சிறப்புக் கட்டுரைகள்

அதிமுக - பாஜக கூட்டணி: நியாயங்களும் காயங்களும்

மாலன்

காலை நடைக்குக் கிளம்பிக்கொண்டிருந்தார் வள்ளுவர். அமைச்சர் வந்து வணங்கினார். “அரசர் உங்களைப் பார்க்க வந்து கொண்டிருக்கிறார்” என்று சொன்னார். “வரட்டுமே, அவரும் என்னுடன் சேர்ந்து நடக்கலாமே?!” என்றார் வள்ளுவர். அரசர் தேரைவிட்டு இறங்கினார்.

கடற்கரை ஓரமாக இருவரும் சேர்ந்து நடக்கத் தொடங்கினார்கள். அரசர் பேச ஆரம்பித்​தார்: “போர் ஒன்று மூளவிருக்​கிறது, உங்கள் ஆலோசனை தேவை. “போரைத் தவிர்க்க முடியாதா?” என்றார் வள்ளுவர். “முடி​யாது. அது காலத்தின் கட்டா​யம்.” “நான் என்ன செய்ய வேண்டும்?” “உங்கள் அறிவுரை வேண்டும்.” “முழு விவரங்கள் சொன்னால் எனக்குத் தெரிந்​ததைச் சொல்கிறேன்.” “எதிரி வலிமை​யானவர்.

அவருக்குத் துணையாகச் சில நிலப்​பிரபுக்​களும் இருக்​கிறார்கள். வலிமை​யானவர் என்றாலும் வெல்ல முடியாதவர் அல்ல. முன்பு வென்றிருக்​கிறோம். ஆனால், இப்போது சற்று பலவீனமாக இருக்​கிறோம். இந்தப் போரில் ஜெயிக்​கா​விட்டால் என் அமைச்​சர்களே என்னை வறுத்​தெடுத்து விடுவார்கள். போரை எப்படி அணுகலாம் எனக் குழப்பமாக இருக்​கிறது.”

வள்ளுவர் உறுதியான குரலில் சொன்னார்: “வினை​வலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிச் செயல்.” அரசர் சொன்னார்; “ஐயா! நீங்கள் இப்படி இரண்டு வரியில் நறுக்​கென்று சொல்லி​விடு​கிறீர்கள். ஆனால், அதற்குப் பலர் பலவிதமாக பக்கம் பக்கமாக விளக்கம் எழுதிக் குவிக்​கிறார்கள். நீங்களே இதை விளக்கிச் சொல்லி​விட்டால் நன்றி​யுடையவனாக இருப்​பேன்.”

“நாம் இறங்கப்​போகும் செயல் எத்தகையது, எவ்வளவு கடினமானது, எவ்வளவு வலிமை​யானது என்பதை முதலில் அறிந்து​கொள்ள வேண்டும். பிறகு, நம்மால் அதை வெற்றிகர​மாகச் செய்து முடித்துவிட முடியுமா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். முடியும் என்று தோன்றி​னாலும் உடனே களத்தில் இறங்கி​விடக் கூடாது. அதை எதிர்க்​கக்​கூடிய எதிரிகள் யார், அவர்களுடைய வலிமை என்ன என்பதை ஆராய வேண்டும்.

அப்போது நிலைமை ஓரளவு தெளிவாகும். அந்த வேலையை முடிக்​கக் கூட யாரையாவது துணை சேர்த்​துக்​கொள்​ளலாம் என்று தோன்றும். அப்படித் துணைவரைச் சேர்த்​துக்​கொள்ளும் முன் அவர்களது பலம் என்ன என்பதையும் அறிந்து​கொள்ள வேண்டும்.” வள்ளுவரின் மதிநுட்​பத்தைக் கேட்ட அரசனின் கண்கள் வியப்பால் விரிந்தன. மனதில் தெளிவும் நம்பிக்கையும் பிறந்தன. கண்கள் பனிக்க நன்றியோடு தலைகுனிந்து வணங்கி​னான்.

போருக்கு மட்டுமல்ல, எந்தத் துறையா​னாலும் வெற்றி பெறுவதற்கான சூத்திரம் இதுதான். கடல் கடந்து வணிகம் செய்பவராக இருந்​தா​லும், கட்டை வண்டியில் வாழைப்பழம் விற்பவ​ரா​னாலும், திரைப்படம் எடுப்​பவராக இருந்​தாலும் யூடியூப் சானல் நடத்துபவராக இருந்​தாலும் இதுதான் சூத்திரம். அப்படி​யிருக்க, அரசியல் மட்டும் எப்படி இதற்கு விதிவிலக்காக இருக்க முடியும்? பாஜக-அ​திமுக கூட்டணி இந்த அடிப்​படையில் உருவாகி​ இருக்​கிறது.

