தமிழ்நாடு சமூக நீதியின் தொட்டில் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணமாகியிருக்கிறது. தமிழ்நாட்டில் இயங்கும் கிராமப்புற, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் நியமன முறையில் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவார்கள் என்று மாற்றுத்திறனாளிகள் துறையின் மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இது சமூக நீதியின் நீட்சி என்றே சொல்ல வேண்டும்.
சமூக நீதி வரலாறு: ஏற்கெனவே மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் கல்வி, வேலைவாய்ப்புகளில் 4% இடஒதுக்கீடு வழங்கப்பட்டுவந்தாலும், அது மட்டுமே நிரந்தரத் தீர்வு அல்ல. பாதிக்கப்பட்ட சமூகங்களின் எதிர்கால முன்னேற்றத்துக்குக் கோரிக்கைகளும் தீர்வுகளும் அவர்களிடம் இருந்துதான் பெறப்பட வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சிகளில் இடஒதுக்கீடு குறித்து இளைஞர் நலன் - விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்தில் தனது முதல் பேச்சில் பேசியிருந்தார்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் நகராட்சி நிர்வாகத்தின் கீழ் இருக்கும் 25 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 நகரப் பஞ்சாயத்துகள், கிராமப்புற வளர்ச்சித் துறையின் கீழ் புதிதாக உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை உள்பட 37 மாவட்டப் பஞ்சாயத்துக் குழுக்கள், 388 ஒன்றியங்கள், 12,913 கிராமப் பஞ்சாயத்துகளிலும் மாற்றுத்திறனாளிகள் நியமன உறுப்பினர்களாகும் மாபெரும் வாய்ப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.
இதற்கு அடித்தளமாக, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம்-1994, நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டம்-1998 ஆகிய உள்ளாட்சிச் சட்டங்களைத் திருத்தம் செய்யும் சட்ட முன்வரைவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்யவிருக்கிறார். இந்த ஒற்றைச் சட்டத்தால் சுமார் 14,000 மாற்றுத்திறனாளிகள் உள்ளாட்சி மன்றங்களில் நியமன உறுப்பினர்களாகும் வாய்ப்பு பெறுவது சமூக நீதி வரலாற்றின் முக்கியமான மைல் கல். நீடித்த உள்ளார்ந்த வளர்ச்சிக்கு (Inclusive Development) சமூக நீதித் தத்துவத்துடனான மக்களாட்சிக் கொள்கை வலிமையான பாதை அமைக்கும் என்கிற நம்பிக்கை வெளிப்படுகிறது.
கரிசனம்: கிராமப் பஞ்சாயத்து அமைப்புகள் இந்திய ஜனநாயகத்தில் கூட்டாட்சி அமைப்பின் மூன்றாவது அடுக்கு (Third Strata of federal structure) என்று அரசமைப்புச் சட்ட வல்லுநர்கள் கூறுகிறார்கள். கிராமப்புற மக்களின் உள்ளூர்த் தேவைகளை நிறைவேற்ற அவர்களுள் ஒருவரை மக்கள் பிரதிநிதியாகத் தேர்தல் முறையில் தேர்ந்தெடுத்து, முடிவெடுக்கும் அதிகாரத்தை வழங்கிட 1993இல் கொண்டுவரப்பட்ட அரசமைப்புச் சட்டத்தின் 73, 74ஆவது சட்டத்திருத்தங்கள் முக்கியமானவை. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை உள்ளாட்சி அமைப்புகளுக்குக் கட்டாயம் தேர்தல் நடத்த வேண்டும் என்கிற நிர்ப்பந்தத்துடன் ஜனநாயக வேர்களை வலிமையாக்க இச்சட்டத் திருத்தம் நீர் வார்த்தது.
