சிறப்புக் கட்டுரைகள்

காவிரி டெல்டா: அகழாய்வுக்கு வராத வரலாறு

வெ.ஜீவகுமார்

நட்சத்திரங்களின் ஒளியில் சிந்துவெளி நாகரிகப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு தன் நூற்றாண்டை நடத்துகிறது. அதன் நிறைவு விழாவில் சிந்துவெளி எழுத்துமுறையைப் புரிந்துகொள்ள உதவும் வழியைத் தொல்லியல் அறிஞர்கள் ஏற்கும்படி வெளிக்கொணர்வோருக்கு ரூ.8.5 கோடி பரிசைத் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதேவேளை, குஜராத்தின் துவாரகா கடல் பகுதி​களில் நீருக்கு அடியில் மீண்டும் ஓர் ஆய்வுப் பணி தொடங்கி​யிருக்​கிறது. ஒன்பது பேர் அடங்கிய மத்திய அரசின் தொல்பொருள் ஆய்வுக்குழு இதில் ஈடுபட்​டிருக்​கிறது.

ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் பஞ்ச திராவிட நாடுகள் என்கிற பெயரில் தமிழ்​நாடு, ஆந்திரம், கர்நாடகம், குஜராத், மகாராஷ்டிரம் ஆகியவற்றைச் சிந்து​வெளி​யுடன் இணைக்​கிறார். திராவிட குஜராத், திராவிட மகாராஷ்டிரம் என்று தொல்லியல் ஆய்வாளர் ஆர்.பால​கிருஷ்ணனின் ஆய்வு குறிப்​பிடு​கிறது. இந்த மகத்தான முயற்சி​களில் தமிழகத்தைப் பொறுத்தவரை ஒரு மகாநதி​யாகப் பெருக்​கெடுக்க வேண்டிய காவிரிச் சமவெளியின் ஆய்வு தேங்கி நிற்கிறது.

இந்திய வேளாண்​மையில் முதலிடம்: கார்பன்-14 கால நிர்ணய முறையிலும் செயற்​கைக்கோள் ஒளிப்​படங்கள் உள்ளிட்ட ஆய்வுச் சோதனை​களிலும் காவிரியின் வயது சுமார் 5 லட்சம் ஆண்டுகள் எனப்படு​கிறது. காவிரி பற்றிய செய்திகளை ராமாயணத்தில் கம்பர் மட்டுமல்ல வால்மீகியும் இயற்றி​யுள்​ளார். உலகில் உள்ள மொத்தம் 40 டெல்டாக்​களில் காவிரியும் ஒன்று.

எனினும் வேறு டெல்டாக்​களில் இருந்து காவிரியைப் பிரிப்பது சிற்பம், நாட்டியம், இசை என்னும் கலை இலக்கி​யத்தின் வண்டல் பதிவு​களாகும். இந்தியாவின் பெரிய நதிகளில் காவிரி எட்டாம் இடத்தை​யும், தமிழகத்தில் முதல் இடத்தையும் பெறுகிறது. 1900களின் தொடக்​கத்தில் இந்திய வேளாண்​மையில் முதலிடம் பெற்ற பகுதி காவிரியே ஆகும்.

தொன்மையில் நதிக் கரைகளில் இருந்த ஊர்களே அந்தந்தப் பிரதேசங்​களின் தலைநகரங்களாக அமைந்தன. பாசேயிக் ஆற்றின் கரையில் இருந்த நியூயார்க் அமெரிக்​காவின் முதல் தலைநகராக இருந்தது; தேம்ஸ் நதிக் கரையில் உள்ள லண்டன் பிரிட்​டனின் தலைநகர், ஹூக்ளி நதியின் கொல்கத்தா பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் தலைநகர் என அமைந்தன. காவிரிப்​பூம்​பட்​டினமும் சோழ தேசத்தின் தலைநகராக இருந்தது.

சிந்துவெளி நிலவியல் அமைப்பில் பாகிஸ்​தான், ஆப்கன், இவற்றுடன் இந்தியப் பகுதிகள் அமைகின்றன. புறநானூற்றின் 33ஆம் பாடலில் வரும் சோழன் நலங்கிள்​ளியோடு தொடர்​புள்ள ஏழெயில் இதில் இடம்பெறுகிறது. கடல் வணிகத்தில் தொடக்​கத்தில் ஆதிக்கம் செலுத்திய பட்டியலில் சீனாவின் சாங், எகிப்தின் பாதிமைட் உள்ளிட்​ட​வற்றோடு தமிழகத்தின் சோழ வம்சமும் இடம்பெற்றுள்ளது. உலகின் மிகப் பழமையானதாக மெசபடோமியா நாகரி​க​மும், நைல் நாகரி​கமும் கருதப்​படு​கின்றன.

