மாநில சுயாட்சியை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் ஒரு தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்திருக்கிறார். தீர்மானத்தை பாஜக எதிர்த்திருக்கிறது. தேசியக் கட்சிகளான இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் கட்சி ஆகியவை வரவேற்றுள்ளன. மாநிலக் கட்சியான அதிமுக புறக்கணித்திருக்கிறது. இது விநோதமான காட்சி.
மாநிலக் கட்சிகள் உதயம்: நாடு முழுவதும் கடந்த 40 ஆண்டுகளில் ஏராளமான மாநிலக் கட்சிகள் உருவாயின; பல மாநிலங்களில் அந்த மாநிலக் கட்சிகளே ஆட்சியைக் கைப்பற்றியும் இருக்கின்றன. அவற்றுள் சில தேசியக் கட்சிகளாக ஏற்கப்பட்டாலும் - தேசியம், அகில இந்திய, பாரதிய என்கிற தேசிய அடையாளங்களுக்கான பெயர்களைச் சூட்டிக்கொண்டாலும் - மாநிலக் கட்சிகளாகவே இயங்குகின்றன. இந்நிலையில், மத்திய ஆட்சிப் பொறுப்பில் எதிர்காலத்தில் ஒரு கட்சி மட்டுமே ஆட்சி புரிவது அரிதாகவே அமையும்.
சொல்லப் போனால், எதிர்காலத்தில் தேசம் முழுவதும் பரவியுள்ள தேசியக் கட்சிகளின் தலைமையில் மாநிலக் கட்சிகள் இணைந்த கூட்டரசு அமைவதற்கான வாய்ப்பே அதிகரிக்கும். ஒருவகையில் பார்த்தால், அது நல்லதும்கூட. காரணம், அத்தகைய ஆட்சிகளில் ஊழல், ஆதிக்க மனப்பான்மை, சர்வாதிகாரம் ஆகியவை பெரிதாக இல்லை என்பது கடந்த கால வரலாறு.
கூட்டணி அரசுகள்: 1971 தேர்தலில் பலம் பெற்று ஆட்சி அமைத்த இந்திரா காந்தி சர்வாதிகாரப் பாதையில் சென்றார். 1984இல் 400க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று ஆட்சிக்கு வந்த ராஜிவ் காந்தி ஆட்சியில் இலங்கைப் பிரச்சினை உள்படப் பலவற்றில் தவறான முடிவுகள் எடுக்கப்பட்டன. போபர்ஸ் ஊழல் வெடித்தது. 2019 மக்களவைத் தேர்தலில் 300 இடங்களைக் கைப்பற்றி நரேந்திர மோடி ஆட்சியில் எடுக்கப்பட்ட பல முடிவுகள் சர்ச்சைக்கு உள்ளாயின. 2024 மக்களவைத் தேர்தலில் போதிய பலம் பெற முடியாமல் போனதற்கு, அதுவும் காரணம் எனக் கூறப்படுகிறது.
அதேவேளை, பல கட்சிகளோடு இணைந்து நடத்தப்பட்ட ஆட்சிகள் நிலையான ஆட்சியைத் தர இயலாமல் போனாலும், பல முன்னேற்றத் திட்டங்களை நிறைவேற்றியிருக்கின்றன. மொரார்ஜி தேசாயின் ஜனதா கட்சி ஆட்சி, வி.பி.சிங்கின் தேசிய முன்னணி அரசு, பல மாநிலக் கட்சிகளுடன் சுமுக உறவைப் பேணிய வாஜ்பாய் ஆட்சி ஆகியவை இதற்கு உதாரணங்கள்.
மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா கட்சி ஆட்சியில் ஊழல் இல்லை. ஜனநாயகம் செழித்தது. விலைவாசி கட்டுப்பாட்டில் இருந்தது. வி.பி.சிங் தலைமையில் பாஜக ஆதரவோடு நடைபெற்ற தேசிய முன்னணி ஆட்சியிலும் ஊழல் இல்லை. மொரார்ஜி தேசாய் அரசு அமைத்த மண்டல் கமிஷன் பரிந்துரைகளைச் செயல்படுத்தியது வி.பி.சிங் ஆட்சிதான்.
