சிறப்புக் கட்டுரைகள்

களிமண்ணின் தவம் | நாவல்வாசிகள் 03

எஸ்.ராமகிருஷ்ணன்

இரண்டாம் உலகப்போரின்போது ஹிட்லரின் ஆஸ்ட்விச் வதை முகாமில் அடைத்துவைக்கப்பட்ட யூதர்கள், உயிர்வாழ்வதற்கான நம்பிக்கை வேண்டி நாவல் வாசித்தார்கள். ரகசியமாக ஒன்றுகூடி மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் ஒருவர் நாவலைப் படிக்க மற்றவர்கள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். நாவல் முடியும் வரை தாங்கள் உயிரோடு இருப்போம் என்று நம்பினார்கள்; அப்படியே நடந்துமிருக்கிறது. உயிர்காக்கும் மருந்தைப் போல நாவல் செயல்பட்டிருக்கிறது.

இங்கிலாந்தில் இருநூறு வருஷங்களுக்கு முன்பு நாவல் என்பதை வாழ்க்கை வரலாறு என்றே கருதினார்கள். ஆகவே நாவலின் தலைப்பில் நாயகன் அல்லது நாயகியின் பெயர் இடம்பெறுவது வழக்கம். அத்தோடு ‘அவரது வாழ்க்கையும் சாகசங்களும்’ என்ற ரீதியில் தலைப்பிட்டிருப்பார்கள். உண்மையான மனிதர்கள்தான் நாவலின் கதாபாத்திரங்களாக உருமாறியிருக்கிறார்கள் என்று வாசகர்கள் நம்பினார்கள். ஆகவே தனக்கு விருப்பமான நாவலின் நாயகன் அல்லது நாயகியின் வீட்டு முகவரி கேட்டுஎழுத்தாளருக்குக் கடிதம் அனுப்பினார்கள். அயர்லாந்தில் ஒரு நிலப்பிரபு, நாவலின் கதாநாயகனுக்குத் தனது சொத்தை எழுதி வைத்துவிட்டார் என்கிறார்கள்.

டேவிட் லீனின் ‘ரயான் 'ஸ் டாட்டர்’ திரைப்படத்தில் அதன் நாயகியான ரோஸி நாவல் படிப்பதன் மூலம் தனக்குள் காதற்கனவுகளை உருவாக்கிக் கொள்கிறாள். அவளது ஆசைகள் புத்தகத்தால் வளர்த்தெடுக்கப்படுகின்றன. பின்பு அவள் சார்லஸைக் காதலிக்கத் தொடங்கியதும் இனிப் புத்தகம் தேவையில்லை என்று கடலில் வீசி எறிகிறாள். அது திரைப்படத்தின் காட்சி மட்டுமில்லை. அந்தக் கால இளம்பெண்ணின் மனநிலை. பிரெஞ்சு நாவல்கள் ஏற்படுத்திய பாதிப்பின் காரணமாகவே உலகம் முழுவதும் புதிய நாவல்கள் உருவாகின. உலகின் தலை சிறந்த நாவலாசிரியர்களாகக் கருதப்படும் லியோ டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி, இவான் துர்கனேவ், டிக்கன்ஸ், மெல்வில் போன்றவர்களிடம் பிரெஞ்சு நாவலின் பாதிப்பை அதிகம் காணமுடிகிறது.

இந்திய மொழிகளில் எழுதப்பட்ட ஆரம்பக் கால நாவல்களும் சுயசரிதை போலவே எழுதப்பட்டன. மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதி 1879இல் வெளியான ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ நாவலின் தலைப்பைப் பாருங்கள். அதுவும் ஆங்கில நாவலின் பாதிப்பில் உருவானதே. இந்திய நாவல்களில் ஆங்கில இலக்கியத்தைவிடவும் வங்க இலக்கியத்தின் தாக்கமே அதிகம். வங்க நாவல்கள் கிராமப்புற வாழ்க்கையை நுண்மையாகச் சித்தரித்த விதமும், சமூகப் போராட்டம், தனி மனித உணர்வுகள் ஆகிய பண்புகளை வெளிப்படுத்திய முறையும், கதாபாத்திரங்களை உயிரோட்டமாக உருவாக்கிய பாணியும் இந்தியா முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தின.

1978இல் பாலகும்மி பத்மராஜூ எழுதிய தெலுங்கு நாவலான ‘நல்ல ரேகடி’ தமிழில் ‘கறுப்பு மண்’என பா.பாலசுப்ரமணியன் மொழிபெயர்ப்பில் வெளியாகியுள்ளது. இதை நேஷனல் புக் டிரஸ்ட் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அந்த நாவலில் களிமண்ணில் கோலி செய்யும் சிறுவர்கள் வருகிறார்கள். அவர்கள் விரலால் சின்னக் கட்டிகளை எடுத்து, உருண்டை செய்கிறார்கள். நகத்தால் மெருகு கொடுக்கிறார்கள். குளிர்ச்சியான வெயிலில் காய வைக்கிறார்கள். அது விளையாட்டுக் கோலியில்லை; வேட்டைக்கான கோலி. அதை உண்டி வில்லில் வைத்து அந்தச் சிறுவர்கள் குருவி அடிக்கப் பயன்படுத்துகிறார்கள். அப்படியான களிமண் கோலி உருண்டைகள் வைத்திருந்த ஒரு சிறுவனை எனது பள்ளி வயதில் அறிவேன். அவன் தனது டவுசர் பையில் எப்போதும் வைத்திருப்பான். அவனுக்குப் பிடிக்காத பையன்கள் முதுகில் அந்த உருண்டையால் அடிப்பான். பாதியில் படிப்பைவிட்ட அவனது நினைவாக என் மனதில் அந்த மண் உருண்டைகளே எஞ்சியிருக்கின்றன.

