தென்னிந்தியக் கோயில்கள், ஐரோப்பிய தேவாலயங்கள், எகிப்திய பிரமிடுகள் போன்றவை குத்துமதிப்பு விதிகளைப் (Rules of Thumb) பின்பற்றிக் கட்டப்பட்டவை; அது அந்தக் காலம். ‘முப்பரிமாண அச்சிட்ட கட்டுமானம்’ (3D Printed Construction) அரங்கேறும் காலம் இது. இரண்டும் இரண்டு துருவ நிகழ்வுகளாக இருப்பினும், இவற்றுக்கு இடையே ஒரு நெருக்கம் உண்டு. அப்போது நடந்தது அதிசயம். தற்போது நிகழ்வது புரட்சி.
முப்பரிமாண அச்சுப்பொறி: அமெரிக்காவைச் சேர்ந்த ஜோசப் நெக்வட்டால் கணினி-உதவி ஓவியங்கள் உருவாக்குவதில் நிபுணர். காகிதத்தில் முப்பரிமாண பிம்பங்களை உருவாக்க முடியும்பட்சத்தில், அதே தொழிநுட்ப உதவியுடன் கட்டிடங்களையும் உருவாக்க முடியும் என்று அவர் 1990களில் அனுமானித்தார். கலிபோர்னியா பல்கலைக்கழகப் பேராசிரியர் பெஹ்ரோக் கோஷ்னேவீஸ் அந்த உணர்வுகளுக்கு உயிர்கொடுத்தார்.
2004ஆம் ஆண்டு மட்டக்கோடு வடிவமைப்பு (Contour Crafting) என்கின்ற முறையைப் புகுத்தி, முதன்முறையாக முப்பரிமாண அச்சிட்ட கட்டிடங்களை - முழுஅளவு வீடுகளை உலகுக்குக் கொடுத்தார். சீனா 2014இல் பிரம்மாண்டமான முப்பரிமாண அச்சுப்பொறியை உருவாக்கியது.
‘வெளித்தள்ளும் தொழில்நுட்பத்துடன்’ (Extrusion Technique) செயல்படும் அக்கருவியின் உதவியுடன் ஐந்து மாடிக் கட்டிடங்களைக் கட்டினார்கள். அவர்கள் 10 வீடுகளை 24 மணி நேரத்தில் கட்டிமுடித்துள்ளனர். துபாய், அமெரிக்கா, டென்மார்க் போன்ற நாடுகள் அச்சு இயந்திரங்களை உருவாக்கியுள்ளன. டெக்சாஸ், மெக்ஸிகோ நகரங்களில் ஏழை மக்களுக்கு இல்லங்கள் கட்டப்பட்டிருக்கின்றன.
நீடித்து உழைக்கும் கட்டுமானங்கள்: இயற்கையின் அழிவில்தான் ஒவ்வொரு புதிய கட்டிடமும் உருவாகிறது. இழப்பை நம்மால் முழுமையாக ஈடுசெய்ய முடியாது. இயற்கையின் வளங்கள் சிதைந்துகொண்டே வருகின்றன. ஆகவே ஒரு கட்டுமானம் என்பதைச் சமுதாயத்தில் நிகழ்கின்ற முக்கிய நிகழ்வாகக் கவனிக்க வேண்டும்.
‘என் மண், என் பொருள், என் கட்டிடம், என் விருப்பம்’ என்கின்ற பாணியில் தன்னிச்சையாகச் செயல்பட இயற்கை யாரையும் அனுமதிப்பதில்லை. இவற்றை நாம் பொருட்படுத்தாமல் செய்த நெடிய பயணத்தின் விளைவுதான், இன்று புவியின் வெப்பம் நம் கட்டுப்பாட்டை மீறி உயர்கிறது. பசுங்குடில் வாயு வெளியேற்றத்தில் கட்டுமானத் துறையின் பங்களிப்பு 38%ஐத் தாண்டுகிறது.
“எதிர்வரும் காலத்தில் கட்டிடங்களைக் குறைந்தபட்சம் 300 வருடங்கள் உழைக்குமாறு நாம் கட்ட வேண்டும். நம் கட்டுமானத் தேவைகளைக் கட்டுக்குள் கொண்டு வர, இது ஒன்றுதான் வாய்ப்பு” என்று கலிஃபோர்னியா பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் குமார் மேத்தா குறிப்பிடுகிறார்.
இரட்டைத் தவறு: தற்போது இருவிதமான கட்டுமான முறைகள் நடைமுறையில் உள்ளன; களக் கட்டுமானம், முன்வார்ப்பு (precast) கட்டுமானம். முன்வார்ப்புக் கட்டுமானம் எண்ணற்ற சாதகங்களை உள்ளடக்கியது. தரமான, உறுதியான, அழகான, மலிவான, துரிதமான, நீடித்து உழைக்கும் கட்டிடங்களை அமைக்க முன்வார்ப்புக் கட்டுமான முறைதான் சீரிய வழி. களக் கட்டுமானத்தில் தரக் கட்டுப்பாடு என்பது ஓர் உலகளாவிய சவால். ஏனென்றால், அது தொழிலாளர்களின் வளத்தைச் சார்ந்துள்ளது.
