சிறப்புக் கட்டுரைகள்

இன்றும் பொருத்தமானவரா தாகூர்?

வீ.பா.கணேசன்

20ஆம் நூற்றாண்டில் வங்காள மறுமலர்ச்சி இயக்கத்தின் நீட்சியாக விளங்கிய கவிகுரு ரவீந்திரநாத் தாகூர், கவிஞர், பாடலாசிரியர், சிறுகதையாசிரியர், நாவலாசிரியர், இசை வல்லுநர், நாடக ஆசிரியர், ஓவியர், கல்வியாளர், தேசபக்தர், சர்வதேசவாதி, மனிதநேயர், தீர்க்கதரிசி, வழிகாட்டி, தத்துவஞானி என்கிற வகைகளில், தனது பன்முகத் தன்மையின் மூலம், அப்போது விடுதலைக்குப் போராடிவந்த இந்தியாவுக்கு மட்டுமின்றி, உலக நாடுகள் முழுவதற்குமே பல்வேறு வழிகளில் தன் கருத்துகளை வழங்கிக்கொண்டே இருந்தார்.

தேசத்தின் பாதை: இந்தியா எதிர்​காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதை எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதைத் தாகூர் தெளிவுபடச் சுட்டிக்​காட்​டி​னார். ‘இந்தியா தன் எதிர்​காலத்தைத் தானே நிர்ண​யிக்க வேண்டும்; நவீன காலத்தை மேற்கொள்​வதென்ற பெயரால், அது தன் கடந்த காலத்தை ஒருபோதும் ஒளித்து மறைத்து​விடக் கூடாது; கீழைத்​தேயமும் மேற்குலகும் வழங்கும் மிகச்சிறந்த அம்சங்களை எடுத்​துக் ​கொண்டு, இணக்கமிக்க புதியதொரு கலாச்சார வடிவத்தினை அது உருவாக்க வேண்டும்; அதற்குக் கடந்த கால வரலாற்​றை​யும், நிகழ்கால வரலாற்​றையும் நன்கு உணர்ந்து​கொள்ள வேண்டியது அவசியம்’ என்பதையும் அவர் முன்வைத்​தார்.

தொலைநோக்கு மிக்க சமூக, அரசியல் சிந்தனை​யாள​ராகவும் தாகூர் திகழ்ந்​தார். இந்தியச் சமூகத்தில் நிலவிவரும் சாதியப் படிநிலை முறை, குறிப்​பிட்ட கட்டமைப்​புக்குள் மனிதர்களை அடைத்து​வைக்கும் நிலை ஆகியவையே இந்தியாவின் மிகப் பலவீனமான பகுதிகளாக விளங்கு​கின்றன என்று அவர் கருதி​னார். நூறாண்​டு​களுக்கு முன்னால் அவர் எழுதிய ‘கீதாஞ்​சலி’​யிலேயே, ‘நாம் புறக்​கடையில் அடைத்து வைத்திருப்​போர்தான் நம்மைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டிருப்​பார்கள்’ என்று அவர் உறுதிபடக் கூறினார்.

நவீன உலகில், இந்தியா முன்னேற வேண்டு​மெனில், நிராதரவற்ற மக்களை அவமானப்​படுத்து​வதும், ஒதுக்​கிவைப்​பதுமான செயல்கள் முடிவுக்குக் கொண்டு​வரப்பட வேண்டும் என்றும் எடுத்துக் கூறினார். மேலும், சமூகத்தின் வளர்ச்சி என்பது கீழிருந்து தொடங்​கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்​தி​னார்.

இவை அனைத்​துக்கும் அடித்​தளமாக, அவர் தன் வாழ்நாள் முழுவதும் முன்னெடுத்து வந்த மூன்று அடிப்​படைக் குறிக்​கோள்​களாக, கிராமங்​களின் சுயாட்சி, அனைவருக்கும் கல்வி, பெண்களின் அதிகாரம் ஆகியவை அமைந்​திருந்தன. தன்னளவில் ஒரு செயல்​பாட்​டாளராக, இந்த மூன்று குறிக்​கோள்களை முன்னெடுக்கும் செயல்​களில் அவர் தீவிர​மாகச் செயல்​பட்டு வந்தார்.

