சிறப்புக் கட்டுரைகள்

மீண்டெழுமா தேசிய மனித உரிமை ஆணையம்?

ச.பாலமுருகன்

ஐ.நா.வின் உலகளாவிய தேசிய மனித உரிமை நிறுவனங்களின் கூட்டமைப்பு, ஜெனிவாவில் மார்ச் மாதம் தனது 45ஆவது கூட்டத்தை நடத்தியது. இந்தியாவின் தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு இதுவரை அளிக்கப்பட்டுவந்த முதன்மைத் தர அங்கீகாரத்தை விலக்கிக்கொள்வது என அதில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் வாக்களித்தல் உள்ளிட்ட உரிமைகளை இந்திய ஆணையம் இழக்கும்; அதன் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகும். எனினும் ஆணையம் தன் செயல்பாடுகளையும் சட்டக் கட்டமைப்புகளையும் மாற்றிக்கொள்ள வாய்ப்பு தருவதற்காக இந்தத் தர இறக்கத்தை ஓராண்டுக்கு நடைமுறைப்படுத்தாமல் இருக்க ஐ.நா. முடிவு செய்துள்ளது. இது இந்திய மனித உரிமை ஆணையத்துக்கு ஏற்பட்டுள்ள பெரும் பின்னடைவு.

ஆணையம் உருவான வரலாறு: 1991 பாரிஸ் மாநாட்டில் முன்வைக்​கப்பட்ட கொள்கையின் அடிப்​படை​யில், 1993இல் மனித உரிமைப் பாதுகாப்புச் சட்டம் உருவாக்​கப்​பட்டது. தேசிய மனித உரிமை ஆணையம் உள்பட மனித உரிமை சார்ந்த சில நிறுவனங்கள் உருவாக இச்சட்டம் வழிவகுத்தது. ஆனால், தேசிய மனித உரிமை நிறுவனம் என்பது பாரிஸ் மாநாட்டின் கொள்கை அடிப்​படையில் செயல்பட வேண்டும்.

அவ்வாறு செயல்​படும் நிறுவனங்கள் மட்டுமே முதல் நிலை அங்கீ​காரம் பெறும். பாதி அளவு மட்டும் இந்தக் கொள்கையை நடைமுறைப்​படுத்தும் நிறுவனங்கள் இரண்டாம் தரத்துக்குத் தள்ளப்​படும். 1993லிருந்து, முதல் தரத்துடன் இருந்த இந்தியாவின் தேசிய மனித உரிமை ஆணையம், அதன் தரத்தைத் தற்போது இழந்துள்ளது.

அடிப்​படைத் தகுதிகள்: பாரிஸ் கொள்கை முடிவின்படி, மனித உரிமை ஆணையம் என்பது அரசியல் தலையீடு இன்றிச் சுதந்​திர​மாகவும் தன்னாட்சி அதிகாரத்​துடனும் பன்முகத்​தன்​மை​யுடனும் செயல்பட வேண்டும்; சுயமாக முடிவு எடுக்​கவும் மனித உரிமை மீறல்​களைக் கண்காணிக்​கவும் தடுக்​கவும் தலையீடு செய்ய வேண்டும், அரசைச் சாராத நிதி ஆதாரம் ஆணையத்​துக்கு அவசியம்.

மேற்கண்ட காரணி​களில் இந்தியாவின் தேசிய மனித உரிமை ஆணையம் கடந்த காலங்​களில் முறையாகச் செயல்​பட​வில்லை. இதற்கென ஆய்வுசெய்யும் ஐ.நா. துணைக் குழு 2011, 2016, 2017, 2023இல் நடத்திய ஆய்வு​களில் இந்த விலகல்​களைத் தொடர்ந்து சுட்டிக்​காட்​டியது.

ஆணையத்தின் செயலிழப்பு: ஆணையத்தின் ஊழியர்கள், பெரும்​பாலும் மத்திய அரசின் பிற துறைகளில் இருந்து தற்காலிகமாக இங்கு பணிபுரிய நியமிக்​கப்​பட்​ட​வர்கள். ஆணைய உறுப்​பின​ராகவும் புலனாய்வு அதிகாரி​யாகவும் பெரும்​பாலும் ஆட்சி​யாளர்​களின் நன்மதிப்பைப் பெற்ற ஓய்வு​பெற்ற காவல் துறை அதிகாரிகளே இத்துறைக்கு நியமிக்​கப்​படு​கின்​றனர். ஓய்வு​பெற்ற நீதிப​தி​களுக்குத் தலைவர் பொறுப்பு வழங்கப்படுகின்றது. அவர்கள் மனித உரிமையில் அக்கறை கொண்ட​வர்களா என்பது கணக்கில் கொள்ளப்​படு​வ​தில்லை.

