நதிக்கு காது இருக்கிறதா, நதி நம்மோடு பேசக்கூடியதா? ஆமாம் என்கிறார்கள் கங்கை நதிக்கரையோர விவசாயிகள்; படகோட்டிகள். அவர்கள் தாயை வணங்குவது போலக் கங்கையை வணங்குகிறார்கள். அவர்களின் பிறப்பும் இறப்பும் கங்கையோடு தொடர்புகொண்டது. விவசாயிகள் நதியைத் தாயாக வழிபடுவது மரபு. ஆனால், ஒரு குஸ்தி பயில்வான் கங்கை நதியைத் தனது தாயாகக் கருதுகிறான்; அன்றாடம் கங்கையை வழிபடுகிறான். நதியின் நீர் எல்லோருக்கும் பொதுவானது. நதியோர விவசாயிகளைக் கங்கைத்தாயே வாழ வைக்கிறாள். ஆகவே அவர்கள் ஜமீன்தாரின் கட்டுபாடுகளுக்கு அடங்கத் தேவையில்லை என்று அந்தப் பயில்வான் வாதிடுகிறான்.
விளைச்சலில் பங்கு கேட்கும் ஜமீன்தாருக்கு எதிராகப் போராடும் அவன், பகையைச் சம்பாதித்துச்சிறைக்குப் போகிறான். அங்கு அவன் எழுந்திருக்கும்போதோ, உட்காரும்போதோ, தூங்கும்போதோ, விழித்திருக்கும்போதோ, வாயிலிருந்து ‘கங்கா அம்மா’ என்ற ஒரே வார்த்தை மட்டும்தான் தொடர்ந்து வெளிப்படுகிறது. மட்டுரூ என்ற குஸ்தி பயில்வானின் வாழ்க்கையை விவரிக்கும் ‘கங்கைத்தாய்’ நாவலை இந்தி எழுத்தாளரான பைரவ் பிரசாத் குப்தா எழுதியிருக்கிறார். நேஷனல் புக் டிரஸ்ட் இந்த நூலை வெளியிட்டுள்ளது. சரஸ்வதி ராம்னாத் சிறப்பாக மொழிபெயர்த்துள்ளார்.
தமிழ்நாட்டிலும் மல்யுத்தப் போட்டிகள் நடைபெற்றுள்ளன. குஸ்தி பயில்வான்கள் வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால், அவர்களைப் பற்றி யாரும் நாவல் எழுதியிருக்கிறார்களா எனத் தெரியவில்லை. காசிக்குச் சென்றபோது மல்யுத்த வீரர்களின் பயிற்சிக் களத்தைக் கண்டிருக்கிறேன். வாரணாசி மல்யுத்தத்திற்கு மிகவும் புகழ்பெற்ற ஊர். பாரம்பரிய மல்யுத்த மைதானங்களை அகதா என்கிறார்கள்.
உஸ்தாத் என்று அழைக்கப்படும் குருவின் வழிகாட்டுதலின் கீழ் பயிற்சி பெறுகிறார்கள். இந்த நாவலில் கங்கை நதியின் மீது மட்டுரூ கொண்டுள்ள அதே பற்றைக் கங்கை நதி தீரத்து மண்மீதும் கொண்டிருக்கிறான். அந்த மண்ணுக்காகப்போராடுகிறான்; சிறை செல்கிறான். அங்கே புதியதொரு நட்பு உருவாகிறது. இரண்டு பயில்வான்களுக்கு இடையே உருவாகும் நட்பினை சிறப்பாக விவரித்திருப்பதே இந்த நாவலின் சிறப்பு. கோபிசந்த், மாணிக் சந்த் இருவரும் சகோதரர்கள். மல்யுத்த பயிற்சிக்காகப் பாதமும் நெய்யுமாக நிறைய சாப்பிட்டு வயதுக்கு மீறிய பருத்த உடல் கொண்டிருக்கிறார்கள். இருவரும் மிகத் திறமையான மல்யுத்த வீரர்கள். அவர்களை எவராலும் வெல்ல முடியாது. அந்தக் கர்வம் அவர்களின் தலைக்கேறியிருந்தது. மாணிக் வயதில் மூத்தவர் என்றாலும் வலிமையில் கோபிதான் மிகுந்து நின்றான். தங்களுடன் போட்டியிட்டு வெல்ல எவருக்கேனும் துணிச்சல் இருந்தால் வரலாம் எனச் சுற்றுப்புறக் கிராமப்பயில்வான்களுக்கு அவர்கள் சவால் விடுகிறார்கள். இதற்காக நாவிதர் ஒருவரை வெற்றிலை பாக்குடன் ஊர் ஊராகப் போய்ப் பயில்வான்களைச் சந்தித்து வர அனுப்பி வைக்கிறார்கள்.
எந்தப் பயில்வானும் வெற்றிலையைக் கையில் வாங்கவில்லை. ஆனால் வயதான ஜோகு என்ற பயில்வான் மட்டும் தனது ஊர் அவமானப்படக் கூடாது எனச் சண்டையிட முன்வருகிறார். வெற்றிலையைக் கையில் வாங்கி வாயிலிட்டு மென்று மல்யுத்தத்திற்கு நாள் குறிக்கச்சொல்கிறார். தனது வயதை ஒத்த பயில்வானுடன் மோதி ஜெயிப்பதுதான் வீரம். இப்படி ஒரு கிழவனோடு மோத வேண்டுமா எனக் கோபி தயங்குகிறான். குறிப்பிட்ட நாளில் இருவரும் தனது ஆதரவாளர்களுடன் களம் காண்கிறார்கள். கோபி களத்தில் இறங்கும் முன்னரே மாணிக் அவன் காதில் “கிழவர் அனுபவசாலி. பெரிய உஸ்தாத், ஆகவே முதல் அடியிலே அவரை வீழ்த்தி விடு. சண்டையிட இடம் கொடுத்தால் அவரைச் சமாளிப்பது கஷ்டமாகிவிடும்” என்று சொல்கிறான்.
