மூன்று ஆண்டுகளுக்கு முன் எங்கள் நிறுவனத்தின் கடைக்கோடி மாவட்டத்தின் அலுவலகத்துக்குச் சென்றிருந்தேன். அங்கே கழிப்பறையை உபயோகிக்க வேண்டி உள்ளே சென்றேன். இருட்டாக இருந்த அறை நான் நுழைந்த மறு கணம் விளக்கு எரிய வெளிச்சம் பெற்றது. வெளியே வந்ததும் விளக்கு தானாகவே அணைந்தது. எங்கள் ஊழியர் ஒருவர் தன்னார்வமாக அங்கே ஓர் உணர்கருவி (சென்சார்) பொருத்தி இருப்பதாகச் சொன்னார்.
“பெரும்பாலும் கழிப்பறை விளக்குகள் 24 மணி நேரமும் எரிந்தபடி இருக்கின்றன. நம் அசைவினை உணர்ந்து விளக்குகள் எரியும்படி செய்ததில் கொஞ்சமாவது மின்சாரத்தைச் சேமிக்கிறோம்” என்றார். அவரைப் பாராட்டிவிட்டு, என்னுடைய தலைமை அலுவலக அறையில் அதனைப் பொருத்துவதற்கும் ஏற்பாடு செய்தேன்.
தனி அறையில் அமரும் வாய்ப்பு பெற்றுள்ள எந்த உயர் அதிகாரியும் ஒரு நாளில் மூன்று மணி நேரத்துக்கு மேல் தன் அறையில் அமர்ந்திருக்க இயலாது. கருத்தரங்குகள், வெளி நிகழ்ச்சிகள் என்று எங்காவது வெளியே சுற்றியபடிதான் இருக்க வேண்டிவரும். ஆனால், அவர்களுடைய அறையில் மின் விளக்குகள், குளிர்சாதன இயந்திரங்கள் காலை முதல் இரவு வரை பயன்பாட்டில் இருந்துகொண்டே இருக்கும்.
என்னுடைய அறையில் உணர்கருவி பொருத்தப்பட்டு, நான் இருக்கும்போது மட்டுமே மின்கருவிகள் இயங்கும்படி செய்ததில் மின் செலவு எவ்வளவு மிச்சமாகிறது என்று கணக்கெடுத்து, எங்கள் அலுவலகச் சந்திப்புகளில் அறிவித்தேன். எல்லாரும் கைதட்டினார்களே அன்றி, ஒருவரும் தம் அறைகளில் அதனைச் செயல்படுத்திடத் தயாராக இல்லை. ஓர் எளிய விஷயத்தை நடைமுறைப்படுத்திப் பார்க்கத் தயாராக இல்லாத நாம் அடுத்தவர்களுக்குக் கருத்தரங்குகள், போட்டிகள், விழாக்கள் மூலம் என்ன சொல்ல நினைக்கிறோம் என்று கேட்டுப் பார்த்தும் பலனில்லை.
ஒவ்வோர் ஆண்டும் மின் சிக்கனம், எரிபொருள் சிக்கனம் குறித்து இருவார விழிப்புணர்வு விழாக்கள் நடத்துகிறோம். அதன் ஒரு பகுதியாகக் கல்லூரிகளில், பள்ளிகளில் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி நடத்துகிறோம். இவற்றில் ஆர்வத்துடன் பங்கேற்பவர்கள் பரிசு வெல்லும் நோக்கத்தைத் தாண்டி, அந்த விஷயங்களை எந்த அளவுக்கு உள்வாங்கி இருக்கிறார்கள் என்பது விவாதத்துக்குரிய விஷயம். இந்த ஆண்டின் மின் சிக்கன விழா நிகழ்ச்சியின் இறுதியில், போட்டிகளில் வென்ற மாணவ - மாணவியருக்கு அவர்தம் பெற்றோர், ஆசிரியர்கள் முன்னிலையில் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
என் அறையில் வெறும் ஐந்நூறு ரூபாய் செலவில் பொருத்தப்பட்டிருக்கும் உணர்கருவி பற்றி நான் குறிப்பிட்டு, “உங்கள் இல்லத்தில் குறிப்பாகக் கழிப்பறைகளில் இதுபோல் சென்சார் பொருத்தி, அது வேலை செய்யும் விதத்தைக் காணொளிக் காட்சியாக எனக்கு அனுப்புங்கள். முதலில் அனுப்பும் 25 பேருக்குத் தலா 1,000 ரூபாய் ஊக்கப் பரிசு” என்று அறிவித்தேன். பெரிய கைத்தட்டல். இரண்டு மாதங்கள் கடந்துவிட்டன. ஒரே ஒரு நான்காம் வகுப்பு மாணவி மட்டும் அவருடைய தந்தையிடம் பேசித் தங்கள் வீட்டில் அதைப் பொருத்தி
யிருக்கிறார்.