2016, பிப்ரவரியில் நீதிபதி தத்து பதவியேற்றுக்​கொண்ட பின்னர், தேசிய மனித உரிமை ஆணையத்தின் செயல்​பாடுகள் பெரும்​பாலும் அதன் அடிப்படை நோக்கத்​திலிருந்து விலகின எனலாம். நாடு முழுவதும் சிறுபான்மை மக்களுக்கு எதிராகக் கட்டமைக்​கப்பட்ட வெறுப்புப் பிரச்​சாரம், பொது இடங்களில் நிகழ்ந்த குழு வன்செயல்கள், கருத்​துரிமை பறிப்பு, பத்திரிகைச் சுதந்​திரத்தின் மீது நிகழ்த்​தப்பட்ட வன்முறைகள், அதிகரித்த காவல் துறைச் சித்ர​வதைகள், மோதல் சாவுகள் எனப் பல்வேறு மனித உரிமை மீறல்​களில் ஆட்சி​யாளர்​களுக்கு எதிராக மனித உரிமை ஆணையம் செயல்​ப​டாமல் இருந்தது; மனித உரிமை அமைப்புகள், செயல்​பாட்​டாளர்​களுடன் நட்பு அடிப்​படையிலான செயல்​பாட்டைத் தவிர்த்​துக்​கொண்டது; அரசுக்கு எதிராக வரும் புகார்களை மாநில மனித உரிமை ஆணையங்​களுக்கு மாற்றி​விட்டது.

புகார்கள் கையாளப்பட்ட விதம்: 2017-18இல் தேசிய மனித உரிமை ஆணையத்​துக்கு நாடு முழுவது​மிருந்து 86,187 புகார்கள் வந்தன. இவற்றில் 33,290 புகார்களை விசாரிக்​காமலேயே ஆணையம் தள்ளுபடி செய்தது. 15,364 புகார்கள் வழிகாட்டி அறிவுரை வழங்கப்​பட்டு முடித்து​வைக்​கப்​பட்டன. 21,652 புகார்களை உரிய மாநில மனித உரிமை ஆணையங்​களுக்குத் திருப்​பி​விட்டது. வெறும் 691 வழக்கு​களில் மட்டும் இழப்பீடு வழங்கப் பரிந்துரைத்தது.

ஓர் ஆண்டுக்கு ஏறக்குறைய ஒரு லட்சம் புகார்​களைத் தேசிய மனித உரிமை ஆணையத்​துக்கு மக்கள் அனுப்பு​கின்​றனர். இந்தி பேசாதமாநிலங்​களி​லிருந்து வரும் புகார்​களையும் ஆங்கிலத்தில் வரும் புகார்​களையும் ஆணையம் முறையாகப் பரிசீலிப்​பது இல்லை என நீண்ட நாள் முறையீடு உள்ளது. ஆணையம் தனது நிதிக்காக நிதி அமைச்​சகத்தையே எதிர்​நோக்க வேண்டி​யுள்ளது. இதனால் அதன் செயல்​பாடுகள் பாதிக்​கப்​படு​வதில் வியப்​ப​தற்கு ஒன்றுமில்லை.

சர்ச்சைக்​குரிய நியமனங்கள்: 2021இல் உறுப்பினராக நியமிக்​கப்பட்ட ராஜீவ் ஜெயின் முன்னதாக மத்தியப் புலனாய்வு அமைப்பில் இயக்குந​ராகவும் குஜராத் மாநிலத்தில் உளவுத் துறைத் தலைவராகவும் இருந்தவர். 2021இல் முன்னாள் நீதிபதி அருண் மிஸ்ரா ஆணையத்தின் தலைவராக நியமிக்​கப்​பட்​டார். அவர் பணிக் காலத்தில் பல்வேறு வழக்குகள் வேறு நீதிப​தி​களின் அமர்விலிருந்து தன்னிச்​சையாக அவரது அமர்வுக்கு மாற்றப்​பட்டன. மாவட்ட நீதிபதி லோயா என்பவரின் மரணம் தொடர்பான வழக்கு இவரின் அமர்வுக்குத் திடீரென மாற்றப்​பட்டதன் பின்னணியில் நான்கு உச்ச நீதிமன்ற நீதிப​திகள் 2018, ஜனவரி 18 அன்று பத்திரி​கை​யாளர்​களைச் சந்தித்தது குறிப்​பிடத்​தக்கது.

