இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ICAR), 2025 மே 4இல் ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியில், உலகின் முதல் மரபணு திருத்தப்பட்ட (Genome-edited) நெல் வகைகளை மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சௌகான் வெளியிட்டார். ‘மைனஸ் 5, பிளஸ் 10’ என்கிற புதிய நெல் சாகுபடித் திட்டம் உருவாக்கப்படுவதாகவும், இது நாட்டின் வேளாண் கொள்கையில் ஒரு முக்கியத் திருப்பமாக அமையும்' என்றும் அப்போது அவர் கூறினார்.
இத்திட்டத்தின்கீழ் நெல் சாகுபடிப் பரப்பளவில் 5 மில்லியன் ஹெக்டேர் (மி.ஹெ.) அளவைக் குறைத்துக்கொண்டு, அதன் உற்பத்தி 10 மில்லியன் டன்னாக அதிகரிக்கப்படும்; நெல் சாகுபடியிலிருந்து விடுவிக்கப்பட்ட 5 மி.ஹெ. பரப்பளவை - இந்தியா நீண்ட காலமாக இறக்குமதியைச் சார்ந்துள்ள - எண்ணெய் வித்துகள், பருப்புப் பயிர்கள் ஆகியவற்றைப் பயிரிடுவதற்குப் பயன்படுத்துவதே இதன் அடிப்படை நோக்கம்.
கோட்பாட்டு அளவில் இத்திட்டமானது அதிக உற்பத்தித் திறன், வளப் பாதுகாப்பு (resource conservation), விலையுயர்ந்த இறக்குமதிகளைக் குறைப்பது போன்றவற்றுக்கு உறுதியளிக்கிறது. இருந்தாலும், அரசுத் துறைகள் மூலமாகப் பருப்பு, எண்ணெய் வித்துப் பயிர்கள் முறையாகக் கொள்முதல் செய்யப்படாத காரணத்தால், நஷ்டத்தைச் சந்தித்துவரும் விவசாயிகள், லாபம் கிடைக்கும் நெல் பயிரை விட்டுவிட்டு அரசு விரும்பும் லாபம் இல்லா பயிர்களுக்கு மாறுவார்களா என்கிற வலுவான கேள்வியும் எழுகிறது.
அதிகரிக்கும் இறக்குமதிச் செலவுகள்: உலக அளவில் எண்ணெய்வித்துப் பயிர்களின் பரப்பளவில் சுமார் 31 சதவீதத்தை, ஏறக்குறைய 301.9 லட்சம் ஹெக்டேர் பரப்பை 2023-24இல் இந்தியா கொண்டிருந்தது. இருப்பினும், உலகின் மிகப்பெரிய சமையல் எண்ணெய் இறக்குமதியாளராகவே இந்தியா உள்ளது. பருப்புப் பயிர் வகைகளும் இதேபோன்ற நிலையைத்தான் பிரதிபலிக்கின்றன. 2023-24இல் ஏறக்குறைய 275.1 லட்சம் ஹெக்டேரில் பருப்புப் பயிர்கள் நம் நாட்டில் பயிரிடப்பட்டன. உலகின் மிகப்பெரிய பருப்புப் பயிர் உற்பத்தியாளராக இருந்தபோதிலும், ஆண்டுதோறும் சுமார் 25 லட்சம் டன் பருப்பு வகைகளை இந்தியா இறக்குமதி செய்துவருகிறது.
இதன் அடிப்படையில் பார்த்தால், மத்திய வேளாண் அமைச்சகத்தின் புதிய திட்டம், இப்பயிர்களில் நீண்ட காலச் சார்புநிலையை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டு உள்ளது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், பருப்பு, எண்ணெய்வித்துப் பயிர்களின் பற்றாக்குறையை, சாகுபடிப் பரப்பளவை அதிகரிப்பதால் மட்டுமே தீர்த்துவிட முடியாது. நெல்லுக்கு இணையான லாபத்தை உறுதியளித்தால் மட்டுமே, விவசாயிகள் இப்பயிர்களைச் சாகுபடி செய்ய முன்வருவார்கள்.
நெல் மீது மோகம் ஏன்? - நெல் பயிர் இந்தியாவில் முதன்மைப் பயிராக அதிகப் பரப்பளவில் பயிரிடப்படுவதற்குப் பாரம்பரிய உணவுப் பழக்கம், நீர்ப் பாசன வளர்ச்சி மட்டுமே காரணம் கிடையாது. மற்ற எந்தப் பயிருக்கும் கொடுக்கப்படாத முக்கியத்துவமான எம்.எஸ்.பி. எனப்படும் குறைந்தபட்ச ஆதார விலை (Minimum Support Price), 1965-66லிருந்து நெல்லுக்குக் கொடுக்கப்பட்டு, கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால், கோடிக்கணக்கான இந்திய விவசாயிகளுக்கு நெல் விருப்பமான பயிராக மாறிவிட்டது. 2023-24இல் இந்தியாவின் மொத்த நெல் உற்பத்தி 1,378.3 லட்சம் டன்.
