சிறப்புக் கட்டுரைகள்

திரைப்படத்துக்கும் அரசியலுக்கும்தான் போகிறது கல்விக் கட்டணம்! - கல்வியாளர் தா.நெடுஞ்செழியன் நேர்காணல்

ஆனந்தன் செல்லையா

கல்வித் துறையில் எழும் சிக்கல்கள் சார்ந்த விவாதங்களில் தீர்வு நோக்கிய குரலை எழுப்பிவருபவர் தா.நெடுஞ்செழியன். உயர் கல்விக்கான ஆலோசனைகளை வழங்குவதோடு, அரசுப் பள்ளி, கல்லூரி மாணவர்களின் உரிமைகளுக்காகவும் இவர் செயல்பட்டு வருகிறார். இந்திய உயர் கல்வித் துறையில் உள்ள வாய்ப்புகள், பிரச்சினைகள் குறித்து நெடுஞ்செழியன் அளித்த நேர்காணலின் சுருக்கம்:

உயர் கல்விக்கான ஆலோசனை வழங்குவதைச் சமூகத்தின் தேவையாக நீங்கள் எப்போது உணர்ந்தீர்கள்? - ​நான் சென்னை கிண்டி பொறி​யியல் கல்லூரி​யில் படித்து முடித்து, மென்​பொருள் துறை​யில் பணிபுரிந்து​வந்​தேன். ஏறக்​குறைய இந்தியா​வின் அனைத்​துப் பகுதி​களுக்​கும் சென்​றிருக்​கிறேன். அரசுக் கல்வி நிறு​வனங்​களில் குறிப்​பாக, மத்திய அரசுக் கல்வி நிறு​வனங்​களில் என்னென்ன படிப்புகள் உள்ளன என்பது நம் மாணவர்​களுக்​குத் தெரிவ​தில்லை. பெற்​றோர்களோ தமிழ்​நாட்​டைத் தாண்டி யோசிப்பதே இல்லை. நம் குழந்தைகள் சிறந்த கல்வி நிறு​வனங்​களில் சேரும் வாய்ப்பு​களைத் தேடித் தர வேண்​டும் என 2002இல் உயர் கல்விக்கு ஆலோசனை வழங்கும் பணியைத் தொடங்​கினேன்​.

தொடக்கத்திலிருந்தே அரசுக் கல்லூரிகளையும் பல்கலைக் கழகங்களையும் மட்டுமே பரிந்துரை செய்கிறீர்கள்... பல குடும்பங்கள் தங்கள் சொத்துகளை விற்றுப் பிள்ளைகளைப் படிக்கவைப்பது இங்கே சாதாரண நிகழ்வாகிவிட்டது. பணம் கொடுத்துக் கல்லூரியில் சேர்ப்பதால், ‘நான் எப்போது விழுந்தாலும், பணம் கொடுத்துத் தூக்கி விட்டுவிடுவார்கள்’ என்கிற தவறான எதிர்பார்ப்பைக் குழந்தைக்கு ஏற்படுத்துகிறோம்.

எனவே, பணம் கொடுத்துச் சேர வேண்டிய நிறுவனங்களைத் தவிர்த்துவிட்டு, எங்கெல்லாம் தகுதியின் அடிப்படையில் சேர முடியுமோ, அங்கு போட்டியிட்டுச் சேருவதற்கு வழிகாட்டுகிறேன். அதற்கு அரசுக் கல்வி நிறுவனங்கள்தான் ஒரே இடம். என்னிடம் ஆலோசனை பெற வரும் மாணவர்களை 40-50 நுழைவுத்தேர்வுகள் எழுத வைக்கிறேன். ஒவ்வொரு தேர்வும் வெவ்வேறு துறை சார்ந்திருப்பதால் அவர்களுக்குச் செறிவான அனுபவம் கிடைக்கிறது. பல நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெற்றாலும், இறுதியில் தங்களுக்குப் பொருத்தமான ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொள்கின்றனர்.

