ஒரு போரில் முதலில் பலியாவது உண்மை -இப்படிச் சொன்னவர் ஹிரம் ஜான்சன், அமெரிக்கர், செனட்டராக இருந்தவர். அது முதலாம் உலகப் போரின் காலம். அந்நாளில் வதந்திகள் வாய் வார்த்தையாகத்தான் பரவின.
இந்நாளில் அவை சமூக ஊடகங்களில் ஏறி இறக்கை கட்டிப் பறக்கின்றன. கடந்த சில வாரங்களில் சமூக ஊடகங்கள் வதந்திகளைப் பரப்புவதில் முழு மூச்சாக இயங்கின. அவை பொய்ப் படங்களையும் போலிக் காணொளிகளையும் தரித்து உண்மை வேடம் பூண்டன. அவை போர் வெறியை ஊதிப் பெரிதாக்கின. இந்தப் பொய்யுரையிலும் போர் வெறிப் பரப்புரையிலும் காட்சி ஊடகங்களும் இணைந்துகொண்டன.
போர் வெறியும் பொய்யுரையும் ‘கராச்சி துறைமுகத்தைத் துவம்சம் செய்தது இந்தியப் படை’, ‘இஸ்லாமாபாத் கைப்பற்றப்பட்டது’, ‘பாகிஸ்தான் விமானி கைது’, ‘வீட்டுக் காவலில் தளபதி முனீர்’- இவையெல்லாம் காட்சி ஊடகங்கள் ‘உருவாக்கிய’ செய்திகள். இவற்றோடு திரிக்கப்பட்ட காணொளிகள் சேர்க்கப்பட்டன. செய்தித் தொகுப்பின் பின்னணியில் ராணுவ சைரன்கள் ஒலித்தன. முன்னணியில் உச்சக் குரலில் அதன் நெறியாளர்கள் முழங்கினர்.
பாகிஸ்தான் இரண்டு ஜேஎஃப்-17 போர் விமானங்களை இழந்ததாக அதன் தளபதி ஒருவரே ஒப்புக்கொண்டார். அந்தக் காணொளி பெரும் பரவலானது. ஆனால், அது செயற்கை நுண்ணறிவின் வாயிலாக உருவாக்கப்பட்ட போலிக் காணொளி. சில சமூக ஊடகர்கள் இந்தப் பொய்களை மும்முரமாகப் பரப்பினார்கள். கராச்சி துறைமுகம் குறித்த ஒரு எக்ஸ் தளப் பதிவுடன் ஒரு படமும் இணைக்கப்பட்டிருந்தது.
அது சில மாதங்களுக்கு முன்பு காஸாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலின் படம் என்பதை, உண்மை அறியும் ஒரு குழு கண்டறிந்தது. ஆனால், யாருக்கு வேண்டும் உண்மை? கராச்சியில் நடத்தப்பட்ட தாக்குதல் என நம்பியே அந்தப் பதிவை 25 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பார்த்தனர். ஆயிரக்கணக்கானோர் பகிர்ந்துகொண்டனர். இந்தப் பரிமாற்றங்கள் நேராகவோ மறைபொருளாகவோ போரை விதந்தோதின.
பஹல்காமில் பாகிஸ்தானியப் பயங்கர வாதிகள் நடத்திய படுகொலைகளுக்கு எதிர்வினையாக இந்திய ராணுவம் மே 7 அன்று பயங்கரவாதிகளின் ஒன்பது தளங்களின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதை ‘இலக்கு நோக்கிய, அளவான நடவடிக்கை’ என்று விளக்கியது இந்திய அரசு. அடுத்த நாள்களில் பாகிஸ்தான் நமது எல்லையோரக் கிராமங்களைத் தாக்கியது. இந்த முறை பாகிஸ்தானின் ராணுவத் தளங்களை இந்தியா தாக்கியது.
மோதல்கள் வலுத்துவந்த வேளையில், மே 10 அன்று மாலை இரு தரப்பும் தங்கள் துப்பாக்கிகளை மௌனிக்க ஒப்புக்கொண்டன. மே 7 முதல் 10 வரை நமது ராணுவத் தளபதிகளும் அதிகாரிகளும் வெளியுறவுத் துறைச் செயலரும் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். மிகுந்த நிதானத்தோடும் பொறுப்புணர்வோடும் பேசினார்கள். சில தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு இந்த நிதானம் உவப்பாக இல்லை. அவை போரைத் தங்கள் ஸ்டுடியோவிலேயே உருவாக்கின. கெடுவாய்ப்பாகச் சில தமிழ் ஊடகங்களும் இதில் இணைந்துகொண்டன.
