பெயரைக் கொண்ட வேறு சிலரும் இருக்கிறார்கள். இப்படித் தனக்கென ஒரு பெயர்கூடத் தனித்துவமாக இல்லையே என அவள் கவலைப்படுகிறாள். எந்தப் பிச்சைக்காரனும் தனது மகளுக்கு எந்த மகாராணியின் பெயரையும் வைக்கலாம். அதற்கு ஒரு தடையும் கிடையாது. பெயரின் மூலமாவது அவர்களுக்கு ராஜவாழ்க்கை கிடைக்கட்டும் என்கிறார் பஷீர். பஷீரின் எழுத்துகளில் எனக்கு மிகவும் பிடித்த நாவல் இது. 1959ஆம் ஆண்டு கே.சி.சங்கரநாராயணன் மொழிபெயர்ப்பில் சாகித்திய அகாடமி வெளியிட்டுள்ளது. இஸ்லாமியக் குடும்பம் ஒன்றின் வாழ்க்கையை மிகவும் அழகாக, நுட்பமாக பஷீர் சித்தரித்துள்ளார். நாவலில் வெளிப்படும் கேலியும் கிண்டலும் அபாரமானது.
அழுகையை விடவும் உயர்வானதில்லையா, சிரிப்பு என நாவலின் ஒரு இடத்தில் பஷீர் சொல்கிறார். அது அவரது எழுத்திற்கான அடையாளம். குஞ்சுப்பாத்துமாவின் தாத்தாவுக்குச் சொந்தமாகப் பெரிய கொம்பன் யானை இருந்தது என்கிறார்கள். அவள் யானை மக்காரின் பேத்தி. அந்தப் பெருமையைக் கேட்டு வளர்ந்த குஞ்சுப்பாத்துமா தான் காணாத யானையை நேசிக்கிறாள். அதைப் பற்றிக் கனவுகாண்கிறாள். அந்த யானை அவளது உம்மாவின் சொல்லில் பிறந்தது; நினைவின் கொட்டடியில் கட்டப்பட்டிருக்கிறது.
கடந்தகாலப் பெருமை என்பது ஒரு அலங்கார கிரீடம். அதைச் சூடிக் கொள்ள யார் தான் விரும்புவதில்லை. ஆனால், அந்தக் கிரீடம் தங்கமில்லை. வெறும் காகிதம் என அறிய வரும் போது மனம் ஏற்க மறுக்கிறது. குஞ்சுப்பாத்துமாவைவிடவும் அவளது உம்மா, நாவலில் அதிகம் உயிர்த் துடிப்புள்ளவராக வெளிப்படுகிறாள். பஷீரால் சொற்களைக் கொண்டு கதாபாத்திரங்களை உயிருள்ள மனிதர்களாக நடமாடவிட முடிகிறது.
குஞ்சுப்பாத்துமாவின் இடதுகன்னத்தில் பெரியமரு உள்ளது.அதை அதிர்ஷ்டத்தின் அடையாளமாக அவளது உம்மா நினைக்கிறாள்; பெருமைப்படுகிறாள். குஞ்சுப் பாத்துமாவுக்குத் திருமணம் செய்து வைக்க மாப்பிள்ளை தேடுகிறார்கள். நல்ல இடம் அமையவில்லை. வயது கூடிக்கொண்டே போகிறது. இப்போது அதே மரு, துரதிருஷ்டத்தின் அடையமாக மாறிவிடுகிறது. அவளது உம்மா அதைச் சொல்லிக் காட்டுகிறாள். மச்சம் என்பதைக் கடவுள் வைத்த முற்றுப்புள்ளி என்கிறார்கள். அதை மனிதர்களால் மாற்றிவிட முடியாது. தான் திருமணம் செய்து கொள்ளப்போகும் ஆணை திருமணத்திற்கு முன்பாக ஒரேயொரு முறை பார்த்துவிட வேண்டும் என்று குஞ்சுப்பாத்துமாவின் மனதில் ஒரு ரகசிய ஆசை இருக்கிறது. அப்படி ஒரு ஆசையை அவளது குடும்பம் அனுமதிக்காது. அப்படி அவள் நினைப்பதே தவறானது எனக் கருதக்கூடியது அவளது குடும்பம். ஆனால், அவளது மனதில் அந்த ஆசை ரகசியமாக முளைவிடுகிறது. அது நிஜமாகும் விதத்தைப் பஷீர் அழகாக எழுதியிருக்கிறார்.
