சிறப்புக் கட்டுரைகள்

ஆணவக் கொலைகளுக்குத் தனிச்சட்டம் தீர்வாகுமா?

ச.பாலமுருகன்

அண்மையில், திருப்பூர் மாவட்டத்தில் முதுகலைப் பட்ட மாணவி ஒருவர், தனது சகோதரரால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். குடும்ப வறுமையிலும் பகுதிநேர வேலைக்குச் சென்று படித்துவந்த அந்தப் பெண், வெண்மணி என்கிற ஆய்வு மாணவரைக் காதலித்து உள்ளார்.

இருவரும் எதிர்காலத்தில் திருமணம் செய்ய முடிவுசெய்திருந்த நிலையில், அந்தப் பெண் கொல்லப்பட்டிருக்கிறார். திருப்பூர் மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளர் இந்தக் கொலையை ஆணவக் கொலை எனக் கூற முடியாது என்று கூறியதாக வெளிவந்த செய்தி, சர்ச்சையைக் கிளப்பியது. இதையடுத்து, ஆணவக் கொலைகளைத் தடுக்கத் தனிச் சட்டம் கொண்டு வருவது குறித்த விவாதம் மீண்டும் எழுந்திருக்கிறது.

பொதுப் புத்தியும் புரிதலின்​மையும்: ‘ஆணவக் கொலை’ எனப் பழைய - புதிய இந்திய தண்டனைச் சட்டத்தில் தனி வகைப்பாடு இல்லாததைக் காவல் துறையினர் பல தருணங்​களில் சுட்டிக்​காட்டு​கின்​றனர். கடந்த சில ஆண்டு​களுக்கு முன்பு தமிழகத்தில் நடந்த ஆணவக் கொலை தொடர்பான தகவல்​பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கும் இதுதான் காவல் துறைத் தரப்பின் பதிலாக இருந்தது.

ஆனால், இது உண்மை நிலையை முன்வைக்கும் பதில் அல்ல. ஏனெனில், தொடர்ந்து நீதிமன்​றங்கள் ஆணவக் கொலை தொடர்​பாகப் பல தீர்ப்புகளை வழங்கி​யுள்ளன. ஆணவக் கொலைகள் என்பவை சுய விருப்​பத்தின் அடிப்​படையில் சாதியையும் மதத்தையும் மீறித் திருமண உறவைத் தேர்வுசெய்த காரணத்தால் குடும்பத்​தினரால் நிகழ்த்​தப்​படும் கொலைகள் எனச் சட்ட ஆணையம் குறிப்​பிட்​டுள்ளது.

காதல் திருமணம் புரிவ​தால், மணமுறிவு கோருவ​தால், திருமண உறவுக்கு முரணான உறவுநிலை​யால், பாலியல் தாக்குதல் பாதிப்​புக்கு உள்ளானதால் தாக்கப்​படுவதை / கொலை செய்யப்​படுவதை ஆணவக்​குற்றம் / ஆணவக்கொலை என உச்ச நீதிமன்றம் முடிவுசெய்​கிறது. நீதிமன்​றங்​களின் தீர்ப்பு​களும் சட்டங்​கள்​தான். இந்த வரையறை​களைக் காவல் துறையினர் ஆணவக்கொலை தொடர்பான சட்ட வரையறை எனக் கருத வேண்டும்.

பொதுப் புத்தி​யில், குழு மனநிலையில் காதலர்கள் மீது நிகழ்த்​தப்​படும் வன்முறைகளை நியாயப்​படுத்தும் சாதிய மனநிலை கட்டமைக்​கப்​படு​கிறது. இக்குற்​றங்​களைக் கண்டிக்​காமல் செல்லும் மனநிலை, ஏதோ ஒருவகையில் குற்றத்தில் ஈடுபடு​வோருக்கு ஊக்கத்தை வழங்கக்​கூடும்.

நீதிமன்​றங்கள் ஆணவக்​கொலையைக் கடுமையாக எடுத்து தண்டனை தரும் சூழலில், அதன் தாக்கம் பொதுச் சமூகத்தில் முறையாக உணரப்​படு​வ​தில்லை. அது தொடர்பாக அரசியல் - சமூகத் தளங்களில் உரையாடல்களை விரிவுபடுத்த வேண்டியது அவசியம்.