கிராம சுயாட்சியை முன்னெடுக்கும் வகையில் அவர் உருவாக்கிய நிகேதன் என்ற கிராமப்புற மேம்பாட்டு இயக்கம், பின்தங்கிய கிராமங்​களி​லும்கூட, தொடர்ச்சியான, முறையான நடவடிக்கை​களின் மூலம் எவ்வாறு தன்னிறைவை நிலைநிறுத்த முடியும் என்பதை நாட்டின் இதர பகுதி மக்களுக்கு எடுத்​துக்​காட்டுவதாக இருந்தது.

வளர்ச்சி​யடைந்த மேற்குல​குடன் சரிசமமாக நாம் உறவாடு​வதற்கு அடிப்படை, நமது நாட்டின் வளர்ச்சிதான் என்ற வகையில், பெரும்​பான்​மையாக உள்ள கிராமங்​களின் முழுமையான வளர்ச்சியும் அதனோடு கூடிய மனித வளமுமே இந்தச் சமநிலைக்கு அடித்​தளமாக அமையும் என்று அவர் நம்பி​னார்.

1922 ஜூலையில் ‘மண்வளக் கொள்ளை’ என்ற தலைப்பில் நிகேதனின் இயக்குநரான எல்மிர்ஸ்ட் ஆற்றிய சொற்பொழிவின் நூல் வடிவத்​துக்கு அளித்த முன்னுரையில் தாகூர் இவ்வாறு கூறியிருந்​தார்: ‘வறண்டு போயிருக்கும் கிராமப்புற வாழ்க்கையில் மகிழ்ச்சி என்னும் ஓடையை ஓடவிடு​வதுதான் எமது நோக்கம். இதற்கு நமது அறிஞர்​களும், கவிஞர்​களும், இசைக் கலைஞர்​களும், கவின் கலைஞர்​களும், அறிவியல் நிபுணர்​களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது.’

இன்றும் பொருத்தமான குறிக்கோள்கள்: அதைப் போன்றே, அனைவருக்​குமான கல்வி என்ற குறிக்கோளை அவர் நாடு முழுவதும் எடுத்துச் சென்றதோடு, தான் முன்னெடுத்த சாந்தி​நிகேதன் என்ற கல்விப் புலம் எவ்வாறு முழுமையான மனிதனை உருவாக்கும் கல்வியை வழங்கு​கிறது என்பதை, பெண்களை முன்னிறுத்திய கல்வி எத்தகைய முன்னேற்​றத்தைச் சமூகத்தில் உருவாக்கும் என்பதை, நடைமுறையில் நிரூபித்தும் காட்டி​னார்.

ரவீந்​திரரின் கல்விப்புல முயற்சிகள் ஒரு புதிய மனிதனைப் படைப்​பதில் வெற்றி பெற்றன என்பதை சத்யஜித் ரே, அமர்த்ய சென், மகாஸ்வேதா தேவி போன்ற பலரும் நமக்கு நிரூபிக்கின்றனர். தான் வாழ்ந்த சமூகத்தில் பெண்களுக்கான அதிகாரம் எத்தகையதாக இருந்தது என்பதை நன்கு அறிந்​திருந்த ரவீந்​திரர், சிறுகதை, நாவல், நாடகம், நாட்டியம் போன்ற பல்வேறு வடிவங்​களின் மூலம் சமூகத்தின் ஒரு பாதியான பிரிவினரின் மேம்பாடு எத்தகைய மாற்றத்தைக் கொண்டு​வரும் என்பதைத் தொடர்ந்து வலுவாகச் சுட்டிக்​காட்​டிக்​கொண்டே வந்தார்.

இந்தக் குறிக்​கோள்களை வென்றடைவதன் மூலமே வளமிக்க, நல்லிணக்கம் மிக்க, மேலாதிக்க உணர்வற்ற ஒரு சமூகத்தை முழுமையான வகையில் உருவாக்க முடியும் என்பதே அவரது கருத்தாக இருந்தது. அவர் மறைந்து 83 ஆண்டுகளுக்குப் பிறகும்கூட, இந்தக் குறிக்​கோள்கள் இன்றும் பொருத்த மானவையாகவே நீடிக்​கின்றன.

