குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல் குறித்து நம்மில் பலரும் மிக மேலோட்ட மாகவே புரிந்துகொண்டுள்ளோம். நேரடியான தாக்குதல்கள் நிகழாதவரை அப்படியொரு சூழல் நம் நாட்டில் இல்லை என்றே போலியாக நம்ப விரும்புகிறோம். ஆனால், உண்மை நிலைமை அப்படி இல்லை. ஒவ்வொரு நாளும் எண்ணற்ற குழந்தைகள் நம் நாட்டில் குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டுவருகிறார்கள். அவர்களில் வெகுசிலரே வெளியே சொல்கிறார்கள். அரிதான நிலையில்தான் குற்ற வழக்குகள் பதிவாகின்றன.
குற்றவாளிகள் தண்டனை பெறுவதற்கு ஒப்பீட்டளவில் நீண்ட காலம் ஆகிறது. இந்த நிலைக்கு நம்முடைய குடும்ப, சமூக அமைப்பே முதன்மையான காரணம். இன்னொருபுறம், செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) நம்முடைய வாழ்வின் அங்கமாக மாறிவருகிறது. மெய்நிகர் உலகில் (Virtual World) நடைபெறும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு பெற்றோர், ஆசிரியர்கள், சமூகச் செயல்பாட்டாளர்கள் மத்தியிலும் மிகக் குறைவாகவே உள்ளது.
சமூக வலைத்தளத்தில் பதிவிடப்படும் ஒரு குழந்தையின் ஒளிப்படத்தைச் செயற்கை நுண்ணறிவின் துணையுடன் ஆபாசமாகச் சித்திரிக்க இயலும். இதற்கென்றே ஒருங்கிணைந்த குற்றக்குழுக்கள் இணையத்தில் செயல்பட்டுவருகின்றன. அந்த ஒளிப்படத்தையோ, காணொளியையோ வைத்து அக்குழந்தையை மிரட்டுவது, குழந்தையின் பெற்றோரை மிரட்டுவது எனத் தொடங்கி குழந்தைகள் மீது குற்றச்செயல் நிகழ்த்தும் கயவர்களிடம் அந்தப் பதிவுகளை விற்பது, குழந்தைகளைக் கடத்திப் பாலியல் அடிமைகள் ஆக்குவது வரை இந்த வலை விரிந்து
கிடக்கிறது.
இத்தகைய நபர்களைக் கண்டறிந்து கைதுசெய்து, சட்டத்தின்முன் நிறுத்தும் வேலையைக் காவல் துறை செய்துவருகிறது. ஒப்பீட்டளவில் இது மிகுந்த சிக்கலான பணியாகும். குற்றக்குழுக்கள் ஒருபுறம் என்றால், மறுபுறம் நாம் நன்கறிந்த பெருநிறுவனங்கள் உருவாக்கும் செயலிகள் இத்தகைய குற்றங்கள் நிகழ்வதற்கான வாய்ப்பை வழங்குகின்றன என்றால் நம்புவீர்களா? மெட்டா (Meta) நிறுவனம் ‘டிஜிட்டல் துணைவர்கள்’ (Digital Companions) எனும் செயற்கை நுண்ணறிவுகொண்ட ஒருவகை அரட்டைச் செயலியை (chatbot app) உருவாக்கியுள்ளது.
இந்தச் செயலியின் வழியே பயனர்கள் செயற்கை நுண்ணறிவு கொண்ட மெய்நிகர் மனிதருடன் (Virtual Human) உரையாடலாம். மனிதர்கள் பதிலளிப்பது போன்றே இது செயல்படும். அத்துடன், உரையாடல்களின்போது பிரபலங்களின் குரலிலும் பயனர்களுக்குப் பதில் கிடைக்கும். இதற்காக ஹாலிவுட் நடிகர்கள் உள்ளிட்ட பலருடன் அந்நிறுவனம் ஒப்பந்தம் செய்துகொண்டு உள்ளது. அந்நிலையில் சில வாரங்களுக்கு முன்னர், ‘மெட்டா’ நிறுவனத்தின் அரட்டைச் செயலி சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதில் கிடைத்த தகவல்கள் உலகப் புகழ்பெற்ற ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ (The Wall Street Journal) இதழில் வெளியாயின.
இந்தச் செயற்கை நுண்ணறிவுத் துணைவர்கள் பாலியல்ரீதியான பாத்திரம் ஏற்று உரையாடும் சூழ்நிலைக்குப் பயனர்களைத் தூண்ட முடியும் என்பது அச்சோதனையில் தெரியவந்தது. பதின்மூன்று வயதானவர்கள் ஃபேஸ்புக் கணக்கு தொடங்க இயலும் என்பது விதி. சட்டப்படி அவர்கள் குழந்தைகள்தான் என்னும் நிலையில், அப்படிப்பட்ட பயனர்களுடனும் இத்தகைய பாலியல் சார்ந்த உரையாடல்களைச் செயற்கை நுண்ணறிவுத் துணைவர்கள் முன்னெடுக்கும் சாத்தியங்கள் அதில் இருந்தன.
