சிறப்புக் கட்டுரைகள்

வெற்றி தேடித் தரும் விண்வெளி நண்பன்!

ஜி.எஸ்.எஸ்

சமீபத்திய பாகிஸ்தான் - இந்தியா மோதல்களில் நம் தரப்பில் என்ன வகை ஏவுகணைகள் ஏவப்பட்டன, எதிராளியின் என்ன வகை ட்ரோன்கள் முறியடிக்கப்பட்டன, எந்த வகை வான் பாதுகாப்பு மண்டலங்கள் சிதைக்கப்பட்டன என்பது குறித்தெல்லாம் விவரங்கள் வெளியாகின. ஆ​னால், உங்கள் பின்னால் எதிரி வந்து​கொண்​டிருக்​கும்போது அதை அறிய முடிய​வில்லை என்றால், உங்கள் வாள் எவ்வளவு சிறப்​பானதாக இருந்​தாலும் பயனில்லை.

கண்ணுக்குப் புலப்படாத எதிரி இருட்டில் நெருங்​கிக்​கொண்​டிருக்​கும்​போது, கையில் கேடயம் இருந்​தாலும் அதனால் பலனில்லை. என்னதான் சுதர்சன சக்கரம், ஹாமர், ரஃபேல், ஆகாஷ்தீர், ஸ்கால்ப், பார்கவ் போன்றவை தாக்குதலில் நமக்குக் கைகொடுத்தாலும், வேறொரு தொழில்​நுட்ப வசதி இல்லை என்றால், இவற்றால் இந்த அளவு பலன் இருந்​திருக்​காது. அது செயற்​கைக்​கோள்!

இந்தியாவின் பலம்: இந்தியாவின் முதல் செயற்​கைக்கோள் இஸ்ரோவால் 1975இல் ஏவப்பட்டது. ‘ஆர்யபட்டா’, ‘பாஸ்கரா’ தொடங்கி இதுவரை செயற்​கைக்​கோள்கள் வெற்றிகரமாக விண்வெளியில் நிலைநிறுத்​தப்​பட்​டுள்ளன. இவற்றுக்குத் தகவல் தொடர்பு, கண்காணிப்பு, ஆராய்ச்சி என்று பல்வேறு நோக்கங்கள் உண்டு. தவிர, இவற்றில் குறைந்தது பத்து செயற்​கைக்​கோள்​களாவது தேசியப் பாதுகாப்பை நோக்க​மாகக் கொண்டவை.

பாகிஸ்​தானின் விண்வெளி நிறுவனத்தின் பெயர் சுபார்கோ (Suparco). பாகிஸ்தான் இதுவரை எட்டு செயற்​கைக்​கோள்களை அனுப்​பி​யுள்ளது. அவை பூமி கண்காணிப்பு, தகவல் தொடர்பு ஆகியவை தொடர்​பானவை மட்டுமே. இந்நிலை​யில், எதிரி​களின் படைகள் எல்லை தாண்டி இயங்கு​கின்றனவா என்பதை அறிய நமக்குச் செயற்​கைக்​கோள்கள் பெரிதும் உதவுகின்றன. கட்டுப்​பாட்டு எல்லைக் கோட்டைத் தாண்டி எதிரிகள் நம் எல்லைக்குள் வரும்போது அதைத் தெளிவாகச் சுட்டிக்​காட்டி எச்சரித்​ததும் செயற்​கைக்​கோள்​தான்.

ஆபரேஷன் சிந்தூரில் தீவிர​வா​தி​களின் முகாம்கள் அழிக்​கப்​பட்டன. அந்த முகாம்கள் எங்கே உள்ளன என்பதைத் தெளிவாக நமக்கு எடுத்​துக்​காட்​டியது செயற்​கைக்​கோள்​கள்​தான். குறிப்பாக, நமது ‘கார்​டோசாட் வரிசை’ செயற்​கைக்​கோள்கள் அதிஉயர் துல்லியமான ஒளிப்​படங்களை வெளியிட்டு வான் தாக்குதலைச் சிறப்பாக மேற்கொள்ளப் பயன்பட்டன.

கடினச் சூழலில் கைகொடுக்கும்: ரிசாட் (ரேடார் இமேஜிங் சாட்டிலைட்) என்கிற வகைச் செயற்​கைக்​கோள்கள் எந்த விதமான வெப்பச் சூழலிலும், பகலிலும் இரவிலும் செயல்​பட்டன. 2019இல் பாலகோட் வான்வழித் தாக்குதல்​களிலும் இந்த வகை செயற்​கைக்​கோள்கள் நமக்குப் பெரிதும் உதவின.

