‘கணக்குப் பாடம் நடத்தச் செல்லும்போது கோபத்தை வாசலில் நிற்க வைத்துவிட்டு, நீங்கள் மட்டும் வகுப்பறைக்கு உள்ளே செல்லுங்கள்’ - ஆசிரியர் தேனி சுந்தர் எழுதிய ‘உங்க ஜட்ஜ்மென்ட் ரொம்பத் தப்பு சார்’ நூலை வாசித்தபோது கிடைத்த வார்த்தைகள் இவை. ‘கணக்கும் இனிக்கும்’ என்கிற அந்தக் கட்டுரை இப்படித் தொடங்குகிறது. ‘தமிழில் எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை கணக்கு வாத்தியார்’. கணிதம் கற்பித்தலில் உள்ள சிக்கல்களைத் தொடக்க வகுப்பு முதலே துப்புரவாக அகற்ற வேண்டும் என்பதுதான் அந்தக் கட்டுரையின் சாரம்.
இக்கட்டுரை தொடர்பாக ஃபேஸ்புக்கில் ஒரு பதிவை எழுதினேன். அதற்குப் பல்வேறு ஆளுமைகளிடமிருந்து வந்த பின்னூட்டங்கள், இந்தப் பிரச்சினையின் பல்வேறு கோணங்களை வெளிப்படுத்தின. பாரதியார் பல்கலைக்கழகத்தின் மூத்த பேராசிரியர் ஒருவர், “பல நேரங்களில் ஆசிரியர்களின் ஆளுமை, நட்பு, கனிவு போன்றவை அந்த ஆசிரியர்கள் நடத்தும் பாடத்தின் மீதான விருப்பமாக மாணவர்களுக்கு மாறிவிடுகிறது” எனச் சுட்டிக்காட்டினார்.
இப்படியும் சில ஆசிரியர்கள்: “உண்மையில் கணிதம் என்பதே எண்களைக் கொண்டு எழுதப்படும் அழகிய கவிதை. பல கணித ஆசிரியர்கள் ஒரு கணக்கை எப்படிப் போட வேண்டும் என்கிற வழிமுறைகள் தெரிந்தவர்களே. ஆனால், கணிதத்தில் உள்ள துறைசார் பதங்கள், வரையறைகள் போன்றவற்றை விளக்குவதில் இருக்கும் சிரமங்களின் காரணமாக, தங்கள் இயலாமையை மறைக்கச் சிலர் கோபப்படுவார்கள்” என்று ஒருவர் எழுதியிருந்தார். இந்தக் கூற்றில் உண்மை இல்லாமல் இல்லை.
அனைத்துக் கணித ஆசிரியர்களையும் அப்படிச் சொல்ல முடியாது. சிலர்தான் இந்த வகைமைக்குள் வருவார்கள். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் போன்ற அமைப்புகள் ‘கணக்கும் இனிக்கும்’, ‘விளையாட்டு வழி கணிதம்’ என்பன போன்ற பல செயல்பாடுகளை முன்னெடுத்து வருகின்றன. நான் எட்டாம் வகுப்பு படித்து முடிக்கும்வரை, கணிதத்தில் என்ன கற்பித்தார்கள் என்பது துளியும் நினைவில் இல்லை. ஒன்பதாம் வகுப்பில் எங்களுக்கு வாய்த்த கணித ஆசிரியர், அவர் பாட்டுக்குப் பேசிக்கொண்டே கரும்பலகையில் எழுதுவார்.
அதாவது, கணக்கு போட்டுக்கொண்டே செல்வார். கரும்பலகை நிறைந்ததும், மேலிருந்து அழித்துவிட்டு, தொடர்ந்து எழுதுவார். ஏற்கெனவே அடிப்படைக் கணித ஞானம் உள்ள மாணவர்கள் அதைக் கொஞ்சம் படித்துக்கொண்டார்கள். எங்களைப் போன்றவர்கள் கரும்பலகையில் இருந்ததைப் பார்த்து வேகவேகமாக நோட்டில் எழுதியதுடன் சரி.
