புக்கர் விருது 2025: பானு முஷ்தாக்
சர்வதேச அளவில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் மிக உயரிய விருதுகளில் ஒன்றான புக்கர் விருதுக்கு கன்னட எழுத்தாளர் பானு முஷ்தாக்கின் ‘ஹார்ட் லேம்ப்’ (Heart Lamp) சிறுகதைத் தொகுப்பு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்திய ஆங்கில எழுத்தாளர்கள் அருந்ததி ராய், கிரண் தேசாய், அரவிந்த் அடிகா ஆகியோர் ஏற்கெனவே புக்கர் பெற்றுள்ளனர்.
என்றாலும் இந்திய மொழி எழுத்துக்காக இந்த விருதை கீதாஞ்சலி முதன்முதலில் வென்றார். 2022க்கான புக்கர் அவரது ‘ரேட் சமாதி’ (மணல் சமாதி) என்கிற இந்தி நாவலுக்காக வழங்கப்பட்டது. அதற்கு அடுத்தபடியாக இந்திய மொழி எழுத்தாளராக பானு இந்த விருதை வென்றுள்ளார். பானு முஷ்தாக்கின் சிறுகதையை எழுத்தாளர் நஞ்சுண்டன் நேரடியாக கன்னடத்திலிருந்து முன்பே தமிழில் மொழிபெயர்த்துள்ளார். 2007இல் வெளிவந்த அவரது ‘அக்கா: கன்னடப் பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள்' தொகுப்பில் இந்தக் கதை இடம்பெற்றுள்ளது.
காலச்சுவடு பதிப்பகம் இந்த மொழிபெயர்ப்புச் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளது. ‘ஒருமுறை பெண்ணாகு பிரபுவே’ என்கிற இந்தச் சிறுகதை இப்போது புக்கர் விருது பெற்றுள்ள ‘ஹார்ட் லேம்ப்’ தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது விசேஷமானது. பானுவின் பெரும்பாலான கதைகளின் மையம், இஸ்லாமியப் பெண்களின் பாடுகள்தாம்.
இந்தக் கதையும் அப்படியானதுதான். வாழ்க்கைப்பட்டு வந்த இடத்தில் தான் படும் கஷ்டங்களைப் பற்றியெல்லாம் ஒரு இஸ்லாம் பெண், படைத்தவரிடம் சொல்கிறார். ஆனால், இதைச் சொல்வதற்கு பானு கைக்கொண்டிக்கும் நடை, துள்ளலானது. எழுத்தாளார் அசோகமித்திரனை ஒத்த நடை. இந்த அவலங்களை எல்லாம் அபத்த நகைச்சுவையாக மாற்றியிருக்கிறார் பானு.
பானுவின் மொழி, இன்றைய மொழி மலினச் சூழலில் கவனம்கொள்ளத்தக்கது; முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டியது. குடும்ப வன்முறையில் இருக்கும் ஒரு பெண்ணின் குரலைச் சொல்வதில் பானு கொண்டுள்ள நிதானம் வியக்கவைக்கக்கூடியது. கணவனை நான் குறைசொல்லவில்லை. அவனும் உன் படைப்புதானே என்று படைத்தவரிடம் சொல்கிறார் பானு. மு.சுயம்புலிங்கத்தின் ஒரு கவிதை வரியைப் போல் ‘எனக்கொன்றும் இல்லை உன் இனிய கற்பனையில் உருவான இந்த உலகத்தில் நான் நன்றாகத்தான் இருக்கிறேன்’ என்கிறார். இது ஒரு விமர்சனம். ஆனால், அதை நகைமுரணாகவே வெளிப்படுத்தியுள்ளார்.
