‘நோயாளிகளுக்கான பரிந்துரைச் சீட்டில் பொதுப்பெயரில் (Generic name) மட்டுமே மருத்துவர்கள் மருந்துகளை எழுத வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் ஓர் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் மருந்துகளின் விலை சாமானியர்களுக்கு எட்டாத தொலைவுக்குச் சென்றிருக்கிறது. மருத்துவத்துக்குச் செய்யும் செலவால் மட்டும் வருடத்துக்கு 6 கோடிக்கும் அதிகமானோர் வறுமைக்கோட்டுக்குக் கீழ் தள்ளப்படுகிறார்கள் என்கின்றன ஆய்வுகள். இந்தச் சூழலில், இந்த உத்தரவு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது!
எது பொதுப்பெயர் மருந்து? - நிறுவன அடையாளம் (Branded Medicine) பெற்றவை, பொதுவானவை (Generic Medicine) என மருந்துகள் இரண்டுவிதமாக இருக்கின்றன. உதாரணமாக, ‘குரோசின்’ (Crocin) என்பது நிறுவனப் பெயர். ‘பாராசிட்டமால்’ (Paracetamol) என்பது அதன் பொதுப்பெயர். ‘பொதுப்பெயர்’ என்பது ஒரு மருந்தின் வேதிப்பெயர். மருத்துவர்கள் வழக்கமாகப் பரிந்துரைக்கும் மருந்துகள் நிறுவன அடையாளம் பெற்றவை; ‘காப்புரிமை’ (Patent) பெற்றவை.
இந்த வகை மருந்துகளின் விலையை நிர்ணயிக்கும்போது, மூலப்பொருளின் செலவோடு மருந்தைக் கண்டுபிடிக்க ஆன ஆராய்ச்சிச் செலவையும் சேர்த்தே விலை வைக்கப்படும். இதனால்தான், இந்த மருந்துகளின் விலை அதிகம். மாறாக, காப்புரிமைக் காலத்தைக் கடந்து வந்த மருந்துகள் பொதுப்பெயர்களில் விற்கப்படுகின்றன. இவை ஆராய்ச்சிச் செலவைக் கடந்துவிட்டதால், நிறுவன மருந்துகளைவிட 30% முதல் 80% வரை குறைந்த விலையில் கிடைக்கின்றன.
சாமானியர்களின் மருந்துச் செலவைக் குறைப்பதற்கான ஒரு வழிமுறைதான் பொதுப்பெயரில் மருந்துகளைப் பரிந்துரைக்கக் கட்டாயப்படுத்தும் உத்தரவு. தேசிய மருத்துவ ஆணையமும் (National Medical Commission) 2016இல் இது போன்ற ஆணையைப் பிறப்பித்தது. ஆனால், மருத்துவர்களிடமிருந்து இதற்கு எதிர்ப்பு வந்ததால், இந்த ஆணை கிடப்பில் போடப்பட்டது. இப்போது இந்தப் பிரச்சினை உச்ச
நீதிமன்றத்துக்குச் சென்றிருக்கிறது. அங்கு வந்த உத்தரவுதான், பொதுப்பெயரில் மட்டுமே மருந்துச்சீட்டில் எழுத வேண்டும் என்பது. இந்த உத்தரவு நடைமுறைச் சாத்தியம் கொண்டதா என்னும் கேள்வி மருத்துவர்கள் மத்தியிலும் மருந்து நிறுவனங்களின் மத்தியிலும் எழுந்திருக்கிறது.
என்னென்ன பிரச்சினைகள்? - விளம்பரங்கள் மூலம், ஒரு கிரிக்கெட் வீரர் ஒரு நிறுவனச் செயற்கைப் பானத்தை அருந்தச் சொல்லும்போது, ஒரு பாலிவுட் நடிகர் ஒரு நிறுவனப் பாக்கைச் சுவைக்கச் சொல்லும்போது, ஒரு மருத்துவர் அரசு அனுமதி அளித்த ஒரு நிறுவன மருந்தைப் பரிந்துரைக்கக் கூடாது என்பது நகைமுரண். ஒற்றை வேதிமருந்தை அதன் பொதுப்பெயரில் எழுதிவிடலாம். கூட்டு மருந்துகளைப் பொதுப்பெயரில் எழுதுவது கடினம். உதாரணமாக, விட்டமின் மாத்திரைகளில் பத்துக்கும் மேற்பட்ட வேதிப்பொருள்கள் இருக்கும்.
