20ஆம் நூற்றாண்டின் மத்தியில் அமெரிக்கக் கறுப்பின மக்களின் மகத்தான தலைவர்களுள் ஒருவராகத் திகழ்ந்தவர் மால்கம் எக்ஸ் (Malcolm X). அன்றைய அமெரிக்காவில் சிறிதும் பெரிதுமாக இருந்த பல கறுப்பின மக்களின் போராட்டக் குழுக்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தபோதும், அவர்களோடு இணைந்து கொள்கைரீதியாக வேலை செய்ய விரும்பியவர்.
அவரின் போராட்ட வழிமுறைகளும் சுயசமூகத்தின் மீதான மதிப்பீடும் அமெரிக்கக் கறுப்பின மக்களைத் தாண்டி, உலகம் முழுவதும் சுரண்டலுக்கும் ஒடுக்குதலுக்கும் உள்ளாகிக்கொண்டிருக்கும் மக்களுக்கு இன்றளவும் வழிகாட்டலாக உள்ளன.
அரசியல் இயக்கமும் போராட்டமும்: அமெரிக்காவின் நெப்ராஸ்காவில் 1925 மே 19 அன்று பிறந்த மால்கம் தனது குறைந்த வாழ்நாளில் உலகமே கவனிக்கக்கூடிய ஆளுமையாக வளர்ந்தார். 39 வயதில் அவர் மரணித்தபோது, பல நாடுகளின் முன்னணிப் பத்திரிகைகள் இரங்கல் செய்தி வெளியிட்டன.
சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த மால்கம், பள்ளியைவிடச் சிறையிலிருந்த காலத்தில் சுயமாக மேற்கொண்ட வாசிப்பின் வழியாகவே தன்னை மேம்படுத்திக்கொண்டார். பின்னாளில் கறுப்பின மக்களிடம் கல்வியின் முக்கியத்துவத்தைச் சொன்னபோது, தன்னுடைய அனுபவங்களையே அவர் எடுத்துக்கூறி விளக்கினார். தன்னுடைய சிக்கல்களைத் தனது இனத்தின் சிக்கலாகவும் பார்த்தார். தன்னிடமிருந்தே தன் இன மக்களுக்கு விளக்கங்களை அளித்தார்.
இஸ்லாமியரான மால்கம், வெள்ளையர்களின் இன ஒடுக்குதல் சார்ந்தும் அவர்களது சமய நிலைப்பாடுகளின் மீதும் விமர்சனங்களை வைத்தார். தொடக்கத்தில் தான் இணைந்து இயங்கிய ‘நேஷன் ஆஃப் இஸ்லாம்’ என்கிற அரசியல் அமைப்பில் தனக்கான சுதந்திரச் சிந்தனை இல்லாததை உணர்ந்து, அதனுடனான இணக்கத்தைத் துண்டித்துக்கொண்டார். 1964ஆம் ஆண்டு ‘முஸ்லிம் மாஸ்க்’ (Muslim Mosque), ‘பான் ஆப்ரிக்கன் ஆர்கனைசேஷன் ஆஃப் ஆஃப்ரோ அமெரிக்கன் யூனிட்டி’ (Pan-African Organization of Afro-American Unity) என்கிற இரண்டு புதிய அரசியல் இயக்கங்களை அவர் உருவாக்கினார்.
இந்த அமைப்புகளின்வழியே கறுப்பின மக்களுக்கான அடிப்படைக் குடியுரிமைப் போராட்டங்களை நிகழ்த்தப்போவதாக அறிவித்தார். சான்றாக, கறுப்பின மக்களின் மதுப் பழக்கத்தினால் அவர்தம் பொருளாதாரம் வெள்ளையின முதலாளிகளால் சுரண்டப்படுவதை அறிந்து, அதற்கு எதிராக நிகழ்த்திய போராட்டத்தைக் குறிப்பிடலாம். கறுப்பின மக்கள் மதுப் பழக்கத்திலிருந்து விடுபட வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தினார்.
அவரது ஆளுமை எதிர்த்தரப்பிலும் ஈர்ப்புக்குரியதாக இருந்தது. இதற்குச் சான்றாக அமெரிக்க வெள்ளையின எழுத்தாளரான ராபர்ட் க்ரீனின் குறிப்பைச் சொல்லலாம். அவர் தன்னுடைய ‘மனித இயற்கையின் விதிகள்’ (The laws of human nature) நூலில் பேச்சாளரின் திறமை பற்றிக் கூறும்போது, கட்டுப்படுத்தப்பட்ட கோபத்தின் உணர்வுதான் ஒரு பேச்சாளரை மிகவும் திறமையானவராக மாற்றுகிறது என்று குறிப்பிட்டு, அதற்குச் சான்றாக மால்கம் எக்ஸைச் சுட்டுகிறார். 2013இல் அமெரிக்கக் காவல் துறையினர் கறுப்பின மக்கள் மீது செலுத்தும் வன்முறைகளைக் கண்டித்து உருவான ‘கறுப்பின மக்களின் வாழ்வு முக்கியம்’ (Black Lives Matter) இயக்கம் மால்கமை முன்மாதிரியாகக் கொண்டிருந்தது.
நீதிக்கான தொலைநோக்குப் பார்வை: இனம், நீதி, சமத்துவம் குறித்து மால்கமுக்குத் தனித்துவமான பார்வை இருந்தது. அவரது முக்கியமான நான்கு உரைகளின் தொகுப்பாக வந்திருக்கும் ‘வெள்ளையர் உலக மேலாதிக்கத்தின் முடிவு’ (The End of white world supremacy) என்கிற நூலில், அவரது பார்வையின் தனித்துவத்தை விரிவாகவே புரிந்துகொள்ள முடியும். கறுப்பின மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை நிவர்த்தி செய்வதையும், மெய்யான சமத்துவத்தை அடைவதற்குப் பழைமைவாத, ஏற்றத்தாழ்வை நியாயப்படுத்துகிற சமூகத்தை மறுசீரமைப்பதற்கான அவசியத்தையும் அவர் தொடர்ச்சியாக வலியுறுத்திவந்தார்.