இதில் ஏறக்குறைய 40% எம்.எஸ்.பி. விலையில் அரசு நிறுவனங்களால் கொள்முதல் செய்யப்பட்டிருக்கிறது. எம்.எஸ்.பி. விலையில் நெல் கொள்முதல் செய்யப்படுவதால், நம்பகமான வருமானம் உறுதிசெய்யப்படுகிறது. இதற்கு நேர்மாறாக, பருப்பு, எண்ணெய்வித்துப் பயிர்கள் எம்.எஸ்.பி. விலைப் பட்டியலில் இருந்தாலும் மிகக் குறைந்த அளவில் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகின்றன.
பல சந்தைகளில் பருப்பு, எண்ணெய்வித்துப் பயிர்கள் கொள்முதல் தாமதமாகிறது அல்லது கொள்முதல் செய்வதற்கு அரசுத் துறை முன்வருவதில்லை. அறுவடைக் காலத்தில், இப்பயிர்களின் சந்தைவிலை பெரும்பாலும் எம்.எஸ்.பி.-க்குக் கீழே இருப்பதாக விவசாயச் செலவுகள் - விலை ஆணையம் (Commission for Agricultural Costs and Prices) வெளியிட்டுள்ள, பயிர்களுக்கான விலைக்கொள்கை அறிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன.
இதன் காரணமாக, சந்தை அபாயத்தின் முழுச் சுமையையும் சுமக்கவேண்டிய நிலைக்கு விவசாயிகள் அடிக்கடி தள்ளப்படுகிறார்கள். கொண்டைக்கடலை, கடுகு போன்ற பயிர்களின் சந்தை விலைகள் எம்.எஸ்.பி.-க்கு மேல் சில நேரம் உயர்ந்தாலும், அவற்றில் அடிக்கடி ஏற்படும் ஏற்ற இறக்கம் நீண்ட கால முதலீட்டுத் திட்டமிடலைச் சீர்குலைக்கிறது.
நெல் உற்பத்தித் திறனில் (yield per hectare) கொண்டுவரப்படும் வளர்ச்சியின்மூலம் குறைக்கப்பட்ட பரப்பளவை ஈடுசெய்ய முடியும் என்கிற எதிர்பார்ப்பு தொழில்நுட்பரீதியாகச் சரியானது. இந்தியாவின் சராசரி நெல் மகசூல் 2023-24இல் ஒரு ஹெக்டேருக்கு ஏறக்குறைய 2.8 டன். அதேநேரத்தில், சீனா போன்ற நாடுகளின் சராசரி உற்பத்தித்திறன் 4 டன்னுக்கு மேல் உள்ளது.
தற்போதைய நெல் சாகுபடிப் பரப்பில் 5 மி.ஹெ. குறைந்த பிறகு, மீதமுள்ள 42 மி.ஹெ. பரப்பில் நெல் உற்பத்தித் திறனை ஹெக்டேருக்கு 3.5 டன்னாக உயர்த்தினால், உண்மையில் மத்திய வேளாண் அமைச்சர் விரும்பிய 10 மில்லியன் டன்னுக்கு மேலாக உற்பத்தியை அதிகரிக்க முடியும். எனினும், எம்.எஸ்.பி. விலையுடன் பயிர்கள் கொள்முதல் செய்யப்படும் என்கிற உறுதியான உத்தரவாதம் இல்லாமல் பருப்பு, எண்ணெய்வித்துப் பயிர்களைச் சாகுபடிசெய்ய விவசாயிகள் எப்படி முன்வருவார்கள்?
உறுதிப்படுத்தப்பட்ட வருவாய் தேவை: உறுதியான கொள்முதல், நியாயமான வருமானம் ஆகியவற்றுக்கு உத்தரவாதம் இல்லாமல் பருப்பு, எண்ணெய்வித்துப் பயிர்களைப் பெரிய அளவில் சாகுபடிசெய்ய விவசாயிகள் முன்வருவார்களா என்பது சந்தேகமே! நெல் சாகுபடியில் குறைவான உற்பத்தித்திறனைக் கொண்டுள்ள பிஹார், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் இந்தத் திட்டம் ஓரளவு வரவேற்பைப் பெறக்கூடும்.
ஆனால், எம்.எஸ்.பி.விலையில் நெல்லை விற்று லாபத்தைப் பெற்றுக்கொண்டிருக்கின்ற பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம், தெலங்கானா, ஆந்திரம் போன்ற மாநிலங்களில், இத்திட்டத்துக்கு வரவேற்பு இருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை! இதைச் சரிசெய்வதற்குக் கொள்முதலை விரிவாக்குவது மட்டுமல்லாமல், ஆழமான சீர்திருத்தங்களும் தேவைப்படுகின்றன.