சிந்து நதிக்கரை நாகரிகம் 4,625 ஆண்டு​களுக்கு முந்தைய​தாகக் கூறப்​பட்​டாலும் சிந்துவெளி ஆய்வுகள் முடிய​வில்லை. 1784இல் இந்திய ஆசிய சங்கம் என்னும் அமைப்பு (The Asiatic Society of India) தொடங்​கப்​பட்டது. தென்னிந்​தியத் தரவுகளில் இந்த அமைப்பு கவனம் செலுத்​தவில்லை. 1861இல் இந்தியாவில் தொல்லியல் துறை அமைக்​கப்​பட்டது. 1924இல் சிந்துவெளி நாகரி​கத்தை ஆய்வுசெய்த ஜான் மார்ஷல் 1931இல் விரிவான அறிக்கை தந்தார்.

பராமரிப்​பின்மை: சிந்துவெளி ஆய்வு தமிழகத்தில் கொடுமணல் முதல் கீழடி வரை உள்ள தடயங்களை ஆவணப்​படுத்து​கிறது. சோகம் யாதெனில், காவிரியின் பல்வேறு அடையாளத் தடங்கள் அழிந்து​வரு​வது​தான். இப்போதும் ராணிப்​பேட்டை மாவட்டம் சோளிங்கர் மலைக் குகையில் உள்ள பராந்தகச் சோழனின் கல்வெட்டு பாதுகாக்​கப்பட்ட சின்னமாக இந்தியத் தொல்லியல் துறையால் அறிவிக்​கப்​பட்​டாலும், பராமரிப்பு மோசம்​தான். மகேந்​திரவாடி குடைவரைக் கோயிலுக்கு அருகிலுள்ள கோடம்​பாக்கம் கிராமத்தில் பொ.ஆ. (கி.பி.) 10ஆம் நூற்றாண்டின் சோழர் காலப் பாறைக் கல்வெட்டு பதிவுசெய்​யப்​பட​வில்லை.

சோழர்​களின் ஆனைமங்கலச் செப்பேடுகள் நெதர்​லாந்தின் லெய்டன் பல்கலைக்​கழகத்தில் உள்ளன. காவிரிப் பகுதியைச் சேர்ந்த ஓலைச்​சுவடிகள் அனலிலும் புனலிலும் அழிக்​கப்​பட்டதை டாக்டர் உ.வே.​சா.வின் நூல்கள் இயம்பு​கின்றன. முனைவர் பா.ஜம்​புலிங்கம் தஞ்சைப் பகுதியில் தம் ஆய்வில் தலை இல்லாத புத்தர் சிலைகளைக் கண்டதாகக் கூறுகிறார். ஒரு முறை தம் ஆய்வில் புத்தரின் தலை எங்கே என்று கேட்ட​போது.

“இது அறுவடைக் காலம், நெல்லைப் போரடிக்க அதைத்தான் பயன்படுத்து​வோம். தேடுங்​கள்... எங்கே​யாவது கிடைக்​கும்” என்று பதில் கூறப்​பட்டது. பழம் நடுகற்கள் தொடர்ச்சியான பாசனப் பணிகளில் வயல்வெளி​களில் அழிந்தன, துணி துவைக்கும் கற்களாக நீரில் கரைந்தன. கணக்காயர்​களும், ஓலை நாயகர்​களும் செப்பேடு​களில் வெட்டி​யும், ஓலைகளில் கீறியும் வைத்தவற்றைக் காலம் களவாடியது. போர்களில் பூம்புகார் போன்ற நகரங்கள் தீக்கிரை​யாக்​கப்​பட்டன.

அது ஒரு காலம்... சோழ மன்னன் ஆணையிட்டால் சீனத்தின் வணிகம் ஸ்தம்​பித்தது. “தமிழ்​நாட்டு வணிகர்கள் துகிலைக் கொடுத்து நம் தங்கத்தை அள்ளிச்​செல்​கிறார்கள். இதை செனட் தடுக்க வேண்டும்” என்று பிளினி பொ.ஆ.மு. (கி.மு.) 500இல் ரோமானிய அரண்மனையில் முறையிட்​டார்.

உலகின் முதல் நகரம் மெசபடோமி​யாவின் உரூக் எனப்படு​கிறது. இந்த வகையில், காவிரிப்​பூம்​பட்​டினமும் ஆய்வு​களில் முன்மொழியப்​படு​கிறது. இதன் தெற்கே காவிரியும் கிழக்கே கடலும் அமைந்துள்ளது. வடக்குக் கோட்டை வாசல் வழியாக தென்வடக்​காகச் செல்லும் ராஜவீதி ஊரைப் பிரிக்​கிறது.