அவ்வளவையும் தனித்தனியாக எழுத முடியாது. மருந்துகளைப் பொதுப்பெயரில் பரிந்துரை செய்ய ஒரு சட்டபூர்வ ஆணை அவசியம் என்றும் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவில் தெரிவித்துள்ளது. இதன்படி பார்த்தால், ஒரு மருந்தை அதன் நிறுவனப் பெயரில் பரிந்துரை செய்வது சட்ட விரோதமாகிவிடும். மருத்துவர்களுக்கு நிறுவனப் பெயரில் பரிந்துரைக்க இப்படித் தடை விதித்துவிட்டால், பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் மருந்துகளை நிறுவனப் பெயரில் இந்தியாவில் சந்தைப்படுத்த முன்வருமா என்பது இன்னொரு கேள்வி.
இந்தியாவின் மருந்து வணிகம் 2023இல் 5,460 கோடி அமெரிக்க டாலர். இதில் பாதிக்குப் பாதி வெளிநாடுகளுக்கான ஏற்றுமதியில் கிடைத்திருக்கிறது. 2025இல் 6,500 கோடி டாலர் மருந்து வணிகத்தையும், 2030இல் 13,000 கோடி டாலர் மருந்து வணிகத்தையும் மத்திய அரசு எதிர்பார்க்கிறது. ஆப்ரிக்காவுக்கு 50%, அமெரிக்காவுக்கு 40%, பிரிட்டனுக்கு 25% மருந்துத் தேவைகளுக்கு இந்தியாவே ஏற்றுமதி செய்கிறது.
உலகளாவிய தடுப்பூசிச் சந்தையில் 60% இந்தியாவின் ஏற்றுமதிதான். ஆகவேதான் அரசு 100% அந்நிய முதலீட்டை மருந்து வணிகத்துக்கு அனுமதித்திருக்கிறது. அதேவேளை, பொதுப்பெயர் மருந்துகளை மட்டுமே உலகச் சந்தை விரும்புகிறது என்பதற்காக, ஏற்றுமதிச் சந்தைக்கு முன்னுரிமை கொடுத்துவிட்டு, நிறுவன மருந்தைக் கொண்டாடும் உள்நாட்டுச் சந்தையை இந்தியா விட்டுக்கொடுக்குமா?
மருந்தை மாற்றிக் கொடுத்தால்? - ஒரு மருத்துவர், ஒரு நோயாளிக்கு எந்த நிறுவன மருந்து வேலை செய்யும் என்று தனது அனுபவத்தில் தெளிவுற்று, நோயாளிக்குப் பரிந்துரைக்கிறார். பொதுப்பெயர் மருந்துகளை எழுதும்போது, என்ன மருந்தைக் கொடுக்க வேண்டும் என்னும் உரிமை, மருந்து விற்பனையாளருக்குச் சென்றுவிடும். நாட்டில் தரம் குறைந்த மருந்துகளும் கிடைக்கின்றன என்பதை அரசே ஒப்புக்கொள்கிறது.
இந்தச் சூழலில், பொதுப்பெயர் மருந்துகளை மருந்துக் கடைகளில் நோயாளிகள் வாங்கும்போது, அவற்றுக்கு இணையான மற்றொரு நிறுவனத்தின் தரம் குறைந்த, அதேவேளை அதிக லாபம் தருகிற மருந்துகளை விற்பனையாளர் மாற்றித் தரவும் சாத்தியம் உள்ளது. அப்படி மாற்றித் தரப்படும் மருந்துகள் பலன் தரவில்லை என்றால், நோயாளியின் ஆரோக்கியத்துக்கு யார் பொறுப்பேற்பது?
அடுத்து, தங்கள் நிறுவன மருந்தைப் பரிந்துரைக்கப் பல மருந்து நிறுவனங்கள் மருத்துவர்களுக்கு நெறிமுறை தவறி, ‘பரிசு’களை வழங்குவதாகப் பொதுவெளியில் ஒரு குற்றச்சாட்டு உள்ளது. ‘டோலோ’ (Dolo) மருந்தைப் பரிந்துரைக்க அந்த நிறுவனம் மருத்துவர்களின் ‘பரிசு’களுக்கு 1,000 கோடி ரூபாய் செலவிட்டதாக வந்த புகாரை இங்கு நினைவுகூரலாம்.
நீதிமன்ற உத்தரவின் விளைவால், மருத்துவரைவிட விற்பனையாளர்தான் மருந்துகளைத் தேர்வு செய்வதில் அதிக உரிமை பெற்றுவிடுகிறார். இந்த நிலையில், தங்கள் தயாரிப்புகளுக்கு முன்னுரிமை கொடுக்க, மருந்து விற்பனையாளர்களுக்கும் ‘பரிசு’கள் வழங்குவதை மருந்து நிறுவனங்கள் பின்பற்றாது என்பது என்ன நிச்சயம்?
