தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளித்துவரும் நாடுகளில் ஒன்று சிங்கப்பூர். இங்குத் திரும்பிய பக்கமெல்லாம் தமிழ் அறிவிப்புகள், தமிழ்ப் பெயர்ப் பலகைகள், தமிழ்க் குரல்கள் எல்லாம் இருந்தாலும் இதுவரை இங்கு தமிழ்ப் புத்தகங்களுக்கான திருவிழா இதுவரை ஒருங்கிணைக்கப்பட்டதே இல்லை. முதல் முறையாகத் தமிழ்ப் புத்தகத் திருவிழா கடந்த வாரம் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. சிங்கப்பூர் விடுதலை பெற்றதன் 60ஆம் ஆண்டுக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாகஇம்மாதம் 9 - 11ஆம் தேதி வரையிலான மூன்று நாட்கள் தமிழ்ப் புத்தகத் திருவிழா நடைபெற்றது. சிங்கப்பூர்த் தேசிய நூலக வளாகத்தில் நடைபெற்ற இந்தப் புத்தகத் திருவிழாவில் இந்தியா, மலேசியா, சிங்கப்பூரைச் சேர்ந்த 20 தமிழ்ப் பதிப்பகங்கள் பங்கேற்றன. சிங்கப்பூரிலும் புத்தகத் திருவிழா நடத்த முடியும் என்ற நம்பிக்கை தற்போது உருவாகியுள்ளது.
சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் ஒருங்கிணைப்பில், தேசியக் கலை மன்றம், தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு, வளர்தமிழ் இயக்கம், தேசிய நூலக வாரியம் உள்ளிட்ட பல அமைப்புகளின் ஆதரவோடு இந்தப் புத்தகத் திருவிழா நடந்து முடிந்திருக்கிறது. இங்குப் புத்தகத் திருவிழா பணிகளை ஒருங்கிணைப்பதில் முக்கியப் பங்காற்றியவர் எழுத்தாளர் கழகத் தலைவர் நா.ஆண்டியப்பன். “சிங்கப்பூரில் தமிழ்ப் புத்தகத் திருவிழா நடத்த முடியுமா என்ற பெரும் தயக்கத்துடன்தான் இதற்கான பணிகளைத் தொடங்கினோம். எனினும் வியப்பூட்டும் வகையில் பெரும் ஆதரவு கிடைத்தது. இப்போது மிகச் சிறப்பாகப் புத்தகத் திருவிழாவை நடத்தி முடித்திருக்கிறோம். திருப்தியளிக்கும் வகையில் விற்பனை நடந்துள்ளதாகப் பதிப்பாளர்கள் கூறியுள்ளனர்.
இது எங்களுக்கு மகிழ்ச்சியையும், தொடர்ந்து இங்குப் புத்தகத் திருவிழாக்களை நடத்த முடியும் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. இனி வரும் ஆண்டுகளில் தமிழ்நாடு அரசோடு கலந்து ஆலாசித்து, அவர்களின் ஆதரவோடு புத்தகத் திருவிழாக்களை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்” என்றார் ஆண்டியப்பன்.
“இது சிங்கப்பூரில் நடைபெற்ற முதல் புத்தகத் திருவிழா. இருந்தபோதிலும் இந்த நிகழ்வை சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் உள்ளிட்ட தமிழ் அமைப்புகள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள்” என்கிறார் தமிழ்நாட்டிலிருந்து பங்கேற்ற டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ் பதிப்பாளர் மு. வேடியப்பன்.
“உலகிலேயே நூலகக் கட்டமைப்பு மிக வலிமையாக உள்ள நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று. இங்குள்ள நூலகங்களில் இல்லாத நூல்களே இல்லை எனலாம். வாசகர்கள் விரும்பிக் கேட்கும் நூல்கள் இங்கு இல்லையெனில், சம்பந்தப்பட்ட நாடுகளிலிருந்து அந்த நூல்களைத் தருவித்து, வாசகருக்குத் தரும் ஏற்பாடும் இருக்கிறது. அப்படிப்பட்ட நாட்டில் புத்தகத் திருவிழாவுக்கு வரவேற்பு இருக்குமா என்ற தயக்கத்துடனேயே இங்கு வந்தோம். ஆனால், இங்கு வாசகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்தது. சிறார் நூல்களுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது. அதேபோல் தீவிர இலக்கிய வாசகர்களும் இங்கு ஏராளமானோர் உள்ளனர் என்பதை எங்கள் அரங்கின் விற்பனை மூலம் உணர முடிந்தது. சிங்கப்பூரில் நிரந்தரமான தமிழ்ப் புத்தகக் கடைஇல்லை என்பது குறையாக உள்ளது.
