கடந்த சில வாரங்களாக உலகப் பொருளாதாரம் பெரும் கொந்தளிப்பைச் சந்தித்திருக்கிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏப்ரல் 2ஆம் தேதி ‘சர்வதேச அவசரப் பொருளாதார அதிகாரச் சட்டம்’ என்கிற சட்டத்தை அமல்படுத்தி, ஒரு சர்வதேச வர்த்தகப் போரைக் கட்டவிழ்த்துவிட்டிருக்கிறார்.
அதேநேரம் அந்த வார இறுதிக்குள், ஊகப் பத்திரச் சந்தைகளின் நல்லறிவு, டிரம்ப் தொடங்கிய அபத்தமான வர்த்தகப் போரை நிறுத்தியது. வாரத்தின் பிற்பகுதியில், பத்திரச் சந்தைகளின் அழுத்தத்துக்கு அடிபணிந்து, தனது முந்தைய முடிவை டிரம்ப் மாற்றினார். ஏப்ரல் 9 அன்று பெரும்பாலான நாடுகள் மீதான கூடுதல் பரஸ்பர இறக்குமதி வரிகளை நிறுத்தி வைத்தார். ஆனால், சீனாவின் வரி மட்டும் 145% ஆக உயர்த்தப்பட்டது.
பரஸ்பர வரி: ஏப்ரல் 2ஆம் தேதி அனைத்து நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு ‘விடுதலை’ தின வர்த்தக வரிக் கொள்கையை டிரம்ப் அறிவித்த பிறகு, பங்குச் சந்தைகளில் கொந்தளிப்பு தொடங்கியது. இந்தக் கொள்கை இரண்டு அடுக்கு அமைப்பைக் கொண்டிருந்தது: முதலாவதாக, அனைத்து நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அடிப்படை 10% பொருந்தும்; இரண்டாவதாக, சுமார் 100 நாடுகளால் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் என்று அமெரிக்க அரசாங்கம் கருதியவற்றின் மீது தனிப்பட்ட நாடு சார்ந்த ‘பரஸ்பர வரி’ விதிக்கப்பட்டது.
புதிய இரண்டு அடுக்கு வரி விதிப்பு முறை ஏப்ரல் 5, ஏப்ரல் 9ஆம் தேதிகளில் தொடங்கத் திட்டமிடப்பட்டது. சீனா ஒரு சிறப்பு இலக்காக இருந்தது. சீனாவின் இறக்குமதிகள் மீது மிகப்பெரிய வரி விதிக்கப்பட்டது. ஏப்ரல் 11இல், சீனப் பொருள்களின் மீதான அமெரிக்காவின் 145 சதவீத வரி அமலுக்கு வந்தது. இதற்கிடையில், இந்தியா போன்ற அமெரிக்காவின் உற்பத்தி மையங்கள் 27% அதிகரிப்புக்கு ஆளாகின. அதேநேரத்தில் இந்தோனேசியா (32%), வங்கதேசம் (37%), வியட்நாம் (46%) ஆகியவை கடுமையான வரிகளை எதிர்கொண்டன.
பாதுகாப்புவாதக் கொள்கை: இந்த வர்த்தக வரி விதிப்பின் பின்னணியில் உள்ள தர்க்கம், உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதாகும். இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில், வெளிநாட்டுப் பொருள்கள் சுங்க வரிக்கு உட்படுத்தப்பட்டன. இது உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களுடன் ஒப்பிடும்போது வெளிநாட்டுப் பொருள்களை அதிக விலை கொண்டதாக மாற்றியது.
இதனால், இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பாதுகாப்புவாதக் கொள்கைகளின் கீழ் அமெரிக்க உற்பத்தி செழிக்க வரி விதிப்புகள் ஒரு பாதுகாப்புக் கவசத்தை வழங்கின. மூன்று தேர்தல்களிலும் டிரம்ப்பின் அரசியல் முழக்கம் 1920களின் முற்பகுதியில் இருந்த அதே பாதுகாப்புவாதப் பொருளாதார உத்தியை எதிரொலித்தது. ஆனால், அது தற்போதைய சூழலுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட்டது.
தற்போதைய உலகமயமாக்கல் சூழலில், அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காக, வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க நிறுவனங்களை அமெரிக்காவில் உற்பத்தி செய்ய அழைத்து வருவதைத்தான் பாதுகாப்புவாத முழக்கமாக டிரம்ப் மாற்றியமைத்தார். அதற்காக அவருக்கு வர்த்தக வரிகள் என்கிற பாதுகாப்புக் கவசம் தேவைப்பட்டது.