ஒரு நெறியாளருக்கு இந்தச் செய்திகள் பெரும் ‘மஜா’வாக இருந்தது. மஜா என்பது பாரசீகச் சொல். என்றாலும் நமக்கு அதன் பொருள் தெரியும். போர் ஒரு கொண்டாட்டம் அல்ல. அது கிரிக்கெட் போட்டியோ, வீடியோ விளையாட்டோ அல்ல. போர் என்பது துயரம், மரணம், ஊனம், குருதி, அழிவு, இழப்பு. காஷ்மீரின் எல்லையில் அதுதான் நடந்தது. 12 குடிநபர்களும் ஒரு ராணுவ வீரரும் பாகிஸ்தானின் குண்டுவீச்சில் உயிரிழந்தனர்.
அதில் குழந்தைகளும் இருந்தனர். எல்லையோரக் கிராமத்தில் பிறந்ததைத் தவிர அவர்கள் செய்த பிழை என்ன? இந்த எளிய மக்களின் மரணம், பல ஊடகங்களில் செய்தியாகக்கூட இடம்பெறவில்லை. போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு, ஒரு வாரத்துக்குப் பின்பும்கூட பல எல்லையோரக் கிராமங்களில் இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை. எல்லையிலிருந்து பல மைல் தொலைவில் பாதுகாப்பான இடங்களில் இருந்துகொண்டு இந்த ஊடகர்கள் போர் நெருப்பை உருவாக்கிக் குளிர் காய்ந்தார்கள்.
வெறியும் வன்மமும்: இவர்கள் யாரும் போர் நிறுத்தத்தை எதிர்பார்க்கவில்லை. அதை அதிகாரபூர்வமாக அறிவித்தவர் இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி. எக்ஸ் தளப் பக்கத்தில் பலர் அவதூறுகளை எழுதினர். ஆகவே, சமூக ஊடகர்கள் மிஸ்ரியின் மகளைத் தாக்கினார்கள். அவரது அலைபேசி எண்ணைப் பொதுவெளியில் பகிர்ந்தார்கள். மிஸ்ரி தனது எக்ஸ் தளக் கணக்கைப் பூட்டிவைத்தார். இவர்களின் தாக்குதலுக்கு உள்ளான இன்னொரு பெண் ஹிமான்ஷி நர்வால்.
இவரது கணவர் லெப்டினன்ட் வினய் நர்வால், கடற்படை அதிகாரி; பஹல்காமில் சுட்டுக்கொல்லப்பட்ட 26 பேரில் ஒருவர். இவர்களுக்கு மணமாகி ஒரு வாரமே ஆகியிருந்தது. கொலையுண்ட கணவரின் அருகில் செயலிழந்து அமர்ந்திருக்கும் ஹிமான்ஷியின் படம் இந்தத் தாக்குதலின் அடையாளமானது. அது சமூக ஊடகங்களில் பரவலானது.
பஹல்காம் துயரத்தின் முகமாக இருந்தவர் மீது வன்மமும் வெறுப்பும் ஏன் கட்டவிழ்த்து விடப்பட்டன? “இந்தப் பயங்கரவாதத்துக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால், நாம் காஷ்மீரியரையும் இஸ்லாமியரையும் தாக்குவது நியாயமாகாது” என்று அவர் சொன்னதுதான் காரணம். மத வெறுப்புக்கு ஆட்பட்டிருந்த சில சமூக ஊடகர்களால் இதைச் சகித்துக்கொள்ள முடியவில்லை. அவர்கள் வன்மத்தையும் வெறுப்பையும் கக்கினார்கள்.
அவரை ‘ஆன்டி - இந்தியன்’ என்று விளித்தார்கள். கல்லூரிக் காலத்தில் அவருக்குக் காஷ்மீரிய நண்பர்கள் இருந்ததைச் சிலர் ‘கண்டுபிடித்தார்கள்’. தேசியப் பெண்கள் ஆணையம் (NCW) இந்த வெறுப்பாளர்களைக் கடுமையாகக் கண்டித்தாலும், அதோடு நிறுத்திக்கொண்டது.
