அஞ்சலி: சிறார் எழுத்தாளர் ரேவதி
சிறார் இலக்கியத்தையே தமது முதன்மைத்தடமென வகுத்துக்கொண்ட முன்னோடிகள் தமிழில் ஏராளமானோர் இருக்கிறார்கள். அவர்களில் தனக்கெனத் தனித்தவழியமைத்துகொண்டவர் சிறார் எழுத்தாளர் ரேவதி. சிறுவயது முதலே வாசிப்பதிலும் எழுதுவதிலும் ஆர்வம் கொண்டிருந்த ரேவதி, ‘குழந்தை இலக்கியக் கழகம்’ நடத்திய பயிற்சிப் பட்டறையில் கலந்துகொண்டார். அங்கு பூவண்ணன் போன்ற எழுத்தாளர்கள் அளித்த பயிற்சியினால் ‘பாட்டு வாத்தியார்’ எனும் கதையை எழுதினார். இக்கதை 1952இல் வெளியானது. அதற்கு முன்பே சில கதைகளை அவர் எழுதியிருந்தபோதும் பிரசுரமான முதல் கதை இதுவே. அவரின் 16 வது வயதிலேயே எழுத்தாளராகி விட்டார்.
ஹரிஹரன் எனும் இயற்பெயர் கொண்ட இவர், அப்பெயரில் கதைகள் எழுதிக்கொண்டிருந்தார். அப்போது இவரைச் சந்தித்த சிறார் எழுத்தாளர் அழ வள்ளியப்பா, “பெரியவர்களுக்கு எழுதப் பலர் இருக்கிறார்கள். குழந்தைகளுக்கு எழுத மிகக் குறைந்தவர்களே உள்ளனர். அதனால், தொடர்ந்து குழந்தைகளுக்கு எழுது” என்று கூறியதோடு ‘ரேவதி’ எனும் பெயரையும் பரிந்துரைத்தார். அன்று முதல் அந்தப் பெயரிலேயே குழந்தைகளுக்குக் கதைகள் எழுதத் தொடங்கினார்.
ரேவதி தனது கதைகளை எழுதுவதற்கு முன்பே, குழந்தைகள் மத்தியில் அக்கதைகளைச் சொல்லிப் பார்ப்பார். குழந்தைகளின் ஏற்பு / மறுப்புக்குத் தக்க அக்கதையை அவர் எழுதும்போது மாற்றிக் கொள்வாராம். அதனால்தான் ஒரு நேர்காணலில், “குழந்தைகளுக்கு எழுதுவதில் மிகுந்த ஆத்ம திருப்தி கிடைத்தது. எழுதுவதைவிட அவர்களுக்குக் கதை சொல்வதில் மிகுந்த திருப்தி ஏற்பட்டது” என்கிறார். இந்த அனுபவத்தில்தான் ‘குழந்தைகளுக்கு கதை சொல்வது எப்படி?’ என்கிற நூலையும் எழுதினார்.
குழந்தைகள் கதை என்றாலே நீதிநெறிகளை விளக்குவதுபோலக் கதைகள் எழுதுவது என்ற சோர்வளிக்கும் வடிவத்தை மாற்ற முனைந்தார் ரேவதி. கதை எழுதும் வடிவத்தில் மட்டுமல்ல, கதையின் கருவைத் தேர்வுசெய்வதிலும் அவரின் சமகாலச் சிறார் எழுத்தாளர்களைவிடக் கவனம் ஈர்ப்பவராக இருந்தார். 1934இல் காந்தியடிகள் குற்றால அருவியில் நீராட வந்தார். அங்கே குளிப்பதற்குப் பட்டியல் இனத்தவருக்கு அனுமதி இல்லை என்பதைத் தெரிந்துகொண்டு குளிக்காமலேயே திரும்பிச் சென்றார். இந்தச் செய்தியை அடிப்படையாகக் கொண்டு 1978இல் ‘கொடி காட்ட வந்தவன்’ எனும் சிறார் நாவலை எழுதினார். மிகப் பணக்கார வியாபாரி ஒருவர். பிரிட்டிஷ்காரர்களுக்கு ஆதரவாக இருப்பவர். அவரின் மகன் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறையில் இருக்கிறார்.
