மகாபாரதம், போருடன் முடிவடைவதில்லை. அது குருஷேத்திரப் போருக்குப் பின்பாகப் பாண்டவர்கள் எப்படி ஆட்சிசெய்தார்கள். அவர்களின் இறுதி நாட்கள் எப்படியிருந்தன என்பதையும் பேசுகிறது. அது தான் இதிகாசகத்தின் சிறப்பு. நீர்க்குமிழி போன்றதே வாழ்க்கை என்பதை இதிகாசம் தெளிவாக உணர்த்துகிறது.
வியாச மகாபாரதத்தின் பதினேழாவது பர்வமான மகாபிரஸ்தானிகம், பாண்டவர்-திரௌபதியின் இறப்பினை விவரிக்கிறது. மேரு மலை நோக்கிச் செல்லும்போது திரௌபதி தடுமாறி விழுந்து இறக்கிறாள். பின் சகாதேவன், நகுலன், அர்ச்சுனன், பீமன் என ஒருவர் பின் ஒருவராக இறக்கிறார்கள். யுதிஷ்டிரன் மட்டுமே சொர்க்கத்திற்குச் செல்கிறார். அவருடன் ஒரு நாயும் செல்கிறது. அது தர்மதேவதையின் உருவம். இதிகாச நாயகர்களின் வீழ்ச்சியைக் காணுவது துயரமானது. ஒரு மனிதனின் வெற்றிக்கான காரணங்களைக் கண்டறிந்துவிட முடியும். ஆனால், வீழ்ச்சியின் காரணங்களைக் கண்டறிய முடியாது.
ராஜபோகங்களிலிருந்து விடுபட்டு மரணத்தை நாடிய யாத்திரையை யுதிஷ்டிரனே தொடங்கினார். தனது பட்டாடைகள், ஆபரணங்களைக் களைந்து, மரவுரியை அணிந்து கொள்கிறார். அது போலவே பாண்டவர்களும் மரவுரி அணிந்து தங்களின் எல்லாச் செல்வங்களையும் தானமாக அளிக்கிறார்கள். பாண்டவர் ஐவர், ஆறாவதாகத் திரௌபதி, ஏழாவதாக ஒரு நாயும் இறுதி யாத்திரைக்குப் புறப்படுகிறார்கள்.
மரணத்தை நோக்கிய அந்த யாத்திரையை ஏன் பாண்டவர்களில் ஒருவர் கூட மறுக்கவில்லை. யுதிஷ்ட்ரனும் உங்களில் எவருக்கேனும் இனியும் வாழ விருப்பமிருக்கிறதா? என்று கேட்கவுமில்லை. ஒருவேளை இந்த விவாதங்கள் தனித் தனியே நடந்து கடைசியில் தான் ஒருமித்த முடிவிற்கு வந்தார்களா?
கடைசி யாத்திரையை மேற்கொள்ளும் பாண்டவர்களின் பின்பாகப் பொதுமக்களும் அரண்மனைவாசிகளும் கொஞ்ச தூரம் பின்தொடருகிறார்கள். ஆனால், எவரும் அந்த நோக்கத்தைக் கைவிடும்படி சொல்லவில்லை என்கிறது மகாபாரதம். அதுதான் உலக நியதி.
இமயத்தைக் கடந்து மேரு மலையை நோக்கி நடந்தபோது திரௌபதி தடுமாறி விழுந்து இறக்கிறாள். திரும்பிப் பார்க்க கூடாது என்ற நெறியுடன் அவர்கள் மலை ஏறுகிறார்கள். ஆனால், திரௌபதி வீழ்வதைப் பீமன் திரும்பிப் பார்க்கிறான். “திரௌபதி எந்தப் பாவச் செயலையும் செய்யவில்லையே. அவள் இப்படி விழுந்து இறப்பதற்கான காரணம் என்ன?” என்று தனது அண்ணனிடம் கேட்கிறான். அதற்கு யுதிஷ்ட்ரர், ``நாம் அனைவரும் அவளுக்குச் சமமாக இருந்தபோதிலும், அவள் அர்ச்சுனனுடன் மட்டும் கூடுதல் அன்பும் நெருக்கமும் கொண்டிருந்தாள். அந்தப் பாரபட்ச நடத்தையின் பலனை இன்று பெறுகிறாள்’’ என்கிறான்.
இந்த எண்ணம் யுதிஷ்ட்ரனுக்கு முன்பே இருந்தது எனில் அவன் ஏன் அதை வெளிப்படுத்திக் கொள்ளவேயில்லை. சமமாக அன்பு காட்ட வேண்டும் என்று ஒரு பெண்ணிடம் கூற முடியுமா? கூடுதல் அன்பு காட்டுவது பாரபட்சமா? வீட்டின் மூத்தபிள்ளையிடம் தாய் கூடுதல் அன்பு தானே காட்டுகிறாள். யுதிஷ்ட்ரன் மனதிலும் ஏக்கமிருக்கிறது. அதுவே இப்படி வெளிப்படுகிறது.