தமிழகத்தில் உயர் கல்வியைத் தேர்ந்தெடுக்கும் விதம் எப்படி இருக்கிறது? - 12ஆம் வகுப்புக்குப் பின்னர், 80க்கும் மேலான நுழைவுத் தேர்வுகள் உள்ளன. அதில் 75 தேர்வுகளுக்கு 12ஆம் வகுப்புத் தேர்வு மதிப்பெண்ணையே பார்ப்பதில்லை. குழந்தைகளின் தேடலைச் சுருக்கிவிடுகிறோம். ஒவ்வொரு குழந்தையும் தனித்தன்மை கொண்டது. அனைவரையும் ஒரே அளவுகோலால் அளக்க முடியாது. போட்டியைத் தவிர்க்க முடியாது.

ஆனால், அதைத் தாண்டியும் ஓர் அழகான உலகம் இருப்பதை நாம் ஏற்க மறுக்கிறோம். அனைவரையும் மருத்துவம், பொறியியல் போன்ற துறைகளுக்குள் தள்ளுகிறோம். நகர்ப்புறம், சுற்றுச்சூழல், வளாகம் ஆகியவற்றைத் திட்டமிடுவதற்கென்றே ஒரு படிப்பு இருக்கிறது. இதில் பல மாணவர்களைச் சேர்த்து, அவர்கள் முக்கியமான பணிகளில் அமர்வதைப் பார்த்திருக்கிறேன்.

என்னிடம் வந்த ஒரு மாணவி 3 ஆண்டுகளாக நீட் தேர்வு எழுதிவந்தார். ஜேஇஇ தேர்வைச் சும்மா எழுதிவிட்டு வரும்படி நான் சொன்னேன். அதில் முதல் தாளில் 80% பெற்றார். இரண்டாம் தாளில் 99 பெர்சன்டைல் வாங்கினார். அவருக்கு விஜயவாடாவில் உள்ள ‘திட்டமிடல் - கட்டிடக் கலைப் பள்ளி’யில் இடம் கிடைத்தது. மூன்று ஆண்டுகளை வீணடித்துவிட்டோமே என அந்த மாணவி மிகவும் வருந்தினார்.

முதல் கட்டமாகக் கல்லூரியில் இடம் கிடைத்துவிட்டாலே மாணவர்கள் நிம்மதி அடைந்துவிடுவார்கள். இது பெற்றோருக்குப் புரிவதில்லை. இதுதான் வேண்டும் என அளவுக்கு அதிகமாகக் காத்திருக்காமல், கிடைக்கிற படிப்பில் சேர மாணவர்கள் முன்வர வேண்டும். விருப்பமான படிப்பை முதுகலையில் தேர்வு செய்து கொள்ளலாம்.

ஒரு குடும்பம் உயர் கல்விக்காக மிகையாகச் செலவழிப்பதைக் குறைக்க அரசு என்ன செய்ய வேண்டும்? - முதலில் வணிகமயமாக்கம் கொஞ்சமாவது கட்டுப்படுத்தப்பட வேண்டும். மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டின்படி சராசரியாக 50 ஆயிரம் ‘சீட்’டுகளுக்குத் தலா ரூ.10 லட்சம் எனில், ஐயாயிரம் கோடி ரூபாய் பெறப்படுகிறது. இதே தொகையை மருத்துவக் கல்வியின் தரத்தை மேம்படுத்த ஒதுக்கியிருந்தால், இந்தியாதான் மருத்துவப் படிப்பின் தலைநகராக மாறியிருக்கும். சமூக வளர்ச்சி என்கிற பின்புலத்தில் பார்த்தால், இவ்வளவு பணமும் திரைப்படத் துறைக்கும் அரசியலுக்கும்தான் செல்கிறது. லட்சக்கணக்கில் கல்லூரிகளுக்குக் கட்டணம் கொடுக்கும் குடும்பங்கள், மறைமுகமாகத் தங்கள் பணத்தில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களை ரூ. 200-500 வரைக்கும் கொடுத்துப் பார்க்கின்றன.

கரோனா தொற்று போன்ற நெருக்கடிகளைத் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களால் நன்கு கையாள முடிகிறது; வேறு சில மாநிலங்களால் முடியவில்லை. கல்வி அமைப்பில் உள்ள சமச்சீரற்ற தன்மையைத்தான் இது காட்டுகிறது. கல்வியைச் சமத்துவத்தோடு நிர்வகித்திருந்தால், பல உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம். அடுத்த கட்டமாக, இப்போது வணிக உலகம் அரசில் வந்து உட்கார்கிறது.

