சிறப்புக் கட்டுரைகள்

பள்ளிதோறும் தேவை ஒரு கதைசொல்லி! 

விஷ்ணுபுரம் சரவணன்

“ஓர் உண்மையைத் தகவலாகக் கொடுப்பதைவிடவும் அதை ஒரு கதைக்குள் வைத்துத் தந்தால், சுமார் 22 மடங்கு காலம் அதிகமாக அவரின் நினைவில் தங்கும்” என்கிறார் அமெரிக்க உளவியலாளர் ஜெரோம் புருனர். வீட்டுக்குள் குழந்தைகளாக இருப்பவர்கள், பள்ளிக்குள் நுழைந்ததும் மாணவர்களாகிவிட முடியுமா? இரண்டுக்கும் என்ன வேறுபாடு? குழந்தைகளின் குறும்புகளை ரசிக்கிறோம்; குழந்தைமையை வியக்கிறோம்; அறியாமை களைய உதவுகிறோம்.

ஆனால், பள்ளியில் மாணவரானதும் குறும்புகள் தண்டனைக்கு உரியதாகிவிடுகின்றன. குழந்தைமை, ஒழுங்கின்மையாகப் பார்க்கப்படுகிறது. அறியாமைக்கு முட்டாள்தனம் எனப் பெயர் சூட்டப்படுகிறது. குழந்தை – மாணவர் என்னும் சொற்கள் எல்லாமே பெரிய​வர்களான நமக்குத்​தான். குழந்தை​களுக்குத் தாங்கள் குழந்தைகள் என்பது​கூடத் தெரியாது. அவர்களால் பள்ளிச் சீருடை அணிந்த உடனே குழந்​தையி​லிருந்து மாணவராகக் கூடு விட்டுக் கூடு பாய முடியாது.

குழந்தை​களின் கற்றல் என்பது ஒன்றைத் தெரிந்து​கொள்​வதில் இருந்து அல்ல... ஒன்றைப் புரிந்து​கொள்​வதில் இருந்துதான் தொடங்கு​கிறது. கதை கேட்கும் ஒரு குழந்தை, அக்கதையின் நிகழ்வு​களைத் தம் மனத்தில் காட்சிகளாக விரித்​துக்​கொள்​கிறது. காட்சிகளாகத் தம்முள் விரித்​துக்​கொள்வது என்பது கதைசொல்​லியின் சொற்களைப் புரிந்து​கொள்​வதில் இருந்து தொடங்கு​கிறது. எங்கு தம்மால் காட்சிகளாக்க முடிய​வில்லையோ அங்கு, குழந்தைகள் சந்தேகங்கள் கேட்கத் தொடங்கு​வார்கள். அந்த இடத்தைத் தெளிவாக்​கிக்​கொண்டே கதையை நகர்த்த அனுமதிப்​பார்கள். இது கற்றலின் மிக முக்கிய அம்சம்.

எதுவொன்​றையும் மனப்பாடமாக மட்டுமே அல்லாமல் தாம் பார்த்த / கேட்ட​வற்றின் துணையோடு அதைப் புரிந்து​கொள்​ளும்​பட்​சத்தில், அதன் தொடர்ச்சி​யாகக் கூறப்​படும் கதையை அல்லது நடத்தப்​படும் பாடத்தை எதிர்​கொள்ள எவ்விதத் தயக்கமோ அச்சமோ இன்றிக் குழந்தைகள் காத்திருப்​பார்கள். எதுவொன்றும் குழந்தை​களின் நினைவில் தங்கு​வதற்குக் கதைகளே உதவும். இப்படிச் சொல்வதால் தொடக்க நிலைக் குழந்தை​களுக்கான விஷயம் என்று மற்றவர்கள் ஒதுங்கிச் சென்றுவிட வேண்டாம்.

ஒவ்வொரு பருவத்​துக்கும் ஏற்ற கதைகளே அவர்களை இயக்கும்; வழிநடத்​தும். தொடக்​கப்​பள்ளிக் குழந்தை​களுக்குக் காடும் வானமும் என்றால், நடுநிலைப்​பள்ளி மாணவர்​களுக்குக் கீழடியும் இமயமலையும் எனக் கருப்​பொருள்கள் மாறும். உயர்நிலை மாணவர்​களுக்கு விண்வெளி, செயற்​கைக்​கோள், வேற்றுக்​கிரக​வாசிகள் என அறிவியல் தகவல்​களோடு வியக்க வைக்கும் கருப்​பொருள்​களைத் தாங்கும் கதைகள் வேண்டும்.

