சிறப்புக் கட்டுரைகள்

மக்களுக்கான விஞ்ஞானி! - ஏ.பி.பாலச்சந்திரன் | நினைவஞ்சலி

Guest Author

அணுத் துகள் இயற்பியல், குவாண்டம் புலக் கோட்பாடு, திரவ-திட நிலையில் திரட்சிபெற்ற பொருள் இயற்பியல் போன்ற துறைகளில் கணிசமான பங்களிப்பைச் செலுத்திய பேராசிரியர் ஏ.பி.பாலச்சந்திரன், ஏப்ரல் 18 அன்று தனது 87ஆவது வயதில் இயற்கை எய்தினார். கேரளத்தைப் பூர்விகமாகக் கொண்டு தமிழகத்தின் சேலத்தில் பிறந்து வளர்ந்த பாலச்சந்திரன், பல ஆண்டுகாலம் அமெரிக்காவின் புகழ்மிக்க சிரக்கியூஸ் பல்கலைக்கழகத்தில் மதிப்பு மிக்க ஜோயல் டோர்மன் ஸ்டீல் எமரிட்டஸ் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். பின்னர் இந்தியா திரும்பி கோவையில் வசித்து வந்தார். அவரது மறைவு அறிவியல் புலத்தில் ஏற்பட்டிருக்கும் மிகப் பெரிய இழப்பு.

இளம் ஆராய்ச்சி​யாளர்​களுக்கு வழிகாட்டிஉலகம் முழுவதும் பல்வேறு நாடுகளைச் சார்ந்த 40க்கும் மேற்பட்ட மாணவ - மாணவி​களுக்கு ஆய்வு நெறியாளராக இருந்து பயிற்று​வித்தவர் பாலச்​சந்​திரன். ‘இன்டர்​நேஷனல் ஜர்னல் ஆஃப் மாடர்ன் பிசிக்ஸ் ஏ’ உள்பட முக்கியமான ஆய்வு வெளியீடு​களின் ஆசிரியர் குழுவிலும் இடம்பெற்று, உலக இயற்பியல் சமூகத்தில் செல்வாக்குப் பெற்றவ​ராகவும் விளங்​கி​னார். ஏழு ஆய்வு நூல்களையும் 200 ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதி​உள்​ளார்.

“குவாண்டம் கோட்பாடு குறித்து நான் சில குறிப்​பிடத்தக்க பங்களிப்பு செய்துள்ளேன் என்றாலும் இளம் ஆராய்ச்சி​யாளர்​களுக்குப் பயிற்சி அளித்​ததுதான் எனது நீடித்த முக்கியப் பங்களிப்பு எனக் கருதுகிறேன்” எனச் சமீபத்தில் வெளியிட்ட தனது நினைவலைகளில் அவர் பதிவுசெய்திருக்​கிறார். 1938 ஜனவரி 25இல் சேலத்தில் பிறந்த பாலச்​சந்​திரன் சேலம், கோழிக்கோடு ஆகிய இடங்களில் பள்ளிக் கல்வியைக் கற்று, சென்னை கிறிஸ்​துவக் கல்லூரியில் இளங்கலை பாடம் பயின்று சென்னைப் பல்கலைக்​கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். சென்னையில் உள்ள கணித அறிவியல் நிறுவனத்தின் முதல் ஆய்வு மாணவரும் இவர்தான். வியன்​னாவில் உள்ள கோட்பாட்டு இயற்பியல் நிறுவனம், சிகாகோவில் உள்ள என்ரிகோ ஃபெர்மி நிறுவனம் ஆகிய இடங்களில் மேலாய்வு மேற்கொண்டு, 1964 ஆம் ஆண்டு சிரக்​கியூஸ் பல்கலைக்​கழகத்தில் ஆசிரிய​ராகச் சேர்ந்​தார்.

போருக்கு எதிரானவர்: இதற்கிடை​யில், இத்தாலியின் நாபொலியைச் சேர்ந்த புகழ்​மிக்க அணுத்துகள் ஆய்வாளர்கள் புருனோ விட்டேல், பெப்பே மர்மோ ஆகியோருடன் தொடர்பு ஏற்பட்டது. இவர்கள் இருவரும் மார்க்​சி​ய​வா​திகள். இந்தக் கட்டத்​தில்தான் அமெரிக்கா வியட்நாம் நாட்டின் மீதும், கம்போடியா மீதும் ஆக்கிரமிப்பு யுத்தத்தைத் தொடங்கி​இருந்தது. அமெரிக்​காவின் ஏகாதிபத்திய முனைப்பை எதிர்த்து அந்த நாட்டில் உள்ள மாணவ - மாணவியர்கள் தெருவில் இறங்கி எதிர்ப்பு இயக்கம் நடத்தி​னார்கள். இந்த இயக்கத்தில் பாலச்​சந்​திரன் முக்கியப் பங்கு வகித்​தார்.