கடந்த 75 ஆண்டு​களில் பல்வேறு பெயர்​களில் மத்திய அரசும் மாநில அரசுகளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தபோ​தி​லும், ரவீந்​திரர் கனவு கண்ட முழுமைபெற்ற ஒரு கிராம சுயாட்சியை நிறுவ இன்றுவரை இயலவில்லை. மக்களால் தேர்ந்​தெடுக்​கப்பட்ட பிரதி​நி​தி​களுக்கு உரிய அதிகாரங்கள் மறுக்​கப்​படு​கின்றன.

சாதி அடிப்​படையிலான புறக்​கணிப்பு​களையும் அவர்கள் எதிர்​கொள்ள நேர்கிறது. மறுபுறத்​தில், கல்வி இன்று வணிகரீ​தியான ஓர் அம்சமாக அனைத்து வகையிலும், அனைத்து மட்டங்​களிலும் கையாளப்​படு​கிறது. பெண்களின் நிலையைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.

இன்றைய நவீன யுகம் பெண்களை, அவர்களது கண்ணோட்​டத்தை மாற்றி​யுள்ளது. எனினும், சமூகத்தில் அவர்களின் நிலையில் எவ்வித மாற்றமும் உருவாகி​விட​வில்லை; பாதுகாப்பற்ற ஒரு நிலையில்தான் இச்சமூகம் இன்னமும் அவர்களை வைத்திருக்​கிறது என்பதை, நாட்டின் பல்வேறு பகுதி​களிலும் இன்றும் பெண்கள் மீது நிகழ்த்​தப்​படும் குற்றங்கள் நிரூபிக்​கின்றன.

சமத்து​வத்தை வலியுறுத்​தியவர்: முதலாம், இரண்டாம் உலகப் பெரும் போர்களின் பின்னணி​யில், மேற்குலக நாடுகள், உலகின் பெரும்​பகு​தியில் உள்ள மக்களை அடிமைப்​படுத்தி, இயற்கை வளங்கள் அனைத்தையும் முற்றாக ஒழித்துக் கட்டு​வதில் முனைப்புக் காட்டு​கின்றன என்பதை எவ்விதத் தயக்க​முமின்றி தாகூர் சுட்டிக்​காட்டியே வந்தார்.

அன்றைய அமெரிக்கா, ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா, ஜப்பான், சீனா போன்ற நாடுகளுக்குத் தனிப்பட்ட முறையில் பயணம் செய்து, அங்குள்ள மக்களின் கடுமையான எதிர்ப்புக் குரல்​களுக்கு இடையிலும், உலக மக்கள் அனைவரின் சமத்து​வத்தை, கூட்டுறவை வலியுறுத்திப் பேசிய ஒரே இந்தியர் அவர்தான். இதன் காரணமாக, தேசவெறி என்ற கருத்​தாக்​கத்தில் கட்டுண்டு கிடந்த இந்தப் பகுதி​களில் இருந்த அறிவுஜீவி​களின் ஆதரவையும் அவர் இழக்க நேர்ந்தது.

இன்றைய நவீன அறிவியல், இந்த ஆழி சூழ் உலகை ஒரு சின்னஞ் சிறு கிராமமாக உருமாற்றி​யுள்ள நிலையில், உலகில் சமநிலை நிலவ வேண்டும் என்ற குரலை அனைத்துலக மனிதனை நோக்கி முதன்​முதலில் எழுப்​பியவரான தாகூரின் சிந்தனைகள் இன்றைக்கு மேலும் பொருத்​த​மானவையாக நீடிக்​கின்றன. அவரது பிறந்​தநாள் தருணத்தில் அவற்றை மேலும் பரவலாக மக்களிடையே எடுத்துச் செல்வோம் எனச் சூளுரைப்​போமாக!

குறிப்பு: ஆங்கில நாள்காட்டி முறைப்படி தாகூரின் பிறந்​தநாள் மே 7 அன்றும், வங்காள நாள்காட்டி ​முறைப்படி மே 9 (வைசாக் ​மாதம் 25ஆம் ​நாள்) அன்றும் அனுசரிக்​கப்​படு​கிறது.

ரவீந்​திர​நாத் ​தாகூர்: 165வது பிறந்தநாள் தொடக்கம்

- தொடர்புக்கு: vbganesan@gmail.com

SCROLL FOR NEXT