பெரு நாட்டின் பிரபல எழுத்தாளர் மாரியோ பார்காஸ் லியோசா (Mario Vargas Llosa) கடந்த வாரம் தலைநகர் லீமாவில் தன்னுடைய 89 ஆவது வயதில் காலமாகிவிட்டார். இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்ற லியோசா, கொலம்பியா நாட்டு கப்ரியேல் கார்சியா மார்க்கெஸோடு (Gabriel Garca Mrquez) ஒப்பிடப்படுபவர். இலக்கியத் தாக்கத்தைப் பொறுத்தவரை, லியோசா அவரையும் பின்னுக்குத் தள்ளியவர் என்றும் விமர்சகர்கள் சிலர் குறிப்பிடுகின்றனர்.
லியோசா, பெருவில் ஆரெகிப்பா என்ற ஊரில் பிறந்தவர். பிறந்த சில நாட்களிலேயே அவர் தந்தையும் தாயும் பிரிந்துவிட்டார்கள். பத்து வயது வரை அவர் தாய்வழிக் குடும்பம் ஒன்றால் வளர்க்கப்பட்டார். அவர், தன் தந்தை இறந்துவிட்டார் என்றே நினைத்துக் கொண்டிருந்தார். பின்னர் ஒரு நாள் அவர் பெற்றோர் மீண்டும் இணையும்போது, அவர் வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்பட்டது. அவருடைய தந்தையின் கண்டிப்பு நாளுக்கு நாள் அதிகரித்தது. சிறு வயதிலேயே தன் மகனுக்கிருந்த இலக்கிய ஆர்வத்தைக் கண்டுகொள்ளாமல், அவர் தன் மகனை ராணுவப் பள்ளியில் சேர்த்துவிடுகிறார். தன்னுடைய இலக்கிய ஆர்வம் குன்றிவிடப் போகிறது என்று நினைத்த லியோசா தனக்கேற்பட்ட அனுபவத்தை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டார். ராணுவப்பள்ளியை வைத்தே அவர் நாவல் எழுத ஆரம்பித்தார்.
லியோசா பதினைந்துக்கும் மேற்பட்ட நாவல்கள் எழுதியிருக்கிறார். அவை பெரும்பாலும் லத்தீன் அமெரிக்கா, ஸ்பானிஷ் மொழிபேசும் தீவுகள் ஆகியவற்றின் வரலாற்றுப் பின்னணியைக் கொண்டவை. அங்கு நிலவிய ஏதேச்சதிகாரம், வன்முறை, வரம்பு மீறல், ஊழல், ஒழுக்கக் கேடு அனைத்தும் அவருடைய நாவல்களில் சொல்லப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக 1961 இல் வெளிவந்த ‘தி டைம் ஆஃப் தி ஹீரோ’ (The Time of the Hero) என ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட நாவலின் கதை பெரு நாட்டில் ஒரு ராணுவ அகாடமியில் நிகழ்கிறது. அங்கு நிலவிய கடுமையான கட்டுப்பாடு, அங்குப் பயில வந்த இளைஞர்களிடையே மன இறுக்கத்தை ஏற்படுத்தி, அவர்களைத் தீய வழியில் செல்லத் தூண்டுகிறது. ஓரிடத்தில், அவர்களுக்கு வேதியியல் பாடத் தேர்வு நடக்கவிருக்கிறது. நான்கு மாணவர்கள், ஜாகுவர் என்பவன் தலைமையில், பள்ளியில் ஓர் அறைக்குள் போய் வினாத்தாள்களை ரகசியமாக நகல் எடுத்துவர வேண்டும். யார் அந்த வேலையைச் செய்வது என்பது குறித்துப் பகடை உருட்டுகிறார்கள். அதன்படி, காவா என்பவனைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.
திருடச் சென்ற காவாவால் தன் பணியில் வெற்றி பெறமுடியவில்லை. ஏதோ ஓர் ஓசை கேட்டதால் யார் கண்ணிலும் படாமல் ஓட்டம் எடுத்துத் தப்பித்துக் கொள்கிறான். பின்னர் தவறு நடந்திருப்பதை அறிந்த அதிகாரிகள் காவாவையும் மற்றவர்களையும் ஓரிடத்தில் அடைத்துவைக்கிறார்கள். உண்மையான குற்றவாளி கண்டுபிடிக்கப்படும் வரை அனைவரும் அதிகாரிகளின் பாதுகாப்பில்தான் இருக்க வேண்டும். இந்நிலையில் விசாரணையின்போது, அப்பாவி மாணவனான ரிகார்டோ என்பவன் இதற்கெல்லாம் காரணமான ஜாகுவரைக் காட்டிக் கொடுத்துவிடுகிறான். விளைவு, ஜாகுவர், காட்டிக்கொடுத்தவனை யாருக்கும் தெரியாமல் சுட்டுக் கொன்றுவிடுகிறான். சில நாட்கள் கழித்து, ஜாகுவர் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டபோதும், அவன் தண்டனைக்கு உட்படுத்தப்படவில்லை. அவனுக்கு வங்கியில் ஒரு வேலை கிடைத்தது. பின்னர், திருமணமாகி வசதியான வாழ்க்கை வாழ்கிறான். ஒரு ராணுவ அகாடமியில் நிகழும் இந்தக் கொலையும், வன்முறையும், முழு சமுதாயத்தையும் பிரதிபலிப்பதாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன.
மற்றொரு பிரபலமான நாவல், ‘தி ஃபீஸ்ட் ஆஃப் தி கோட்’ (The Feast of the Goat) மேற்கிந்தியத் தீவு டமினிக்கன் குடியரசில் நிகழ்வதாகப் பின்னப்பட்டிருக்கிறது. 2000இல் வெளியான இந்நாவலில், டமினிக்கன் குடியரசில் 1930 இலிருந்து 1961 வரை சுமார் முப்பது ஆண்டுகள் கொடுங்கோல் ஆட்சி செலுத்திவந்த ரஃபாயெல் துருஹிலோ பற்றியது. வெறி பிடித்த அவன்தான் வெள்ளாடு என்று குறிப்பிடப் படுகிறான். கடைசியில் அவன் எவ்வாறு தனக்கு ஒரு காலத்தில் விசுவாசிகளாக இருந்தவர்களாலேயே கொல்லப்பட்டான் என்பதை விவரிக்கிறது இந்த நாவல். துருஹிலோவின் கொடுங்கோல் ஆட்சியும், அதில் நடந்த பயங்கர மனித உரிமை மீறலும், அவன் காலத்தில் பாதிக்கப்பட்ட ஒரு பெண் மூலம் எடுத்துக் காட்டப்படுகின்றன.
தென் அமெரிக்க நாடுகள் பலவற்றில் பத்திரிகை சுதந்திரம் கட்டுப்படுத்தப் பட்டிருந்தது. வெளிநாட்டு ஊடகங்கள் அனுமதிக்கப்படாமலிருந்தன. அதனால் அந்நாடுகளில் நடக்கும் குரூரங்கள் வெளியில் தெரியாமல் பார்த்துக்கொள்ளப் பட்டன. வெளியில் தெரியாமல் நடந்த குரூரங்களையெல்லாம் வெளிச்சம் போட்டுக் காட்டுவதையே எழுத்தாளர்கள் தங்கள் கடமையாகக் கொண்டிருந்தனர். அம்முயற்சியில் வெற்றி பெற்றவர்களில் முக்கியமானவர் லியோசா என்பதில் ஐயமுமில்லை.
அஞ்சலி: மாரியோ பார்காஸ் லியோசா (1936-2025)