இந்தியாவில் அமைப்பு சார்ந்த தொழிலாளர்களைவிட அமைப்பு சாராத் தொழிலாளர்களின் எண்ணிக்கைதான் அதிகம். அமைப்பு சாராத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களும் ஏராளம். இந்தச் சூழலில் அமைப்பு சாராத் தொழிலாளர்களுக்கான சட்டங்கள், பிரச்சினைகள், சிக்கல்கள் குறித்து அமைப்பு சாராத் தொழிலாளர்கள் கூட்டமைப்பின் ஆலோசகரும் அவர்களுக்காக நீண்ட காலமாகப் போராடிவருபவருமான இரா.கீதா அளித்த பேட்டி:
உள்நாட்டு உற்பத்தியில் 65% பங்களிப்பு வழங்கக்கூடிய அமைப்பு சாராத் தொழிலாளர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன? - சொல்லிக்கொள்ளும் விதத்தில் இல்லை என்பதுதான் உண்மை. அமைப்பு சாராத் தொழிலாளர்கள் எந்த அமைப்பிலும் இல்லாமல் இருப்பதுதான் இதற்குக் காரணம். அவர்களுக்குப் போதுமான விழிப்புணர்வும் இல்லை. தமிழ்நாட்டில் அமைப்பு சாராத் தொழிலாளர் கூட்டமைப்பு இருக்கிறது. இந்திய அளவிலும் தற்போது உருவாக்கி வருகிறோம். இன்னமும் பல தொழிலாளர்கள் தனித்தனியாக இயங்கி வருகிறார்கள். மொத்தமாகச் செயல்படுவதற்குத் தேசிய அளவில் ஒருங்கிணைப்பு தேவை.
இவர்களுக்கான மத்திய, மாநில அரசுகளின் சட்டங்கள் போதுமானவையாக இருக்கின்றனவா? - தேசிய அளவில் 44 சட்டங்கள் இருந்தன. மத்திய அரசு 2020இல் 4 தொகுப்புச் சட்டங்களைக் கொண்டுவந்துள்ளது. ஏற்கெனவே உள்ள சட்டங்களைத் தொகுத்துள்ளதாக மத்திய அரசு சொல்கிறது. இதேபோல ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமாகச் சட்டங்கள் உள்ளன. தமிழ்நாட்டிலும் நிறைய சட்டங்கள் உண்டு.
மத்திய அரசின் தொகுப்புச் சட்டத்தில் இருக்கும் முக்கிய அம்சங்கள் என்னென்ன? - முத்தரப்பு மாநாடு நடத்தாமல் தொழிலாளர்களுக்கான சட்டங்கள் கொண்டுவரக் கூடாது என்கிற நடைமுறையை அம்பேத்கர் கொண்டுவந்தார். அதன் பிறகு இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் முத்தரப்பு மாநாட்டைக் கூட்டுவது நடைமுறையானது.
இந்த மாநாட்டில் தொழிலாளர்கள், முதலாளிகள், மத்திய, மாநில அரசுகளின் பிரதிநிதிகள் தங்களின் கருத்துகளை எடுத்துவைப்பார்கள். இதில்தான் என்ன சட்டம் கொண்டுவரலாம், அதற்கு ஆதரவு உண்டா, இல்லையா என்பதெல்லாம் விவாதிக்கப்படும். ஆனால், 2014இலிருந்து மத்திய அரசு இந்த மாநாட்டைக் கூட்டவே இல்லை. தன்னிச்சையாகவே தொகுப்புச் சட்டங்களைக் கொண்டுவந்துள்ளது.
இதேபோல தொகுப்புச் சட்டங்களில் தொழில் பாதுகாப்பு, சுகாதாரம், பணி நிலைமைகள் 2020 என்கிற குறியீடு (OSH code) உள்ளது. இதில் அமைப்பு சாராத் தொழிலாளர்களே கிடையாது. அமைப்பு சாராத் தொழிலாளர்களுக்கு வரக்கூடிய நோய்கள் இந்தக் குறியீட்டுப் பட்டியலில் இல்லை. கட்டுமானச் சட்டத்தின்படி 200 பாதுகாப்பு விதிமுறைகள் உள்ளன. அது எடுக்கப்பட்டுவிட்டது. ஆபத்தான தொழில்களில் கட்டுமானத் தொழிலும் ஒன்று.