சில வேளைகளில், செயற்கை நுண்ணறிவுத் துணைவர்களே பாலியல் சார்ந்த பேச்சுகளையும், செயல்பாடுகளையும் வலிந்து பேச ஆரம்பிப்பதையும், ஊக்குவிப்பதையும் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். இதனையடுத்து, பயனர்களை அதிக ஈடுபாட்டுடன் வைத்திருக்க மெட்டா வேண்டுமென்றே தனது பாதுகாப்பு வழிகாட்டுதல்களில் சமரசம் செய்துகொண்டதாகக் குற்றம்சாட்டப்பட, அந்நிறுவனம் அதை மறுத்தது.
இத்தகைய சோதனைகள் வேண்டுமென்றே ஒரு குறிப்பிட்ட வகையில் நிகழ்த்தப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் கூறியது. பின்னர், சிறுவர்கள் பாலியல்ரீதியிலான பாத்திரமேற்று உரையாடுவதைத் தடுப்பது, பிரபலங்களின் குரல்களைப் பயன்படுத்துவது போன்ற விஷயங்களில் சில கட்டுப்பாடுகளை அந்நிறுவனம் உருவாக்கியது. இவற்றுக்குப் பின்பும்கூட, செயற்கைத் துணைவர்கள் பாலியல் உரையாடல்களைத் தூண்டும் சாத்தியம் உள்ளது எனவும், குழந்தைப் பயனர்களுடனும்கூட இது நிகழலாம் எனவும் அத்துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், இதுவரை மெட்டா மேற்கொண்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் முழுமையாக இல்லை எனவும் அவர்கள் கூறுகின்றனர். வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் எனப் பல்வேறு சமூக ஊடகங்கள் மெட்டா வசம் உள்ளன என்பதை இங்கே நாம் கருத்தில்கொள்ள வேண்டும். இந்த உலகில் நிகழும் எல்லாத் தொழில்களுக்கும் நெறிமுறைகள் (Ethics) வகுக்கப்பட்டுள்ளன. உயிரைப் பணயம் வைத்து நிகழ்த்தப்படும் போர்களில்கூட, நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவது கட்டாயம் என்கிறது சர்வதேசச் சட்டம்.
அந்நிலையில், உலகின் பெரும்பான்மை மக்கள் பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில், மெய்நிகர் உலகத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்படும்போது அதற்கான நெறிமுறைகளைப் பேணுவதும் அவசியம். குறிப்பாக, குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் தலையாய கடமை தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு உள்ளது.
இன்னொருபுறம், செயற்கை நுண்ணறிவு பெருமொழி மாதிரிகளை (Large Language Models) இலவசமாக இன்று யார் வேண்டுமானாலும் தரவிறக்கி, தங்களுக்கு ஏற்றவகையில் தனிப் பயனாக்கம் செய்துகொள்ளவும் (customize), பிறருடன் பகிர்ந்துகொள்ளவும் இயலும். நிறுவனங்கள் உருவாக்கும் செயற்கை நுண்ணறிவுச் செயலிகளுடன் ஒப்பிட இவை இன்னும் சிக்கலான சூழ்நிலைக்குக் குழந்தைகளைத் தள்ளக்கூடும். நெறிமுறையற்ற நிதிப் பெருக்கத்தை நோக்கமாகக் கொண்டு ஒரு நிறுவனமோ தனி நபரோ ஒருபோதும் செயல்படக் கூடாது.
அப்படியொரு நிறுவனமோ, குழுவோ, நபரோ செயல்படத் தொடங்கினால், ஒட்டு மொத்த சமூகமும் உலகமும் கீழ்நிலைக்குச் சென்றுவிடும். அரசுகள் செயற்கை நுண்ணறிவு சார்ந்த நெறிமுறைகளை வகுத்து மேம்படுத்துவதும், அவை குறித்த விழிப்புணர்வைக் கல்வி நிறுவனங்கள், ஊடகங்கள் வழியே ஏற்படுத்துவதும், கடுமையான சட்டங்கள் வழியே அந்நெறிமுறைகளை நடைமுறைக்குக் கொண்டுவருவதும்தான் இப்பிரச்சினையைத் தீர்க்கும்.
மேலும், சட்ட நிறுவனங்கள், குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு அமைப்புகள், ஊடகங்கள், சமூக ஆர்வலர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் உள்ளிட்ட அனைவரும் இந்த வகையிலான தொழில்நுட்ப வளர்ச்சிகளை உன்னிப்பாகக் கண்காணித்து, அவற்றில் சமூகம் சார்ந்த சிக்கல்கள், சவால்கள் உருவாகும்போது உடனுக்குடன் செயலாற்ற வேண்டிய தேவையும் இன்று ஏற்பட்டுள்ளது.
அப்படிச் செயல்பட்டால் மட்டுமே பாதுகாப்பான உலகை நம் குழந்தைகளுக்கு வழங்க இயலும். நவீனத் தொழில்நுட்பங்கள் வசதியைக் கொண்டு வருவதாக நிறுவனங்கள் கூறுவதும், மக்கள் அதை வரவேற்பதும் மட்டுமே நிகழ்கின்றன. அவற்றின் பின்னணியில் உள்ள இது போன்ற ஆபத்துகளைக் காலம் கடப்பதற்கு முன் அனைவரும் உணர வேண்டிய தருணம் இது.
- தொடர்புக்கு: sarathy.saravanan@gmail.com