அன்றாடம் என்பதே இயற்கையின் காலப் பரிமாணம் ஆகும். மானுடம் நினைவுசேகரம், அறிவுசேகரம் போன்றவற்றால் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று பிரித்து, வரலாற்றுத் தொடர்ச்சியை உருவாக்கிக்கொள்கிறது. அதன் விளைவுகளைத் தத்துவார்த்த மானுடவியல் நோக்கில் ஆராயும் கட்டுரைத் தொடர் இது.
சிறிய சிறிய இனக் குழுக்களாக வாழ்ந்த மனிதர்கள் அரசமைப்பு என்பதை உருவாக்கி, மேலும் மேலும் அதனை விரிவாக்கித் தங்கள் ஒட்டுமொத்த வாழ்வையும் அரசு நிர்வாகத்துக்கு உள்பட்டதாக மாற்றிக்கொண்டது, அன்றாட வாழ்விலிருந்து வரலாற்றுத் தன்னுணர்வுக்குப் பயணப்பட்டதன் முக்கியமான தடம் எனலாம்.
ஆனால், ஒட்டுமொத்த மானுடமும் ஒரே நிர்வாகக் கூட்டமைப்பாக மாறாமல், 195 தேசிய அரசுகளாக வடிவெடுத்தது. அந்த தேசங்களுக்குள் கொடும் யுத்தங்கள் சாத்தியமாக இருப்பது, இந்த மானுட வரலாற்றுத் தன்னுணர்வினைக் குறித்த தீராத புதிராக விளங்குகிறது.
மானுடப் புலன் அனுபவத்தினை ஒவ்வோர் உடலும் நினைவுசேகரமாக மாற்றிக்கொள்வதால் இயக்கத்துக்கான புறவெளி அல்லது இயல்வெளி என்பது பொதுவானதாக உருவாகிறது என்று பார்த்தோம். இந்த நினைவுசேகரம் தன்னுணர்வாகப் பரிணமித்து, மானுடக் கூட்டியக்கத்துக்கு வழி செய்தபோது, அவரவர் தன்னுணர்வினால் பிரிந்துவிடாமல் மனிதர்கள் குழுக்களாகச் சேர்ந்து ஒற்றை முடிவினை எடுக்க வேண்டிய தேவை எழுந்தது. உதாரணமாக, எந்தத் திசையில் போனால் உணவு கிடைக்கும் என்பதை ஒற்றை முடிவாகக் குழுவினர் அனைவரும் சேர்ந்து எடுக்க வேண்டும்.
அந்த முடிவினை எடுக்கக் குழுவுக்கு ஒரு தலைவன் தேவை என்றானது. அனைவரையும் ஆலோசித்து, முடிவெடுத்து அனைவரது ஒத்துழைப்புடன் இயங்கும் தலைவர்கள் வெற்றிகரமானவர்கள் எனலாம். இல்லாவிட்டால் உட்பூசல் ஏற்படும். ஒற்றை முடிவு என்பதை உறுதிப்படுத்தத்தான் ஒற்றைத் தலைமை. அந்தத் தலைமைக்குக் கீழ் எவ்வளவு ஆலோசனைகளும் விவாதங்களும் நடக்கலாம், அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படலாம். இதுவே ஒத்திசைவுக்கான, சுயாட்சிக்கான அரசியல். இதன் மூலப்பொருள் கருத்து, எண்ணம், சிந்தனை.
மனிதர்கள் பலவிதமான கருவிகளை உருவாக்கிக்கொண்டு, இயற்கையிலிருந்து தேவையான பண்டங்களை உருவாக்கிக்கொண்டு வாழ்வினை மேம்படுத்திக்கொள்வது சாத்தியமானது. அடிப்படைச் செயல்பாடுகளான உழைப்பு, உற்பத்தி, நுகர்வு என்பது மானுட வாழ்வின் இன்றியமையாத சுழற்சி.
முக்கியமாக உபரி உற்பத்தியும், வெவ்வேறு பண்டங்களை உபரியாக உற்பத்தி செய்பவர்கள் அவற்றைப் பரிமாறிக்கொள்வதும் தோன்றியது. அப்போது பல்வேறு அங்கங்களைக் கொண்ட, சந்தை விதிகளைக் கொண்ட விரிவான சமூக அமைப்பு வடிவெடுத்தது. அது தன்னை ஒழுங்குபடுத்திக்கொள்ள அரசமைப்பு என்பதும் விரிவடைந்தது.
உபரி உற்பத்தியிலிருந்து வரியினை அரசனுக்குக் கொடுப்பதன் மூலம் வலுவான அரசமைப்பை உருவாக்குவது சமூக இயக்கத்துக்கு அவசியமானது. மொழி, எழுத்து, கடவுள்கள், கதையாடல்கள், கோயில்கள், பூசாரிகள், அரசர்கள் எல்லாமே உழைப்பால், உபரி உற்பத்தியால் சாத்தியமாயின; அவசியமாயின. நதிக்கரை நாகரிகங்களும், சிற்றரசுகளும், பேரரசுகளும் தோன்றின. உற்பத்தி பெருகப்பெருக அரசமைப்பு விரிவடைவதும் இயல்பானது.