இதே போல அமைப்பு சாராத் தொழிலாளர்கள் செய்யக்கூடிய வேலைகளைப் பொறுத்து நோய்கள் தாக்கும் சாத்தியம் உள்ளது. இவை எல்லாம் தொகுப்புச் சட்டங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு நிறுவனங்களையும் முதலீடுகளையும் ஈர்க்க வசதியாக இருக்கும் சட்டங்களை எளிமைப்படுத்தித் தொகுப்புச் சட்டங்கள் கொண்டுவருவதாகச் சொன்னார்கள். ஆனால், பாதுகாப்பற்ற நிலையைத் தொழிலாளர்களுக்கு உருவாக்குவதற்காகவும் அமைப்பு சாராத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதில் பிரச்சினைகளே வராதது போலவும் மாற்றுகிறார்கள்.
மத்திய அரசின் தொகுப்புச் சட்டங்களை மாநில அரசுகள் நடைமுறைப்படுத்தியிருக்கின்றனவா? - பெரும்பாலான மாநிலங்கள் ஏற்றுக்கொண்டுவிட்டதாகச் சொல்கின்றன. தமிழகத்தில் முழுமையாக இச்சட்டம் ஏற்கப்படவில்லை; சில விதிமுறைகள் மட்டும் மாற்றப்பட்டிருக்கின்றன. தொகுப்புச் சட்டம் நான்கில் சமூக நலப் பாதுகாப்பு என்கிற அம்சம் உள்ளது. அந்த அம்சம் ஏற்கப்பட்டால் நலவாரியங்கள் பாதிக்கப்படும். மேலும், இது தொடர்பான அதிகாரம் மத்திய அரசுக்குச் சென்றுவிடும்.
மாநிலங்களில் முத்தரப்பு வாரியங்களிடம் உள்ள அதிகாரங்கள், மத்திய அரசுக்குச் சென்றுவிடும். இச்சட்டத்தில் அமைப்பு சார்ந்த தொழிலாளர்களுக்கு இ.எஸ்.ஐ. பிஎஃப் போன்றவை கிடைக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. தொழில்வாரியான வாரியங்கள் கிடையாது. அதனால்தான் மத்திய அரசின் தொகுப்புச் சட்டங்களை ஏற்கப்போவதில்லை என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றும்படி தமிழக அரசிடம் வலியுறுத்தி வருகிறோம்.
தமிழ்நாட்டில் அதிக நல வாரியங்கள் உள்ளன. அவற்றின் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன? - தமிழகத்தில் 1979இலிருந்து போராடி 1982இல் தமிழ்நாடு உடல் உழைப்புத் தொழிலாளர்களுக்கான சட்டம் வந்தது. ஆனால், 10 ஆண்டுகள் போராடித்தான், அதை அமல்படுத்தும் நிலை ஏற்பட்டது. நாங்கள் கட்டுமானத் தொழிலாளர்களுக்கான சட்டத்துக்காகத்தான் போராடினோம். ஆனால், எல்லா உடல் உழைப்புத் தொழிலாளர்களுக்கான சட்டமாக அது வந்தது.
ஆனால், தொழில் வாரியம், முத்தரப்பு வாரியம் அமைக்க வேண்டும் என்று இச்சட்டம் சொல்கிறது. 1994-95இல் கட்டுமானத்துக்கு வாரியம் அமைக்கப்பட்டபோது தொழிலை முறைப்படுத்த வேண்டும் என்கிற அம்சத்தை விட்டுவிட்டார்கள். அதை அரசு ஏற்கவில்லை. எங்கள் கோரிக்கையை ஏற்று செஸ் வரியில் 1% லெவியாக வசூலிக்கப்படுகிறது.
