திமுக தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பதைச் சுட்டிக்காட்டி, வரும் செப்டம்பர் 1, 2025 முதல் ஒரு குவிண்டால் நெல் ரூ.2,500க்குக் கொள்முதல் செய்யப்படும் என்று தமிழக உணவு - குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஏப்ரல் 8, 2025 அன்று சட்டசபையில் கூறியுள்ளார்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னாலிருந்து (2020-21) மத்திய அரசால் வழங்கப்படும் ஒரு குவிண்டால் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை (MSP-Minimum Support Price) ரூ.1,888. இது வரும் ஜூன் மாதத்தில் 2025-26ஆம் ஆண்டுக்கான கரீப் பருவப் பயிர்களுக்கு அறிவிக்கப்பட இருக்கின்ற எம்எஸ்பி விலைப் பட்டியலில் ரூ.2,500ஐத் தாண்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நேரத்தில், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட விலையைச் சற்றும் உயர்த்தாமல், நடப்பு ஆண்டு முதல் கொடுக்கப்படும் என்கிற அறிவிப்பால் நெல் விவசாயிகளுக்கு ஏதாவது பயன் ஏற்படுமா?
நெல்லின் முக்கியத்துவம்: தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், இந்தியாவில் அதிகமான பரப்பளவில் பயிரிடப்படுவதால், விவசாயக் குடும்பங்களின் வருமானத்தை நிர்ணயிப்பதில் நெல் முக்கியப் பங்கு வகிக்கிறது. 1960-களின் நடுப்பகுதியில், பசுமைப் புரட்சி அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்து, நெல் உற்பத்தியை அதிகப்படுத்தி உணவுப் பற்றாக்குறையை நீக்குவதற்காக, நெல்லுக்கு 1965-66லிருந்து எம்எஸ்பி கொடுக்கப்பட்டு, இன்றுவரை மத்திய அரசால் இப்பயிர் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. 1965-66இல் ரூ.39.81ஆக இருந்த ஒரு குவிண்டால் நெல்லுக்கான எம்எஸ்பி தொடர்ந்து உயர்த்தப்பட்டு, 2024-25இல் ரூ.2,320ஆக வழங்கப்படுகிறது.
எம்எஸ்பி விலையுடன் நெல் அதிகளவில் கொள்முதல் செய்யப்படுவதால், இந்தியாவின் மொத்த நெல் சாகுபடிப் பரப்பளவு 1970-71இல் 375.87 லட்சம் ஹெக்டேரிலிருந்து, 2024-25இல் 477.30 லட்சம் ஹெக்டேராக (அதாவது 27%) அதிகரித்துள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் நெல் சாகுபடிப் பரப்பளவு, குறிப்பாக 1980-81ஆம் ஆண்டுக்குப் பிறகு தொடர்ந்து குறைந்துவருகிறது. நெல் சாகுபடி செய்யும் முக்கிய மாநிலங்களான உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், ஒடிஷா, ஆந்திரப் பிரதேசம், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் சாகுபடிப் பரப்பளவு குறையவில்லை.
தமிழ்நாட்டின் நிலவரம்: நெல் சாகுபடியில் கிடைக்கும் குறைந்த வருமானம் அதன் சாகுபடிப் பரப்பளவு குறைவதற்கு மிக முக்கியக் காரணமாக இருக்க முடியும் எனத் தரவுகள் கூறுகின்றன. வேளாண் செலவுகள் - விலை ஆணையம் (Commission for Agricultural Costs and Prices - CACP) 1974-75 முதல் 2021-22 ஆண்டு வரை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, பயிர் சாகுபடிக்குச் செய்யப்படும் மொத்தச் செலவின் (C2 cost) அடிப்படையில் பார்த்தால், தமிழ்நாட்டின் விவசாயிகள் நெல் சாகுபடி மூலமாக 15 ஆண்டுகள் மட்டுமே லாபம் ஈட்டியுள்ளார்கள். குறிப்பாக, 2000-01ஆம் ஆண்டுக்குப் பிறகு, வெறும் மூன்று ஆண்டுகள் மட்டுமே லாபம் ஈட்டியுள்ளார்கள்.