விற்பனை வாய்ப்புகள் அதிகமாக உள்ளதால் விரைவில் நிரந்தரப் புத்தகக் கடை ஒன்றை தொடங்குவது பற்றி இங்குள்ள ஆர்வலர்களிடம்பேசியிருக்கிறோம். இதனால் தமிழ்ப் பதிப்பாளர்கள் அனைவரும் பயன் பெறுவர்” என்று மேலும் அவர் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.
சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் நிறுவனத் தலைமைச் செயல் அதிகாரி கார்த்திகேயன் புகழேந்தி கூறும்போது, “தமிழ் ஆட்சிமொழியாக உள்ள ஒரு நாட்டில் நடைபெற்ற முதல் புத்தகத் திருவிழா இது. மூன்று நாட்கள் மட்டுமல்லாது, ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் நடைபெற்றால்தான் வாசகர்களின் மனநிலை பற்றி முழுமையாக அறிந்துகொள்ள முடியும். இதுபோன்ற பன்னாட்டுத் தமிழ்ப் புத்தகத் திருவிழாக்கள் வெற்றி பெற வேண்டுமானால், தமிழ்நாடு அரசின் ஆதரவு மிகவும் அவசியம். உலகில் எந்த நாட்டில் மலையாள இலக்கியத் திருவிழா நடைபெற்றாலும், அரசியல் பாகுபாடுகள் எதுவுமின்றி எல்லாத் தரப்பைச் சேர்ந்த எழுத்தாளர்களையும் கேரள அரசு அந்நாடுகளுக்கு அனுப்பி வைக்கிறது. மலையாள இலக்கிய உலகின் தூதர்களாக அவர்கள் சென்று வருகின்றனர். அதனால் பல நாடுகளில் மலையாள நூல்கள் பெருமளவில் விற்பனை ஆகின்றன. அதேபோல் தமிழர்கள் பெருமளவில் வசிக்கும் நாடுகளில் நடைபெறும் இலக்கியத் திருவிழாக்களுக்கு எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், மனுஷ்யபுத்திரன் போன்றபிரபலமான தமிழ் எழுத்தாளர்களை தமிழ்நாடு அரசு அனுப்பி வைக்க வேண்டும். அப்போதுதான் இங்குப் பெரு மளவு தமிழ் வாசகர்களைத் திரட்ட முடியும்.
வெளிநாடுகளுக்குப் புத்தகத் திருவிழாக்களில் பங்கேற்கச் செல்லும் பதிப்பகங்களின் செலவை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு நடைபெறுமானால் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தமிழ்ப் புத்தகத் திருவிழா பெரும் வெற்றி பெறும். அதற்கான நம்பிக்கையை தற்போது நடந்து முடிந்துள்ள சிங்கப்பூரின் முதல் தமிழ்ப் புத்தகத் திருவிழா ஏற்படுத்தியுள்ளது” என்றார் அவர். புத்தகத் திருவிழாவைத் தொடங்கி வைத்த சிங்கப்பூர் அமைச்சர் கா.சண்முகம் குறிப்பிட்டதுபோல, சிங்கப்பூர், மலேசியா, தமிழ்நாட்டு மக்களை இணைப்பதில் தமிழ் நூல்கள் பாலங்களாகத் திகழ்கின்றன. பன்மைக் கலாச்சாரம் நிலவும் சிங்கப்பூரில் தமக்கான தனித்துவத்தை இழக்காமல் சிங்கப்பூர் மக்களோடு கலந்திருக்கும் தமிழ்மொழி மேலும் வளர வேண்டும். ஆகவே, சிங்கப்பூரில் தமிழ்ப் புத்தகங்களைப் பரவலாக்கிட வேண்டும். அதற்கு சிங்கப்பூரின் முதல் தமிழ்ப் புத்தகத் திருவிழா புதிய வெளிச்சத்தைத் தந்துள்ளது.