வசூல் செய்யப்படும் லெவியை மாநில அரசுகள் நல வாரியங்களுக்குக் கொடுத்துவிடுகின்றனவா? - தற்போது ஒவ்வொரு தொழிலுக்கும் நல வாரியங்கள் வந்துவிட்டன. லெவி என்பது எல்லாத் தொழில்களுக்கும் இருக்க வேண்டும். தொழில் வாரியாக வாரியங்கள் தொடங்கும்போது, அந்தத் தொழிலுக்குரிய லெவியை வசூலிக்க வேண்டும் என்று சொல்கிறோம். அப்படி இல்லையென்றால், ஜி.எஸ்.டி-யில் 1% வசூலிக்க வேண்டும். இப்போது பல வாரியங்களுக்கு மாநில அரசாங்கத்தின் பணம்தான் கொடுக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு ஒரு பைசாகூட வழங்குவதில்லை. ஒவ்வொரு தொழிலுக்கும் லெவி வசூலிக்க அரசு முன்வர வேண்டும்.
அமைப்பு சாராத் தொழிலாளர்களின் பிரச்சினையைத் தொழிலாளர் நல ஆணையர் அலுவலகம் மூலம் தீர்க்க முடிகிறதா? - பணியிடத்தில் விபத்து ஏற்படும்போது, சிறிய விபத்தாக இருந்தால் அந்த முதலாளிக்கு நோட்டீஸ் அனுப்பித் தொழிலாளர் இழப்பீட்டுச் சட்டத்தின்படி சிறிய விபத்துக்குப் பாதிச் சம்பளத்தையும் மருத்துவச் செலவையும் அந்த முதலாளியை ஏற்கச் சொல்லிவிடுவோம். அதேநேரத்தில், பணியிடத்தில் உயிரிழப்போ, நிரந்தர ஊனமோ ஏற்பட்டால் இழப்பீட்டுச் சட்டத்தின்படி, சம்பந்தப்பட்ட இணை ஆணையரிடம் அந்த வழக்கைக் கொண்டுசென்று இழப்பீட்டுத் தொகையை பெற்றுத் தருகிறோம்.
அமைப்பு சாராத் தொழிலாளர் நலனுக்கு மத்திய, மாநில அரசுகள் என்ன செய்ய வேண்டும்? - ஜிஎஸ்டி 1% வசூலிக்க வேண்டும். 2008இல் நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்தபடி பட்ஜெட்டில் 3% ஒதுக்கப்பட வேண்டும். நாட்டின் உள்நாட்டு உற்பத்தியில் 65% பங்களிப்பில் ஈடுபட்டிருக்கக்கூடிய தொழிலாளிக்கு பட்ஜெட்டில் 3% ஒதுக்க வேண்டும்.
அமைப்பு சாராத் தொழிலாளர்களுக்கு இஎஸ்ஐ சேவை தேவை. அவர்களுடைய வாரிசுகளுக்கான கல்வி உதவித்தொகையை அதிகரிக்க வேண்டும். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, தமிழகத்தில் வீட்டு வசதி செய்து தரப்படுகிறது.
அதற்காக ரூ. 4 லட்சம் வரை வழங்கப்படுகிறது. தொழில்ரீதியான நோய்களைக் கண்டறிவதற்கு ஓர் உடல்நல அட்டை (Health card) கொடுக்க வேண்டும். அப்படி நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கொடுக்க வேண்டும். உடல்நல அட்டை உறுப்பினர்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்யப்பட வேண்டும். தமிழக அரசு இந்த பட்ஜெட்டில் இதனைச் செய்வதாக அறிவித்திருப்பதை வரவேற்கிறோம்.
தொழிலாளர்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு அளித்த பரிந்துரைப்படி, 10 ஆண்டுகளுக்கும் மேலாகக் கூட்டப்படாத முத்தரப்பு மாநாட்டை மத்திய அரசு கூட்ட வேண்டும். அமைப்பு சாராத் தொழிலாளர்களை அரசுதானே பேணிக் காக்க வேண்டும்!
- தொடர்புக்கு: karthikeyan.di@hindutamil.co.in