பத்துப் பேராக இருந்தாலும், பத்துக் கோடி பேராக இருந்தாலும் பொது முடிவு என்பது ஒற்றையாக ஒன்று தேவைப்பட்டதால், அதனை அறிவிக்க ஒற்றைத் தலைமையும் தேவையென்பதே மானுடவியல் விதியாக இருந்துவருகிறது. இது சுயாட்சி வடிவத்தின் இறையாண்மை வெளிப்பாடாக விளங்குகிறது. எதேச்சதிகாரிகள், சர்வாதிகாரிகள் தோன்றுகிறார்கள்.
கொலையும் இறையாண்மையும்: ஒத்திசைவு, உழைப்பு, உற்பத்தி, உபரிப் பகிர்வு என்கிற மானுடச் சாத்தியங்களால் வடிவமைக்கப்பட்ட சுயாட்சி அரசியலுக்கு இன்னோர் இருண்ட மறுபக்கமும் இருந்தது. அதுதான் வன்முறையை அடிப்படையாகக் கொண்ட இறையாண்மை அரசியல். மனிதனை, கருவிகளை உருவாக்கிக் கொண்டு இயற்கையின் வளங்களைத் தன்வயப்படுத்திக்கொள்ள எந்தத் தன்னுணர்வு உதவியதோ, அதே தன்னுணர்வு தன்னையோ பிறரையோ கொல்வதையும் சாத்தியப்படுத்தியது.
காரணம், தன்னிலிருந்து விலகி நின்று தன்னையே பார்க்கும் சுயம், தற்காமம் (narcissism) கொள்கிறது. இந்தத் தற்காமம், விலக்கம் உருவாக்கிய சுயபிளவினை ஒருபோதும் இட்டு நிரப்பாது என்பதால், நிராசைக்கும் வன்முறைக்கும் வித்திடுவதாக மாறுகிறது. இவ்வகையான தற்காமத்தையும் நிராசையையும் சமன் செய்யப் பல்வேறு சமூகத் தன்னிலைகளை உருவாக்க நேர்கிறது. அந்தத் தன்னிலைகள் சமூகத்தை எதிரி, நண்பன் என்று பிரித்துத் தகவமைத்துக்கொள்ள முனைகின்றன.
சமூக ஒத்திசைவுக்காக உருவாகும் சுயாட்சி அரசுகள், கடவுள்கள் ஆகியவற்றைத் தன்னுடைய தன்னிலையின் அரணாகக் காணும் மனிதர்கள், தங்கள் அடையாளத்துக்கு வெளியில் உள்ளவர்களை எதிரிகளாகக் கண்டு வன்முறையைச் செலுத்துவது சமூக உளவியலானது. வன்முறையின் மற்றொரு வடிவில் அரசர்கள், சமூகத்துக்குள்ளேயே ஒத்திசைவை ஒழுங்கமைப்பாக மாற்ற வன்முறையைக் கைக்கொண்டார்கள்.
அரசைப் பேரரசாக விரிவுபடுத்துவதன் மூலம் உபரித் திரட்சியை அதிகரிப்பது அரசின் ஆற்றலை அதிகரிப்பதாகவும், உற்பத்தியை அதிகரிப்பதாகவும் கருதப்பட்டதால், தொடர்ந்து பேரரசுகளை உருவாக்க ஓயாத போர்களும் வன்முறையும் தோன்றின. இந்த இறையாண்மை அரசுகளுக்கு வன்முறையே கச்சாப் பொருள். இவை வெளியில் போர் இயந்திரம், அரசினுள் ஏற்றத்தாழ்வு சமூகம் எனப் பயணப்பட்டு உபரியைக் குவிக்கத் தலைப்பட்டன எனலாம்.
கண்ணதாசன் பாடல் வரிகள் ‘வந்த நாள் முதல் இந்த நாள் வரை/ வானம் மாறவில்லை/வான் மதியும் மீனும் கடல் காற்றும்/ மலரும் மண்ணும் கொடியும் சோலையும்/ நதியும் மாறவில்லை/மனிதன் மாறிவிட்டான்/மதத்தில் ஏறிவிட்டான்’. இதில் மதம் என்பது முக்கியமாகக் குறிப்பிடப்பட்டாலும், இறையாண்மை போர் இயந்திரமானது மதம், மொழி, சாதி, இனம், வர்க்கம் என்று எதை வேண்டுமானாலும் வன்முறைக் களமாகக் கொள்ளும் என்பதைக் கவனிக்க வேண்டும். ‘இன்பமும் காதலும் இயற்கையின் நியதி/ஏற்றத்தாழ்வுகள் மனிதனின் ஜாதி/பாரில் இயற்கை படைத்ததையெல்லாம்/ பாவி மனிதன் பிரித்து வைத்தானே’ என்று தொடர்கிறது அந்தப் பாடல்.
மனிதர்களின் கூட்டியக்கத்துக்குச் செல்நெறிகளும் சுயாட்சி வடிவமைப்புகளும் தேவை. உளவியல் பிளவினால் உருவாகும் தற்காமமும் நிராசையும் தோற்றுவிக்கும் இறையாண்மை போர் இயந்திர அடையாளங்கள், சுயாட்சி வடிவங்களைக் கைப்பற்றுவதைத் தவிர்ப்பது என்பதும் மானுட ஏக்கமாகவே தொடர்கிறது. பீட்டில்ஸ் பாடகர் ஜான் லென்னன் ‘Imagine all the people, sharing all the world...’ என்று பாடும்போது, இந்த நிறைவேறா ஏக்கம் நெடுமூச்சினைத் தோற்றுவிக்கும்.
- தொடர்புக்கு: rajankurai@gmail.com