காலில் களிமண் அப்பிக் கொள்ளும்போது மண் செருப்பு போட்டுக் கொண்டு நடப்பதாகச் சிறார்கள் கேலி செய்வார்கள். காலில் ஒட்டிய களிமண்ணை வேகமாக உதறும்போது அது பறந்து போய் மரத்தில் ஒட்டிக் கொள்ளும். களிமண்ணைத் தொட்ட விரல்கள் கொள்ளும் குளிர்ச்சியும் விறுவிறுப்பும் இன்றைய தலைமுறை அறியாதது. ‘குழந்தைகளும் களிமண்ணும் மிருதுவானவை’ என்கிறார் நாவலாசிரியர்.

ஈரக்களிமண் குளிர்ச்சியான வெயிலில் காய்கிறது. பின்பு வெயில் முற்றிவிடுகிறது. அதனால் களிமண் பாளம் பாளமாக வெடிக்கிறது. உருவமில்லாத இரும்புக் கட்டி மாதிரி கெட்டிபட்டுப் போகிறது. அதில் கால் பதிய நடக்கும் மனிதர்களின் பாதங்கள் வெடித்துப் புண்ணாகின்றன. ‘வெயில் களிமண்ணுக்குத் தாகத்தைப் பயிற்றுவிக்கிறது. ஆரோக்கியமான தாகம். அந்தத் தாகம் களிமண்ணுக்கு எல்லையில்லாத சக்தியைத் தருகிறது. நீரிலிருந்து காற்றிலிருந்து ஜீவாகாரத்தை ஈர்த்துக் கொள்ளும் சக்தி உருவாகிறது. களிமண் வானை நோக்கித் தவமிருக்கிறது. அது பலித்து மழையாகப் பெய்கிறது. நெஞ்சடைக்கும் வரை களிமண் தண்ணீரைக் குடிக்கிறது. பின்பு களிமண் பொன் விளைவிக்கிறது’ என்கிறார் பத்மராஜூ. மண்ணை நேசிக்கும் விவசாயியின் உண்மையான குரலிது. களிமண் என்பது மனிதப் பிறப்பின் அடையாளமாகவும் மாறிவிடுகிறது.

நாவலின் தொடக்கத்தில் ஒரு டிராக்டர் கிராமத்திற்குள் நுழைகிறது. அது மாறி வரும் விவசாயத்தின் அடையாளம். இளம் விவசாயி ராஜூ அதனை ஓட்டிக்கொண்டு வருகிறான். “முப்பது ஏரு மூணு நாள்ளெ உழுறதை, ஒரு நாள்ளே இந்த டிராக்டர் உழுதுடும். அத்தோட போச்சா விதை விதைக்கும், அறுவடை பண்ணும், டிரெய்லர்ல தானியத்தைத் தூக்கிப் போட்டா வீட்ல கொண்டு போய்ச் சேர்ந்திடும்” எனப் புதிய இயந்திரத்தின் புகழ் பாடுகிறான் ராஜூ. அவனது காதலும் அந்த ஊர் விவசாயிகளின் வாழ்க்கைப் பாடுகளும், அவர்களின் கடவுள் நம்பிக்கை, போட்டி பொறாமைகளும் இந்த நாவலுக்குள் பேசப்படுகின்றன.

இயந்திரம் மனிதனை அலட்சியம் செய்யும்; மதிக்காது எனக் கிராமவாசிகள் நினைக்கிறார்கள். டிராக்டர் பழுதாகிப் போனால் யார் சரிசெய்து தருவார்கள் என்று யோசிக்கிறார்கள். ராஜூ இயந்திரங்களை வரவேற்கிறான். ஊர் பெரியவர்களோ காலம் கெட்டுவிட்டதாகச் சபிக்கிறார்கள். ராஜூ லட்சுமியை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறான். ஆனால், அவன் மீது அளவில்லாத பிரியம் வைத்திருக்கிறாள் மல்லி. நிச்சயம் ராஜு தன்னைத் திருமணம் செய்து கொள்ள மாட்டான் என அறிந்தும் அவள் காட்டும் அன்பு நிகரற்றது. பெண் வீட்டிலிருந்து வரதட்சணை வாங்குவது சட்டப்படி குற்றம் என்று தனது தந்தையிடம் சொல்கிறான் ராஜு. அதை அவனது தந்தை ஏற்க மறுத்துக் கோபித்துக் கொள்கிறார்.

வேலிபோடுவதில் ஒற்றுமையில்லாமல் தாக்கிக் கொள்ளும் விவசாயிகள் மழையின்போது பயிர்களைக் காப்பாற்ற ஒன்று சேர்ந்து விடுகிறார்கள். கடந்தகாலத்தின் மீது கையூன்றியே கிராமங்கள் அமர்ந்திருக்கின்றன என்பதைப் பாலகும்மி பத்மராஜூ தெளிவாக அடையாளப்படுத்துகிறார். மற்றவர் கைகளில் அழுக்காக உணரப்படும் களிமண் குயவன் கையில் கலைப்பொருளாக மாறுகிறது. அந்த மாயத்தையே பாலகும்மி பத்மராஜூ தனது எழுத்தில் உருவாக்கிக் காட்டியுள்ளார்.

SCROLL FOR NEXT