சிறப்புக் கட்டுரைகள்

உயர் கல்வி உயர்வு பெற மத்திய - மாநில அரசுகள் என்ன செய்ய வேண்டும்?

கோ.விசுவநாதன்

கல்வியின் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்த நாடு இந்தியா. கல்வி இல்லாமல் நமது நாடு ஒருபோதும் வளர்ந்த நாடாக மாற முடியாது. வளர்ந்த நாடுகளின் வளர்ச்சி என்பது அந்த நாட்டின் கல்வியால் மட்டுமே சாத்தியமானது. வளர்ந்த நாடுகளில் உயர் கல்விச் சேர்க்கை சதவீதம் உலக சராசரியில் கணக்கிடும்போது 40%ஆக இருக்கிறது. ஆனால், இந்தியாவில் 28% என்று நாம் பின்தங்கியிருக்கிறோம். உயர் கல்வியில் நாம் 28% என்றாலும், இது மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது.

குறிப்பாக, உயர் கல்வியில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்​கிறது. கேரளம் இரண்டாம் இடத்தில் இருக்​கிறது. பிஹார் கடைசி இடத்தில் இருக்​கிறது. தமிழ்​நாட்டில் உயர் கல்விக்கு முக்கி​யத்துவம் தரப்படு​கிறது. இங்குள்ள தனியார் பல்கலைக்​கழகம்கூட உலகப் பல்கலைக்​கழகங்​களுடன் போட்டி போடும் அளவுக்குக் கல்வியின் தரம் உயர்ந்​திருக்​கிறது.

அதனால்தான் வெளி மாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்து பல மாணவர்கள் தமிழ்​நாட்டில் படிப்​ப​தற்கு ஆர்வம் காட்டு​கிறார்கள். அதே வேளையில், நாம் கல்விக்​காகச் செலவிடும் தொகை மிகவும் குறைவு என்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயம்.

குறைவான நிதி: சமீபத்தில் தாக்கல்​செய்​யப்பட்ட மத்திய நிதிநிலை அறிக்கை​யில், ரூ.50 லட்சம் கோடியில், ஒரு லட்சம் கோடி மட்டுமே கல்விக்காக ஒதுக்​கப்​பட்​டுள்ளது. இது மொத்த பட்ஜெட்டில் 2.5%க்கும் குறைவு. மத்திய அரசும் சரி, மாநில அரசும் சரி கல்விக்​காகக் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

தற்போது தனிநபர் சதவீதம் பல நாடுகளைவிட மிக மிகக் குறைவு. பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு நாடுகளில் (OECD Countries) சராசரி​யாகத் தனிநபர் உயர் கல்விக்​காகச் செய்யப்​படும் செலவு, ஆண்டுக்கு 17,000 டாலர்கள். அமெரிக்கா 35,000 டாலர்கள் செலவுசெய்​கிறது. மக்கள்​தொகையில் நம்முடன் போட்டி போடும் நாடான சீனா 2,400 டாலர்கள் செலவு செய்​கிறது. ஆனால், இந்தியா செலவு செய்வது 260 டாலர் மட்டுமே. நம் உயர் கல்வியில் பின்தங்கி​யிருப்​ப​தற்கு முக்கியக் காரணம் இதுதான்.

புதிய கல்விக் கொள்கை, மொத்த உள்நாட்டு உற்பத்​தியில் 6%ஐ கல்விக்​காகச் செலவிடுவது பற்றிப் பேசுகிறது. 60 ஆண்டு​களுக்கு முன்பு கல்வி பற்றி ஆராய அமைக்​கப்பட்ட கோத்தாரி ஆணையமும் கல்விக்காக 6% செலவிட வேண்டும் என்று பரிந்துரைத்தது. உண்மையில் இது போதாது. 6%ஐ கல்விக்கு ஒதுக்க வேண்டும் என்று புதிய கல்விக் கொள்கையில் பரிந்துரை செய்த பிறகும், நாம் ஏறத்தாழ 3%தான் கல்விக்குச் செலவு செய்கிறோம்.