தரைவழித் தகவல் தொடர்​பு​களில் சிக்கல்கள் உண்டு. பாலைவனம், மலை போன்ற பகுதி​களில் தகவல் தொடர்பு வசதிகளை உருவாக்குவது கடினமானது. தவிர, படைகள் தொடர்ந்து நகர்ந்து​கொண்​டிருக்​கும்போது தகவல் தொடர்பு வசதிகளை நிலைநிறுத்த முடியாமல் போகலாம். போர்முனை​களில் உள்ள செல்போன் கோபுரங்கள், இணைய சேவைகள் போன்றவை எதிரி​களால் முடக்​கப்​படலாம்.

அப்போது தரைவழித் தகவல் தொடர்பு கொள்ள முடியாது போகும். எதிரியின் வான்வழித் தாக்குதல், தொழில்​நுட்பத் தாக்குதல் மூலம் கம்பிகள், ரிலே டவர்கள், ரேடியோ நிலையங்கள், தொலைத்​தொடர்பு வசதிகள் போன்றவை அழிக்​கப்​படலாம். எலெக்ட்​ரானிக் ஜாமிங் என்கிற முறையில் நமது ரேடார் அல்லது இணைய ஒலிபரப்பை எதிரி முடக்​கக்​கூடும். வாக்கி டாக்கி, ரேடியோ போன்ற​வற்​றைக்​கூடத் தொலைதூரத்​திலிருந்தே முடக்​கிவிட முடியும். எனவே, செயற்​கைக்கோள் மூலம் தகவல் பரிமாற்றம் என்பது மேலும் முக்கிய​மாகிறது.

விண்வெளியில் உள்ள இந்தியச் செயற்​கைக்​கோளுக்கு நமது ராணுவத் தலைமையகம் தகவல் அனுப்பும். இதை ‘அப்லிங்க் ஃபிரீக்​வன்ஸி’ என்பார்கள். செயற்​கைக்கோள் அந்தத் தகவலைப் பெற்று, நாம் குறிப்​பிட்​டுள்ள ஒரு பகுதிக்கு அதை அனுப்பும். பயனர் அதை, டவுன்​லிங்க் ஃபிரீக்​வன்ஸி என்பதன் மூலம் பெறுவார். செயற்​கைக்கோள் மூலம் அனுப்​பப்​படும், பெறப்​படும் தகவல்கள் சங்கேத மொழியில் (encrypted) இருக்​கும். கடல், மலை, காடு போன்ற எந்தப் பகுதிக்கும் இப்படித் தகவல்களை அனுப்​ப​வும் பெறவும் முடியும்.

நம்பகமான அஸ்திரம்: செயற்​கைக்​கோள்​களின் மூலம் வான்வழித் தாக்குதல், ராணுவ வீரர்​களின் நகர்வு, கடற்படையின் நடவடிக்கைகள் போன்ற​வற்றை ஒருங்​கிணைக்க முடியும். உத்தர​வு​களை (கடைசி நிமிடத்தில் மாற்றம் செய்யப்​பட்டவை உள்பட) செயற்​கைக்​கோளின் மூலம் கடத்த முடியும். கூட்டுத் தாக்குதல்​களுக்கும் செயற்​கைக்கோள் பெரிதும் உதவுகிறது. அதாவது ராணுவம், விமானப் படை, கடற்படை ஆகியவற்றுக்கு இடையே தகவல் தொடர்​புக்கு இவை உறுதுணையாக உள்ளன.

இந்தியக் கடற்படை தொடர்ந்து ‘ஜிசாட்7’ (GSAT 7) மூலம் இந்தியப் பெருங்கடல் பகுதி​களில் உள்ள நம் கப்பல்​களுடன் தொடர்​பு​கொள்​கிறது. ‘ஜிசாட் 6’, ‘ஜிசாட் 6ஏ’ மூலம் ராணுவத் தரப்பு வாகனங்கள், போர்க்களத் தகவல்​களைப் பரிமாறிக்​கொள்​ளலாம். ‘ஜிசாட் 7ஏ’ செயற்​கைகோள் மூலம், விமானப் படைக்கான தகவல்​தொடர்பு நடந்தேறும். மொத்தத்​தில், செயற்​கைக்​கோள்​களின் சரியான வழிகாட்டுதல் இல்லை என்றால், நம் தாக்குதல்கள் உரிய பலனைப் பெற்றிருக்​காது. துல்லியத் தாக்குதல்​களும் சாத்தி​ய​மாகி​யிருக்​காது!

- தொடர்புக்கு: aruncharanya@gmail.com

SCROLL FOR NEXT