பின்னர் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்குப் பல மாநிலக் கட்சிகள் ஆதரவு கொடுத்தன. அந்த ஆட்சியில் தகவல் தொழில்நுட்ப மேம்பாடு எட்டப்பட்டது. நாடு அணுசக்தி வல்லமை பெற்று நிமிர்ந்தது. வாஜ்பாய் தலைமையிலான கூட்டணி ஆட்சிதான் முழுமையான காலம் (1999-2004) ஆட்சி செய்தது.
முக்கியமான கருத்துகள்: மாநிலங்களின் நலனுக்காகக் குரல் எழுப்பப்படுவது புதிதல்ல. பல ஆண்டுகளுக்கு முன்பு அதைத் தேசிய தலைவர்களே ஆதரித்துள்ளனர். “விரும்பாத மாநிலங்களில் இந்தியைத் திணித்தால், மாநிலங்கள் தங்களைத் தாங்களே கவனித்துக்கொள்ள நேரும் சூழல் உருவாகும்” என்று ராஜாஜி எச்சரித்தார்; ஒற்றை ஆட்சி முறையைக் கண்டித்தார். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது காஞ்சிபுரத்தில் வைகோ தலைமையில் மதிமுக ‘மாநில சுயாட்சி மாநாடு’ நடத்தியது.
அதில் சிறப்புரை ஆற்றிய அப்போதைய துணைப் பிரதமர் லால் கிருஷ்ண அத்வானி, “வலிமையான மாநிலங்கள்தான், வலிமையான தேசத்தை உருவாக்க முடியும்” என்றார். அதை வழிமொழிந்த அப்போதைய முதலமைச்சர் மு.கருணாநிதி, “மாநில சுயாட்சியைப் பற்றி இதைவிடத் தெளிவாகக் கூற இயலாது” என்றார்.
மாநிலக் கட்சிகள் வலுப்பெறுவதற்கு, மாநிலங்களின் விருப்பங்கள் கவனிக்கப்படாமையே அடிப்படைக் காரணம். மாநில அரசுகளை மத்தியில் இருந்த அரசுகள் அடிமைகளைப் போல் நடத்தியது இன்னொரு காரணம். இந்தியாவில் மாநிலங்களில் உருவான பல கட்சிகள் மாநில நலன்களை முன்வைத்தே தோன்றின.
இவற்றை உருவாக்கிய தலைவர்களில் பெரும்பாலானோர் தேசியக் கட்சிகளில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பல ஆண்டுகள் வடகிழக்கு மாநிலங்கள் கவனிப்பின்றியே இருந்துவருகின்றன. அதனால்தான் அங்கெல்லாம் மாநிலக் கட்சிகளின் ஆதிக்கம் உள்ளது.
இரு வேறு மாநிலக் கட்சிகள் இருக்கும் மாநிலங்களில் தேசியக் கட்சிகள் கணிசமான இடங்களைப் பெறுவதும், மாநில அரசைக் கைப்பற்றுவதும் அரிது. கர்நாடகத்தில் அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சி இல்லை. தெலங்கானாவில் பிஆர்எஸ் கட்சியை எதிர்க்கும் மாநிலக் கட்சியோ, மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸுக்கு ஈடுகொடுக்கும் மாநிலக் கட்சியோ இல்லாததால், அக்கட்சிகளின் மீது மக்கள் கோபமடைந்தால், தேசிய கட்சிகளைத்தான் நாடுகிறார்கள். மாநிலக் கட்சிகளின் சரியான விழுமியங்களைத் தேசிய அளவிலான கட்சி உள்வாங்கிக்கொண்டு செயல்பட்டாலே போதும்.