நெல் சாகுபடி செய்யும் பஞ்சாப் விவசாயிகள் பெரும்பாலான ஆண்டுகள் பெரிய அளவில் லாபம் ஈட்டியுள்ளார்கள். 1974-75
முதல் 2021-22ஆம் ஆண்டு வரையில் தரவுகள் கிடைக்கப்பெற்ற 42 ஆண்டுகளில், ஒரே ஓர் ஆண்டைத் தவிர, மற்ற 41 ஆண்டுகளில் பஞ்சாப் விவசாயிகள் லாபம் ஈட்டியுள்ளார்கள். அதிகபட்சமாக 2020-21இல், ஒரு ஹெக்டேர் நெல் சாகுபடியில் ரூ.42,686 லாபம் ஈட்டியுள்ளார்கள். இதுவரை, தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு நெல் சாகுபடி மூலம் அதிகபட்சமாக 2012-13இல் ரூ.7,109 மட்டுமே லாபமாகக் கிடைத்துள்ளது.
தமிழ்நாட்டின் பின்னடைவுக்கு இரண்டு முக்கியக் காரணங்கள் உள்ளன. ஒன்று, நெல் சாகுபடி செய்வதற்கு ஆகும் செலவு மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் மிகவும் அதிகம். 2021-22ஆம் ஆண்டுக்கு சிஏசிபி வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ஒரு ஹெக்டேர் நெல் சாகுபடி செய்வதற்குத் தமிழ்நாட்டின் விவசாயிகள் ரூ.88,380 செலவு செய்துள்ளார்கள். ஆனால், அதிகளவில் நெல் சாகுபடி செய்யும் ஒடிஷா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களின் விவசாயிகள் ரூ.71,291இலிருந்து ரூ.74,657வரை மட்டுமே செலவு செய்துள்ளார்கள். தமிழ்நாட்டின் விவசாயிகள் ஏறக்குறைய ரூ.15,000 அதிகமாகச் செலவு செய்துள்ளார்கள்.
மற்றொரு முக்கியக் காரணம், அரசு நிறுவனங்களால் குறைவாகச் செய்யப்படும் நெல் கொள்முதல், அரசு நிறுவனங்களால் நெல் கொள்முதல் செய்யப்பட்டால் மட்டுமே, விவசாயிகளால் மத்திய அரசால் ஒவ்வோர் ஆண்டும் உயர்த்தி வழங்கப்படும் எம்எஸ்பி விலையைப் பெற முடியும். இல்லையெனில், குறைவான விலைக்கு நெல்லைத் தரகர்களிடம் விற்க வேண்டிய சூழ்நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுவிடுவார்கள்.
தமிழ்நாட்டில் செய்யப்படும் நெல் கொள்முதலின் அளவு மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது, பல ஆண்டுகளாக மிகவும் குறைவாக உள்ளது. உதாரணமாக, 2023-24இல் இந்தியாவில் மொத்தமாக 524.48 லட்சம் டன் நெல் எம்எஸ்பி விலையில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இவற்றில், தமிழ்நாட்டின் பங்கு வெறும் 4.52% மட்டுமே. பஞ்சாப் மாநிலத்தின் பங்கு மட்டும் 23.62% என்பது குறிப்பிடத்தக்கது.
நெல் கொள்முதல் குறைவாகச் செய்யப்படுவதால், எம்எஸ்பி விலையால் பயன்பெற்ற விவசாயிகளின் எண்ணிக்கையும் தமிழ்நாட்டில் மிகவும் குறைவு. 2023-24இல் இந்தியாவில் மொத்தமாக 106.58 லட்சம் நெல் விவசாயிகள் எம்எஸ்பி விலையில் தங்களுடைய நெல்லை விற்பனை செய்துள்ளார்கள். இவற்றில் தமிழ்நாட்டில் பயன்பெற்ற விவசாயிகளின் எண்ணிக்கை 3.94 லட்சம் மட்டுமே. தமிழ்நாட்டின் பெரும்பாலான நெல் விவசாயிகள் தனியாரிடமும், தரகர்களிடமும், எம்எஸ்பி விலைக்குக் கீழே குறைவான விலைக்கு நெல்லை விற்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகிறார்கள்.
