சிறப்புக் கட்டுரைகள்

நியூட்டன், ஐன்ஸ்டைன் வரிசையில் ஓர் இந்தியர்! - ஜெயந்த் விஷ்ணு நாரலீகர் (1938 – 2025) | அஞ்சலி

த.வி.வெங்கடேஸ்வரன்

ஜெயந்த் விஷ்ணு நாரலீகர் - இந்தியாவில் இருந்து சென்றிருந்த 26 வயது இளம் மாணவராக அன்று இருந்தார். எல்லா அறிவியலாளர்களும் தமக்குப் பேச அழைப்பு வருமா என ஆவலுடன் காத்திருக்கும் ராயல் சொசைட்டியில் பேசுவதற்காக அவர் லண்டன் சென்றிருந்தார். ஈர்ப்பு விசையின் புதிய கோட்பாடு என்பதுதான் தலைப்பு. டைராக், போண்டி, சலாம் என அந்தக் கால அறிவியல் மேதைகள் எல்லாம் பேச்சைக் கேட்கும் ஆவலுடன் கூடியிருந்தனர்.

புதிய வெளிச்சம்: தயங்காமல் எழுந்தார் நாரலீகர். தனது ஆய்வு ஆலோசகரும் புகழ்​மிக்க வானிய​லா​ள​ருமான பிரெட் ஹோய்லுடன் இணைந்து, தான் உருவாக்கிய கருதுகோளைத் தடுமாற்றம் இல்லாமல் தெளிவாக விளக்கிக் கூறினார். ஆரியபட்​டரின் பார்வையில் ஈர்ப்பு விசை என்பது பூமிக்கு உள்ள சிறப்புக் குணம். நியூட்டனோ பூமிக்கு மட்டுமல்ல, நிறை கொண்ட எல்லா பொருட்​களுக்கும் ஈர்ப்பு விசை உண்டு என்றார். மேலும், எவ்வளவு தொலைவில் இருந்​தாலும் இரண்டு பொருள்கள் இடையே கண நேரத்தில் விசை செயல்​படும் என்றார்.

ஒரு கயிற்றுக் கட்டிலைக் கற்பிதம் செய்து​ கொள்​ளுங்கள். அதில் பருமனான ஒருவர் உட்கார்ந்​தால், கயிற்றில் பள்ளம் விழுந்து, கட்டிலின் விளிம்பில் உள்ள பொருள்கள் பள்ளம் நோக்கி உருண்டு ஓடும். அதுபோல்தான் ஈர்ப்பு விசை என்று அதிரடி​யாகச் சொன்னார் ஐன்ஸ்​டைன். கயிற்றுக் கட்டில்தான் காலவெளிப் பரப்பு. அதில் உட்காரும் பருமனான ஒருவர்தான் சூரியனைப் போன்ற கூடுதல் நிறை கொண்ட பொருள். காலவெளியில் ஏற்படும் வளைவாக்​கத்தில் நழுவிச் செல்லும் பொருள்போல, பூமி சூரியனைச் சுற்றுகிறது என்றார் ஐன்ஸ்​டைன்.

நாடகத்தின் போக்குக்கு ஏற்ப, நாடக மேடையில் நடிகர்கள் இங்கும் அங்கும் நகர்கிறார்கள். அந்த மேடையில் நடைபெறும் இடப்பெயர்ச்சி, அந்தக் கதாபாத்​திரங்​களுக்குள் உள்ள உறவு. சூரியனை நோக்கி பூமி இழுபடு​வதுபோல, முக்கியக் கதாபாத்​திரம் என்றால் மற்ற நடிகர்கள் அவரை நோக்கிச் செல்வார்கள். அதுபோல, நிறை கொண்ட பொருள்கள் இடையே உள்ள உறவுதான் பிரெட் ஹோய்ல்​-ஜெ.வி. நாரலீகர் முன்வைத்த ஈர்ப்பு விசையின் புதிய கோட்பாடு.

நியூட்டன் கூறிய ஈர்ப்பு விசையும் அல்ல, ஐன்ஸ்டைன் கூறிய காலவெளிப் பள்ளங்​களும் இல்லை. பிரபஞ்ச வரலாற்றில் நிறை கொண்ட பொருள்​களுக்கு இடையே இதுபோன்ற உறவு ஏற்பட்டு​விடு​கிறது. அதுவே நமக்கு ஈர்ப்பு விசை போன்ற தோற்றத்தைத் தருகிறது என்று அவர்கள் இருவரும் முன்வைத்த கருத்து, அன்று பெரும் சலசலப்பை ஏற்படுத்​தியது. நியூட்டன் - ஐன்ஸ்​டைனுக்கு அடுத்​த​படியான அறிஞர் என அடுத்த நாள் செய்தித்​தாள்கள் முழுவதும் ஜெயந்த் விஷ்ணு நாரலீகர் பற்றிய செய்திதான் இடம்பெற்றது. அமெரிக்கா போன்ற நாடுகளில்கூட அந்த உரை பத்திரிகைச் செய்தி​யானது.

வெள்ளைத் துளைகள் குறித்த ஆய்வு: அன்றைய இந்தியக் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, கல்வி அமைச்சர் எம்.சி.​சாக்லா என அனைவரும் இந்திய கல்லூரி-பல்​கலைக்​கழகங்​களில் உரையாற்றுமாறு நாரலீகருக்கு அழைப்பு விடுத்​தனர். இந்தியா திரும்பிய நாரலீகர் முதலில் மும்பையில் உள்ள டாடா ஆய்வு மையத்தில் பணியாற்றி​னார். கருந்துளை​களின் எதிர்​மறைப் பண்புகள் கொண்ட ‘வெள்ளைத் துளைகள்’ இருப்​ப​தாகக் கருதி​னார்.