கல்விக்கான பொதுச் செலவினங்​களில் உலக அளவில் ஒரு தரவரிசை உள்ளது. தரவரிசையில் உள்ள 190 நாடுகளில் 155ஆவது இடத்தில் இந்தியா உள்ளது. எனவே, அனைவருக்கும் நல்ல வாழ்க்கை கிடைப்​பதைக் காண நாம் முன்னேற வேண்டும். நாட்டின் வளர்ச்சி என்பது ஒரு சிலருக்கு மட்டு​மானது என்பது எந்த வகையிலும் ஜனநாயகத்​துக்கான வழி இல்லை. கல்வி அனைவருக்கும் கிடைக்​காத​தால்​தான், ஒரு சிலர் மட்டும் இந்த வளர்ச்சியை அனுபவிக்​கிறார்கள்.

நாம் வளர்ந்து​வரு​கிறோம் என்பதை நான் மறுக்க​வில்லை. உலகின் ஐந்தாவது பொருளா​தாரம் இந்தியா என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், தனிநபர் வருமானத்தைப் பொறுத்தவரை நாம் தரவரிசைப் பட்டியலில் 141ஆவது இடத்தில் இருக்​கிறோம் என்பதை மறந்து​விடக் கூடாது.

ஏற்றத்​தாழ்வுக்கான காரணி: சமீபத்தில் உலகின் பில்லியனர்கள் பட்டியல் வெளியானது. இதில் முதல் இடத்தில் அமெரிக்கா, அடுத்து சீனா. 205 பில்லியனர்​களுடன் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்​கிறது. 2000ஆம் ஆண்டில் இந்தியாவில் பில்லியனர்கள் எண்ணிக்கை ஒன்பது. ஒற்றை இலக்கத்தில் இருந்த பில்லியனர்கள் எண்ணிக்கை இப்போது மூன்று இலக்கத்​துக்குப் போய்விட்டது. நமது நாட்டில் மக்கள்​தொகையில் 10% பேர், நம் நாட்டின் மொத்த செல்வத்தில் 80 சதவீதத்தை வைத்திருக்​கிறார்கள்.

இந்தக் கணக்கில் நாம் அமெரிக்காவை முந்தி​விட்​டோம். அமெரிக்​காவின் மக்கள்​தொகையில் ஒரு சதவீதம் பேர் மொத்த சொத்து மதிப்பில் 37% சொத்துக்களை வைத்திருக்​கிறார்கள். இந்தியாவில் ஒரு சதவீதம் மேல்தட்டு மக்கள் இந்தியாவின் மொத்த செல்வத்தில் 58 சதவீதத்தைச் சொந்த​மாக்​கிக்​கொண்​டிருக்​கிறார்கள். இந்திய மக்களுக்குப் போதிய விழிப்பு​ணர்வும் கல்வி அறிவும் இல்லாததுதான் இதற்குக் காரணம். இந்தியாவில் பொருளா​தாரம் மட்டுமல்ல, ஜனநாயகம்​கூடக் கல்வியைப் பொறுத்தே உள்ளது.

கல்விக்கு நாம் முக்கி​யத்துவம் தர வேண்டும். அதுவும் குறிப்​பாகக் கல்வி சர்ச்சை​களுக்கு அப்பாற்​பட்டதாக இருக்க வேண்டும். இப்போதைய அரசியல் சூழலில், நமக்கு அதுதான் அவசரத் தேவை என்றே கருதுகிறேன். பல நாடுகளில் கல்வி என்றுமே விவாதப் பொருளாக இருந்​ததும் இல்லை, இப்போதும் விவாதப் பொருளாக இருப்​ப​தில்லை. பல நாடுகளுக்கு நான் செல்லும்​போது, இதை நேரில் பார்த்து உணர்ந்​திருக்​கிறேன். ஆனால், இந்தியாவில் கல்வி என்பது சர்ச்சைக்​குரிய ஒரு பொருளாகி​விட்டது. கல்வி பற்றிய சர்ச்சை மத்திய - மாநில அரசுகளுக்​கிடையே இருக்கவே கூடாது.