கதைப் புத்தகங்கள் அவர்களைச் சென்று சேர வேண்டும் என்பதைப் போலவே, ஒரு கதையை எப்படி அணுகுவது என்பதையும் நாம் பழக்கத்தான் வேண்டும். இல்லை​யெனில், தேனின் சுவையைத் தாளில் படித்த உணர்வே இருக்​கும். நேரடியாக ஒரு கதைசொல்லி, புதிய புதிய கதைகள் வழியே நிலங்​களையும் விலங்கு​களையும் பறவைகளையும் மனித அன்புப் பரிமாற்​றத்தையும் குழந்தை​களுக்கு அள்ளித்​தந்தால் நிச்சயம் அவை அவர்களின் ஆழ்மனதில் பதியும்.

“கரடு​முரடான கல்விப் பாட வேளைகளை இதமான உணர்வு​களால் எளிமை​யாக்கக் கோமாளி​களால்தான் முடியும். எனவே, பள்ளிக்கு ஒரு கோமாளி தேவை” என்பார் குழந்தைகள் நாடகக் கலைஞர் வேலுசர​வணன். அது உடனடிச் சாத்தியமா என்பது தெரிய​வில்லை. ஆனால், ஒரு பள்ளிக்கு ஒரு கதைசொல்லி தேவை. அது ஆசிரியர்​களில் ஒருவராகவும் இருக்​கலாம்.

கதையின் வழியாக நெகிழ்வான, கலகலப்பான உரையாடல் குழந்தை​களிடம் நடத்தப்பட வேண்டும். தம் ஆழ்மனதில் அவர்களை அறியாமலே புதைந்​திருக்கும் ஏக்கங்​களைக் கதைகளாகப் பகிர்​வார்கள். அதற்கு ஓர் உதாரணம்: ஒரு பள்ளியில் நான் நடத்திய கதை முகாமில் ‘பாட்டி வடை சுட்ட கதை’யில் காகமாக இருந்த ஒரு சிறுமி கதை சொன்னார். அதில் அவரே ஒரு மாற்றமும் செய்தார். அதாவது, நரி ஏமாற்றுவது தெரிந்தே வடையைக் காகம் விட்ட​தாகச் சொன்னார்.

ஏன் எனக் கேட்ட​போது, “இந்த உலகம் தோன்றியதில் இருந்து கணக்குப் பார்த்தால் ஒரு காகத்​திடம், ‘நீ அழகாக இருக்​கிறாய்... உன் குரல் இனிமையாக இருக்​கிறது’ என்று முதன்​முதலில் சொன்னது அந்த நரிதான். பொய்யாக இருந்​தாலும் பரவாயில்லை” என்று அந்தச் சிறுமி சொன்னார். அச்சிறுமி கறுப்பு நிறம். அவரிடம் பெற்றோர் தவிர வேறு யாருமே ‘அழகாக இருக்​கிறாய்’ என்று அவரிடம் சொல்லி​யிருக்க மாட்டார்களோ என்ற கேள்வியைத் தந்தது அவரின் பதில்.

இதற்கான வாய்ப்பை எங்கிருந்தோ வந்த ஒரு கதைசொல்லி ஏற்படுத்தித் தர வேண்டி​யுள்ளது. மாறாக, அப்பள்​ளி​யிலேயே ஒரு கதைசொல்லி இருப்​பின், அப்பள்ளிக் குழந்தை​களின் ஆழ்மனதில் இருப்பதை வெளியே கொண்டு​வந்​திருப்​பார். அதற்கேற்​றவாறு பள்ளியின் சூழல் மாறியிருக்​கும். இது குழந்தைகள் மனதின் இறுக்​கங்​களைக் களையவும் உதவும். சிறுசிறு தோல்வி​களில் வெம்பி, தவறான முடிவுகளை நோக்கிச் சென்று​வி​டா​மலும் காக்கக்​கூடும். அலைபேசி வழியே காட்சிவலைக்குள் சிக்கி​யிருக்கும் குழந்தை​களைப் பள்ளியில் உலவும் கதைசொல்லி மீட்டெடுக்க முடியும். வாரம் இரண்டு கதை வகுப்புகள் என்றிருந்​தால், அதில் கதை சொல்லவும் எழுதவும் பழக முடியும்.

சிரிப்பும் திகிலும் எனப் பல்வேறு உணர்வோடு கழியும் அந்த வகுப்புகள், அவர்களுக்குள் உறங்கிக் கிடக்கும் படைப்​பூக்​கத்தைத் தட்டி எழுப்பும். படைப்​பூக்கமே பின்னாளில் அவர்கள் தனித்து​வ​மாகத் தம்மை வெளிப்​படுத்த உதவும். பள்ளியில் கரும்​பலகை, பாடங்கள் ஆகியவற்றோடு கதைசொல்லி என்னும் நண்பரும் காத்திருக்​கிறார் என்றால், பள்ளிக்குள் மகிழ்ச்சியோடு குழந்​தைகள் நுழைவர்​.

- தொடர்புக்கு: vishnupuramsaravanan@gmail.com

SCROLL FOR NEXT