நேற்று வரை ஒருவரை ஒருவர் ஏசிக்​கொண்​டிருந்​தார்களே, அவர்கள் எப்படிக் கூட்டணி சேர முடியும்? கொள்கைரீ​தியாக முரண்​பட்​ட​வர்கள் ஆயிற்றே என்றெல்லாம் சிலர் கேள்வி எழுப்பு​கிறார்கள். நியாயமான கேள்வி​தான். அவர்களுக்கு வரலாறு பதில் சொல்கிறது. “கம்யூனிஸ்ட்டுகள் என் முதல் எதிரி” என்று பகிரங்கமாக அறிவித்த ராஜாஜி, அதே கம்யூனிஸ்ட்டுகள் இடம்பெற்ற திமுக கூட்ட​ணியில் 1967இல் இணைந்​தார்.

காரணம், அவர் அப்போது காங்கிரஸை வீழ்த்த வேண்டும் என்று விரும்​பி​னார். 1967 தேர்தலில் ராஜாஜியால் வீழ்த்​தப்பட்ட காங்கிரஸ் 1971இல் அதே ராஜாஜியோடு ‘கிராண்ட் அலையன்ஸ்’ கண்டது. திமுக ஆட்சியை அகற்றுவது அவர்கள் நோக்கம். அண்ணா இருந்தவரை காங்கிரஸை விமர்​சித்​துக்​கொண்​டிருந்த திமுக, அவர் மறைவுக்குப் பின் காங்கிரஸோடு கூட்டணி சேர்ந்தது. அவர்களது நோக்கம் எம்.ஜி.ஆரின் வெற்றியைத் தடுத்​து​நிறுத்துவது.

நெருக்கடி நிலையை எதிர்த்து அதன் காரணமாகச் சிறையில் அடைக்​கப்​பட்டு கொடுமை அனுபவித்த திமுக, அதே நெருக்கடி நிலைக்குக் காரணமான நேருவின் மகளை நிலையான ஆட்சி தர அழைத்​ததும் உண்டு. பரதேசி பண்டாரக் கட்சி என்று விமர்​சித்து வந்த பாஜகவோடும் 1999இல் திமுக கூட்டணி கண்டது. “என்னுடைய வாழ்நாளில் ஒருபோதும் இனி பாஜகவோடு கூட்டணி வைக்க மாட்டேன்” என்று 1999இல் சொன்ன ஜெயலலிதா, 2004இல் கூட்டணி ஏற்படுத்​திக்​கொண்​டார்.

அதிமுக, திமுக இரண்டையும் எதிர்த்துக் கட்சி தொடங்கி​யிருப்​ப​தாகச் சொன்ன விஜயகாந்த் அதிமுக​வுடன் கூட்டணி ஏற்படுத்​திக்​கொண்டு, எதிர்க்​கட்சித் தலைவரா​னார். 2016இல் திமுகவை ஊழல் கட்சி என்று சொல்லி அதற்கு எதிராக மக்கள் நலக் கூட்டணி கண்ட கம்யூனிஸ்ட்டு​களும் வைகோவும் அடுத்த தேர்தலில் திமுக கூட்ட​ணியில் ஐக்கிய​மா​னார்கள். அதற்கு அவர்கள் சொன்ன நியாயம், ‘பாஜகவைத் தடுப்​பது’.

இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட கட்சிகள் ஒரு கட்சியைத் தங்கள் பொது எதிரி​யாகக் கருதி​விட்​டால், அதை வீழ்த்த முரண்​பாடுகளை ஒதுக்கி வைத்து​விட்டுக் கூட்டணி அமைத்​துக்​கொள்வது தமிழகத்தில் மட்டுமல்ல, நாடு முழுக்க நடந்து​கொண்​டிருக்கும் விஷயம்​தான்.

பாஜகவை எதிர்க்க வேண்டும் என்றுதானே மம்தாவும் மார்க்​சிஸ்ட்டு​களும் இண்டியா கூட்ட​ணியில் இடம்பெற்​றார்கள்? மெஹ்பூபா முஃப்​தியோடு பாஜக கூட்டணி வைத்துக்​கொள்ள​வில்​லையா? நெடுங்​கால​மாகக் காங்கிரஸை எதிர்த்துவந்த சிவசேனா, அதனுடன் கூட்டணி வைத்துக்​கொள்ள​வில்​லையா? பாஜக கூட்ட​ணியி​லிருந்து வெளியேறிய தெலுங்கு தேசம் இப்போது அதனுடன் இணைந்து​கொள்ள​வில்​லையா? நிதீஷ்? அவரும் ஒரு காலத்தில் பாஜகவை எதிர்த்​தவர்​தான்.

