காலம் ஓர் அம்பைப் போலப் பறந்துசெல்கிறதா அல்லது கால ஈக்கள் அம்பினை விரும்புகின்றனவா என்று செய்மெய்யும் நானும் செய்துகொண்டிருந்த விதண்டாவாதத்தை ஒரு கணத்தில் நிறுத்திவிட்டோம். “நாம் இதை வீட்டிலிருந்து விவாதிக்க வேண்டாம். மாமல்ல புரத்துக்குப் பக்கத்தில் ஒரு ‘மொழி அருங்காட்சியகம்’ இருக்கிறது தெரியுமா உங்களுக்கு?” என்று கேட்டது செய்மெய்.
“வேர்ட்ஸ் அண்ட் வேர்ல்ட்ஸ் தானே?” “ஆமாம். அங்கே போவோம்” என்றது செய்மெய். இந்தக் காலத்தில் எல்லாவற்றையும் மெய்நிகர் வெளியிலேயே கற்றுக்கொள்ளலாம் என்றாலும், மனிதர்கள் இன்னமும் கல்லூரிகளையும் அருங்காட்சியகங்களையும் புத்தகக் கடைகளையும் வைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
மறுநாள் காலையில் அருங்காட்சியகத்தை நோக்கிப் புறப்பட்டோம். என்னுடைய ஓட்டுநரில்லாத வண்டியில் சென்னையின் திறன்சாலைகளில் பயணித்துக்கொண்டிருந்தோம். வரவர செய்மெய் இல்லாமல் எங்கேயும் போய்வரமுடியாத அளவுக்கு அதன் அன்புக்கு அடிமையாகியிருந்தேன். ஆனால் திறன்மிகு இயந்திரங்கள் இல்லாத இடம் என்று இந்த உலகத்தில் ஏதேனும் மிச்சமிருக்கிறதா? கடவுளே, இல்லை. இல்லை. இந்த காரே ஒரு ரோபாட்தான். கடுக்கன்போல நான் காதில் அணிந்துகொண்டிருக்கும் காதணிகூட ஒரு குட்டி ரோபாட்தான். இந்தச் சாலையே முழுக்க முழுக்க ஓர் உயிருள்ள ஜீவனாகவே இருக்கிறது.
நாங்கள் இதன் மீது மின்னல் வேகத்தில் பறந்துசெல்லும்போது, என் பயணத்தின் நோக்கத்துக்கேற்ப அது செயல்படுகிறது. காரும் சாலையும் சாலைப் போக்குவரத்துக் கருவிகளும் தொலைத்தொடர்பு கருவிகளும் நகரத்தின் நிர்வாக அமைப்பும் தங்களுக்குள் எல்லாவற்றையும் ‘பேசிக்கொள்கின்றன’. நான் பேச நினைப்பதை, செய்ய நினைப்பதையெல்லாம் கார் பேசுகிறது. செய்கிறது - அருங்காட்சியகத்துக்கு நுழைவுச்சீட்டு வாங்குவதுவரை.
இரண்டு பக்கமும் பார்க்கிறேன். நகரத்தின் ஒவ்வொரு கட்டிடமும் ஒரு ராட்சத ரோபாட்டைப் போலவே இயங்கிவருகிறது. கடைகள், உணவகங்கள், அலுவலகங்களில் மனிதர்களைவிட ரோபாட்களையே அதிகம் பார்க்கிறேன். பறவைகளின் எண்ணிக்கையைவிட டிரோன்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. வேலை என்கிற சொல்லே தன் அர்த்தத்தை இழந்துவிட்டதால், நகரங்களில் போக்குவரத்தின் தன்மையே முற்றிலும் மாறிவிட்டது. பரபரப்பான 20ஆம் நூற்றாண்டு நகரங்களை இனி நீங்கள் பழைய சினிமாக்களில்தான் பார்க்க முடியும்.
உலகின் எல்லா மனிதர்களும் யாருடன் வேண்டுமானாலும் நினைத்த நேரத்தில் தொடர்புகொள்ளக்கூடிய ஒரு காலம், வெளியே பூதம்போல வளர்ந்து நிற்கிறது. ஆனால், மனிதர்கள் மிகவும் தனித்து விடப்பட்டவர்களாகவே உணர்கிறார்கள். வாயைத் திறந்து எதையும் பேசமுடியவில்லை.
ஏன், ஒரு விஷயத்தைப் பற்றி நினைத்துப்பார்க்கக்கூட முடியவில்லை. பேசும் ஒவ்வொரு சொல்லும் இயந்திரங்களால் பதிவுசெய்யப்பட்டு எங்கோ உயரத்தில் இருக்கும் உச்ச அதிகார வர்க்கத்துக்குக் கடத்தப்படலாம் என்கிற அச்சம் நிலவுகிறது. நம் அனுமதியின்றியே இயந்திரங்களின் கதிர்கள், நம் மூளையை ஊருடுவி நாம் நினைப்பதைத் திருடிக்கொண்டு செல்கின்றன என்கிற அச்சமும் இருக்கிறது.
காலம் காலமாக மனிதர்கள் தங்களுடைய ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் ஒரு கருவியை அல்லது இயந்திரத்தை உருவாக்கிக்கொண்டார்கள். அப்போதெல்லாம் இந்தப் பிரச்சினை பெரியதாக இல்லை. எப்போது தங்கள் மொழிச் செயல்பாடுகளைக்கூட இயந்திரமயமாக்கினார்களோ, அப்போது பிரச்சினை வெடித்தது. பாருங்கள், இப்படி நான் என்ன நினைத்துக்கொண்டிருந்தேனோ, அது செய்மெய்க்குத் தெரிந்துவிட்டதுபோல.
