பட்டினிச் சாவு என்பது இந்தத் தலைமுறைக்குத் தெரியாது. சென்ற தலைமுறையில் எங்கோ நடப்பதாகக் கேள்விப்பட்டார்கள். அதற்கு முந்தைய தலைமுறை பட்டினிச்சாவை நேரில் கண்டிருக்கிறது.பெரும் பஞ்சத்தைச் சந்தித்து மீண்டிருக்கிறது. பஞ்சத்தின் கதை என்பது பட்டினிச் சாவின் கதைதானே.
1943இல் பிரிட்டிஷ்காரர்களால் செயற்கையாக உருவாக்கப்பட்ட வங்கப்பஞ்சம் மூன்று மில்லியன் மக்களைக் காவு வாங்கியது. அந்தப் பஞ்ச காலத்தில் வங்காளத்தின் சிறுகிராமம் ஒன்றில் வாழும் அனங்கா குடும்பத்தின் கதையைத்தான் ‘நெருங்கி வரும் இடியோசை’ நாவல் பேசுகிறது. ‘பதேர் பாஞ்சாலி’ நாவலை எழுதிய பிபூதிபூஷன் பந்தோபாத்யாயாவின் கடைசி நாவல் இது. அவரது மறைவிற்கு பின்பு அவரது மனைவியின் முன்னுரையோடு நாவல் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றது. புகழ்பெற்ற இயக்குநர் சத்யஜித்ரே இந்த நாவலையும் படமாக்கியிருக்கிறார்.
சேதுபதி அருணாசலம் இந்த நாவலைத் தமிழில் சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார். வங்க இலக்கியங்களைப் படிக்க வேண்டும் என்பதற்காக அவராக வங்கமொழியைக் கற்றுத் தேர்ந்திருக்கிறார் என்பது பாராட்டிற்குரியது. இதனை சுவாசம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்த நாவலில் பஞ்சத்தால் உணவு கிடைக்காமல் ஒரு பெண் இறந்து போகிறாள். இனி இந்த ஊரில் வாழ முடியாது எனப் பலரும் வெளியேறுகிறார்கள். அப்போது நாவலின் நாயகியான அனங்கா, ஊரை விட்டுப் போக வேண்டாம் என முடிவுசெய்கிறாள்: “நாம பட்டினி கிடக்க வேண்டி வந்தா ரெண்டு பேரும் ஒண்ணாவே சாகலாம். நீ இங்கே என்னோட இருந்துடு” என்று தோழியிடம் சொல்கிறாள்.
‘பதேர் பாஞ்சாலி’யில் வரும் துர்கா, ‘லட்சிய இந்து ஹோட்ட’லில் வரும் பத்மா, இந்த நாவலில் வரும் அனங்கா போன்று பிபூதிபூஷண் உருவாக்கிய கதாபாத்திரப் பெண்கள் மறக்க முடியாதவர்கள். கங்காசரண் ஒரு பள்ளி ஆசிரியர். அவரது மனைவி அனங்கா. அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள். வங்காளத்தின் சிறிய கிராமத்தில் வசிக்கிறார்கள். பஞ்சகாலத்தில் அனங்கா தனது குடும்பத்திற்கு உணவளிப்பதற்காகப் போராடுகிறாள். அவளது வீட்டில் பிடி அரிசியில்லை. கடைகளில் எந்தப் பொருளும் விற்பனைக்குக் கிடைக்கவில்லை. பசலைக் கீரையைப் பறித்துச் சமைத்துச் சாப்பிடுகிறார்கள். ராசவள்ளி கிழங்குத் தோண்டி உண்ணுகிறார்கள். சுடுசோறு என்பது கனவாகப் போய்விடுகிறது. சந்தையில் அரிசியோ தானியங்களோ இல்லை. மூட்டை மூட்டையாகநெல் அடுக்கி வைத்திருந்த கடைகள்காலியாக இருக்கின்றன. தெருவெங்கும் எலும்பும் தோலுமாகப் பிச்சைக்காரர்கள் தென்படுகிறார்கள். அவர்கள் வெளியூரிலிருந்து வந்தவர்கள். கஞ்சி கிடைக்குமா என வீடு வீடாகக் கையேந்துகிறார்கள்.
குளித்தால் பசி அதிகமாகிவிடும் எனக் குளிக்காமல் இருக்கிறாள், அனங்காவின் தோழி மோத்தி. பத்து பதினைந்து நாட்களாக வெறும்கீரையை அவித்துச் சாப்பிட்டு வந்த மோத்தி, தான் சாவதற்கு முன்னால் ஒரு கைப்பிடிச் சோறாவது சாப்பிட வேண்டும் என்று ஆசைப்படுகிறாள். அதைக் கேட்ட அனங்கா கண்ணீரைத் துடைத்துக் கொண்டு “எப்படியாவது நாளைக்கு உனக்குச் சாதம் சமைச்சு போடுறேன்” என்கிறாள். அது போலவே மறுநாள் எங்கோ கையேந்தி அரிசியை வாங்கி வந்து சமைத்தும் போடுகிறாள். மோத்தி மிகுந்த பசியால் அந்தச் சோற்றை வேகவேகமாக அள்ளிச் சாப்பிடும் காட்சி நம் கண்ணில் தெரிகிறது. பசித்த வயிறுக்கு உணவளிப்பவர்தான் உண்மையான தெய்வம். பசியே மனிதனை மண்டியிடச் செய்கிறது. சகல அவமானங்களையும் ஏற்றுக்கொள்ள வைக்கிறது. பசித்தவனின் சாபம் எவரையும் எரிக்கக்கூடியது.