கோபியும் ஜோகுவும் களத்தில் இறங்கு கிறார்கள். இரு தரப்பிலிருந்தும் ஜெய கோஷயங்கள் ஒலிக்கின்றன. தாரை தப்பட்டைகள் உரக்க ஒலிக்கின்றன. இருவரும் குனிந்து மண்ணை எடுத்து நெற்றியில் இட்டுக் கொள்கிறார்கள். தங்கள் குருவை வணங்குகிறார்கள். கைகுலுக்குவதற்காக ஜோகு தனது கையை நீட்டுகிறார். ஆனால், கோபி தனது வலது காலைஉயர்த்தி ஜோகுவின் அடிவயிற்றில் எட்டி உதைக்கிறான். கிழவர் அலறலுடன் காற்றில் பறந்துபோய்விழுகிறார். ஜோகுவின் ஆதரவாளர்கள் ஒடிப்போய் அவரைத் தூக்குகிறார்கள். அவர் இறந்து கிடக்கிறார். குஸ்திச் சண்டையின் நியதிகளை மதிக்காமல் கோபி தவறாக நடந்து கொண்டுவிட்டான். இது அநியாயம் என ஜோகுவின் ஆட்கள் கத்துகிறார்கள். இரண்டு பக்க ஆட்களும் மோதிக் கொள்கிறார்கள். பலத்த சண்டை நடக்கிறது. நிறைய பேர் காயமடைகிறார்கள். இதன் காரணமாக ஜோகு குடும்பமும் கோபியின் குடும்பமும் பகையாளியாகிறார்கள்.
ஏன் அவசரப்பட்டு ஜோகுவை இப்படித் தாக்கினோம் எனக் கோபி குற்றவுணர்வு கொள்கிறான். விளையாட்டு வீரனின் குற்றவுணர்வு என்பது பழத்தில் மறைந்திருக்கும் புழுவைப் போன்றது. அவனது ஒவ்வொரு வெற்றியின் போதும் அந்தக் குற்றவுணர்வு சிரிப்பதை அவன் மட்டுமே கேட்க முடியும். தனது பிழையால் வெற்றி அடைந்த விளையாட்டு வீரன் அதன் பிறகு எந்த வெற்றியினையும் முழுமையாக அனுபவிக்க முடியாது. கோபிக்கும் அப்படியான நிலையே ஏற்படுகிறது. அவனும் மாணிக் சந்தும் மல்யுத்த போட்டியிலிருந்து முற்றிலும் விலகிக் கொள்கிறார்கள். இருவருக்கும் திருமணம் நடக்கிறது. கோபிக்கு அவனது அண்ணியை மிகவும் பிடித்துப் போகிறது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் தனது அண்ணியோடு விளையாட்டாகப் பேசுகிறான்; சிரித்து மகிழ்கிறான். அவர்களின் கேலிப்பேச்சும் சிரிப்பும் வீடெங்கும் எதிரொலிக்கிறது.
ஒரு நாள் பூஜைக்கான பொருட்கள் வாங்க பக்கத்து நகருக்கு மாணிக் செல்கிறான். திரும்பி வரும் வழியில் ஜோகுவின் ஆட்கள் அவனைத் தாக்கிக் கொல்கிறார்கள். தனது அண்ணன் மரணத்திற்குக் காரணமானவர்களைக் கொல்வதற்காகக் கோபி தனது ஆட்களுடன் புறப்படுகிறான். பெரிய மோதல் நடக்கிறது. இதில் கோபியின் இடது கையில் மூன்று விரல்கள் நசுங்கிப் போகின்றன. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபடுகிறான். ஜோகுவின் ஆட்களைத் தாக்கிய வழக்கில் குற்றவாளியாகக் கருதப்பட்டுச் சிறைக்குச் செல்கிறான். ஐந்து வருட சிறைதண்டனை.
சிறையில் அவன் மட்டுரூ பயில்வானை சந்திக்கிறான். அவர்களுக்குள் நல்ல நட்பு உருவாகிறது. அது கோபியின் வாழ்க்கையை மாற்றுகிறது. புதிய பாதையை உருவாக்குகிறது. நாவல் பயில்வான்களின் உலகைப் பற்றியதாக இருந்தாலும் அண்ணி, மட்டுரூவின் மனைவி போன்ற பெண் கதாபாத்திரங்களை அவர்களின் அகவுணர்ச்சிகளுடன் துல்லியமாகச் சித்தரித்த விதத்திலும் இந்த நாவல் தனித்துவமானதாகிறது. “துக்கம் சற்றும் எதிர்பாராதது. துக்கம் ஏற்படும் போது மனிதனுக்குத் தாங்கும் சக்தி எப்படியோ உருவாகி விடுகிறது. துக்கத்தின் போது அழுது புரளும் மனிதன் அதிலிருந்து மீண்டு வந்தவுடன் அப்படி எல்லாம் நடந்து கொண்டோம் என்பதை மறந்துவிடுகிறான்” என இந்த நாவலில் ஒரு இடத்தில் நாவலாசிரியர் பைரவ் பிரசாத் குப்தா குறிப்பிடுகிறார். இந்த ஞானமே நாவலின் மையச்சரடாக விளங்குகிறது. கங்கைத் தாயின் நாடகம் எல்லையற்றது என மட்டுரூ நாவலின் ஒரு இடத்தில் சொல்கிறான். அந்த மானுட நாடகத்தினை நாவல் மிகவும் சிறப்பாக வெளிப்படுத்துகிறது.