மகனைப் போலவே பேரனும் ஆகிவிடுவோனோ என்று பயப்படுகிறார் தாத்தா. பேரனை வெகுதூரத்தில் உள்ள பள்ளியில் படிக்க வைக்கிறார். வெள்ளையரை எதிர்க்கும் எவரையும் பிடிக்காத தாத்தா, தன் பேரனுக்கும் அந்தக் கருத்தை மடைமாற்றுகிறார். இதனால் காந்தியைப் பிடிக்காத பேரன், குற்றாலம் வரும் காந்திக்குக் கருப்புக் கொடி காட்டச் செல்கிறான். அந்த இடைபட்ட காலத்தில் சாதி குறித்தும் தீண்டாமை குறித்தும் அவன் அறிந்துகொள்வதும், வெள்ளைக்காரர்கள் குளிக்கும் அருவியில் இவர்கள் ஏன் குளிக்கக் கூடாது, தண்ணீரை ஒருவர் தொட்டால் எப்படித் தீட்டாகும் என்பன போன்று மனம் எழுப்பும் கேள்விகளும், அதற்கான பதில்களுமே நாவலின் மையம். இந்த நாவல் சிறார் இலக்கியத்தில் பெரும் பாய்ச்சல்.
அதுவரை இம்மாதிரியான கருப்பொருளை எடுத்து எழுதுவதில் பலருக்கும் தயக்கம் இருந்தது. அதை உடைத்தது ரேவதியின் மாபெரும் வெற்றி. இந்நாவல் 9 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுப் பரவலான கவனத்திற்குள்ளானது (இந்த நாவல் இப்போது அச்சில் இல்லாதது பெரும் சோகம்). இதுமட்டுமல்ல, திருச்செந்தூர் அருகில் உள்ள ஊரில் நடந்த கதையை ‘சிறைமீட்ட செல்வன்’ எனும் நாவலாக எழுதினார். இந்து –இஸ்லாமிய ஒற்றுமை குறித்த கதையாக ‘ராம்-ரசாக்’ அமைந்தது. இதுபோல இன்னும் சில கதைகளைப் பட்டியலிடலாம்.
அறிவியல் தகவல்களைச் சுவையான கதைகளாக மாற்றும் பாணியையும் ரேவதி கடைப்பிடித்தார். ‘மின்கல மாதவன்’ போன்ற நூல்களை உதாரணமாகச் சொல்லலாம். இப்படி 90க்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துள்ளார் ரேவதி. கனமான கதை மையம், நம்மைச் சுற்றியுள்ளவர்கள் போன்ற நெருக்கமான கதாபாத்திரங்கள், எளிமையான மொழிநடை, வாசிக்கும்போது புதியதோர் அனுபவம் இவையே ரேவதியின் எழுத்து பாணியாக இருந்தது.
மின்சார வாரியத்தில் பணிபுரிந்தவர், பின்னாளில் ‘கோகுலம்’, ‘தினமணி’, ‘பூந்தளிர்’ உள்ளிட்ட சிறார் இதழ்களில் பெரும் பங்களித்தவர். அவ்விதழ்களுக்கு வரும் குழந்தைகளின் படைப்புகளைத் திருத்துவதை மனதிற்கு நெருக்கமான பணியாகக் கருதினார். அதை இவர் திருத்தினாலும் இவர் பாணிக்கு அக்கதையை மாற்றாமல் குழந்தைகளின் மொழிநடையிலேயே இருக்கும்படி செய்வதையே விரும்பியவர். குழந்தை எழுத்தாளர் சங்கத்தின் பொறுப்புகளிலும், குழந்தைகளை ஈர்க்கும் கதை சொல்லியாகவும், தேர்ந்த இதழாளராகவும் பன்முகங்களில் இயங்கியவர் ரேவதி. குறிப்பாக, சமூகம் சார்ந்த கதை மையங்களைக் குழந்தைகளிடமும் பேச வேண்டும் என்று அவர் துணிச்சலோடு முன்னெடுத்த முயற்சிகள்தாம் இன்றைய சிறார் இலக்கிய வெளிக்குப் பெரும் முன்னுதாரணமாகத் திகழ்கின்றன. பலருக்கும் அப்படைப்புகளே நல்ல வழிகாட்டியாக விளங்கி வருகின்றன.
இவர் எழுதிய ‘பவளம் தந்த பரிசு’ எனும் சிறார் சிறுகதை நூலுக்கு 2013 ஆம் ஆண்டில் இந்திய அரசின் பாலசாகித்ய புரஸ்கார் விருது அளிக்கப்பட்டது. இதுபோல 30க்கும் மேற்பட்ட விருதுகளுக்குச் சொந்தக்காரர். ‘கொடிகாட்ட வந்தவன்’ நூல் வேண்டும் என ஒருமுறை அவரிடம் தொலைபேசியில் கேட்டபோது, “தன்னிடமும் அந்தப் பிரதி இல்லை. உங்களுக்குக் கிடைத்தால் எனக்கும் கொடுங்கள்” என்றார். அந்த நூல் மட்டும் அல்ல; அவரின் முக்கிய நூல்கள் பல தற்போது வாசிக்கக் கிடைக்கவில்லை. அதை மறுவெளியீடு கொண்டுவருவதுதான் அவருக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாக இருக்கும்.