2017 முதல் 2021 வரையிலான தனது முதல் பதவிக் காலத்தில், சூரிய மின்சக்தித் தகடுகள் முதல் சலவை இயந்திரங்கள் வரை அனைத்துக்கும் இறக்குமதி வரிகளை அதிகரித்தார். அந்தக் காலக்கட்டத்தில், அமெரிக்க சோயாபீன்ஸ் மீதான வரிகளை அதிகரிப்பதன் மூலம் சீனா அப்போது பதிலடி கொடுத்தது. இது அமெரிக்க விவசாயிகளைப் பாதித்தது. இப்போது, இரண்டாவது பதவிக் காலத்தைத் தொடங்கியவுடன், டிரம்ப் அதே பாதுகாப்புவாதப் பொருளாதார உத்தியின் அளவை விரிவுபடுத்தியுள்ளார். தற்போதைய சூழலில் சர்வதேச வர்த்தகத்தின் உள்ளார்ந்த தர்க்கம், அமெரிக்காவில் அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவது என்கிற பாதுகாப்புவாதத்தைச் செல்லாததாக்குகிறது.
மனம் மாறிய அதிபர்: 1980களில் இருந்து, அமெரிக்க நிறுவனங்கள் குறைந்த உற்பத்திச் செலவுகள், நெகிழ்வான வணிகம், தொழிலாளர் ஒழுங்குமுறைச் சூழல், அதிக மனித வளங்களைக் கொண்ட நாடுகளில் முதலீடு செய்துள்ளன. மேலும், உலகெங்கிலும் குறைந்த பெருநிறுவன வரி (corporate tax) உள்ள நாடுகளில் அந்நிறுவனங்கள் லாபத்தையும் காண்கின்றன. எனவே, உலகமயமாக்கலைப் பயன்படுத்தி அமெரிக்க நிறுவனங்கள் உலகம் முழுவதும் உற்பத்தி, நிதி, வரிக்குப் பிந்தைய லாப மதிப்புச் சங்கிலிகளை உருவாக்கி வளர்த்துள்ளன. டிரம்ப்பின் ‘பரஸ்பர’ வரிக் கொள்கை இதையெல்லாம் உடைக்கும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது.
ஏனெனில், இறக்குமதி வரி விகிதங்கள் அதிகரித்தாலும்கூட, வளரும் நாடுகளில் உற்பத்திசெய்து அமெரிக்காவில் விற்பனை செய்யும் அமெரிக்க நிறுவனங்கள், அந்தந்த நாடுகளில் உற்பத்தி செலவுகளைக் குறைப்பதன் மூலமோ, உற்பத்தித்திறனை அதிகரிப்பதன் மூலமோ தங்கள் லாபத்தை அதிகரிக்க முடியும். எனவே, இந்தப் புதிய இறக்குமதி வரிக் கொள்கை உலகளாவிய உற்பத்திக் கட்டமைப்பை அமெரிக்காவுக்கு மாற்றும் என்கிற வாதம் நடைமுறைக்கு மாறானது. ஆனால், இவையெல்லாம் இந்த வர்த்தகப் போரை டிரம்ப் இடைநிறுத்த வைத்த காரணங்கள் அல்ல.
ஏப்ரல் 2ஆம் தேதி முதல், அமெரிக்கப் பங்குச் சந்தைகளும், உலகச் சந்தைகளும் மிகவும் நிலையற்றவையாக இருந்தன. ஏப்ரல் 7ஆம் தேதி எஸ் & பி 500 குறியீடு 12%க்கும் மேல் சரிந்தது. அப்போதும்கூட டிரம்ப் கவலைப்படாமல் இருந்தார். ஆனால், அந்த வாரத்தில் அமெரிக்கக் கருவூலத்தின் பத்திரச் சந்தையில் (US Treasury Bonds) ஏற்பட்ட எதிர்வினைகள் அவரது மனதை மாற்றின. பொதுவாக, பங்குச் சந்தை வீழ்ச்சியடையும் போது, முதலீட்டாளர்கள் அமெரிக்கக் கருவூலப் பத்திரங்களை (டி-பத்திரங்கள்) வாங்குவார்கள்.
