சிறப்புக் கட்டுரைகள்

மொழி அருங்காட்சியகம்: ஒரு நரம்பியல் பயணம் | ஏஐ எதிர்காலம் இன்று 16

ஆழி செந்தில்நாதன்

மொழி அருங்காட்சியகத்தின் பளபளக்கும் கண்ணாடி முகப்பு சென்னையின் காலை சூரியனைப் பிரதிபலித்துக்கொண்டிருந்தது. கடந்​த​காலம், நிகழ்​காலம், எதிர்​காலம் எல்லாம் நிரம்பிய ஒரு பேரரங்குக்குள் நுழைந்​தோம். “காதால் கேட்கும் மொழி, இங்கே கண்ணால் காணும் காட்சியாக இருக்​கிறது” என்று சொல்லிக்​கொண்டே செய்மெய் என்னைக் கட்டிடத்தின் மையப்​பகு​திக்கு அழைத்துச் சென்றது. “உங்கள் செயற்கை நுண்ணறிவு வரலாற்றுப் புத்தகத்தின் முக்கியப் பகுதிக்கு நாம் இங்கேதான் வர வேண்டி​யிருக்​கிறது” என்றது செய்மெய்.

மக்கள் கூட்டத்தைத் தாண்டி உள்ளே நெருங்க நெருங்க... மந்தமான ஒளி பரவியிருந்த ஒரு மைய மண்டபத்​துக்குச் சென்றோம். அங்கே வெளிறிய, ஒளி ஊடுருவும் தன்மை​யுள்ள ஒளி பிம்ப மனிதத் தலை ஒன்று காற்றில் மிதந்து​கொண்​டிருந்தது, 30 அடி உயரத்​தில், ஏதோ தியானம் செய்து​கொண்​டிருப்பது போன்ற அமைதி தவழும் முகத்​தோற்​றத்தில் அந்தத் தலை இருந்தது. அதன் முகம், அது ஆணுமல்ல, பெண்ணுமல்ல என்பதைக் காட்டியது.

“இதுதான் மொழி நரம்பியல் காட்சி மையம். மொழியை நம் மூளை எப்படிச் செயலாக்கு​கிறது என்பதைப் புரிந்து​கொள்​வதற்கான மிகச் சிறந்த கற்பித்தல் கருவி இது. ஒளியியல் காட்சிகள் மூலம் அதை நமக்கு விளக்​கும்” என்றது செய்மெய்.
இப்போது நாங்கள் அந்தப் பெருந்​தலைக்கு நேர் முன்னதாக வந்து​விட்​டோம்.

மானுடத் தலை, ஆனால் அமானுட​மாகத் தெரிந்தது எனக்கு. “இதனிடம் ஏதேனும் ஒரு கேள்வியைக் கேளுங்​களேன்” என்று கூறியது செய்மெய். ஏதோ ஆழமான கேள்வியைக் கேட்க விரும்​பினேன். ஆனால், தியானத்தில் உள்ளது போலத் தோன்றும் அந்த முகத்தின் கவனத்தைக் கலைக்க வேண்டுமே? எனவே, “வணக்கம், எப்படி இருக்​கிறீர்​கள்?” என்று கேட்டேன். அவ்வளவு​தான்.

இதுவரை காற்றில் கரைந்​திருந்​தது​போலத் தோன்றிய அந்த பிம்பம் லேசாக ஒளிரத் தொடங்​கியது. குறிப்பாக, அதன் காதுப் பகுதிகள் முதலில் ஒளிர்ந்தன, பேய் போன்ற ஒளி ஊடுருவல் நிலையில் இருந்த தன்மை மாறி, பிரகாசமான நீல நிற ஒளியாக மாறியது. வெளிக் காதின் முழுப் பகுதியும் ஒளிர்ந்தது. வட்ட வட்டமாக வளையங்கள் அதற்குள் செல்லத் தொடங்கின. “நீங்கள் பேசியது​தான். நீங்கள் ஏற்படுத்திய ஒலி அலைகள் அதன் காதுக்குள் வளையம் வளையங்​களாகச் செல்கின்றன, அதைத்தான் இந்தச் செயற்கைத் தலை உயிரோ​வியம், ஒளி பிம்பக் காட்சி​யாகக் காட்டு​கிறது. இப்போது செவிப்பறை அதிர்​கிறது” என்றது செய்மெய்.

மெல்லிய சவ்வாகக் காட்டப்பட்ட செவிப்பறை, நான் பேசிய ஒவ்வொரு சொல்லி​னாலும் அலையலையாக அசைந்தது. அதன் பின்னால் இருந்த மூன்று சிறிய எலும்​பு​களும் வரிசையாக ஒளிரத் தொடங்கின. “மனித உடலில் உள்ள மிகச் சிறிய எலும்​புகள் அவை” என்று செய்மெய் விளக்​கியது. “இந்த எலும்​புகள் அதிர்​வு​களைப் பெருக்கி, நத்தைச் சுருள் பகுதிக்கு அனுப்பு​கின்றன.” உட்செ​வியில் நத்தையைப் போலச் சுருள் வடிவில் இருக்கும் காக்ளியா பகுதி ஒளிர்ந்தது, ஒளிரும் கடல் உயிரினம்போல அதன் சுருள்கள் அவிழ்ந்தன.