இந்த விசைப்பலகை வீரர்களின் வன்மத்துக்கு உள்ளான இன்னொருவர் கொச்சியைச் சேர்ந்த ஆர்த்தி மேனன், பஹல்காமில் தந்தை ராமச்சந்திரனைப் பறிகொடுத்தவர். “அந்த நிராதரவான வேளையில், எனக்கும் என் பிள்ளைகளுக்கும் உறுதுணையாக இருந்தவர் இருவர். டாக்சி ஓட்டுநர் முசாபிர், அவரது நண்பர் சமீர். இவர்கள் காஷ்மீரில் எனக்குக் கிடைத்த சகோதரர்கள்.” ஆர்த்தி இவ்விதம் சொன்னதும் சமூக ஊடகர்களின் படை இவரது துக்கத்தைச் சந்தேகித்தது. பிறப்பையும் சந்தேகித்தது.
ஏன் இந்த வெறியும் வன்மமும்? - காட்சி ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் உற்பத்தியாகிற இந்த வன்மத்துக்கு ஊற்றுக்கண் எது? இந்தப் போர் வெறிக்கும் பொய்யுரைக்கும் அவதூறுக்கும் பின்னால் இருப்பது மத வெறுப்பு. அதைச் சில வாட்ஸ்ஆப் பல்கலைக்கழகங்கள் ஊட்டி வளர்க்கின்றன. சிலர் அதைத் தொடர்ந்து உட்கொள்கிறார்கள்.
நாளாவட்டத்தில் தங்கள் கருத்து மட்டுமே சரி என்கிற முடிவுக்கு வருகிறார்கள். நாடெங்கிலும் தங்களுக்கு உவப்பான குரல்கள் மட்டுமே ஒலிக்க வேண்டும் என்று கருதுகிறார்கள். எதிர்க் குரல்களை அவதூறு ஆயுதங்களால் அடக்க முற்படுகிறார்கள். அது வலிமைமிக்க அரசுச் செயலராக இருந்தாலும் சரி, எளிய குடிநபரான ஆர்த்தியாக இருந்தாலும் சரி, வன்மத்தைக் கக்குகிறார்கள்.
என்ன செய்யலாம்? - பயங்கரவாதத்தைக் கடுமையாக எதிர்கொள்ள வேண்டும். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அதே வேளையில், ஒரு போரை நோக்கிப் போவதைத் தவிர்க்க வேண்டும். போர் ஒருபோதும் அமைதியைக் கொண்டுவராது. போர் எந்தப் பிரச்சினை யையும் தீர்த்ததாக வரலாறு இல்லை.
முதல் கட்டமாக, காட்சி ஊடகங்களில் பொய்யுரையைப் பரப்பியவர்கள் யாரென்று அனைவருக்கும் தெரியும். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இரண்டாவதாக, மிஸ்ரி, ஹிமான்ஷி, ஆர்த்தி முதலானோரை அவதூறு செய்தவர்களை, அவர்கள் எந்தப் பெயரில் ஒளிந்திருந்தாலும் தேடிக் கண்டடைந்து, இணையக் குற்றங்களின் கீழ் வழக்குப் பதிவுசெய்ய வேண்டும்.
இது பொய்யுரைகளைப் பரப்புவோர்க்கு எச்சரிக்கையாக அமையும். மூன்றாவதாக, நமது அரசமைப்பு மதச் சார்பின்மையை உயர்த்திப் பிடிக்கிறது. அரசு இயந்திரம் அதை முன்னெடுக்க வேண்டும். ஆன்மிகவாதிகளும் அரசியலர்களும் ஆர்வலர்களும் அதைப் பரப்ப வேண்டும். இறுதியாக, நம்மளவில் செய்யக்கூடியது ஒன்று உண்டு. வன்மத்தையும் வெறியையும் பரப்பும் ஊடகங்களையும் ஊடகர்களையும் புறக்கணிக்க வேண்டும். போர் தீது. வன்மம் கொடிது.
- Mu.Ramanathan@gmail.com