பருப்பு, எண்ணெய்வித்து பயிரிடும் விவசாயிகள் பயன்பெறும் வகையில், விலை ஆதரவுத் திட்டம் (Price Support Scheme), விலைப் பற்றாக்குறை செலுத்தும் திட்டம் (Price Deficiency Payment Scheme), தனியார் கொள்முதல் திட்டம் (Private Procurement Stockist Scheme) ஆகியவற்றை உள்ளடக்கிய மத்திய அரசின் விவசாயி வருமானப் பாதுகாப்புத் திட்டம், 2018இல் தொடங்கப்பட்டது. ஆனால், நிதிக்குறைவு போன்ற காரணங்களைச் சுட்டிக்காட்டி, பெரும்பாலான மாநிலங்கள் இத்திட்டங்களைச் சரியாகச் செயல்படுத்தாத காரணத்தால், விவசாயிகளுக்குக் கிடைக்க வேண்டிய பலன்கள் பறிபோய்விட்டன.
இன்றைய சூழலில் எந்தவொரு பயிரும் நெல்லுடன் போட்டியிட வேண்டுமென்றால், அறிவிக்கப்படுகின்ற எம்.எஸ்.பி. விலையோடு, கொள்முதல், சந்தை இணைப்பு முறையையும் அது கொண்டிருக்க வேண்டும். நெல்லுக்குச் சந்தையில் கொடுக்கப்படுகின்ற முக்கியத்துவம் பருப்பு, எண்ணெய்வித்துப் பயிர்களுக்குக் கிடைக்கும் சாதகமான சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும்.
வேளாண் பொருள்களின் சந்தையில் அமேசான், ஐடிசி, ரிலையன்ஸ் - ஸ்மார்ட் போன்ற பெரிய நிறுவனங்களின் பங்கு அதிகரித்துவரும் இக்காலத்தில், தனியார் துறை மூலமாக விவசாயிகளிடமிருந்து நேரடியாக எம்.எஸ்.பி. விலையில் பருப்பு, எண்ணெய் வித்துக்களை வாங்குவதற்குச் சரியான கொள்கைகளை உருவாக்க வேண்டும்.
அதேநேரத்தில் நெல், கோதுமை அல்லாத, பருப்பு, எண்ணெய்வித்துப் பயிர்களுக்கான சேமிப்பு, பதப்படுத்துதல், அதன் தொடர்புடைய இடப்பெயர்ச்சித் திட்டங்களில் (logistics) முதலீட்டை அதிகரிக்க வேண்டும். காலநிலை மீள்தன்மை (climate resilience), ஊட்டச்சத்துப் பாதுகாப்புடன் இணைக்கப்பட்ட பயிர் பல்வகைமை (crop diversification) குறித்த நீடித்த தேசியக் கொள்கையை உருவாக்க வேண்டும். கொள்கை அளவில், ‘மைனஸ் 5, பிளஸ் 10’ என்கிற புதிய நெல் பயிர்த் திட்டம் சரியான நேரத்தில், தொலைநோக்குப் பார்வையில் உருவாக்கப்பட்டுள்ளது என்பதில் ஐயமில்லை. நெல், கோதுமைப் பயிர்களை மட்டுமே மையப்படுத்தி இந்தியா தற்போது கடைப்பிடித்துவருகிற விவசாயத்தைக் காலவரையின்றித் தொடர முடியாது.
இது நீர்ப் பற்றாக்குறையை அதிகரிப்பதோடு, உணவுப்பொருள்களின் இறக்குமதிச் செலவை அதிகரித்து, ஊட்டச்சத்து ஏற்றத்தாழ்வையும் ஏற்படுத்துகிறது. அரசாங்கம் விரும்புகிறது என்பதற்காக எண்ணெய்வித்துகள், பருப்புப் பயிர்களின் சாகுபடிக்கு விவசாயிகள் மாறிவிட மாட்டார்கள். புதிய பயிர்த் திட்டத்தால் அதிக லாபம் கிடைக்கும் என்கிற உத்தரவாதம் கிடைத்தால் மட்டுமே விவசாயிகள் மாறுவார்கள். எம்.எஸ்.பி. விலையுடன், பயிர்களுக்கான கொள்முதல் வழிமுறைகள் சரிசெய்யப்படாவிட்டால், ‘மைனஸ் 5’ வேண்டுமானால் நடக்கலாம், ஆனால், ‘பிளஸ் 10’ நடக்குமா என்பது சந்தேகமே!
- தொடர்புக்கு: narayana64@gmail.com