இப்போது அந்தக் காட்சி மேலும் பெரியதாக ஆகி, அங்கே ஆயிரக்​கணக்கான முடி செல்கள் தோற்றமளித்தன. நான் அதிசயத்தில் உறைந்​திருக்க, சில நொடிகளுக்கு முன்பு நான் உதிர்த்த சொற்கள், அந்த முடி போன்ற செல்களில் இப்போது மாற்றத்தை உருவாக்கின. நீர் பாயும்போது நீருக்​கடியில் உள்ள தாவரங்​களைப் போல முடி செல்கள் அசைந்தன. பிறகு, ஒவ்வொரு முடி செல்லும் திடீரென மின்சா​ரத்தால் மின்னியது.

“அந்த முடி செல்கள் ஒலி அலைகளை மின் சமிக்​ஞைகளாக மாற்றி, மூளையில் உள்ள நரம்பு இழைகளோடு இப்போது தொடர்​பு​கொள்​கின்றன என்று செய்மெய் அந்தக் காட்சியை விளக்க, எனக்கு முன்னால் அந்தப் பெருந்​தலையின் பகுதிகள் வானம்போல விரிந்தன. மாயத்திரை பெரிதானது.

“இப்போது மின் சமிக்​ஞைகள் நரம்பு​களினூ​டாகப் பயணம் செய்கின்றன.” மின் சமிக்​ஞைகள் செவி நரம்புப் பாதைகள் வழியாக விரைந்​தோடு​வதைப் பார்த்​தேன். அவை மூளைத்​தண்டை நோக்கி அலைகளாகத் துடித்​துக்​கொண்​டிருக்கும் தங்க நிறத் துகள்​களின் ஓட்டமாகக் காட்சி​யளித்தன.

அடுத்ததாக மூளைத்​தண்டு ஒளிரத் தொடங்​கியது, வரும் தகவல்​களைப் பிரித்து வழிப்​படுத்தும் ஒரு மைய நிலையமாக மூளைத்​தண்டு இருக்​கிறது. “இனிமேல்தான் எல்லாமே ஆரம்பம். மூளைக்கு ஒரு முக்கியமான சேதி வந்திருக்​கிறது என்று இப்போது மூளைத்​தண்டு முடிவெடுத்​திருக்​கிறது” என்றது செய்மெய். சமிக்​ஞைகள் தொடர்ந்து உள்நோக்கிப் பயணித்தன. திடீரென மூளையின் நெற்றிக் கதுப்பு (டெம்​போரல் லோப்) பகுதி மரகத ஒளி அலைகளாக உயிர்ப்புடன் ஜொலிக்கத் தொடங்​கியது.

“அதற்குள் வெர்னிக்கே என்கிற ஒரு பகுதி இருக்​கிறது. வெர்னிக்கே பகுதிதான் மொழியை மூளை புரிந்து​கொள்ள உதவுகிறது. இப்போது வெர்னிக்கே மலரும் பூவைப் போல விரிகிறது, அந்த மலரின் ஒவ்வொரு இதழும் வரிசை​யாகச் செயல்​படும் நரம்பியல் வலைப் பின்னல்​களைப் போல விரிந்துசெல்​கின்றன. அது மட்டுமல்ல, இப்போது மூளையை வந்தடைந்த சமிக்​ஞைகள் ஏதோ ஒரு சப்தம் அல்ல. மாறாக, ஒரு மொழியின் சொற்கள் என்பதை இந்த வெர்னிக்கே பகுதிதான் புரிந்து​கொள்​கிறது” - தொடர்ந்தது செய்மெய்.

“இனிவரும் காட்சிகளைக் கவனமாகப் பாருங்கள்” என்று கூறியது செய்மெய். “இந்தக் காட்சியில் இப்போது நாம் மேலும் உள்ளே உள்ளே செல்கிறோம். இதோ இவைதான் நரம்பணுக்கள். அவை சிக்கலான கட்டமைப்பு​களாகத் தெரிகின்​றன​தானே!” என்று கூற, காட்சி​யமைப்பு மேலும் துலக்​கமடைந்தது. ஏதேதோ பிணைப்புகள் நரம்பணுக்​களுக்குள் செல்வது போலவும் அதிலிருந்து வெளியேறுவது போலவுமான ஒரு பின்னலமைப்பு இப்போது தெரிந்தத. நரம்பணுக்கள் என்கிற நியூரான்​கள்தான் நம் கதையின் கதாநாயகர்கள்.

“நியூ​ரான்​களி​லிருந்து கிளைகளாகப் பிரிபவை டென்ட்​ரைட்டுகள். இவைதான் சமிக்​ஞைகளைப் பெறுகின்றன. நியூரான்​களி​லிருந்து வெளி நோக்கி விரிபவை ஆக்ஸான்கள். அந்தச் சமிக்​ஞைகளை நியூரானுக்கு வெளியே எடுத்துச் சென்று, அடுத்து வேறொரு நியூரானுக்குக் கடத்துபவை ஆக்ஸான்​கள்​தான்.”

இப்போது பெரிய அளவில் நியூரான்கள் தோன்றின. “நியூ​ரான்​களுக்கு இடையே பாருங்கள், சிறிய இடைவெளிகள் இருக்​கும். அதை ‘சினாப்​ஸ்கள்’ என்று சொல்வார்​கள்.” பார்த்​துக்​கொண்​டிருந்​தேன்... அந்த சினாப்​ஸ்​களுக்கு இடையில் என்ன நடக்கிறது? ‘நியூரோ டிரான்ஸ்​மிட்​டர்கள்’ - அவை நியூரான்​களுக்கு இடையில் பிரபஞ்ச நடனக் கலைஞர்​களைப் போலத் தாவித்​தாவிச் செல்வதைப் பார்த்​தேன்​.

- தொடர்புக்கு: senthil.nathan@ailaysa.com

SCROLL FOR NEXT