அதன் வாயிலாக அதிகார அமைப்புகளில் புறக்கணிக்கப்படுபவர்களாக இருந்த பெண்கள், பட்டியல் சாதியினர், பழங்குடியினர் சமூகத்துக்கு அரசமைப்புச் சட்டப் பாதுகாப்புடன் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. நகர்ப்புற, கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பல்லாயிரக்கணக்கான பெண்கள், பட்டியல் சாதி, பழங்குடியினத்தவர் கிராம வார்டு உறுப்பினர் பதவியில் தொடங்கி பேரூராட்சி, நகராட்சித் தலைவர், மாநகராட்சி மேயர் பதவி வரை பொறுப்பேற்றதன் விளைவாக, ஜனநாயக மறுமலர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது.
ஆனால், இந்த அதிகாரப் பரவல் அமைதியாக, எளிதில் நிகழ்ந்துவிடவில்லை; பலர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து அச்சுறுத்தல்களையும் அவமானங்களையும் தாங்கி அதிகாரத்தைக் கையாள முடியாமலும் நாற்காலியில் அமரும் உரிமையைப் பெற முடியாமலும் பலர் தவிக்கின்றனர்.
இதுபோன்று சமூகம் சார்ந்து பல்வேறு சோதனைகளை நேரடியாக எதிர்கொள்ள இயலாத மாற்றுத்திறனாளிகளைத் தேர்தல் காட்டாற்றில் இறக்கிவிடாமல், அவர்களின் நிலை உணர்ந்து, நியமன உறுப்பினர்களாகப் பங்கேற்க வைப்பது ஜனநாயகத்தின் உன்னதமான மாற்றுச் செயல்வடிவம். இன்னொன்று, சமூக நீதியைத் தீர்மானிப்பதில் சாதி அடையாள அரசியல் பெரும் பங்கு வகிக்கிறது.
அந்த அடையாளங்களுக்குள் மாற்றுத்திறனாளிகள் சிக்காமல் இருக்க சுய கட்டுப்பாட்டுடன் இயங்கும் வழிகளைக் கண்டறிவது தலையாய கடமை. இந்தச் சட்டம் உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. நாடாளுமன்றம், ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட பல்வேறு பன்னாட்டு அமைப்புகள் இந்தச் சட்ட முன்வரைவை முன்னுதாரணமாகக் கொள்ளக்கூடும்.
முன்னுதாரண மாநிலம்: தமிழ்நாடு இது போன்ற பல்வேறு வகை விளிம்புநிலை மக்களுக்கான சமூகச் சீர்திருத்த, முன்னேற்றக் கொள்கைகளுக்கு நாட்டுக்கே முன்னோடியாகத் திகழ்கிறது. மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி, 1969-74 ஆட்சிக் காலத்தில் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு மையங்கள், கைவிடப்பட்ட கைம்பெண்களுக்கு மறுமணச் சட்டம், 2006-11 ஆட்சிக் காலத்தில் மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் - புதிரை வண்ணார் சமூகங்களுக்கு நல வாரியங்கள் என மாறிவரும் சமூகச் சூழல்களுக்கு ஏற்றவாறு சமூக-பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்களைச் சாத்தியப்படுத்தியது இதற்கு ஒரு முன்னோட்டமாக அமைந்தது.
அதைத் தொடர்ந்து இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசானது, முற்போக்குச் சமூகக் கொள்கை மூலம் சாதி, மதம் உள்ளிட்ட சமூக அடையாளங்களைத் தாண்டித் தனிநபர், குடும்பம், குடியிருப்பு, சமுதாயம் என அனைத்துத் தளங்களிலும், ஒடுக்கப்பட்ட மாற்றுத்திறனாளி சமூகத்தை ஜனநாயகத்தின் மைய நீரோட்டத்தில் இணைத்திருக்கிறது; இதன் மூலம் சமூக உள்ளடக்குதல் (Social Inclusion) தத்துவத்துக்குப் புது ரத்தம் பாய்ச்சி இருக்கிறது.
மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கை சிக்கல்கள் நிறைந்தது என்பது எல்லாருக்கும் தெரியும். பிறப்பாலும், வளரும்போது நிகழும் சில விபத்துகளாலும் ஏற்படும் குறைபாடுகளால் வாழ்நாள் முழுதும் பிறரைச் சார்ந்து வாழும் வாழ்க்கையின் துயரம் ஒரு பக்கம்; குடும்ப உறுப்பினர்களின் மனநலப் பாதிப்புகள் இன்னொரு பக்கம் என நிறைய வேதனைகள் உள்ளன.
கடந்த அரை நூற்றாண்டுக் காலமாக அரசு, குடிமைச் சமூக அமைப்புகளின் செயல்பாடுகளால் இளம்பிள்ளைவாதம், அம்மை, தொற்றுநோய் குறித்த மகப்பேறு மருத்துவ விழிப்புணர்வின் மூலம் மாற்றுத்திறனாளிகள் குறித்த பார்வை அறிவியல்பூர்வமாக மாறத் தொடங்கியது.
அதனால், மாற்றுத்திறனாளிகளுள் கல்வி கற்கும் சதவீதம் உயர்ந்தது. அவர்களது கற்றல் திறன் மேம்பாடு, தொழிற்கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து கல்வியியல் தொழில்நுட்பத்தின் மூலம் சுயசார்புத் தன்மையை அதிகரிக்க அரசுகளும் தனிக் கவனம் செலுத்தின. அதன் தொடர்ச்சியாக, 1998இல் 4% இடஒதுக்கீடு வழங்கிக் கல்வி, வேலைவாய்ப்பு உரிமையை உறுதிசெய்து பல்வேறு நலத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
மாற்றம் நிகழும்: கடந்த 2011ஆம் ஆண்டின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி ஏறக்குறைய 13.5 லட்சம் மாற்றுத்திறனாளிகள் இருந்தனர். இந்த எண்ணிக்கை இப்போது அதிகரித்திருக்கும். இதுபோன்ற சமூகப் பிரச்சினைகளை உணர்ந்து, அவர்களின் வாழ்வாதாரம் காக்க மூன்று சக்கர வண்டிகளும், சக்கர நாற்காலிகளும் வழங்கிப் பொது நீரோட்டத்தில் இணைக்க அரசுடன் தனியார் தொண்டு நிறுவனங்களும் சேர்ந்து அக்கறையுடன் செயல்படுகின்றன.
அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் வந்து செல்லச் சாய்வுத் தளங்கள், அவர்களின் பயன்பாட்டுக்கு உகந்த கழிப்பறைகள் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றமும் அவர்களது உரிமைகளில் அக்கறை செலுத்துகிறது. இருப்பினும் ரயில், பேருந்து போக்குவரத்துப் பயணம் அவர்களுக்குப் பெரும் சிரமமானதாவே இருக்கிறது. பொதுத் தளங்
களில் மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கான சமஉரிமையைக் கேட்கும்போது, அவர்களை உதாசீனப்படுத்தும் உளவியல் சிக்கல் பொதுச் சமூகத்திடம் அடிக்கடி வெளிப்படுகிறது.
இந்த முரண்பட்ட அணுகுமுறையே அவர்களின் போராட்டக் குணத்தைச் சீண்டிப் பார்ப்பதாகவும் அமைந்துவிடுகிறது. இனி, மாற்றுத்திறனாளிகளிடம் பொதுச் சமூகம் தனது உரையாடலை நியமன உறுப்பினர்கள் மூலம் தொடர வாய்ப்பு இருக்கிறது. இனியேனும் அவர்களைப் பொதுச் சமூகம் சரியாகப் புரிந்துகொள்ளும்; சட்டங்கள் அதற்குத் துணை நிற்கும் என்கிற நம்பிக்கை பிறக்கிறது.
- தொகுப்பு: vprambdu75@gmail.com