ஆட்சி​யாளர்​களின் நிலைப்பாடு: ஆணவக்​கொலைகள் நிகழும்​போது, ஆணவக்​கொலைக்கு எனத் தனிச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று குரல்கள் எழுகின்றன. ஆனால், வாக்கு வங்கி அரசியல் காரணமாக ஆட்சி​யாளர்கள் அதுபோன்ற சட்டத்தை இயற்றத் தயங்கு​கின்​றனர். உச்ச நீதிமன்றம் அறிவுறுத்திய பின்னரும் ஆணவக்​கொலைகளுக்குத் தனியாகச் சட்டம் இயற்ற மத்திய அரசு முன்வர​வில்லை.

இப்படி ஒரு சட்டம் கொண்டுவர 15 மாநிலங்கள் மட்டும் இசைவு தெரிவித்​த​தாக​வும், மற்ற மாநிலங்​களில் அது பற்றி ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் மத்திய அரசு ஒரு காரணம் கூறியது. ஹரியாணா போன்ற மாநிலங்​களில் காப் பஞ்சா​யத்து என்கிற பெயரில் நடைபெறும் சாதியப் பஞ்சா​யத்​துக்​களைத் தடை செய்ய அரசியல்​வா​திகள் வெளிப்​படையாக எதிர்ப்புத் தெரிவித்​தனர். சில மாநிலங்​களில் மறைமுகமாக ஆட்சி​யாளர்​களுக்கு எதிர்ப்பு எழுந்தது.

சட்டம் மட்டும் போதுமா? - நிச்சய​மாகச் சட்டம் மட்டும் குற்றங்​களைத் தடுத்து​வி​டாது. ஆனால், அதுபோன்ற குற்றங்​களைத் தடுப்​ப​தற்​கும், கடுமையாக எதிர்ப்​ப​தற்கும் துணைபுரியும் சட்ட வடிவமாக ஒரு தனிச் சட்டம் இருந்​திருக்​கும். ‘சக்தி​வாகினி எதிர் இந்திய யூனியன்’ என்கிற வழக்கில் 2018 மார்ச் 27 அன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, ஆணவக்​கொலைக்கான தனிச் சட்டம் என்று பலர் உருவகித்​திருக்கும் அம்சங்​களைக் கொண்டிருக்​கிறது. நீதிப​திகள் தீபக் மிஸ்ரா, சந்திரசூட், கன்வல்கர் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பு இது.

இந்தத் தீர்ப்பின் அடிப்​படையில் ஆணவக் குற்றங்கள் அல்லது கொலைகளைத் தடுக்க நடவடிக்கை எடுத்தல், பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு உதவும் நடவடிக்கை, குற்றத்தில் ஈடுபடு​வோருக்குத் தண்டனை நடவடிக்கை என மூன்று பகுதிகளாக இந்தக் குற்றத்தை அரசு அணுக வேண்டும். தடுப்பு நடவடிக்கை​யின்படி, ஆணவக் குற்றம் நிகழ்த்​தப்​படும் சாத்தி​ய ​முள்ள கிராமங்​களையும் பகுதி​களையும் அடையாளம் கண்டு எச்சரிக்கை​யுடன் இருக்க வேண்டும். காவல் துறையினர் தங்களின் மேலதி​ காரி​களுக்கு உடனே அது பற்றித் தகவல் தெரிவித்துப் பதிவுசெய்ய வேண்டும்.

தமிழகத்தில் கட்டப்​பஞ்​சா​யத்து, வட மாநிலங்​களில் காப் பஞ்சா​யத்து என சாதி மறுப்புத் திருமணம் புரிவோருக்கு அல்லது பிற திருமணங்​களில் பெண்களின் முடிவு​களுக்கு எதிராகக் கூட்டம் கூடினால், மாவட்ட ஆட்சியர், காவல் துறை கண்காணிப்​பாளர் இணைந்து அவற்றைச் சட்டவிரோதக் கூட்டம் எனத் தடுக்க வேண்டும். காதலர்​களுக்கும் அவர்களின் குடும்பத்​தினருக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.