திரும்பிப் பார்க்கும் பீமன் என்ற காட்சிப் படிமம் மறக்க முடியாதது. துயரத்தின்போது நாம் திரும்பிப் பார்க்கிறோம். அப்படியே உறைந்துவிடுகிறோம். நினைவின் சுடர் நமக்குள் அசையத் துவங்குகிறது. திரௌபதியின் மரணத்தில் அதிகத் துயர் கொள்கிறவன் பீமனே. பாறைக்கும் அதில் மோதும் கடல் அலைக்குமான உறவைப் போன்றது திரௌபதிக்கும் பீமனுக்குமான உறவு. அலை, பாறையை ஆசையாக அணைத்துக் கொள்கிறது, குளிர்விக்கிறது. பாறையோடு நித்தமும் விளையாடுகிறது. அலையைப் பொறுத்தவரை பாறை என்பது ஒரு கல்மலர். பாறையால் அலையைக் கட்டுபடுத்த முடியாது. எப்போதும் கூடவே வைத்துக் கொள்ளவும் முடியாது. அலையோடு இணைந்து கடலுக்குள் போகவும் முடியாது.
பீமனின் ஏக்கங்களை, தனிமையை, வெளிப்படுத்தாத நினைவுகளை, கோபத்தை, புறக்கணிப்பை, அன்பை, காதலை மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் ‘இரண்டாம் இடம்’ நாவலாக எழுதியிருக்கிறார். இது 1983இல் வெளிவந்தது. குறிஞ்சிவேலன் மொழிபெயர்ப்பில் சாகித்ய அகாடமி வெளியிட்டுள்ளது. மகாபாரதம் பற்றி எழுதப்பட்ட இந்திய நாவல்களில் மிகச்சிறந்த படைப்பு. இந்த நாவலும் மகாபிரஸ்தானிகத்தில்தான் தொடங்குகிறது. எம்.டி.வாசுதேவன் நாயர் தன்னுடைய வாழ்நாள் எல்லாம் இரண்டாம் இடத்தில் இருக்கும் மனிதனின் கதையை, பீமனின் கதையை எழுதுகிறார். அது தான் நவீனப் பார்வை. அரசியல். அதிகாரம், நிர்வாகம். குடும்பம் என எல்லாவற்றிலும் யாரோ ஒருவர் திறமையிருந்தும் இரண்டாம் இடத்திலே இருக்கிறார். ஏன் தன்னால் முதலிடம் பெற முடியவில்லை என்ற வேதனை அவரை வாட்டுகிறது. அந்தக் குரலையே பீமனிடம் நாம் கேட்கிறோம். பொதுமக்களால் அதிகம் கேலி செய்யப்பட்ட இதிகாச கதாபாத்திரம் பீமனே. உருவக்கேலி செய்வதற்கும் சாப்பாட்டு விஷயத்தில் கிண்டல் செய்வதற்கும், முரட்டுதனத்திற்கும் பீமனையே குறிப்பிடுகிறார்கள். அது தவறான மதிப்பீடு. பீமன் நிகரற்ற வீரன்.
திரௌபதிக்காகச் சௌகந்திகா மலரை தேடி அலைந்து கொண்டுவந்த பெருங்காதலன். தாயிடம் பேரன்பு கொண்டவன். சகோதரர்கள் மீது அவன் வைத்துள்ள வாஞ்சை நிகரற்றது. உண்மையான அன்பு கொண்டவர்கள்தான் புரிந்து கொள்ளப்படாமல் போகிறார்கள் என்பதற்குப் பீமனே அடையாளம்.
சிறுபாணாற்றுப்படையில் பீமன் சமையற்கலையில் சிறந்தவன் என்றும் அவன் வீமபாகம் என்றொரு சமையல் சாஸ்திரம் எழுதியிருப்பதாகவும் குறிப்பிடப்படுகிறது. மகாபாரதத்தின் விராடபர்வம், பீமன் விராட மன்னன் அரண்மனையில் சமையற்கலைஞனாக மறைந்து வாழ்ந்தான் என்று குறிப்பிடுகிறது. ஆனால், இப்படிச் சமையல்நூல் எழுதியதாக இல்லை. அர்ஜுனனுக்குக் கிடைக்கும் புகழும் பெருமையும் தனக்குக் கிடைக்கவில்லையே எனப் பீமன் சிறுவயது முதலே ஏங்குகிறான். அவன் கர்ணனை வெறுக்கவில்லை. மாறாகச் சூதன் எனக் கர்ணன் கேலிசெய்யப்படுவதைக் கண்டிக்கிறான்.
பீமனின் கண்ணோட்டத்தில் யுதிஷ்ட்ரனின் செயல்கள் யாவும் வேறாகத் தெரிகின்றன. யுதிஷ்ட்ரன் தனது மனதில் உள்ளதை வெளிப்படையாகச் சொல்லாதவனாக, பயமும் குழப்பமும் ரகசிய ஆசைகளும் கொண்டவனாகவே தோன்றுகிறான். தனது மகன் கடோத்கஜனின் மரணத்தைக் கிருஷ்ணன் பெரிதாக எண்ணவில்லை என்பது பீமனை அதிகம் வேதனைப்படுத்துகிறது.
பீமனின் மௌனம் புரிந்து கொள்ளப்படாதது. அதையே எம்.டி. தனது நாவலில் விவரிக்கிறார். பீமனைப் பற்றி நாம் அறிந்து வைத்திருந்த சித்திரத்தை மாற்றி அவனை நிகரற்ற நாயகனாக அடையாளம் காட்டியிருப்பதே எம்.டி.வாசுதேவன் நாயரின் சிறப்பு. இதிகாச மனிதர்கள் இன்றைய காலத்திலும் இருக்கிறார்கள். நம்மிடையே பீமன் வாழ்கிறான். நாமே சில நேரம் பீமனாக இருக்கிறோம், பீமனாக நடத்தப்படுகிறோம் என்பதையே நாவல் உணர்த்துகிறது.