நான்கு ஆண்டுகளுக்கு முன்னால், மத்திய அரசுக் கல்வி நிறுவனங்களில் ஒரு பருவத் தேர்வுக்கு ரூ. 40 ஆயிரத்தை மாணவர்கள் கட்டினார்கள். இன்று அதே தேர்வுக்கு ரூ. 2 லட்சம் கேட்கப்படுகிறது. அரசாங்கம் கட்டணத்தைச் சீரற்று உயர்த்துவது, தனியார் கல்வி நிறுவனங்கள் கட்டணத்தைப் பன்மடங்கு உயர்த்த வழிவகுக்கிறது.

உயர் கல்வித் துறையில் எத்தகைய மாற்றங்கள் தேவைப்படுகின்றன? - ஒரு விவசாயி கஷ்டப்படுகிறார் எனில், அதற்குத் தீர்வு காண்பது எப்படி என யோசிக்கப் பொறியியலாளர்களுக்கு நாம் கற்பிக்கவில்லை. தூய்மையற்ற ஒரு ரயில் நிலையத்தை எப்படிச் சுத்தப்படுத்துவது என்று தீர்வு தேடுவதாக நம் கல்வி இல்லை. சமூக வளர்ச்சிக்கு உதவாத கல்வியால் என்ன பயன்? வெளிநாடுகளில் அடிப்படைக் கட்டமைப்பு மிகுந்த அக்கறையோடு பராமரிக்கப்படுகின்றது. தேசியக் கல்விக் கொள்கை மூலமாகப் பல முதுகலைப் படிப்புகளுக்கு இப்போது நான்காண்டு இளங்கலைப் படிப்பைத் தகுதியாக நிர்ணயிக்கின்றனர்.

தமிழகத்தில் பி.எஸ்சி, பி.காம் போன்ற படிப்புகள் மூன்று ஆண்டுகள்தான். கஷ்டப்பட்டுப் படித்து முடிக்கும் மாணவர்களிடம், முதுகலையில் சேர நான்கு ஆண்டுப் படிப்பு தகுதியாகக் கேட்கப்பட்டால், அவர்கள் என்ன செய்வார்கள்? விடுதலை பெற்று இவ்வளவு காலம் ஆகியும், ஏறக்குறைய 28% பேர்தான் உயர் கல்வி கற்கவே வருகின்றனர். அப்படி வருபவர்களையும் வெளியே அனுப்புவதுபோல் இந்த விதிமுறை உள்ளது. இதுபோன்ற கொள்கை முடிவுகளில் அரசியல் கருத்தொற்றுமை கட்டாயம் வேண்டும்.

தமிழகத்தில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் மீது ஈர்ப்பு உள்ளது. ஆனால், வட இந்தியாவில் அறிவியல் பாடங்களுக்கு சி.பி.எஸ்.இ. பள்ளிகளும் அறிவியல் ஆசிரியர்களும் எண்ணிக்கையில் குறைவுதான். வரலாறு போன்ற படிப்புகளுக்குத்தான் பள்ளிகள் அதிகம். அறிவியல் தேர்வு எழுதும் ஒரு லட்சம் மாணவர்களின் விடைத்தாள்கள் இங்கிருந்து அனுப்பப்பட்டால், அவற்றைத் திருத்த அங்கே 30 ஆயிரம் ஆசிரியர்கள்தான் இருப்பார்கள். மூன்று மடங்கு வேலையை அவர்களால் எப்படிச் செய்ய முடியும்? இது ஒரு தீவிரமான சமநிலை இன்மை. இந்தத் தேர்வு மதிப்பெண் ஒரு குழந்தையின் எதிர்காலத்தையே தீர்மானிப்பதாக இருக்கிறது.

நீதித் துறை போலக் கல்வித் துறையும் அரசியலுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். டி.என்.சேஷன் பொறுப்புக்கு வராதவரைக்கும், தேர்தல் ஆணையத்தின் அதிகாரம் என்ன என்பது நமக்குத் தெரியாது. ஒரு தனிமனிதர், ஓர் அமைப்பையே சுத்தப்படுத்தித் தந்தார். கல்வித் துறையில் பொறுப்பு வகிப்பவர்களும் அத்தகைய மாற்றங்களை நிகழ்த்த முடியும்.

- தொடர்புக்கு: anandchelliah@hindutamil.co.in

SCROLL FOR NEXT