சிறப்புக் கட்டுரைகள்

அற்பமான மேல்முறையீடுகள்: தவிர்க்க முன்வருமா அரசு?

சம்பத் ஸ்ரீனிவாசன்

மாவட்ட அளவில் கீழமை நீதிமன்றங்களால் சட்டத் தவறுகள் செய்யப்படும்போது, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் உரிமையை இந்திய அரசமைப்பு வழங்குகிறது. இதேபோல், உயர் நீதிமன்றத்தில் ஒரு நீதிபதியால் வழங்கப்படும் தீர்ப்புகள் நிறுவப்பட்ட சட்டக் கொள்கைகளுடன் முரண்பட்டால், அவற்றை இரு நீதியரசர் அமர்வில் மேல்முறையீடு செய்யலாம். அரசமைப்பு விஷயங்கள் தொடர்பான மேல்முறையீடுகள் பொதுவாகத் தலைமை நீதிபதி தலைமையிலான ஒரு பெரிய அமர்வின் முன் வைக்கப்படும்.

அதிகபட்ச அளவில், இந்திய உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்​றங்​களின் இரு நீதியரசர் அமர்வு​களின் தீர்ப்பு​களுக்கு எதிரான மேல்முறை​யீடுகளை விசாரிக்​கிறது - குறிப்பாக, அரசாங்கக் கொள்கையில் தலையிடும், குறிப்​பிடத்தக்க நிதிப் பொறுப்புகளை விதிக்கும் அல்லது அரசமைப்பு விதிகளின் தவறான விளக்​கங்களை உள்ளடக்கிய வழக்கு​களில்.

இருப்​பினும், சமீபத்திய ஆண்டு​களில் ஒரு குழப்பமான போக்கு உருவாகி​யுள்ளது: உச்ச நீதிமன்​றத்தால் ஏற்கெனவே சட்ட நிலைப்பாடு உறுதி​யாகத் தீர்க்​கப்பட்ட விஷயங்​களில்​கூடப் பல்வேறு மாநில அரசுத் துறைகள், அரசுப் பொதுத் துறை நிறுவனங்கள் அதிகளவில் ‘அற்பமான’ மேல்முறை​யீடு​களைத் தாக்கல் செய்து​வரு​கின்றன.

தேவையற்ற அணுகுமுறை: மே 2023இல் ஒரு பொது மன்றத்​தில், உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர்​.க​வாய், “மத்திய, மாநில அரசுகள் மற்றும் அவற்றின் பொதுத் துறை நிறுவனங்​களால் தாக்கல் செய்யப்​படும் மேல்முறை​யீடு​களில் 40% அற்பமானவை” என்று குறிப்​பிட்​டார். ஓய்வு​பெற்ற ஊழியருக்கு வெறும் ரூ.700 செலுத்துவதை அரசாங்கம் எதிர்த்த ஒரு குறிப்​பிடத்தக்க உதாரணத்தை அவர் மேற்கோள் காட்டினார் - இது ரூ. 7 லட்சத்​துக்கும் அதிகமான சட்டச் செலவுகளை ஏற்படுத்தி, பொதுக் கருவூலத்​துக்குத் தேவையில்​லாமல் சுமையை ஏற்றியது என்று கூறினார்.

‘ஷ்யாம் செல் அண்டு பவர் லிமிடெட் - எதிர் - ஷியாம் ஸ்டீல் இண்டஸ்ட்​ரீஸ்’ (14/03/2022 தேதியிட்ட தீர்ப்பு) வழக்கில், நீதிப​திகள் எல்.நாகேஸ்வர ராவ், பி.ஆர்​.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு, அற்பமான அரசாங்க மேல்முறை​யீடு​களின் அதிகரித்து​வரும் அலை குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்​படுத்​தியது.

நீதிமன்​றத்தின் பணிச் சுமையில் அவற்றின் தாக்கம் குறித்துத் தெளிவுபடுத்​தியது. ஓய்வூ​தியத் தகராறு தொடர்பான மற்றொரு வழக்கில் (எஸ்.எல்.பி - எண். 15917/2022), நீதிப​திகள் எம்.ஆர்.ஷா, கிருஷ்ண முராரி ஆகியோர் உச்ச நீதிமன்​றத்தின் தீர்ப்பை மீறி மேல்முறையீடு செய்ததற்​காகத் தமிழக அரசாங்​கத்தைக் கடுமையாக விமர்​சித்தனர். மேல்முறையீடு 19/09/2022 அன்று தள்ளுபடி செய்யப்​பட்டது; அது மட்டுமல்ல, அரசாங்​கத்​துக்கு ரூ. 5 லட்சம் அபராதமும் விதிக்​கப்​பட்டது.

09/02/2023 அன்று தீர்ப்​பளிக்​கப்பட்ட எஸ்.எல்.பி. (சி) - எண். 1595/2022இல் மீண்டும் மீண்டும், ஆதாரமற்ற வழக்குகள் மீதான விரக்தி தெளிவாகத் தெரிந்தது. இறந்த ஊழியரின் பணிக்கொடை தொடர்பான அரசாங்க மேல்முறை​யீட்டை நீதிப​திகள் எம்.ஆர்.ஷா, பி.வி.​நாகரத்னா ஆகியோர் தள்ளுபடி செய்து ரூ.50,000 அபராதம் விதித்​தனர்.