“எதிரிக்கு எதிரி நண்பன்”, “அரசி​யலில் நிரந்தர நண்பனும் கிடையாது, பகைவனும் கிடையாது” என்றெல்லாம் இதற்கு வியாக்​கி​யானம் சொல்வார்கள். ஆனால் யதார்த்தம் என்னவென்​றால், குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை. யாரும் அரசியலில் புனிதர்கள் கிடையாது. அரசியல் நீரோட்​டங்களை அறிந்​தவர்கள் யாரும் அதிமுக-பாஜக கூட்டணி குறித்து ஆச்சரியப்பட மாட்டார்கள். ஆனால், அண்ணா​மலையின் அபிமானிகளுக்கு அவரைப் பலி கொடுத்து​விட்டதாக வருத்​தமும் சினமும் இருக்​கிறது. அது புரிந்து​கொள்​ளக்​கூடியது​தான்.

முள்ளை முள்ளால் எடுக்​கலாம் என்பதைப் பின்பற்றி திராவிட மாடல் பாணியில், (தனிமனிதனை முக்கி​யத்து​வப்​படுத்தி கட்சியை வளர்ப்பது, அதிரடியாக அறிவிப்புகள் வெளியிடுவது, சுடச்சுட பதிலடி கொடுப்பது) எனக் கட்சியை வளர்க்க முயன்றார் அவர்.

அது இன்றைய வாக்காளர்​களுக்கு - குறிப்பாக இளைய தலைமுறைக்குப் பிடித்​திருந்தது. அவர்கள் அரசியல்​வா​தி​களிட​மிருந்து உபதேசங்​களையோ, கருத்​தாடலையோ எதிர்​பார்ப்​ப​தில்லை. யூடியூப், சமூக ஊடகம் என்று அமெச்சூர் ஊடகங்கள் பரவலாகி, அவை ‘கண்டெண்ட்​’க்​காகப் பசியுடன் வெறி கொண்டு அலைகை​யில், அவரது செய்தி​யாளர் சந்திப்பு​களும் சாட்டையடிகளும் அவற்றுக்குத் தீனியாக அமைந்தன.

அவர் பாஜகவின் வாக்கு சதவீதத்தை அதிகரித்துக் காட்டினார் என்பதையும் மறுப்​ப​தற்​கில்லை. ஆனால் பலன் என்ன? ஒரு இடம்கூடக் கிடைக்க​வில்லை. அதிகார அமைப்பில் பங்குபெறுவதே தேர்தலை அடிப்படையாகக் கொண்ட ஜனநாயக அரசியலில் முழுமையான வெற்றி. கொண்ட கொள்கையை எத்தனைதான் உரக்கச் சொன்னாலும், அதை நிறைவேற்றி நினைத்ததை சாதிக்க வேண்டுமானல், தேர்தல் வெற்றி அவசியம் என்பதுதான் நடைமுறை உண்மை.

அதிகாரத்தில் அமராத, குறைந்த​பட்சம் பங்குபெறாத கட்சிகள் விரைவிலேயே பலவீன​மாகி​விடும். காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள், பாமக இவையெல்லாம் உதாரணம். அதை உணர்ந்த பின்னர், அரசியல் கட்சிகள் ஆட்சி​யிலும் பங்கு எனக் குரல் எழுப்பு​கின்றன.

அவர் தலைமையில் இரண்டு கழகங்​களுக்கும் மாற்றாக மூன்றாவது அணி ஒன்றைக் கட்டி​யிருக்​கலாமே என்பது சிலரது வாதம். தமிழக அரசியலில் மூன்றாவது அணி எப்போதுமே வென்ற​தில்லை. மூப்பனார் முயன்​றார்... விஜயகாந்த் முயன்​றார்... ராமதாஸ் முயன்​றார்... தமிழிசைகூட முயன்​றார்... கம்யூனிஸ்ட்டுகள் முயன்​றார்கள். யாரும் வெற்றி பெறவில்லை. சரி, இந்தக் கூட்டணி வெற்றி பெறுமா? வெற்றி பெறுமா என்கிற கேள்வி​யுடன் எதிரே வந்து நின்ற​வரைப் பார்த்தார் வள்ளுவர்.

“வாசுகி கொஞ்சம் தண்ணீர் கொண்டுவா” என்று உள்ளே பார்த்துச் சொன்னார். வாசுகி குவளையில் தண்ணீரோடும் ஓர் ஊசியோடும் வந்தார். “இப்போது ஊசி வேண்டாம், குடிக்​கத்தான் நீர் கேட்டேன்” என்று குவளைத் தண்ணீரைப் பருகி​விட்டுத் தொண்டையைச் செருமிக் கொண்டு கணீரென்ற குரலில் சொன்னார்: “அருமை உடைத்​தென்று அசவாமை வேண்டும். பெருமை முயற்சி தரும்​.”

- தொடர்புக்கு: maalan@gmail.com

SCROLL FOR NEXT