முன்வார்ப்புக் கட்டுமானத்தில் சீனா உலகின் முன்னோடி. புதிய கட்டுமானங்களில் 40-50 சதவீதம் முன்வார்ப்புக் கட்டுமானங்கள்தான். சியோங்கன், ஷென்சென், ஷாங்காய் போன்ற முக்கிய நகரங்கள் முழுவதும் முன்வார்ப்புக் கட்டுமானங்கள்தான். மற்ற நகரங்களில் அடுக்ககங்கள் முன்வார்ப்புக் கட்டுமான முறையில்தான் கட்டப்பட்டிருக்கின்றன. பெய்ஜிங், ஷாங்காய், ஷென்சென் போன்ற மேல்தட்டு நகரங்களைத் தவிர, மற்ற நகரங்களில் கட்டப்பட்டிருக்கின்ற வீடுகளின் எண்ணிக்கை அவர்களின் தேவைகளை மிஞ்சிவிட்டது.
ஒவ்வொரு நகரத்திலும் ஆயிரக்கணக்கான வீடுகள் மூடிக்கிடப்பதால் ‘பேய் நகரங்கள்’ என்று அழைக்கப்படும் அளவுக்குப் பல நகரங்கள் கைவிடப்பட்டிருக்கின்றன. முன்வார்ப்புக் கட்டுமானத்தில் சில வரம்புகள் உண்டு. பொறியியல், அரசியல், சமுதாயரீதியாக அவற்றை அணுகிக் களைய முயற்சி செய்யாமல், களக் கட்டுமானத்தையே நாம் பெரியளவில் பின்பற்றுகிறோம். நம் நாட்டில் 85-90% களக் கட்டுமானம்தான். இதனால் தரம், எண்ணிக்கை என இரண்டையும் பூர்த்தி முடியாமல் நாம் பின்னடைந்துள்ளோம்.
முப்பரிமாண அச்சிட்ட கட்டுமானங்கள்: இந்நூற்றாண்டின் கண்டுபிடிப்புகளில். ‘முப்பரிமாண அச்சிட்ட கட்டுமானம்’ ஆகச்சிறந்த ஒன்று. கட்டுமான நேரம் 30-60%, தொழிலாளர் செலவு 50-80%, பொருள்கள் வீணாவது 30-60%, கட்டுமானச் செலவு 25-30% குறையும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக, கரிமத் தடம் (carbon footprint) 70% வரை குறையும். இத்தொழில்நுட்பம் மனித குலத்துக்குக் கிடைத்த வரப்பிரசாதம்.
இக்கட்டுமான முறை இன்றளவில் தொடக்க நிலையில் உள்ளது. சென்னை ஐஐடி-டிவஸ்டா நிறுவனத்தினரும் இணைந்து ஏறத்தாழ 600 சதுர அடியில் ஒரு கட்டுமானத்தை 5 நாள்களில் முடித்துள்ளனர். எல் அண்ட் டி நிறுவன அலுவலகம் ஒன்று 2021ஆம் ஆண்டு கட்டப்பட்டிருக்கிறது. பெங்களூரு-அல்சூரில் 2023ஆம் ஆண்டு 1,000 சதுரடியில் ஒரு அஞ்சல் நிலையம் கட்டப்பட்டுள்ளது.
இந்தத் தொழில்நுட்பத்தில் மேலும் பல மேம்பாடுகள் தேவைப்படுகின்றன. இருப்பினும் தற்போதுள்ள நுட்பங்களை உரிய பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும். அதனால் நாம் பெறும் அனுபவம் அடுத்த உயர்நிலைக்கு நம்மை எடுத்துச்செல்ல வழிவகுக்கும். இதில் நாம் செய்யும் தாமதம் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். அனைவருக்கும் இல்லம் என்கிற கனவு நிஜமாக நமக்கு நல்லதொரு வாய்ப்பு கிடைத்துள்ளது.
முன் செல்லும் உபாயம்: சீனர்கள் பொதுவாகத் தங்களின் வளர்ச்சியைப் பறைசாற்றிக்கொள்வதில்லை. ஒரு தொழில்நுட்பம் உலகத்துக்கு வெளிப்படும்போது, அவர்கள் எட்டியுள்ள வளர்ச்சி இமயத்தைத் தொட்டிருக்கிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்பே அவர்கள் 5 மாடிக் கட்டிடங்களை இப்புதிய தொழில்நுட்பத்துடன் மின்னல் வேகத்தில் கட்டிமுடித்துள்ளனர் என்கிற உண்மையை நாம் மனதில் ஏற்ற வேண்டும்.
இந்தியாவில் 2023-24இல் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் ரூ.25,100 கோடி ஒதுக்கப்பட்டது, ஆனால், ஆராய்ச்சிக்குப் பெரிய முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. சந்திரயான் 4-5-6 என்று கனவு காணும் நாம், முப்பரிமாண அச்சிட்ட கட்டுமானம் பற்றி மௌனமாக இருக்கிறோம். ஒரு நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சியின் தாக்கத்தில் இருந்து மக்கள் தப்ப முடியாது. இது எல்லா நாட்டுக்குமே பொருந்தும்.
மிகவும் அவசியமான தொழில்நுட்பம் உலகில் வளர்ந்துவரும்போது, மனிதவளத்தின் முன்னோடியான நாம் மௌனமாக இருப்பது வருத்தமளிக்கிறது. தேவையான நிதி ஒதுக்கி பல்வேறு நிலைகளில் ஊக்கமளித்து இத்துறையில் ஆராய்ச்சியை மேம்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.
- தொடர்புக்கு: skramane@gmail.com