அரசியல் கட்சிகளும் கல்வியை ஒரு விவாதப் பொருளாகப் பார்க்கக் கூடாது. அரசியல் சர்ச்சை​களி​லிருந்து கல்விக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும். மொத்த உள்நாட்டு உற்பத்​தியில் குறைந்தது 6 சதவீதத்தை​யாவது கல்விக்குச் செலவிட வேண்டும். இதில் மத்திய - மாநில அரசுகள், அரசியல் கட்சிகள் ஒற்றுமை​யுடன் கவனம் செலுத்த வேண்டும்.

அரசியல் வேண்டாம்: தமிழ்​நாட்​டில்கூட ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதலால் விஷயம் உச்ச நீதிமன்றம் வரை போய் ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் அதிகாரங்களை உச்ச நீதிமன்றம் எடுத்​துக்​கொண்டு, மாநில அரசுக்கு நீதி வழங்கி​யிருக்​கிறது. இது அரசிய​லாகப் பார்க்​கப்படக் கூடாது. இதைத்தான் உச்ச நீதிமன்றம் கோடிட்டுக் காட்டி​யிருக்​கிறது. உடனடியாக, எல்லாப் பல்கலைக்​கழகங்​களுக்கும் துணைவேந்​தர்கள் நியமிக்​கப்பட வேண்டும். போதுமான அளவு நிதி ஒதுக்​கப்பட வேண்டும்.

கணிசமான மாணவர்கள் படிப்​ப​தற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அதே நேரம் மத்திய - மாநில அரசுகள் கல்வி நிறுவனங்​களிடம் வரிவசூல் செய்வ​தில்தான் அதிக அக்கறை காட்டு​கின்றன. தனியார் கல்வி நிறுவனங்கள் கட்டிடம் கட்டினால் மத்திய அரசு 18% ஜிஎஸ்டி வசூலிக்​கிறது. உபகரணங்​களுக்கு 18% முதல் 28% வரை ஜிஎஸ்டி வசூல் செய்யப்​படு​கிறது. மாநில அரசுகளும் தங்கள் பங்குக்கு வரி வசூல் செய்கின்றன. மாறாக, கல்வி நிறுவனங்​களுக்கு அரசுகள் உதவி செய்திட வேண்டும்.

நமக்கு என்று கல்விக் கொள்கை உள்ளது. கஸ்தூரி ரங்கன் குழு புதிய கல்விக் கொள்கையை வரையறுத்தது. அதை மத்திய அமைச்சரவை ஏற்றுக்​கொண்டது. இந்தக் குழுவின் பரிந்துரையில் எனக்குத் தெரிந்து சில நல்ல அம்சங்​களும் உள்ளன; நடைமுறைக்குச் சாத்தி​யமில்லாத சில பரிந்துரைகளும் இருக்​கின்றன. அதனால்தான் இந்தக் குழுவின் பரிந்துரைகளைச் சில மாநிலங்கள் ஏற்க மறுக்​கின்றன. அதில் தமிழ்​நாடும் ஒன்று. புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசும், மாநில அரசும் நேருக்கு நேர் கலந்து பேசி ஒரு மனதாகக் கொள்கையை முடிவு செய்ய வேண்டும்.

அதே நேரம், பிற மாநிலங்​களுடன் ஒப்பிடும்போது தமிழ்​நாட்டில் உயர் கல்வி எல்லோரும் பாராட்டும்​படிதான் இருக்​கிறது. ஒரு குடும்பத்தில் ஒருவர் உயர் கல்வி பெற்றார் என்றாலே அந்தக் குடும்பம் பொருளாதார ரீதியாக வலுப்​பெறும் என்பதுதான் உண்மை. ஒரு கல்வி​யாளர் என்ற முறையில் இதை நான் பல குடும்​பங்​களில் நேரில் பார்த்து மகிழ்ந்​திருக்​கிறேன். இந்த உண்மையை மத்திய - மாநில அரசுகள் உணர்ந்து செயல்​பட்டால் வளர்ச்சிப் பாதையில் எந்தத் தடையும் இருக்​காது.

SCROLL FOR NEXT