மருந்து நிறுவனங்களின் வாழ்வாதாரம்: இனிமேல் மருந்துகள் பொதுப்பெயரில்தான் பரிந்துரைக்கப்படும் என்றால், நிறுவன மருந்துகளைத் தயாரித்து, அதைத் தொழிற்சாலையிலிருந்து நோயாளிக்குக் கொண்டு செல்லும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள், மருந்து விற்பனைப் பிரதிநிதிகள், அவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் நுண், சிறு, குறு மருந்து நிறுவனங்களின் (MSME) வாழ்வாதாரம் பறிபோகும். இவர்களுக்கு அரசு என்ன மாற்று வழி வைத்திருக்கிறது? இந்தியாவில் மருந்துகளைத்தான் அதிகமாகத் தயாரிக்கிறோம். அவற்றின் மூலப்பொருள்கள் பன்னாட்டு நிறுவனங்களின் கைகளிலோ, ஆதிக்கத்திலோதான் இருக்கின்றன.
MSME நிறுவனங்கள் அவர்களிடம் மூலப்பொருள்கள் வாங்கி, மருந்து தயாரித்து, இந்தியாவில் விற்பனை செய்கின்றன. உலகச் சந்தைக்காக, நிறுவன மருந்துகளைத் தவிர்த்துவிட்டு, பொதுப்பெயர் மருந்துகளை மட்டும் இந்தியாவில் பயன்படுத்தினால், ஒட்டுமொத்த பொதுப்பெயர் மருந்துகளின் விலைகளை நிர்ணயம் செய்யும் உரிமை பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சென்றுவிடும். அப்போது அவர்கள் சொல்வதே விலை என்றாகும். இதனால், பொதுப்பெயர் மருந்துகளின் விலை அதிகரிக்கக்கூடும்.
இப்படி, மருந்துகளைப் பொதுப்பெயரில் பரிந்துரைப்பதில், நம் அடிப்படை மருத்துவக் கட்டமைப்பில் பலதரப்பட்ட போதாமைகள் இருக்கின்றன. மேற்கத்திய நாடுகள், ஐக்கிய அரேபிய நாடுகளில் உள்ளதுபோல், இந்தப் போதாமைகளைச் சட்டப்படி சரிசெய்த பின்னர், தற்போது வந்துள்ள உச்ச நீதிமன்ற உத்தரவை அரசு பரிசீலிப்பது மருந்து நிறுவனங்களுக்கும் மருத்துவர்களுக்கும் மக்களுக்கும் நல்லது.
அதுவரை என்ன செய்யலாம்? - இப்போது பல அத்தியாவசிய மருந்துகளின் விலையை மத்திய அரசே நிர்ணயித்திருப்பதுபோல், மருந்து நிறுவனங்களுடன் பேசி உற்பத்திச் செலவுடன் எவ்வளவு லாபம் வைப்பது என்னும் வரைமுறையைக் கொண்டுவந்தால், இன்னும் பல மருந்துகளின் விலையைக் கட்டுப்படுத்தலாம். சாதாரண வலி மாத்திரைகள், சத்து மாத்திரைகள் தவிர மற்ற மருந்துகளுக்கு மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் பயனாளிக்கு வழங்கக் கூடாது என்பதைச் சட்டமாக்கலாம்.
பலருக்கும் நிறுவன மருந்துகளே பாதுகாப்பானவை என்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆகவே, மருத்துவர்கள் மருந்துகளைப் பரிந்துரைக்கும்போது முடிந்தவரை பொதுப்பெயர், நிறுவனப் பெயர் இரண்டையும் எழுதச் சொல்லலாம். பயனாளியின் வசதியைப் பொறுத்து எந்த மருந்தையும் அவர் வாங்கிப் பயன்படுத்த வழி செய்யலாம்.
மலிவு விலை மருந்தகங்களை அதிகப்படுத்தலாம். நிறுவனப் பொதுப்பெயர் மருந்துகளுக்கு (Branded Generics) இங்கே முன்னுரிமை கொடுக்கலாம். அடுத்து, இங்கு எல்லா மருந்துகளும் கிடைப்பதில்லை என்றும் புகார் வருகிறது. இதைக் கவனிக்க வேண்டும். மலிவு விலை மருந்துகள் குறித்த விழிப்புணர்வு இன்னும் மக்களிடம் அவ்வளவாக இல்லை.
விலை மலிவு என்பதால் மருந்தின் தரம் குறைவாக இருக்குமோ என்னும் சந்தேகமும் பலருக்கு இருக்கிறது. இந்த அவநம்பிக்கையையும் தகர்க்க வேண்டும். இதற்கு, கடைகளில் விற்கப்படும் எல்லா மருந்துகளும் தரமானவை என்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். ஏனென்றால், மருந்துகள் மக்களின் உயிர் தொடர்பானவை!
- தொடர்புக்கு gganesan95@gmail.com