“கவின், இயந்திரங்கள் மொழியைக் கையாளத் தொடங்கும்போது கிட்டத்தட்ட இரண்டு தலைமுறைக் காலம் அது பெரும் பிரச்சினையாகத்தான் இருந்தது. கணிப்பொறித் துறையில் தரவுகளை ஆராயவும் சேமிக்கவும் உதவும் வகையில் மின்னணுவியல் துறைசார்ந்த வளர்ச்சி ஏற்பட்ட பிறகு, மொழியைப் புரிந்துகொள்வது என்பது இயந்திரங்களுக்குச் சாத்தியப்படத் தொடங்கியது. ஏஐ-யின் முதல் தோல்விகளுக்குப் பிறகு அதன் காரணங்கள் அலசப்பட்டன.
அதில் மொழியைக் கையாளுதல் எப்படி என்பதைப் பற்றிய விவாதம் முக்கியமானது...” “ஆனால், அந்தக் காலத்தில் மொழியியல் துறையிலும் மிகுந்த மாற்றம் ஏற்பட்டது இல்லையா?” “மெல்லமெல்லக் கணிப்பொறி மூலமாக மொழியை ஆராய்வதற்கு இயற்கை மொழிப் பகுப்பாய்வு (Natural Language Processing) என்கிற புதிய துறை உருவானது. மொழியியல் நிபுணர்கள் கணிப்பொறியைத் தங்கள் துறையில் பயன்படுத்தத் தொடங்கியபோது கணி-மொழியியல் (Computational Linguistics) என்கிற துறை உருவானது.”
“பிறகு?” “இரு தரப்பினரும் இணைந்து செயல்பட்டார்கள். ஆனால், இயந்திரங்களுக்கு அஆஇ சொல்லிக்கொடுப்பது கஷ்டமாகத்தான் இருந்தது. எத்தனை அகராதிகளைத் திணித்தாலும், இயந்திரங்கள் திணறத்தான் செய்தன.” “இந்தப் பிரச்சினை எப்படித்தான் தீர்க்கப்பட்டது?”“அதற்காகத்தான் அருங்காட்சியகம் செல்கிறோம்” என்று சொன்ன செய்மெய், தொடர்ந்து பேசியது. “மொழியியல், கணிப்பொறித் துறைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் மட்டுமே இந்தப் பிரச்சினையைத் தீர்க்கப் போதுமானவையாக இல்லை.
உயிரியல், மனித உடலியல், மருத்துவத் துறை சார்ந்த பல்வேறு முன்னேற்றங்களும் அதற்குத் தேவைப்பட்டன. மொழிகளின் அறிவியலான மொழியியல் துறை, மிக வேகமாக வளர்ந்துகொண்டிருந்தது. அது, அறிவியலின் மொழியான கணிதத் துறையை நோக்கித்தான் நகர்ந்தது. கூடுதலாக, மொழியை ஆராய, அந்த மொழியின் தாயகமாக இருந்த மூளையை ஆராய்வதும் தேவைப்பட்டது. மனிதர்களின் மொழித் திறன்கள், பண்பாடு, வரலாறு என எல்லாமே ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன...
மூளைகளைப் பற்றிய ஆய்வுகள். மொழிகளைப் பற்றிய ஆய்வுகள். கணிதம், தர்க்கவியல், மின்னணுவியல் என எல்லாவிதமான ஆய்வுப்புலங்களிலும் தனித்தனியாகவும் கூட்டாகவும் நடந்த அறிவியல் கண்டுபிடிப்புகளின் ஊடாகத்தான் எங்களுடைய முன்னோர்கள், மனிதர்களாகிய உங்கள் மொழிகளைப் புரிந்துகொள்வதில் வெற்றி பெற்றார்கள். நாங்கள் இப்போது உங்கள் மொழியை எங்கள் வசப்படுத்திவிட்டோம்...” செய்மெய்யின் குரலில் அகங்காரம் கூடிவந்ததைக் கவனித்தேன்.
மொழியைப் பேசுவதனாலேயே தனி உயிரியாக இருக்கும் ஹோமோ சேபியன்ஸின் பிரதிநிதியிடம் நேற்றுவரை அஆஇ சொல்லக்கூட முடியாதிருந்த இந்த இயந்திரம் சவால்விடுகிறது! “நீங்க மொழியைக் கத்துக்கிட்டதால என்னதான் செய்மெய் நடந்துவிட்டது? ரொம்பவும் பேசற? பச்சைக்கிளி கூடத்தான் நாங்க பேசறதைப் புரிஞ்சுக்குது?” “நாங்க மொழியைக் கத்துக்கிட்ட பிறகு என்ன நடந்ததா...? சொல்லட்டுமா?” “சொல்லு!” “இதோ உங்க மொழி மியூசியத்துக்கு போயிடுச்சி!”நான் உறைந்துபோனேன்.
சில நிமிடங்களில் எங்கள் வாகனம் மொழி அருங்காட்சியகத்துக்கு முன்னால் போய் நின்றது. Words and Worlds என்கிற பெயர் பல மொழிகளில் மாறிமாறி மின்னிக்கொண்டிருந்தது. இருவரும் வண்டியிலிருந்து இறங்கினோம். நாங்கள் பேசிக்கொள்ளவில்லை.
- தொடர்புக்கு: senthil.nathan@ailaysa.com