அந்த வலியுறுத்தலில் எப்போதும் வெள்ளையரின் இனவெறிக்கு எதிராகப் போராடுவது, பொருளாதாரச் சுதந்திரத்தை நோக்கி நகர்வது என்னும் இரண்டு இலக்குகள் இருந்தன. அவை இரண்டும் ஏக காலத்தில் நிகழ வேண்டும் என அவர் விரும்பினார். விடுதலைப் போராட்டம் ஒற்றை இலக்காக இருப்பதில் அவருக்கு உடன்பாடு இல்லை. விடுதலைக்குப் பிறகான பொருளாதாரச் சுதந்திரத்துக்கான வேலைத்திட்டங்கள், விடுதலையின் பயனை அனுபவிப்பதில் தாமதத்தை ஏற்படுத்தலாம். மக்களிடம் விடுதலை பற்றிய எதிர்மறை எண்ணத்தை உருவாக்கலாம் என்றெல்லாம் அவர் யோசித்தார்.
பொருளாதாரச் சுதந்திரமின்மை விடுதலைப் போராட்டத்தைத் தோல்வியுறக்கூடச் செய்யலாம் என்கிற அவரது ஊகம், பொருளாதாரச் சுதந்திரம் விடுதலைக்குப் பிறகான தன்னிறைவு வாழ்க்கைக்கு உதவுகிற அதேநேரம், விடுதலைப் போராட்டத்தை வலுவாக வைத்துக்கொள்ளவும் உதவும் என்று நம்பினார். இந்த இரட்டை இலக்குப் பயணம் உலகின் அனைத்து விளிம்புநிலையினருக்கும் குறிப்பாக, மூன்றாம் உலக நாடுகளின் விளிம்புநிலையினருக்கு மேலதிகமாக உதவக் கூடியது.
இந்தியா போன்ற நாடுகளின் விளிம்புநிலையினர் தங்கள் மீதான பொருளாதார, சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக வேலை செய்யும்போதே பொருளாதாரச் சுதந்திரம் குறித்த வேலைகளையும் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். அதற்கான வழிகாட்டல் மால்கமின் சிந்தனைகளில் நிறைய இருக்கிறது.
கறுப்பின மக்கள் தங்கள் சொந்தத் தொழில்களில் முதலீடு செய்யவும், தமது சமூகங்களுக்குள் பொருளாதார முயற்சிகளை வளர்க்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், நிதி ஆதாரங்களைத் தக்கவைத்துக் கொண்டு உள்வட்டப் பொருளாதாரத்தைப் பராமரிக்கவும், கறுப்பின மக்களின் உழைப்பையும் வாங்கும் சக்தியையும் சுரண்டும் வெள்ளையர்களுக்குச் சொந்தமான வணிகங்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் அவர் ஆலோசனைகளை வழங்கினார்.
சமத்துவம், நீதியை அடைவதற்கான உத்திகள்: இன சமத்துவம், நீதியை அடைவதற்கான பல உத்திகளை மால்கம் வலியுறுத்தினார். அவை கறுப்பின மக்களின் அதிகாரமளித்தல், சுயநிர்ணய உரிமையோடு தொடர்புகொண்டவையாக இருந்தன. கறுப்பின மக்கள் தங்கள் நிலையை உயர்த்தவும், இன ஒடுக்குமுறை, அறியாமையின் தளைகளிலிருந்து விடுபடவும் கல்வி ஒரு முக்கியக் கருவி என்று மால்கம் நம்பினார். தங்களின் உண்மையான வரலாற்றையும் மரபையும் புரிந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
கல்வி முறைகளால் நிலைநிறுத்தப்படும் சிதைந்த கதைகளுக்கு அப்பால் விலகி நின்று சொல்லப்படாத கதைகளில் மறைந்து கிடக்கும் வரலாற்றை வெளிக்கொணர வேண்டும் என்றார். மக்கள் தங்களது பண்பாட்டுத் தோற்றம், அதன் சமூகப் பங்களிப்பு, போராட்ட வரலாறு ஆகியவற்றை அறிந்துகொள்வதால் தனிப்பட்ட, கூட்டு அதிகாரமளிப்புக்கு அவசியமான உணர்வைப் பெற முடியும் என்பதைத் தமது அரசியல் நிலைப்பாடாகக் கொண்டிருந்தார்.
மால்கம் எக்ஸ் அமெரிக்கக் கறுப்பின மக்களுக்கு எதிர்கால உலகத்தை மட்டுமல்ல,
சொல்லப்படாத கண்ணியம் நிறைந்த வரலாற்றையும் சொல்லிப் புதிய பெருமையை அளித்தார். அந்த வகையில் 1960களில் அமெரிக்காவில் ஏற்பட்ட சமூகவியல், வரலாற்று மாற்றத்தில் மால்கம் எக்ஸுக்கு முக்கியப் பங்குண்டு. மானுட விடுதலையின் வரலாற்றில் எந்த ஒரு தனிநபரும் இதைவிட முக்கியமான பொறுப்பை ஏற்றிருக்க முடியாது.
(2025 மே 19: மால்கம் எக்ஸின் நூற்றாண்டு நிறைவு)
- தொடர்புக்கு: jeyaseelanphd@yahoo.in