மறுமலர்ச்சிக் கால ஓவியர்களில் ஒருவர் சால்வதோர் தலி. ஸ்பெயினைச் சேர்ந்த இவர், சர்ரியலியச ஓவியங்களுக்காகப் புகழ்பெற்றவர். மனத்தின் அதீத கற்பனைகளை ஓவியங்களாகத் தீட்டியவர். இவரது ஓவியங்களின் தாக்கம் உலகின் பல இலக்கியப் படைப்புகளில் வெளிப்பட்டுள்ளன. யானைகள் (The Elephants) என்கிற இவரது ஓவியம், நவீன கவிதைக்கு உரிய விநோதத்தைக் கொண்டது. இந்த ஓவியத்தில் ஒட்டகத்தைப் போல, அதைவிடவும் நீண்டு வானத்தைத் தொட்டுவிடும் தூரத்தில் கால்களைக் கொண்ட யானைகள் காட்டப்பட்டுள்ளன. அது இடைவிடாத காலத்தின் அணிவகுப்பு பற்றிய சித்தரிப்பு. இது தமிழ் நவீன கவிதையில்கூடப் பயன்படுத்தப்பட்டுள்ளது. யானைகள் கால்கள் ஊன்றியிருக்கும் நிலம், ஒரு கனவின் நிலப்பரப்பு போலவும் இருக்கிறது. உலகமில்லாப் பூமியின் இருப்பு என இந்த யானைகளைக் கொள்ளலாம். அவை இரண்டும் வெவ்வேறு காலத்தின் நிலைகள். நித்தியம், நித்தியமின்மையின் குறியீடுகள் எனவும் புரிந்துகொள்ளலாம்.
அவரது இன்னொரு பிரபலமான ஓவியம் நீங்கா நினைவு (The Persistence of Memory). இந்த ஓவியத்திலும் காலம் ஒரு பெரும் பொருளாகக் கொள்ளப்பட்டுள்ளது. நான்கு கைக்கடிகாரங்கள் ஓவியங்களாக வரையப்பட்டுள்ள இந்த ஓவியத்தில் கால ஓட்டத்தை கடிகாரம் உருகுவதன் வழி சித்தரித்துள்ளார். கடிகாரம் ஒன்று மரக் கிளையில் தொங்கிக்கொண்டிருக்கிறது. நிலையாக தரையில் ஒரு மனித உடலுடன் இருக்கிறது. உருகும் கடிகாரத்துக்கு அருகில் எறும்பு ஓடுகிறது. மரணம், பிறப்பு என்கிற நிலைகளைச் சித்தரிக்கின்றன இவை.
இந்த இயக்கத்துக்குப் பின்னே மலைகள் வெறுமனே இவற்றையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றன. நவீன கவிதையைவிடவும் பின்நவீனத்துவ ஓவியத்தைவிடவும் புரிந்துகொள்ளச் சிக்கலான கனவுகளை நாம் நித்தமும் காண்கிறோம். அந்தச் சுவாரசியத்துக்கு உருக்கொடுப்பவை என நாம் இவரது படைப்புகளை நமக்கு அருகில் வைத்துப்பார்க்கலாம்.
சால்வதோர் தலி, பிறந்த தினம், மே 11