வங்கத்தில் பஞ்சம் முற்றுகிறது. அனங்கா தனது இரண்டு தோழிகளுடன் ரகசியமாகக் கிழங்கு தோண்டுவதற்காக கிராமத்தின் வடக்கே நதிக்கரையோரமிருந்த புதரை நோக்கிச் செல்கிறாள். வழியில் முள்பட்டு சேலை கிழிகிறது. அவர்கள் ஒரு இடத்தில் ஐந்தாறு கிலோ எடையுள்ள ராசவள்ளிக்கிழங்கினைத் தோண்டி எடுக்க முற்படுகிறார்கள். இதில் அவளது தலைமயிர் சூறைமுள் புதரில் சிக்கிக் கொள்கிறது. சேலை முந்தானை நழுவி சரிகிறது. கிழங்கை பிடுங்கி எடுக்க முடியவில்லை. காட்டில் அவர்களைப் பின்தொடர்ந்த ஒருவன் அனங்காவின் அழகைக் கண்டு அவளை அடைவதற்காகத் தாவுகிறான். ஆத்திரத்தில் அனங்கா கையில் உள்ள கடப்பாரையால் அவனைத் தாக்குகிறாள். அப்போது அவள் கொள்ளும் ஆவேசம் காளியின் வடிவம் போலவே இருக்கிறது.
கிராமத்தில் இரண்டு நாள் பட்டினி, நான்கு நாள் பட்டினி எனப் பலரும் பேசிக் கொள்கிறார்கள். இந்நிலையில் துர்கா பண்டிட் என்ற ஆசிரியர் தனது வீட்டைக் காலி செய்துவிட்டு மனைவி மகளுடன் கங்காசரண் வீட்டிற்கு வந்து சேருகிறார். தன்னுடைய வீட்டில் சாப்பிட எதுவுமில்லை. இவர்கள் ஏன் தன்னைத் தேடி வந்திருக்கிறார்கள் என கங்காசரண் எரிச்சல் அடைகிறான். ஆனால், அனங்கா அவர்களை இன்முகத்துடன் வரவேற்றுத் தங்கவைக்கிறாள். அவர்கள் தங்களின் உறவினர்கள் இல்லை; விருந்தாளிகள். வீடு தேடி வந்தவர்களுக்கு உணவளிக்க வேண்டியது தனது கடமை என அனங்கா நினைக்கிறாள். அதற்காகப் போராடுகிறாள். சமைக்க அரிசியோ பருப்போ இல்லாமல் அவள் கலங்கி நிற்கும்போது எங்கோ கிடைத்த பூசணிக்காயை தோளில் சுமந்து கொண்டு வந்து கூட்டு வைத்துத் தரும்படி கேட்கிறார் துர்கா பண்டிட். துயரத்தின் கரியால் வரையப்பட்ட சித்திரங்கள் என்றும் அழியாதவை.
கர்ப்பிணியான அனங்கா தனக்குரிய உணவைப் பிறருக்கு கொடுத்துவிட்டுத் தான் பட்டினி கிடந்து கொஞ்சம் கொஞ்சமாக உடல் நலிவுறுகிறாள். பிரசவம் நடக்கிறது. பிறந்த குழந்தைக்கு கொடுக்கத் தாய்ப்பால் போதவில்லை. பாலூட்டும் தாய்க்கு உணவு கிடைக்கவில்லை. குழந்தை வீறிட்டு அழுதபடியே இருக்கிறது. தேனைத் தடவுகிறார்கள். அப்படியும் அழுகை நிற்கவில்லை. மனைவிக்கும் பிள்ளைக்கும் தேவையான உணவுப் பொருட்களை வாங்குவதற்காக கங்காசரண் வெளியூர் கிளம்புகிறான். அங்கோ அரிசிக் கடையின் முன்பு பெரிய கூட்டம். ஒரே தள்ளுமுள்ளு. எல்லாப் பொருளும் விலை அதிகமாகிவிட்டது. கையில் இருந்த பணத்திற்கு மக்கிப் போன கோதுமையை வாங்குகிறான்.
சந்தையின் ஒரு கடையில் சந்தேஷ் என்ற இனிப்பைக் காண்கிறான். அது மனைவிக்கும் பிடிக்கும் என்பதால் விலை கேட்கிறான். ஜோடி நாலணா என்கிறான் கடைக்காரன். அவனிடம் பணமில்லை. அந்த இனிப்பை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறான். நம்மால் பணம் கொடுத்து வாங்க முடியாதபோது இனிப்பின் சுவை மாறி விடுகிறது. அது கசந்த வாழ்வின் அடையாளமாகிறது.
காலத்தின் மூடுபனிக்குள் மறைந்துவிட்ட பஞ்சகாலத்தின் துயரக்காட்சிகளை இந்த நாவல் மிக உண்மையாகப் பதிவுசெய்திருக்கிறது. இந்தப் பஞ்சத்திற்குக் காரணம் காலனிய ஆட்சி என்ற நிஜத்தைச் சுட்டிக்காட்டுகிறது. அந்த வகையில் இந்த நாவல் முக்கியமான வரலாற்று ஆவணமாகவும் ஆகிவிடுகிறது.