உள்ளிருந்தே எழுந்த குற்றச்​சாட்டு: 2017இல் இந்த ஆணையத்தின் சிறுபான்மை மக்கள் மனித உரிமை சார்ந்த துணைக் குழுவில் இருந்த முன்னாள் ஆட்சிப் பணி அதிகாரியான ஹர்ஷ் மந்தர் பதவி விலகி​னார். சிறுபான்மை மக்கள் மீதான மத நோக்கிலான தாக்குதல், குழு வன்முறை, வெறுப்​புக்கு எதிராக அவர்களது மனித உரிமையைக் காக்க ஆணையம் தவறிவிட்டது என்பது அப்போது அவர் முன்வைத்த குற்றச்​சாட்டு. உத்தரப்​பிரதேசம், ஹரியாணா மாநிலங்​களில் சிறுபான்மை மதத்தவர் மீது காவல் துறை நடத்திய மோதல் கொலைகளுக்கு எதிராகப் புகார் கொடுக்​கப்​பட்டும் ஆணையம் விசாரிக்க​வில்லை.

ஆணையம் மறந்து​விட்ட வரலாறு: கடந்த காலங்களில் தேசிய மனித உரிமை ஆணையம் மனித உரிமை​களைப் பாதுகாக்கப் பல்வேறு தலையீடு​களைச் செய்துள்ளது; நீதிமன்​றத்தில் அதற்காக வழக்கு​களைக்​கூடத் தாக்கல் செய்திருக்​கின்றது. பயங்கர​வாதத் தடுப்புச் சட்டம் ஒன்றைப் புதிதாக அரசு கொண்டு​வந்த​போது, அது அவசியமற்றது என அரசுக்கு ஆணையம் சுட்டிக்​காட்டிய வரலாறு உண்டு. ஆனால், தற்போது அது தனது தனித்​தன்​மை​யையும் சுதந்​திரத்தையும் இழந்து, அரசின் ஒரு நிறுவனம் ஆகச் சுருக்​கப்​பட்​டுள்ளது.

மனித உரிமைக் காப்பாளர்​களைப் பாதுகாக்​கவும் உபா (UAPA) உள்ளிட்ட கொடும் சட்டங்​களின் அத்து​மீறல்​களைப் பேசவும் தவறியது. குடியுரிமைத் திருத்தச் சட்டத்​துக்கு எதிரான போராட்​டங்​களில் நிகழ்ந்த உரிமை மீறல்​களுக்கு மௌனம் காத்தது. கரோனா காலத்தில் சாமானியத் தொழிலா​ளர்​களும் ஏழை எளியவர்​களும் எதிர்​கொண்ட நெருக்​கடிகளை அறிந்​தி​ராதது. மத்திய இந்தியாவின் பழங்குடி​யினரின் கோரிக்கைகளையும் மணிப்பூர் மனித உரிமை மீறல்​களையும் கணக்கில் கொள்ளாதது எனக் கடும் விமர்​சனங்கள் அதன் எதிரில் நிற்கின்றன. உச்ச நீதிமன்​றம்​கூடத் தனது மணிப்பூர் விசாரணைக் குழுவில் ஆணையத்தைச் சேர்க்க​வில்லை.

ஆணையத்தின் தலைவர், உறுப்​பினர் தேர்வில் வெளிப்​படைத்தன்மையும் இருப்​பது ​இல்லை. நாடாளுமன்ற இரு அவைகளின் எதிர்க்​கட்சித் தலைவர்​களின் கருத்து​கள்கூட இவற்றில் புறக்​கணிக்​கப்​படு​கின்றன. மனித உரிமை மீறல்கள் நிகழ்த்​தப்​படு​கையில் மனித உரிமை ஆணையம் சமூகத்​துக்கு ஒரு ஜனநாயகரீ​தியிலான நம்பிக்கையை அளிக்​கிறது. இந்த நிறுவனத்தை மீட்டெடுப்பது நாட்டுக்கு நல்லது.

- தொடர்புக்கு: balamuruganpucl@gmail.com

SCROLL FOR NEXT