சிறப்புக் கட்டுரைகள்

வாண்டுமாமா: தமிழ்ச் சிறார் இலக்கிய ஆசிரியர்!

ஆதி வள்ளியப்பன்

எனது பள்​ளிக் காலத் தமிழ் ஆசிரியர் யாரெனக் கேட்​டால், எனது உடனடி பதில் எழுத்​தாளர் வாண்​டு​மாமா என்​ப​தாகவே இருக்​கும். வாண்டுமாமா பன்​முகத்​தன்மை கொண்ட எழுத்​தாளர், அவர் எந்​தப் பள்​ளி​யில் கற்​றுத் தந்​தார்? எந்​தப் பள்​ளி​யிலும் அவர் ஆசிரிய​ராக பணிபுரிந்​திருக்​க​வில்​லை. ஆனால் ‘பூந்​தளிர்’, ‘கோகுலம்’, தன் சிறார் நூல்​கள் வழி​யாக ஆயிரக்​கணக்​கான தமிழ்ச் சிறாருக்கு அவர் ஆசிரிய​ராக இருந்​திருக்​கிறார் என உறு​திபடக் கூற முடி​யும்.

தமிழ்ச் சிறார் எழுத்​துக்கு வலு​வான அடித்​தளத்தை அழ.வள்​ளியப்​பா, பெரிய​சாமித் தூரன், ஆர்​.​வி. போன்​றவர்​கள் இட்​டிருந்​தார்​கள். அடுத்த கட்​ட​மாக அதைப் பெரிய அளவில் வளர்த்​தவர்​களில் முதன்​மை​யானவர் வாண்​டு​மா​மா. 1990கள், 2000 வரையி​லான தமிழ்ச் சிறார் எழுத்​தாளர்​கள் இலக்​கணப் பிழை​யின்​றி, எளிய தமிழில், சுவாரசி​ய​மாக எழுதும் திறன் வாய்க்​கப் பெற்​றிருந்​தார்​கள். அழ.வள்​ளியப்​பா, வாண்​டு​மாமா போன்​றோரை தொடர்ச்​சி​யாக வாசித்த ஒரு​வர் தமிழில் சரள​மாக வாசிக்​கும், எழுதும் திறனை எளி​தாக வளர்த்​துக்​கொண்​டு​விடலாம்.

தொடக்​கப் பள்​ளி​யில் இருந்து நடுநிலைப் பள்​ளிக்​குச் சென்​றிருந்த காலத்​தில் தமிழில் வாசிக்​க​வும் எழுத​வும் நான் தடு​மாறிக் கொண்​டிருந்​தேன். அப்​போது எனது அத்​தை​யின் பரிந்​துரை​யால் சிறார் இதழ்​களை தேடிப் போனேன். கடை​யில் ‘அம்​புலி​மா​மா’, ‘ரத்​ன​பாலா’, ‘பாலமித்​ரா’, ‘பூந்​தளிர்’, ‘கோகுலம்’ ஆகிய இதழ்​களைக் கண்​டேன். அவற்​றில் பூந்​தளிர் என் மனதுக்கு நெருக்​க​மான​தாக இருந்​தது. காரணம் அதில் வெளி​யான கபீஷ், காக்கை காளி, வேட்​டைக்​கார வேம்​பு, மந்​திரி தந்​திரி, முல்லா நசீரு​தின் உள்​ளிட்ட கதா​பாத்​திரங்​களை மைய​மாகக் கொண்ட படக்​கதைகள். அத்​துடன் குறுக்​கெழுத்​துப் போட்டி என் தமிழ் ஆர்​வத்​தைத் தூண்டி புதிய சொற்​களை யோசிக்க வைத்​தது. புதிர்​கள், கதைகள் சிந்​தனைக்கு விருந்​தாக அமைந்​தன.

படக்​கதைகளில் பாதி கதை படத்​திலேயே தெரிந்து​விடும். மீதியை எழுத்​துக்​கூட்டி வாசித்து அறிந்​து​விடலாமே. அதற்​கடுத்​த​படி வாண்​டு​மா​மா​வின் வரலாறு, அறி​வியல், பொதுஅறி​வுக் கட்​டுரைகள், துணுக்​கு​கள் போன்​றவை ஈர்த்​தன. சிறார் இதழ் படிப்​பது எவ்​வளவு சுவாரசி​ய​மானது என்​பதை மனதார உணர முடிந்​தது. மாதம் இரு​முறை வெளி​யாகும் ‘பூந்​தளி’ரின் நிரந்தர ரசிக​னாக மாறிப்​போனேன். அடுத்த இரண்​டு, மூன்று ஆண்​டு​களில் என் வாசிப்​புத்​திறன் மேம்​பட்​டது. திருச்சி மத்​திய நூல​கத்​தில் சிறார் நூல்​களைத் தேடிப்​போய் வாசிக்​கும் அளவுக்கு அது வளர்ந்​தது. நாளிதழ்​கள், பெரிய​வர்​களுக்​கான இதழ்​களை​யும் வாசிக்​கத் தொடங்​கி​யிருந்​தேன். இப்​போது சொல்​லுங்​கள், வாண்​டு​மாமா எனது ஆசிரியர்​தானே.