தன்னிடம் நெருங்கும் எல்லா பொருள்​களையும் கபளீகரம் செய்யும் தன்மை கொண்டது கருந்துளை என்றால், பல்வேறு பொருள்களை வெளியே துப்பும் தன்மை கொண்டவை வெள்ளைத் துளைகள். இவற்றைப் பற்றிய ஆய்வுகளை நாரலீகர் மேற்கொண்​டார். சமீபகாலத்தில் ஒளி எவ்வாறு பிரபஞ்​சத்தில் பயணிக்​கிறது என்பதை விளக்கும் குவாண்டம் கோட்பாடு​களில் பணியாற்றி​னார். பின்னர், வானவியல் ஆய்வில் உலகளவில் சிறந்த ‘வானியல் -வான் இயற்பியல் பல்கலைக்​கழகங்​களுக்கு இடையேயான மையம்’ என்கிற ஆய்வு நிறுவனத்தை புணே நகரில் நிறுவி, அதில் பல ஆண்டுகள் பணியாற்றி​னார்.

மூடநம்​பிக்கைக்கு எதிரானவர்: 19 ஜூலை 1938, மகாராஷ்டிர மாநிலம் கோலாப்​பூரில் பிறந்த நாரலீகர், நவீன இந்தியாவின் தலைசிறந்த அறிவியல் அறிஞர்​களில் ஒருவர் என்பதில் இருவேறு கருத்​துக்கு இடமில்லை. வானவியல், ஈர்ப்பு விசை, விண்மீன்​களின் இயற்பியல் போன்ற துறைகளில் முக்கியப் பங்களிப்பை வழங்கிய அதேநேரத்​தில், மக்களுக்கு அறிவியலை எடுத்​துச்​செல்​வதும் அறிஞர்​களின் கடமை எனக் கருதி, சிறார் முதல் சாதாரண மக்கள் வரை படிக்கும் வகையில், மராத்​தி​யிலும் ஆங்கிலத்​திலும் பல நூல்களை அவர் எழுதி​யுள்​ளார்.

இந்தியாவின் வளர்ச்சிக்குக் கண்மூடித்​தனமான மூடநம்​பிக்கைகள் பெரும் தடைக்​கற்கள் எனக் கூறிவந்த அவர், ஜோதிடத்தை அறிவியல்​பூர்வமாக ஆய்வுசெய்ய முனைந்​தார். சில ஆண்டு​களுக்கு முன்னால் மதவெறியர்​களால் படுகொலை செய்யப்பட்ட நரேந்திர தபோல்​கருடன் இணைந்து, இந்த ஆய்வை அவர் மேற்கொண்​டார். ஜாதகப் பொருத்​தத்​துக்கும் தம்பதி​யினர் மகிழ்ச்சி​யாகப் பல காலம் இணைந்து வாழ்வதற்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா என ஆய்வு செய்த​போது, ஜாதகப் பொருத்தம் உள்ளவர்​களும் பொருத்தம் அற்றவர்​களும் அதே சதவிகிதத்தில் கூடி வாழ்ந்து​வரு​கின்றனர் எனத் தெரிய​வந்தது.

அதாவது, இருவர் மகிழ்வோடு கூடி இணைந்து வாழ ஜாதகப் பொருத்தம் அவசியமில்லை என அறிவியல்​பூர்வமாக இருவரும் நிரூபித்​தனர். அதேபோல, திருமண முறிவு ஏற்பட்ட தம்பதி​களின் ஜாதகத்தைப் பரிசோ​தித்து, ஜாதகப் பொருத்தம் உள்ளவர்​களும் இல்லாதவர்​களும் சற்றேறக்​குறைய அதே சதவிகிதத்​தில்தான் திருமண முறிவு செய்து​கொள்​கின்றனர் என ஆதாரபூர்வமாக நிறுவி​னார்கள்.

பெருவெடிப்புக் கொள்கை: இன்றைக்குப் பிரபஞ்சவியலில் ஏற்கப்பட்ட பெருவெடிப்புக் கொள்கைக்கு முரணான கொள்கைதான் பிரெட் ஹோய்ல்​-ஜெ.​வி.​நாரலீகர் ஏற்படுத்திய ‘நிலைத்து நீடித்த பிரபஞ்சம்’ என்னும் கொள்கை. இன்றைக்கு இந்தக் கொள்கையை ஏற்பவர்கள் சொற்பமே என்றாலும், இவர்கள் எழுப்பிய கேள்விகள், கொடுத்த உந்துதலில்தான் பெருவெடிப்புக் கொள்கை வளர்ச்சி பெற்றது. தனது 86ஆவது வயதில், கடந்த மே 20, 2025 இல் காலமான நாரலீகர், இந்தியாவில் அறிவியலுக்கு வழங்கப்​படும் உயரிய விருதான பட்நாகர் விருது, அறிவியல் பரப்பு​தலுக்காக யுனெஸ்கோ வழங்கும் கலிங்கா விருது உள்படப் பல பரிசுகளைப் பெற்றவர்.

பத்மவிபூஷண் (2004), ஐன்ஸ்டைன் பதக்கம் (2011) உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றார். அறிவியல் ஆய்வு, அறிவியல் மனப்பான்மையை உயர்த்திப் பிடித்தல், மக்களுக்கு அறிவியலை அவர்கள் தாய்மொழியில் எடுத்​துச்​செல்​லுதல் எனப் பல்துறை வித்தகராக இருந்த அவரது மறைவு, எந்த வகையிலும் ஈடுசெய்ய இயலாதது என்பதில் சந்தேகமில்​லை.

- தொடர்புக்கு: tvv123@gmail.com

SCROLL FOR NEXT