அறிவித்ததை உறுதிசெய்ய வேண்டும்: இந்தியப் புள்ளியியல் அலுவலகம் (National Statistical Office) 2021இல் வெளியிட்ட வேளாண் குடும்பங்கள் பற்றிய மதிப்பீட்டு (Situation Assessment Survey of Farmers Households) அறிக்கையின்படி, பயிர் சாகுபடி மூலம் விவசாயிகளுக்குக் கிடைக்கும் மாத வருமானத்தில், தமிழ்நாடு வெறும் ரூ.2,129 உடன் இந்தியளவில் 22ஆம் இடத்தில் உள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் விவசாயம் தொடர்புடைய பல வளர்ச்சிக் குறியீடுகளில் தமிழ்நாட்டின் நிலை மிகவும் மோசம் அடைந்துள்ளது. பயிர்ச் சாகுபடியில் வருமானம் இல்லாத காரணத்தால், தரிசு நிலப்பரப்பு மிகவும் அதிகரித்து வருகிறது.
நெல் சாகுபடிக்குத் தேவைப்படும் செலவு வேகமாக அதிகரித்து வருகின்ற காரணத்தால், அதன் பரப்பளவு குறைவதோடு, உற்பத்தியும் குறைந்துவருகிறது. இந்தியாவின் மொத்த நெல் உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு 1980-83இல் 8.62%இலிருந்து, 2019-22இல் 5.64%ஆகக் குறைந்துவிட்டது. இது மேலும் தொடர்ந்தால், பணவீக்கம் அதிகரித்து அரசுக்கும், நுகர்வோருக்கும் பல சங்கடங்களை ஏற்படுத்தக்கூடும்.
நிலைமை இப்படி இருக்கும்போது, நெல் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500 வழங்கப்படும் என்று ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் கொடுக்கப்பட்ட வாக்குறுதி, 2025ஆம் ஆண்டு இறுதியில் அமலுக்கு வரும் என்கிற அறிவிப்பால் தமிழக விவசாயிகளுக்கு எந்தப் பயனும் கிடைக்கப்போவதில்லை.
மத்திய அரசு தற்போது (2024-25) நெல் குவிண்டால் ஒன்றுக்கு எம்எஸ்பி விலையான ரூ.2,320 கொடுத்துக் கொள்முதல் செய்துவருகிறது. இது வருகின்ற ஜூன் மாதத்தில் - அதாவது, 2025-26ஆம் ஆண்டு கரீப் பருவப் பயிர்களுக்கு அறிவிக்கப்பட உள்ள எம்எஸ்பி விலைப் பட்டியலில் ரூ.2,500ஐத் தாண்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் (2020-21) தேர்தல் அறிக்கையில் கூறிய ரூ.2,500க்கும், மத்திய அரசு அப்போது வழங்கிய எம்எஸ்பி விலைக்கும் இருந்த வித்தியாசம் 32.42%. இதனைக் கணக்கில் கொண்டு, வருமானக் குறைவால் பல சிக்கல்களைச் சந்தித்துவரும் தமிழக விவசாயக் குடும்பங்களைக் காப்பாற்றும் விதமாக, நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3,311 (ரூ.2,500+32.42%) தமிழக அரசு வழங்க வேண்டும். இல்லையெனில், நெல் விவசாயிகளுக்கு எந்தப் பயனும் கிடைக்காமல்போவதோடு, நெல் உற்பத்தியும் குறையக்கூடும்.
- தொடர்புக்கு: narayana64@gmail.com