நான் பள்ளி முடித்த காலம்​வரை செயற்​கைக்​கோள் தொலைக்​காட்சி அலை​வரிசைகள் அறி​முக​மாகி இருக்​க​வில்​லை. அன்​றைக்கு இருந்த பொழுது​போக்​கு​கள் வாசிப்​பு, விளை​யாட்​டு, சினிமா எனச் சொற்​பமே. அதி​லும் தமிழ் வாசிப்பு மட்​டுமே உலகத்​துக்​கான பலகணி​யாக இருந்​தது. இந்​தப் பின்​னணி​யில், எந்த ஒரு துறை சார்ந்த அடிப்​படைத் தகவல்​களை​யும் தமிழில் வாசித்து அறிந்​து​கொள்ள முடி​யும்; அது​வும் எளிய, சுவாரசி​ய​மான மொழி​யில் என்​பதை பூந்​தளிர், கோகுலம், தனது நூல்​கள் வழி​யாக சாதித்​துக் காட்​டிய​வர் வாண்​டு​மா​மா.

ஒரு ஓவிய​ராக இதழியல் உலகில் நுழைய முயன்​றவர் வி.கிருஷ்ண​மூர்த்தி என்​கிற வாண்​டு​மா​மா. ஆனால், அவருக்கு அது சாத்​தி​யப்​பட​வில்​லை. இதனால் எழுத்​துத் துறை, இதழியல் எடிட்​டிங் (செம்​மைப்​படு்த்தி பதிப்​பித்​தல்) சார்ந்து சிறிய நிறு​வனங்​களில் இயங்​கத் தொடங்​கி​னார். கல்கி நிறு​வனத்​தில் வேலை கிடைத்​தது. அங்கே பெரிய​வர்​களுக்​கான எழுத்​தைத் தாண்டி சிறாருக்கு எழுதத் தொடங்​கி​னார். அதன் மீதான அவரது தீவிர ஆர்​வத்​தைப் பார்த்​து, அவரை மைய​மாகக் கொண்டு ‘கோகுலம்’ இதழை அந்​நிறு​வனம் தொடங்​கியது. ‘அணில்’, ‘கண்​ணன்’, ‘பூஞ்​சோலை’ உள்​ளிட்ட இதழ்​களைத் தொடர்ந்து சிறார் இதழியல் உலகில் கோகுலம் தனித்​துவ இடத்​தைப் பெற்​றது. கெடு​வாய்ப்​பாக கல்கி நிறு​வனப் பொருளா​தார சிக்​கல், தொழிலா​ளர் வேலை நிறுத்​தத்​தால் அந்த இதழ் நிறுத்​தப்​பட்​டது. மீண்​டும் அது வெளிவரத் தொடங்​கிய​போது அழ.வள்​ளியப்பா அதன் ஆசிரியர் ஆனார்.

இதற்​கிடையே வாண்​டு​மாமா வேறு இதழ்​களில் பணிபுரிந்​து​வந்​தார். பணி​யில் இருந்து முறைப்​படி ஓய்வு பெற்ற பின், பூந்​தளிர் இதழுக்கு ஆசிரியர் ஆனார். 1984 முதல் 1989 வரை வந்த இந்த இதழ்​களை நடத்​தி​யது பைகோ நிறு​வனம். கேரளத்​தைச் சேர்ந்த எஸ்​.​வி.பை​யால் நடத்​தப்​பட்ட இந்த நிறு​வனம் அன்​றைய பம்​பாயைச் சேர்ந்த டிங்​கிள், அமர் சித்​திர கதைகளின் உரிமத்தை வாங்கி மலை​யாளத்​தில் பூம்​பாட்டா (வண்​ணத்​துப்​பூச்​சி), தமிழில் பூந்​தளிர் என்​கிற இதழ்​களில் வெளி​யிட்​டது.

பலே பாலு, சமர்த்​துச் சாரு போன்ற அவருடைய கதா​பாத்​திரங்​கள் கோகுலத்​தில் முதலில் வெளி​யாகின. வாண்​டு​மா​மா​வின் மகன், மகளின் பெயரே இந்​தக் கதா​பாத்​திரங்​களின் பெய​ரானது. பலே பாலு ஒரு சேட்​டைக்​காரப் பையன், அதே​நேரம் புத்​தி​சாலி. சாரு​ம​தி​யும் அப்​படித்​தான். பாலு​வின் சேட்​டைகளில் துடுக்​குத்​தனம் மட்​டுமில்​லாமல் அறி​வியலும் ஒளிந்​திருக்​கும். ஒரு டிராயரை அணிந்​து​கொள்​வதன் மூலம் பல வரலாற்​றுக் காலங்​கள், புராணக் கதைக் காலங்​களுக்கு அவன் காலப்​பயணம் செய்​வதும், முக்​கிய​மான/சிக்​கலான கட்​டத்​தில் டிராயரை கழற்​று​வதன் மூலம் நிகழ்​காலத்​துக்​குத் தப்பி வரு​வதும் எனக் கதைகளில் பரபரப்​புக்​குப் பஞ்​சமிருக்​காது.