குஜராத்தின் தோலவிரா நகரம் செழித்​திருந்தபோது இன்று உப்பள​மாகக் காட்சி​யளிக்கும் நிலம் 4.5 மீட்டர் நீரில் மூழ்கி இருந்​த​தாகக் கூறுவர். மணிபல்லவம் சென்ற மணிமேகலை திரும்ப வந்தபோது, பூம்புகாரை உப்புக்கடல் மூழ்கடித்​திருந்ததாக இலக்கியம் பேசுகிறது. தேசிய கடல்சார் நிறுவனம் (CSIR - National Institute of Oceanography) நடத்திய ஆய்வில் பூம்பு​காரில் இதுவரை ஒருமுறைதான் நீருக்​கடியில் ஆய்வு நடத்தப்​பட்​டுள்ளது. குஜராத்தின் துவாரகா பகுதியில் 1981ஆம் ஆண்டிலும் அதற்குப் பிறகும் இப்போது 2025இலும் நீருக்​கடியில் ஆய்வு தொடர்​கிறது.

கோவா தேசிய ஆழ்கடல் ஆய்வு நிறுவனத்​தினர் நவீனக் கருவி​களின் உதவியுடன் பூம்பு​காரில் புவியியல் ஆய்வுகள் மேற்கொண்​டனர். அங்கு கடலில் 10 மீட்டர் அளவுக்கு அடிப்​பரப்பைக் கொண்டுள்ள 3 மீட்டர் உயரக் கூம்பு போன்ற மேடுகள் தெரிகின்றன என்றனர். நீரியல் வல்லுநர்களை வைத்து ஆய்வைத் தொடருமாறு கூறினர். அந்தத் திசையில் ஆய்வுகள் நடக்க​வில்லை. தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சி நிறுவனம் பூம்புகார் ஆய்வைப் பாதியில் நிறுத்​தியது.

தமிழக அரசின் ஆய்வு​களில் பூம்புகார் குறித்த தீவிரமில்லை. கடல் விழுங்கிய பூம்புகார் தடயம் 6 கி.மீ. வரை கடலில் உள்ளதாகத் தமிழக அரசின் தொல்லியல் துறை கூறியிருந்தது. பட்டியலில் பூம்புகார் இருந்​தாலும் தமிழக அரசின் வெளியீட்டில் காவிரிச் சமவெளிக்குப் போதிய இடமில்லை.

காவிரி கடைப்​பாசனப் பகுதியில் மயிலாடுதுறை அருகில் உள்ள செம்பியன் கண்டியூரில் சிந்துவெளி எழுத்துகளை ஒத்த குறிகளும் புதிய கற்காலக் கோடரியும் கண்டு​பிடிக்​கப்பட்டதை சிந்துவெளி நாகரி​கத்தைத் தமிழகத்தோடு தொடர்​புபடுத்தும் கண்டறிதல் என ஐராவதம் குறிப்​பிடு​கிறார். அந்தத் திசையில் ஆய்வு பயணிக்க​வில்லை.

அரசுகளின் கடமை: சிந்துவெளி நாகரி​கத்தின் நகர்மய எழுச்சிக்கு அடிப்படை வேளாண்மை எனக் கருதப்​படு​கிறது. பொருநை ஆற்றங்​கரையில் 3,200 ஆண்டு​களுக்கு முன்பே நெல் பயிரிடப்​பட்​ட​தாகச் சிவகளை ஆய்வு கூறுகிறது. இது காவிரிக்குக் கூடுதலாகப் பொருந்தும். பூம்புகார் ஆய்வின் நாயகன் கடல் ஆகும்.

எனினும் கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதியில் விதிமுறைகள் பின்பற்​றப்​பட​வில்லை என்றும் கண்காணிப்பு இல்லை என்றும் இந்தியத் தணிக்கை அறிக்கை கூறுகிறது. அழிகிற கடற்பகு​தி​களில் பூம்புகார் பகுதியும் அமைந்துள்ளதாக தேசியக் கடலோர ஆராய்ச்சி மையத்தின் ஆய்வு கூறுகிறது. காவிரியைக் கடலோடு இணைக்கும் பூம்புகார் பகுதி காப்பாற்​றப்பட வேண்டும். இதற்கான நீரியல், தொல்லியல் ஆய்வுகளை மத்திய - மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்​.

- தொடர்புக்கு: vjeeva63@gmail.com

SCROLL FOR NEXT