மக்கள் மனதில் இருப்பது என்ன? - தமிழகத்தில் மாநிலக் கட்சிகள் அரை நூற்றாண்டுக்கு மேலாக ஆட்சி செலுத்தி வருகின்றன. இதற்கெல்லாம் அடிப்படைக் காரணங்கள் உண்டு. மாநிலத்தின் சூழ்நிலையை ஒட்டி மாநிலத்தில் இயங்கும் தேசியக் கட்சியால் தன்னிச்சையாக முடிவெடுக்க இயலுமா என்கிற சந்தேகம் உள்ளது. அதைவிட மாநிலக் கட்சியையே தெரிவுசெய்யலாம் என்று மக்கள் மனம் முடிவு செய்கிறது.
எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின் 1989 தேர்தலில் காங்கிரஸ் மீது பரவலான நம்பிக்கை இருந்தது. ஆனால், அக்கட்சியிடம் மக்கள் ஆட்சியைச் தரவில்லை. மாறாகத் திமுகவை ஆதரித்தனர். அதிமுக ஆட்சி மீது மக்கள் 1996இல் கடும் கோபம் கொண்டிருந்தனர். அந்தக் கோபத்தின் பலன் காங்கிரஸுக்குக் கிடைக்கவில்லை. மாறாக காங்கிரஸிலிருந்து வெளியேறிய ஜி.கே.மூப்பனார் உருவாக்கிய தமிழ் மாநில காங்கிரஸை, போட்டியிட்ட இடங்களில் பெருவாரியாக மக்கள் வெற்றிபெற வைத்தனர்.
ஒரு கட்சி மாநிலத்தில் சுதந்திரமாக இருந்தால் ஆதரிப்போம் என்கிற கருத்தை மக்கள் தெரிவித்ததற்கு இதுவே அடையாளம். காங்கிரஸிலிருந்து வெளியேறிய மம்தா மேற்கு வங்கத்திலும், ஆந்திரப் பிரதேசத்தில் ஜெகன்மோகன் ரெட்டியும் பெற்ற வெற்றிகளுக்கு இவை கூடுதல் சான்றுகள்.
இவையெல்லாம், ‘மாநிலத்துக்கு எங்களுடைய ஆள்தான் சரி’ என்கிற மனநிலையை மக்கள் கொண்டிருப்பதைக் காட்டுகிறது. இந்தி பேசும் மாநிலங்களில் தேசியக் கட்சிகள் வலுவாக இருக்கின்றன. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸுக்கு மாற்றாக பாஜகவும் பாஜகவுக்கு மாற்றாக காங்கிரஸும் இருக்கின்றன. தென் மாநிலங்களில் கர்நாடகத்தில் இதே சூழல்.
ஒரு வேளை மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸுக்குப் போட்டியாக ஒரு மாநிலக் கட்சி உருவானால், அங்கே பல காலம் ஆட்சியில் இருந்த மார்க்சிஸ்ட், அதற்கு முன் இருந்த காங்கிரஸ், ஆட்சியைப் பிடிக்கும் கனவில் உள்ள பாஜக ஆகியவற்றுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது ஐயமே. மாநில மக்களின் உணர்வுகளை மாநிலக் கட்சிகளால்தான் பிரதிபலிக்க முடியும் என்பதை இந்த வரலாற்று நிகழ்வுகள் காட்டுகின்றன. எனவே, மாநிலங்கள் அளவில், அவற்றுக்கே அதிக வாய்ப்பு என்கிற முடிவுக்கு வரலாம்.
மாநில சுயாட்சி தேவையா என்பதைக் காலம் நிர்ணயிக்கும். அதேவேளை மத்தியில் இருந்த சில ஆட்சிகள் மாநிலங்களின் விருப்பங்களை, தேவைகளை நிறைவேற்றி, மனக்குறைகளைப் போக்கிய காலங்களில் இக்கோரிக்கை எழவில்லை என்பதற்குக் கடந்த கால வரலாறே சான்று. மாநில சுயாட்சிக் கோரிக்கை எழுவதற்கு எவையெல்லாம் காரணங்களாக இருக்கின்றனவோ, அவற்றை நிறைவேற்றினால் போதும் மாநில சுயாட்சிக் கோரிக்கை எழாமல் போவதற்கு வாய்ப்பு உண்டு.
- தொடர்புக்கு: paakiscribe@gmail.com