எங்கள் வகுப்பாசிரியரும் ஒரு கணித ஆசிரியர். அடித்து அடித்துத்தான் கணிதம் கற்பிக்க முடியும் என்பதில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர். அடிபட்டேனும் கணிதம் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற ஆசை நமக்கு. ஆனால், என் போன்றவர்களின் துரதிர்ஷ்டம். 10ஆம் வகுப்பில் எங்கள் பிரிவுக்கும் அவரே வந்தார். 35 மதிப்பெண்களோடு 11ஆம் வகுப்புக்குத் தப்பி வந்துவிட்டேன்.
குறையாத ஆர்வம்: அப்போதும் கணித ஆர்வம் குறையவில்லை. கணிதம் முதன்மைப் பாடமாகக் கொண்ட முதல் குரூப்பைத் தேர்வுசெய்தேன். ஒரு மாதக் காலத்துக்கு மேலாகப் போராடிப் பார்த்தேன். கணிதம் கற்றுக்கொள்ளும் ஆர்வம் கைகூடவில்லை. இதில் இன்னொரு சிக்கலும் இருந்தது. அந்தக் கணித ஆசிரியர் கணிதம் புரியக் கூடாது என்றே நடத்திக்கொண்டு வந்தார். மாணவர்களுக்குக் கணிதம் புரியாமல் போகப்போகக் கணித ஆசிரியர் வீட்டில் தனிப் பயிற்சிக்குக் கூட்டம் பெருகியது.
தனிப்பயிற்சிக்கு மாதக் கட்டணம் 20 ரூபாய். அந்த 20 ரூபாய்க்கும் வழியில்லாத என்னைப் போன்றவர்கள், 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காகக் கலைப் பாடங்களைத் தேர்வுசெய்தோம். பட்டப் படிப்பில் புள்ளியியல், கணக்குப் பதிவியல் போன்ற பாடங்கள் தலைகாட்டின. பட்ட மேற்படிப்பில் கணிதம் இரண்டு பாடங்களாகத் தரப்பட்டது. 15 வயதில் விட்டுவந்த கணிதம் 21 வயதில் இனிப்பதுபோல் இருந்தது. இரண்டு பாடங்களிலும் சராசரியாக 75 மதிப்பெண்களை எட்ட முடிந்தது.
உண்மை வெளிப்பட்டது: அடிப்படையில் நான் ஒரு சமூக அறிவியல் ஆசிரியர் என்பதால், நான் எழுதிய ஃபேஸ்புக் பதிவுக்கு ஆதரவாகப் பதிவிட்டோர் அனைவரும் என் போன்றவர்களோ என்று அவர்களது கல்விப் பின்புலத்தை ஆராய்ந்தேன். கணித ஆசிரியர்களுக்கு அதீதமாகக் கோபம் கொப்பளிக்கக் காரணம் என்ன என்று அதன் வேர்களைச் சுட்டிக்காட்டியிருந்தவரே ஒரு கணிதப் பேராசிரியர்தான் எனத் தெரியவந்தது.
கல்விப் புலத்தில் - குறிப்பாக - ஒருசில இடங்களில் கணித வகுப்புகள் எப்படி நடைபெறுகின்றன என்பது குறித்த தெளிவும் நியாய உணர்வும் அவரிடம் வெளிப்பட்டன. ‘கணிதம் என்பது உண்மை மட்டுமல்ல. உயரிய அழகையும் கொண்டது’ என்கிறார் பெர்னாட் ஷா. ‘கணித மேதை ஒரு கவிஞன். அவன் ஓர் ஓவியன்...’ என்று சொல்லிச் சொல்கிறார் ஜி.எச். ஹார்டி.
இந்த அழகிய கவிதைகளை, ஓவியங்களைக் கண்ணிருந்தும் ஏன் பார்க்க முடியவில்லை? கணித அழகியலை ரசித்து, ருசிக்க முடியாமல் எங்கே நாம் கோட்டை விட்டோம்? கணிதத்தை அடிப்படை தொடங்கி ஆழம்வரை தெளிவாகச் சொல்லித்தரும் வழிமுறைகளைக் கற்றறிந்த, அவற்றை நட்பார்ந்த முறையில் மாணவர்களுக்குச் சொல்லித்தருகிற பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களைக் கொண்டு, புத்தாக்கச் சிந்தனையுடன் கணிதத்தை மாணவர்களுக்குக் கற்றுத்தரும் திட்டங்களைப் பள்ளிக் கல்வித் துறை உருவாக்க வேண்டும்.
- தொடர்புக்கு: tnsfnmani@gmail.com