கதைகள் படிக்க எனக்​குப் பிடிக்​கும் என்​றாலும், கதைகள் சொல்​லத் தெரி​யாது (இப்​போதும்​தான்). வானதி பதிப்​பகம் பதிப்​பித்த ‘குள்​ளன் ஜக்​கு’ என்​கிற மிகைப்​புனை​வுக் கதையைப் படித்​திருந்​தேன். அரேபிய இரவு​கள் கதையைப் போல கதைக்​குள் முடிச்​சு, மிகைக் கற்​பனை, சங்​கி​லித் தொடர் போல் சிக்​கல்​கள் என விரிந்​து​கொண்டே செல்​லும். ஒவ்​வொரு சம்​பவ​மும் அடுத்​தடுத்த கட்​டத்​துக்கு நகர்​வது மிகுந்த சுவாரசி​ய​மாக இருக்​கும். இந்​தக் கதை உரு​வாக்​கிய வசீகரத்​தில் ஒரு உறவினர் திருமண நிகழ்​வில் என் வயதுக் குழந்​தைகளை கூட்டி உட்​கார வைத்​துக் கதை சொல்​லத் தொடங்​கி​விட்​டேன். எல்​லாம் வாண்​டு​மா​மா​வும் குள்​ளன் ஜக்கு கதை​யும் கொடுத்த அசாத்​திய தைரி​யம்​தான்.

‘தே​தி​யும் சேதி​யும்’ என்​கிற தலைப்​பில் ஒவ்​வொரு நாளி​லும் நடை​பெற்ற முக்​கிய நிகழ்​வு​கள், ‘தோன்​றியது எப்​படி’ என்​கிற தலைப்​பில் பல முக்​கிய​மான விஷ​யங்​கள் தோன்​றிய கதை, ‘தெரி​யு​மா? தெரி​யுமே!’ என வாண்​டு​மாமா கைவைக்​காத பிரிவே இல்​லை. ஓவியர் செல்​லத்​துடன் இணைந்து தமிழ்ச் சித்​திரக்​கதைகளில் ஒப்​பிட முடி​யாத படைப்​பு​களை வாண்​டு​மாமா தந்​திருக்​கிறார். துப்​பறி​யும் கதைகள், விலங்​குக் கதைகள், வரலாறு, அறி​வியல், விளை​யாட்​டு, மருத்​து​வம் எனப் பல துறை​களைப் பற்றி மனிதர் எழு​திக் குவித்​திருக்​கிறார். பொதுஅறிவு என்​கிற துறையை அவரைப் போல் இலகு​வாக​வும் விரி​வாக​வும் கையாண்​ட​வர்​களை தேடித்​தான் கண்​டறிய வேண்​டும்.

இதழ்​கள், எழுத்து வழி​யாகவே உலகை அறிய முடி​யும் என்​கிற நிலை இருந்த அந்​தக் காலத்​தில் வாண்​டு​மாமா தமிழுக்கு உரு​வாக்​கித் தந்​தவை அனைத்​தும் அறி​வுப்​புதையல்​கள். மற்ற மொழிப் படைப்​பு​களில் இருந்து உத்​வேகம் பெற்ற அவர், இணை​யற்ற கற்​பனைத் திறனுட​னும் சிறாருக்கே உரிய எளிய மொழி வன்​மை​யுட​னும் தமிழைக் கையாண்​டார்.

150க்​கும் மேற்​பட்ட நூல்​களை​யும் பெரிய​வர்​களுக்​கான படைப்​பு​களை​யும் அவர் எழு​தி​யிருக்​கிறார் என்​றாலும், சிறார் எழுத்​தாளர் என்றே நிரந்தர அடை​யாளம் பெற்​று​விட்​டார். அதற்​குக் காரணம் 70கள், 80களில் தங்​கள் பால்ய காலத்​தைக் கழித்த தமிழ்ச் சிறார்​கள் மனதில் ஒரு வழி​காட்​டி​யாக-ஆசிரிய​ராக அவர் தங்​கி​விட்​டது​தான். பல மொழிகளில் சிறார் இலக்​கி​யத்​துக்​காக அர்ப்​பணித்​துக்​கொண்ட சில எழுத்​தாளர்​கள் அந்த மொழி​யின் அடை​யாள​மாகவே மாறி​யிருப்​பார்​கள். அது​போன்று ‘தமிழ்ச்​ சிறார்​ இலக்​கிய மாஸ்​டர்​’ என்​கிற அடைமொழி வாண்​டு​மா​மாவுக்​குப்​ பொருத்​த​மாக இருக்​கும்​.

ஏப்​ரல்​ 21 ​வாண்​டு​மா​மா நூற்​றாண்​டு நிறைவு

SCROLL FOR NEXT