இந்தக் காலக்​கட்​டத்தில் ‘மக்களுக்கான அறிவியல்’ என்கிற பொது அமைப்பை அமெரிக்​காவில் உள்ள விஞ்ஞானிகள் ஆரம்பித்​தனர், அதிலும் பாலச்​சந்​திரன் பங்கு வகித்​தார். லேசர் தொழில்​நுட்​பத்தைக் கொண்டு குறிப்​பிட்ட விண்மீனை நோக்கித் தொலைநோக்​கியைத் திருப்பி நிலைகொள்ளச் செய்ய முடியும்; இதே ஆய்வு மறைமுகமாக லேசர் கொண்டு ஏவுகணையைக் குறியை நோக்கி ஏவும் தொழில்​நுட்​பத்தை உருவாக்​கவும் உதவும். இது போன்ற ரகசிய ஆய்வுகளை மேற்கொள்ள அமெரிக்கா ‘ஜேசன்’ (திட்டம் 137) என்ற ரகசிய திட்டத்தை மேற்கொண்டது. அமெரிக்​காவின் ரகசியத் ராணுவத் திட்டங்​களில் எட்வர்டு டெல்லர், ஜான் வீலர் முதலிய முன்னணி விஞ்ஞானிகள் பலர் பங்கு பெற்று வந்ததோடு பல ஐரோப்பிய விஞ்ஞானிகளை அவர்களுக்குத் தெரியாமலேயே ஆய்வில் ஈடுபடுத்திவந்தனர். இந்தக் குழுவினர்தான் ஹைட்ரஜன் அணுகுண்டு போன்ற அடுத்​தடுத்த ஆபத்தான அணு ஆயுதங்களை உருவாக்​கிய​வர்கள். பாலச்​சந்​திரன் முதலியோர் பங்கு பெற்ற மக்கள் அறிவியல் இயக்கம், இது போன்ற அமைதிக்கு எதிரான அறிவியல் பயன்பாட்டைத் தங்களுக்குக் கிடைத்த உறுதியான தகவல்​களைப் பொதுவெளியில் வெளியிட்டு அம்பலப்​படுத்தியது. “முதலா​ளித்துவ சமூகத்தில் அறிவியலின் பங்கு​குறித்து நாங்கள் பலரும் கவலை கொண்டிருந்​தோம்” என்று பாலச்​சந்​திரன் நினைவு​கூர்ந்​திருக்​கிறார்.

2012இல் சிரக்​கியூஸ் பல்கலைக்​கழகத்​திலிருந்து பணி ஓய்வு பெற்ற பின்பும் ஆய்வு​களில் ஈடுபட்டு வந்தார். இறுதி மூச்சுவரை சுறுசுறுப்பாக இருந்த அவர், தொடர்ந்து செயல்​பட்​டார்; ஆராய்ச்சிப் படைப்புகளை வெளியிட்டு​வந்​தார். சமீபத்​தில்​கூடப் புகழ்​பெற்ற ஆய்விதழில் அவரது ஆய்வுக் கட்டுரை வெளியானது. சமீப காலங்​களில் இயற்கணித குவாண்டம் புலக் கோட்பாட்டில் உள்ள சில மர்ம முடிச்​சுகளைப் பற்றி அவரும் அவரது ஆய்வுக் கூட்டாளி​களும் ஆய்வுகளை மேற்கொண்டு வந்தனர். இரண்டு ஆண்டுகள் முன்புதான் அவரது 85ஆவது பிறந்த நாளை ஒட்டி சென்னையில் சர்வதேச இயற்பியல் ஆய்வு மாநாடு நடத்தப்​பட்டது குறிப்பிடத்தக்கது.

- முனைவர் டி.ஆர்.கோவிந்தராஜன் | தொடர்புக்கு: thupilrg@gmail.com

SCROLL FOR NEXT