காதலர்கள் அல்லது இணையர்​களுக்குப் பாதுகாப்பான முறையில் திருமணம் செய்து, முறையாகப் பதிவுசெய்யக் காவல் துறை முன்வர வேண்டும். அவர்கள் தங்கு​வதற்குக் காவல் துறை கண்காணிப்​பாளர் கண்காணிப்பில் உள்ள பாதுகாப்பான விடுதிகள் எல்லா மாவட்​டங்​களிலும் உருவாக்​கப்பட வேண்டும். குறைந்த கட்டணத்தில் பாதுகாப்புடன் அவர்களைத் தங்கவைக்க வேண்டும். பாதுகாப்பற்ற சூழல் நிலவும் நிலையில், ஓராண்டு வரைகூட அவர்கள் அங்கு தங்கலாம்.

இணையர்​களுக்கு அச்சுறுத்தல் தரும் சக்திகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுப்​ப​தற்கு ஏதுவாக வழக்குப் பதிவுசெய்ய வேண்டும். மேலும், அவசர உதவி கோரும் காதலர்கள் 24 மணி நேரமும் காவல் துறையினரையும் அரசையும் தொடர்​பு​கொள்ள இலவச எண்கள் செயல்​பாட்டில் இருக்க வேண்டும். அவற்றை எல்லாரும் அறியும்​படியான பரப்பு​ரைகள் அவசியம். இந்தப் பணிகளை மாவட்டச் சமூக நல அதிகாரி, காவல் துறை கண்காணிப்​பாளர் இணைந்து மேற்கொள்ள வேண்டும்.

தவறு செய்த அதிகாரிகள் மீது உரிய உள் விசாரணை மேற்கொண்டு தண்டிக்​கப்பட வேண்டும். மேலும், அதனை அவர்களின் பணிப் புத்தகத்தில் பதிவுசெய்ய வேண்டும். இந்த வழிகாட்டி நடைமுறையை மாநில அரசு, மத்திய ஆட்சிப் பகுதி​களில் உடனே நடைமுறைப்​படுத்த மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் உரிய தலைமைச் செயலர்​களுக்கு 31.5.2018 சுற்றறிக்கையில் உத்தர​விட்​டுள்ளது.

நமது அரசமைப்புச் சட்டக்கூறு 141இன்கீழ் உச்ச நீதிமன்​றத்தின் தீர்ப்பு எல்லா நீதிமன்றம், மாநிலங்​களைக் கட்டுப்​படுத்​தும். அவையும் சட்டங்களே. மேற்கண்ட தீர்ப்பை நடைமுறைப்​படுத்த மாநில அரசு மறுக்க இயலாது. ஆணவக் கொலைகளுக்குத் தனிச் சட்டம் வரும்போது வரட்டும். அது இந்த வழிகாட்​டியைவிட வலுவானதாக இருக்​கப்​போவ​தில்லை. ஒருவேளை, வழக்கு விசாரணையில் நிரூபிக்கும் பொறுப்பு மட்டும் குற்றம்​சாட்​டப்​பட்டவர் மீது தனிச் சட்டத்தில் சுமத்​தப்​படலாம். ஆனால், அது விவாதத்​துக்​குரியது.

ஆணவக் குற்றங்​களுக்கு எதிராகத் தனிச் சட்டத்​துக்​காகச் சமூகம் காத்திருக்கத் தேவையில்லை. உச்ச நீதிமன்றம் வழங்கிய மேற்கண்ட தீர்ப்பு சார்ந்த சட்டத்தை அரசு நடைமுறைப்​படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. மேற்கண்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்​படையில் செயல்படாத அரசு, நிர்வாகம் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அவமதிப்பு செய்வ​தாக​வும், நீதி வழங்கும் முறையில் தலையீடு செய்வதாகவும் சிவில் நீதிமன்ற அவமதிப்​பாகவும் கருதப்​படும்.

ஒருவேளை இந்தத் தீர்ப்பை நடைமுறைப்​படுத்​தலில் தடுக்க முயல்வது, குற்றம் சார்ந்த நீதிமன்ற அவமதிப்பு என வகைப்​படுத்​தப்​படும். ஆணவக் குற்றங்​களுக்குத் தனிச் சட்டம் எனக் கோருவோர் இந்தத் தீர்ப்பு நடைமுறைப்​படுத்​தப்​படு​கிறதா எனக் கண்காணிக்க வேண்டும். எப்போதும் விழிப்புடன் இருப்பது சுதந்திர - ஜனநாயகச் சமூகத்​தினைப் பாதுகாக்க உதவும்​!

- தொடர்புக்கு: balamuruganpucl@gmail.com

SCROLL FOR NEXT