நமது குடும்ப அமைப்பு செயல்படும் விதத்தை பானு இதில் திருத்தமாகச் சொல்லியிருக்கிறார். பெண் பிள்ளைகளை வேறு ஒருவனின் உடைமைப் பொருளாவதற்காகவே பெற்றோர்கள் வளர்க்கிறார்கள். இந்தக் கதை நாயகியின் அம்மா, ‘அவன் உன் தெய்வம்’ என்கிறார். அந்தத் தெய்வத்துக்கே அவளது உடலும் மனமும் சொந்தமாகிறது. அவள், தான் ஒரு தனித்த மனுஷி என்பதையே மறந்துபோகிறாள். ‘அவன் இல்லாது போனால் என்னால் என்ன செய்ய முடியும்?’ என நாயகிப் பதற்றமடைகிறாள். ‘நான் அவனது நிழல்; நிழல் மட்டுமே’ என்கிற பானுவின் விவரிப்பு, பதற்றமடையச் செய்கிறது. குடும்ப அமைப்பு தனி ஒரு மனுஷியை, அவள் அடையாளத்தை, ஆளுமையைச் சிதைத்து அவளையே அதைப் பேணும் ஓர் அங்கமாக்குவதை இந்தக் கதை சொல்கிறது. கூர்மையான, அச்சமூட்டும் கொம்புள்ள ஒரு மாட்டைப் பழக்குவதைப் பற்றிய எழுத்தாளர் கந்தர்வனின் கதையை இதனுடன் பொருத்திப் பார்க்கலாம். கடைசியில் அந்த மாடு தன் மூர்க்கத்தனத்தை மறந்துவிடுகிறது. நம்மைத் தாக்கக்கூடிய கூர்மையுள்ள அதன் கொம்புகளில் பெயின்ட் அடிக்கப்படுகிறது. கிட்டதட்ட இந்தக் கதையின் நாயகியும் இப்படித்தான் பழகிப் போகிறாள். ‘இன்னும் எனக்கென்று சொந்தமாக எதுவுமில்லை. மாற்றார் முற்றத்தில் நான் வேர்விட வேண்டியிருந்தது, துளிர்க்க வேண்டியிருந்தது, பூக்க வேண்டியிருந்தது. ஐக்கியமாகிக்கொண்டிருந்தவன் அவன். கரைந்துகொண்டிருந்தது என் இருப்பு. என் பெயரையும் இழந்தேன். புதுப் பெயர் என்ன தெரியுமா? அவன் மனைவி என்பது’ என இதை விவரிக்கிறார் பானு.
இந்தக் கதை 1997இல் எழுதப்பட்டுள்ளது. அதற்கும் முந்தைய காலகட்டத்தின் கதை என இதைக் கருதலாம். இன்றைக்குச் சமூகம், சற்று மாறியிருக்கிறது என நாம் கொஞ்சம் நம்பிக்கை வைக்கலாம். ஆனால், இந்தக் கதையின் உட்பொருள் சொல்லும் அம்சங்கள் இன்றைக்கும் பொருந்தக்கூடியதுதான். மாமியார் வீட்டில் வரதட்சிணை வாங்கச் சொல்லி மனைவியைத் துரத்துகிறான், மனைவி நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் வேறு கல்யாணத்துக்குப் பெண் பார்க்கிறான் என இந்தக் கதையின் சம்பவங்கள் எல்லாம் நாம் கேட்ட கதைதான். ஆனால், இதையெல்லாம் மொத்த பெண் பிறவியின் பிரதிநிதித்துவமாக இந்தக் கதையில் சொல்லப்பட்டுள்ளது.
வேறு ஒரு கல்யாணம் பண்ணிக்கொள்வதற்கு அவனுக்கு உரிமை இருக்கிறது என்று பெண்களால் இந்தக் கதையில் நம்பப்படுகிறது. பார்க்க நாதியற்று மருத்துவமனையிலிருந்து தன் இரு குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு அவள் அந்த வீட்டுக்குத்தான் வருகிறாள். இந்தச் சித்தரிப்பே மனத்தில் துயரமாகப் படர்கிறது. ‘ஒருமுறை பிரபஞ்சத்தை நிர்மாணிப்பதானால், ஆணையும் பெண்ணையும் சிருஷ்டிப்பதானால் அனுபவமற்ற குயவனைப் போலச் செய்யாதே. பூமிக்கு வா. ஒருமுறை பெண்ணாகு பிரபுவே!’ என இந்தக் கதையை பானு முடிக்கிறார்.