கண்டிக்கும் நீதிப​திகள்: ஆசிரியர் நியமன வழக்கு​களில் நீதிமன்ற முடிவு​களுக்கு எதிராகத் தமிழ்நாடு அரசு பத்து தனித்தனி மேல்முறை​யீடு​களைச் செய்தது - இவை அனைத்தும் ஒரே மாதிரி​யாகத் தீர்ப்​பளிக்​கப்​பட்டன. 13/08/2024 தேதியிட்ட (டபிள்​யூ.ஏ. (எம்.டி.) எண். 1354 முதல் 1363, 2024) உத்தர​வில், நீதிப​திகள் ஆர்.சுப்​பிரமணியன், எல்.விக்​டோரியா கௌரி ஆகியோர் அடங்கிய அமர்வு, அரசின் நடவடிக்கைகளைக் ‘கொடூர​மானது’ என்று குறிப்​பிட்டது. மேலும், தனிப்பட்ட பொறுப்​பிலிருந்து தப்பிக்கும் அதிகாரி​களிடையே பொறுப்​புக்​கூறுதல் இல்லாததை விமர்​சித்து, மேல்முறை​யீட்டுக்கு ரூ. 50 லட்சம் அபராதமும் விதித்தது.

மற்றொரு விஷயத்தில் (டபிள்​யூ.ஏ.(எம்.டி.) எண். 1436/2024), இலங்கை அகதிகள் முகாமில் ஒரு குழந்​தையின் மரணத்​துக்கான இழப்பீட்டை எதிர்த்து மாநில அரசு தொடர்ந்த மேல்முறை​யீட்டை, சென்னை உயர் நீதிமன்​றத்தின் மதுரை கிளை தள்ளுபடி செய்தது. இந்த மேல்முறையீடு ஏற்றுக்​கொள்ள முடியாதது எனக் குறிப்​பிட்டு, ரூ.50,000 அபராதம் விதித்து, 21/08/2024 அன்று ரூ.5 லட்சம் இழப்பீட்டுத் தீர்ப்பை உறுதி​செய்தது.

சமீபத்​தில், ‘தமிழ்நாடு மாநிலம் - எதிர் - உயர் கல்வித் துறையின் அரசாங்க முதன்மைச் செயலாளர்’ என்கிற வழக்கில், ஏற்கெனவே உயர் நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் அமர்வு, உச்ச நீதிமன்றம் ஆகிய இரண்டும் தீர்த்து​வைத்த ஒரு வழக்கை மீண்டும் விசாரிக்கக் கோரிய நீதிப் பேராணை மேல்முறை​யீட்டை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நீதிப​திகள் ஆர்.சுப்​பிரமணியன், ஜி.அருள் முருகன் ஆகியோர் கொண்ட அமர்வு, அரசுக்கு ரூ. 5 லட்சம் அபராதம் விதித்தது. இறுதி செய்யப்பட்ட பிரச்சினையை ‘மீண்டும் மேற்கொள்​ளப்பட்ட முறையீடு’ என்று மேல்முறை​யீட்டை நீதிப​திகள் கண்டித்​தனர்.

அதிகரிக்கும் போக்கு: இந்த ஆதாரமற்ற மேல்முறை​யீடுகள் சட்டப் பிரதி​நி​திகள், அரசு வழக்கறிஞர்கள் ஆகியோரின் நம்பகத்​தன்​மையைச் சிதைப்பது மட்டுமல்​லாமல், மாநிலத்தின் மீது தவிர்க்​கக்​கூடிய நிதிச் செலவு​களையும் அதிகரிக்​கவைக்​கின்றன. மிக முக்கியமாக, அவை நீதியைத் தாமதப்​படுத்து​கின்றன - குறிப்பாக தொழிலா​ளர்கள், பொருளா​தா​ரரீ​தி​யாகப் பின்தங்​கிய​வர்கள் போன்ற சமூகத்தின் ஒடுக்கப்பட்ட பிரிவினருக்குப் பாதிப்பை ஏற்படுத்து​கின்றன.

அவர்கள் பெரும்​பாலும் அடிப்படை உரிமை​களைப் பெறுவதற்​குக்கூட நீண்ட கால வழக்குகளை எதிர்​கொள்ள வேண்டி​யிருக்​கிறது. உயர் நீதிமன்​றங்​களிலும் உச்ச நீதிமன்​றத்​திலும் அதிகரித்து​வரும் வழக்கு​களின் சுமை, இத்தகைய தகுதியற்ற வழக்குத் தாக்கல்​களின் நேரடி விளைவாகும்.

முன்னோக்கிச் செல்லும் வழி: இந்தப் பிரச்சினையைத் தணிக்க, அரசுத் துறைகள் - குறிப்​பாக சட்டம் மற்றும் நிதித் துறைகள் - நன்கு தீர்க்​கப்பட்ட சட்ட நிலைப்​பாடு​களின் அடிப்​படையில் நீதிமன்​றங்கள் தெரிவிக்கும் முடிவு​களுக்கு எதிரான மேல்முறை​யீடு​களைத் தடை செய்யும் தெளிவான உள் வழிகாட்டு​தல்களை உருவாக்குவது கட்டாய​மாகும்.

மேலும், உயர் நீதிமன்​றங்கள், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றின் பதிவாளர்​களுக்கு அற்பமான மேல்முறை​யீடுகளை ஆரம்பக் கட்டத்​திலேயே நிராகரிக்கும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும். நீதித் துறையின் சுமையைக் குறைப்பது மட்டுமல்​லாமல், பொது வளங்களைப் பாதுகாப்​ப​தற்​கும், நீதி வேண்டிக் காத்திருப்​பவர்​களுக்கு விரைவாக நீதி வழங்கப்​படுவதை உறுதி​செய்​வதற்கும் இதுபோன்ற வழக்குகளைக் குறைப்பது அவசியம்.

- தொடர்புக்கு: dss1961@gmail.com

SCROLL FOR NEXT