எங்கள் நிறுவனத்தின் சார்பில் சாலைப் பாதுகாப்பு வாரம் கொண்டாடப்பட்டபோது, தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவத்தை மக்களுக்கு விளக்கும் பொருட்டு, முக்கிய நகரம் ஒன்றின் மையப்பகுதியில் வாகன ஓட்டிகளை நிறுத்தி, சாலைப் பாதுகாப்பு சம்பந்தமான சில விநாடி வினா கேள்விகளைக் கேட்டோம்.
சரியான விடை அளிப்பவர்களுக்குப் பரிசு வழங்கியதோடு, தலைக்கவசம் அணியாமல் குடும்பத்துடனோ குழந்தைகளுடனோ வருபவர்களுக்கு அறிவுரை வழங்கி இலவசமாகத் தரமான தலைக்கவசங்களும் வழங்கினோம்.
சிலர் தங்களிடம் தலைக்கவசம் வீட்டில் இருப்பதாக ஒப்புக்கொண்டு அதனை அணியாமல் பயணிப்பதற்கு வருத்தம் தெரிவித்தும், சிலர் புன்னகையுடனும் அவற்றைப் பெற்றுச் சென்றனர். மறுநாளே அந்தப் பகுதி போக்குவரத்துக் காவல் அதிகாரி அலைபேசியில் தொடர்புகொண்டு, “சார், நீங்கள் நேற்று கொடுத்த தலைக்கவசத்தையும் வீட்டில் வைத்துவிட்டு, இன்றும் வழக்கம்போல் செல்கிற சிலரை என்னால் அடையாளம் காண முடிகிறது” என்றார். மனம் சங்கடப்பட்டது.
ஆண்டுதோறும் எரிபொருள் சிக்கன வாரம், சாலைப் பாதுகாப்பு வாரம், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வாரம் என்று பல்வேறு வார விழாக்கள் அரசு சார்பாகவும் தொழில் நிறுவனங்கள் சார்பாகவும் கொண்டாடப்படுகின்றன.
இவை பெரும்பாலும் சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கும் மக்களுக்கும் அந்தந்தப் பொருள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதைவிட இந்த ஆண்டு கொண்டாடப்பட்டதா; சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு அதிகப் பணம் செலவழிக்கப்பட்டதா என்கிற புள்ளிவிவரப் பட்டியலை ஆண்டறிக்கையில் இணைப்பதையே முதன்மை நோக்கமாகக் கொண்டவையாக மாறிவருகின்றன. சுற்றுச்சூழல் விழிப்புணர்வு விழாக்களின் சிறப்பு விருந்தினர்களுக்கு ஞெகிழியால் சுற்றப்பட்ட பூங்கொத்துகளையும் பரிசுப் பொருள்களையும்தானே இன்றைக்கும் வழங்கிவருகிறோம்?
ஊழல் விழிப்புணர்வு என்பது கிட்டத்தட்ட நகைமுரண் ஆகிவருகின்ற சமூகச் சூழலில், சிந்தனைப் போக்கே மாசுபட்டுக்கொண்டிருக்கும் அடுத்த தலைமுறை இளைய சமுதாயத்தை எப்படிக் கறைபடாமல் தூய்மையாக வளர்த்தெடுக்கப் போகிறோம்? கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றச் சென்றிருந்தபோது, “மாணவச் செல்வங்களே, நீங்கள் உங்கள் பெற்றோரிடம் ஏதாவது ஒன்றினைக் கேட்டு அவர்கள் வாங்கித் தருகிறபோது அவர்களிடம் ‘நீங்கள் நேர்மையாகச் சம்பாதித்த காசில்தானே இதை வாங்கித் தருகிறீர்கள்? தயவுசெய்து எனக்காக நீங்கள் தவறு செய்து, அதன் தீய பலனை என் தலையில் சுமத்தாதீர்கள்’ என்று கேள்வி கேட்கும் மனநிலையை வளர்த்துக் கொள்ளுங்கள். சமூகம் தானாகவே மெல்ல மெல்லத் தூய்மையாகிவிடும்” என்று குறிப்பிட்டேன்.
நிகழ்ச்சி முடிந்தவுடன் கல்லூரித் தலைவர் என்னிடம் தனிமையில், “இந்தக் கருத்தினை மாணவர்கள் மத்தியில் சொல்வதை இனிமேல் தவிர்த்துவிடுங்கள் சார். இது வேறு சிக்கல்களைத் தங்களுக்கு உண்டு பண்ணலாம்” என்று வேண்டுகோளாகத் தெரிவித்தபோது அதிர்ச்சியாக இருந்தது. எந்தத் திசையில் பயணித்துக்கொண்டிருக்கிறோம் நாம்?
- தொடர்புக்கு: pnmaran23@gmail.com