ஏனெனில் அமெரிக்கக் கருவூலப் பத்திரங்கள் தவறுகள் நிகழாத, உத்தரவாதமான, நிலையான வருவாய் விகிதப் பத்திரங்களாகக் கருதப்படுகின்றன. எனவே, டி-பத்திரங்களுக்கான அதிகத் தேவை அமெரிக்க டாலரை வலுப்படுத்தும். ஆனால், இந்த முறை, டி-பத்திரங்களின் விலை குறைந்து பத்திரம் வாங்கும் விகிதம் அதிகரித்தது. குறிப்பாக, ஏப்ரல் 4 - 11ஆம் தேதிகளுக்கு இடையில், 10 ஆண்டு, 20 ஆண்டு, 30 ஆண்டு டி-பத்திரங்களின் வாங்கும் விகிதம் முறையே 5.5%, 5.05% மற்றும் 5% ஆக உயர்ந்தது.
இதற்குக் காரணம், வர்த்தகப் போர் அமெரிக்காவில் பணவீக்கத்தையும் வளர்ச்சித் தேக்கத்தையும் ஏற்படுத்தும் என்று எதிர்பார்த்ததால், முதலீட்டாளர்கள் அமெரிக்கப் பத்திரங்களை விற்று, மற்ற பாதுகாப்பான முதலீடுகளுக்குச் சென்றனர் (ஜெர்மன் பத்திரங்கள்). எனவே, டி-பத்திர விலைகளில் ஏற்பட்ட வீழ்ச்சி அமெரிக்க நிர்வாகத்துக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியது.
பலவீனமடையும் டாலர்: ஏப்ரல் 8ஆம் தேதி, அமெரிக்க அரசாங்கம் 3 ஆண்டு டி-பத்திரங்களை 58 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஏலத்தில் விற்பதாக அறிவித்தது. முக்கிய முதலீட்டாளர்களான ஹெட்ஜ் நிதிகள் (Hedge Funds), வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (FII) பத்திரங்களை வாங்க முன்வரவில்லை.
ஹெட்ஜ் நிதிகள் அமெரிக்க டி-பத்திரங்களில் ரிவேட்டிவ் வர்த்தகத்துக்காக 800 பில்லியன் டாலர் தொகுப்புமுதலீட்டை (portfolio) வைத்திருக்கின்றன. எனவே, அவர்கள் டி-பத்திரங்களை விற்கத் தொடங்கியபோது, இந்தச் சந்தைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, டி-பத்திர விலைகளில் வீழ்ச்சியைத் தீவிரப்படுத்தியது.
டி-பத்திர விலைகளின் இந்தச் சரிவு, அமெரிக்க நிர்வாகத்துக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. ஏனெனில், டி-பத்திரங்களின் விலைகளில் ஏற்படும் சரிவு அமெரிக்க டாலரின் மதிப்பிலும் வீழ்ச்சிக்கு வழிவகுக்கிறது. இதனால், டி-பத்திரத்தின் விலையில் ஏற்படும் வீழ்ச்சி (அல்லது அதன் வாங்கும் விகிதத்தில் ஏற்படும் உயர்வு) யூரோ போன்ற பிற நாணயங்களுக்கு முதலீட்டாளர்களை மாற்றிவிடும்.
மற்ற நாட்டுப் பத்திரங்களை வாங்குவது அமெரிக்க டாலரின் மீதான நம்பிக்கை இழப்பைக் குறிக்கிறது. உலகின் ‘இருப்பு நாணய’மாக (Reserve currency) அமெரிக்க டாலர் பலவீனமடைவதற்கான அறிகுறியாக டி-பத்திரச் சந்தையில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு பார்க்கப்படுகிறது.
டிரம்ப்பின் வரிக் கொள்கையின் முரண்பாடுகள் அவருக்கு டி-பத்திரச் சந்தையால் காட்டப்பட்டன - அமெரிக்காவுக்கு வேலைகளைத் திரும்பக் கொண்டுவருவதற்கான வர்த்தக வரிப் போரின் விலை, உலகின் இருப்பு நாணயமாக இருக்கும் அமெரிக்க டாலரின் அபரிமிதமான சலுகையை இழக்க வைத்துவிடும்.
அத்தகைய நிலை, அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக மாற்றுவது என்கிற டிரம்ப்பின் அரசியல் முழக்கத்தின் அடித்தளத்தையே சீர்குலைக்கிறது. நிச்சயமற்ற தன்மை இன்னும் தீரவில்லை. ஆனால், பத்திரச் சந்தையில் ஏற்பட்டுள்ள இந்தச் சீற்றம் பொருளாதாரத்தை நிர்வகிப்பதில் டிரம்ப்புக்கு உள்ள எல்லையை வரையறுத்துக் காட்டியுள்ளது என்பது மட்டும் தெளிவாகிறது.
- தொடர்புக்கு: raghav.srinivasan@apu.edu.in