கடந்தகாலப் பெருமைகளைக் கொண்டு மட்டும் எவரும் நிகழ்காலத்தில் வாழ்ந்துவிட முடியாது. குஞ்சுபாத்துமாவின் குடும்பமும் வீழ்ச்சியைச் சந்திக்கிறது. வாழ்ந்து கெட்டவர்களின் முகத்தில் சொல்ல முடியாத வேதனை எப்போதும் ஒளிந்திருக்கும். அவர்களால் முழுமையாகச் சிரிக்கக்கூட முடியாது. கயிறு அறுபட்டுக் கிணற்றில் விழுந்த வாளியைச் செய்வதறியாமல் பார்த்துக் கொண்டிருக்கும் சிறுவனைப் போல நடந்து கொள்வார்கள். குஞ்சுபாத்துமா குடும்பத்தில் திருமணம் செய்துகொண்ட பெண்கள் மட்டுமே வெற்றிலை போட அனுமதிக்கப்படுகிறார்கள். ஆகவே வெற்றிலை போட்டுக் கொள்வதற்காகவே அவள் திருமணம் செய்துகொள்ள நினைக்கிறாள். அவளுக்குக் கல்யாணம் என்பது ஒரு விளையாட்டு; அனுமதிச் சீட்டு.
தங்கள் குடும்பச் சொத்துகளை இழந்தவுடன் குஞ்சுப்பாத்துமாவின் வாப்பாவிற்குச் சட்டெனத் தலைநரைத்துப் போய்விடுகிறது. மனதின் வேதனைகள்தான் தலைமயிர்களை நரைக்க வைக்கின்றன. அதன் பிறகு அவர் யாருடனும் பேசுவதில்லை. அவளது உம்மா பழைய வீட்டிலிருந்து வெளியேறி வரும்போது தனது ஒரு ஜோடி செருப்புகளை மட்டுமே எடுத்து வருகிறாள். அதைத் தனது கூடவே வைத்துக் கொள்கிறாள். சிண்ட்ரெல்லாவின் செருப்புகள் போல அவை மாயமானவை அல்ல. ஆனால், கடந்தகால மகிழ்ச்சியின் அடையாளம். குஞ்சுப்பாத்துமாவின் உம்மா சாப்பிடும்போது தனது பிறந்த வீட்டின் பெருமைகளைப் பேசக்கூடியவள். அதுதான் அவளது உண்மையான உணவு.
குஞ்சுப்பாத்துமாவின் உலகில் மனிதர்கள் மட்டுமில்லை. யானையும் குருவியும் மீனும் தண்ணீர்ப்பாம்பும் அட்டையும் இருக்கின்றன. அவள் தன்னைக் கடிக்கும் அட்டையிடம்கூடப் பேசுகிறாள்; அறிவுரை சொல்கிறாள். குருவிகள் சண்டையிட்டுக் கொள்ளும்போது விலக்கிவிடுகிறாள். தூய வெளிச்சம் ஒரு பெண்ணாக ஆவதுபோலக் குஞ்சுப்பாத்துமா சித்தரிக்கப்படுகிறாள். ஆயிஷாவும் அவளும் முதன்முறையாகச் சந்தித்து உரையாடும் காட்சி அபாரமானது; அதில் வெளிப்படும் கேலி மறக்க முடியாதது.
நிசார் அகமதுவை குஞ்சுப்பாத்துமா சந்திப்பதும் அவனைக் காதலிக்கத் தொடங்குவதும் மிகவும் அழகாக எழுதப்பட்டிருக்கிறது. சுடரை ஏந்திக் கொள்ளும் விளக்கைப் போலிருக்கிறான் நிசார். மரத்திலிருந்து விழுந்த நாவல் பழத்தில் மண் ஒட்டிக் கொள்வது போல அவ்வளவு இயல்பாக அவர்களுக்குள் காதல் உருவாகிறது. காதல் வசப்பட்ட பின்பு ஒரு இரவு அவள் மிகுந்த மகிழ்ச்சியாக உணர்கிறாள். தன்னைக் கடிக்கும் எறும்பினைக்கூட நசுக்காமல் விரலால் எடுத்து அந்தப் பக்கம் விடுகிறாள். தனது தலையணையைக் கிள்ளி வலிக்கிறதா எனக் கேட்கிறாள். கனவில் அவள் ஒரு பூ மரமாக மாறுகிறாள். கைகால்கள் எல்லாம் மரத்தின் கிளைகளாகின்றன. மரம் பூத்துக் குலுங்குகிறது. காதலின் பித்தை பஷீர் மிகவும் அழகாக எழுதியிருக்கிறார். திருமண நாளில் அவளது கருத்த மரு மின்னுகிறது. எங்கள் தாத்தாவிற்கு ஒரு யானை இருந்தது நாவலை எப்போது நினைத்துக் கொண்டாலும் அந்த மருதான் மனதில் தோன்றுகிறது. அது தான் பஷீரின் வெற்றி.