தமிழ்நாட்டு அரசியலில் மொழியின் தாக்கம் அரை நூற்றாண்டுக்கு மேலாக இருந்தாலும் அம்பேத்கரின் மொழி குறித்த பார்வை இங்கு விவாதிக்கப்படுவதில்லை. ஒன்பது மொழிகளைக் கற்றறிந்ததோடு, பாலி மொழிக்கு இலக்கணமும் வகுத்தவர் அம்பேத்கர். மொழி குறித்த அவரது பார்வை, பெரும்பாலும் எதிர்மறையாகவே புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. ‘இந்தியைத் தேசிய மொழியாக ஆக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்’, ‘மொழிவாரி மாநிலங்களை எதிர்த்தார்’, ‘தேசிய இனங்களை அங்கீகரிக்கவில்லை’ என்றெல்லாம் அம்பேத்கர் மீது விமர்சனங்கள் உண்டு.
ஆனால், இந்தியாவை ஓர் ஒன்றுபட்ட, வலிமைமிக்க, வளமான நாடாக மாற்ற வேண்டும் என்கிற உன்னதமான லட்சியத்துக்காக அம்மக்களை ‘இந்தியர்’களாக்க வேண்டும்; அவர்களிடம் முதலும் இறுதியுமாக ‘இந்தியர்’ என்கிற உணர்வே மேலோங்கி நிற்க வேண்டும் என்கிற அம்பேத்கரின் உயரிய குறிக்கோளுக்கான காரணத்தை நாம் புரிந்துகொள்ளத் தவறிவிட்டோம். அம்பேத்கர் முன்வைத்த தேசியம், தேசிய விலங்கையோ, பறவையையோ அடிப்படையாகக் கொண்டதல்ல. மாறாக, மக்கள் அனைவரும் சகோதரத்துவ உணர்வுடன் அன்பைப் பரிமாறிக்கொள்வதுடன் - சக மனிதரைத் தான் என உணரும் (a longing to belong) - வேட்கையைத் தன்னகத்தே கொண்டது.
திராவிடர்கள்: நாம் அனைவரும் ‘ஒரே நாட்டினர்’ என்கிற ஓர்மையுடன் சங்கமிக்கும்போதுதான் சாதி, மதம், இனம், மொழி, தேசம், பண்பாடு உள்ளிட்ட வேற்றுமைகளைக் கடக்க முடியும் என்று அம்பேத்கர் உளபூர்வமாக நம்பினார். ஒரு மாநிலத்தின் மொழியே அதனுடைய அதிகாரபூர்வ மொழியாக இருக்கும் என்கிற நடைமுறையை ஏற்கும் அம்பேத்கர், மத்திய அரசின் நிர்வாக வசதிக்காக மட்டும் ஒரே மொழியில் தொடர்புகொள்வதை ஆதரித்தார். நிர்வாகம் தவிர்த்த பண்பாட்டுத் தளங்களில் மாநில மொழிகள் சீரிய பங்கு வகிப்பதில் அவருக்கு மாற்றுக் கருத்து இருந்ததில்லை. ஆனால், மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கட்சியினர் முன்வைக்கும் மும்மொழிக் கொள்கையுடன் அம்பேத்கரின் கருத்தை ஒப்பிட்டுப் பார்ப்பது அர்த்தமற்றது.
இத்தருணத்தில், ‘தமிழ் அல்லது திராவிடம் என்பது தென்னிந்தியாவின் மொழியாக மட்டுமே இருக்கவில்லை; மாறாக, அது ஆரியர்கள் வருவதற்கு முன்னர் இந்தியா முழுவதும் - காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை - பேசப்படும் மொழியாகவும் இருந்தது. வட இந்தியாவிலிருந்த நாகர்கள் தங்களுடைய தாய்மொழியான தமிழைக் கைவிட்டு, அதற்குப் பதில் சம்ஸ்கிருதத்தை வரித்துக்கொண்டனர். ஆனால், தென்னிந்தியாவில் இருந்த நாகர்கள் அவ்வாறு செய்யவில்லை. அவர்கள் தமிழையே தங்கள் தாய்மொழியாகத் தொடர்ந்து பேணிக் காத்து வந்தனர். ஆரியர்களின் மொழியான சம்ஸ்கிருதத்தை அவர்கள் தங்களுடைய மொழியாக ஆக்கிக்கொள்ளவில்லை. இந்த வேறுபாட்டை மனதில் கொண்டால், ‘திராவிடர்’ என்கிற பெயர் தென்னிந்திய மக்களுக்கு மட்டும் ஏன் பயன்படுத்தப்படும்படி நேர்ந்தது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்’ (அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 7; பக். 300) எனத் தமிழின் தொன்மையையும் அது இந்தியா முழுவதும் பேசப்பட்ட வரலாற்றுப் பெருமையையும் முன்வைத்துள்ள அம்பேத்கரின் கூற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அம்பேத்கரின் ஐயம்: மதத்தை வேராகக் கொண்டுள்ள சாதியை வாழ்க்கை முறையாகவும் பண்பாடாகவும் ஏற்றுக்கொண்டிருக்கும் மக்களை மொழி மட்டுமே பிணைத்து, அவர்கள் ‘ஒரே நாட்டினர்’ என்கிற உணர்வை ஏற்படுத்துமா என்கிற ஐயம் அம்பேத்கருக்கு இருந்தது. அதனால்தான் மொழி அடிப்படையிலான ஒரு தேசத்துக்குரிய தனித்தன்மை, பெருமிதம் போன்ற குணங்கள் சாதிக்கு இருந்தாலும் தேசத்துக்குச் சாதி எதிரானது என்று அம்பேத்கர் உறுதிபடச் சொன்னார். மொழிவாரி மாநிலங்களை உருவாக்குவது, அந்தந்த மாநிலங்களில் சமூக, பண்பாட்டுரீதியாக ஆதிக்கம் செலுத்தும் சாதியினரே அரசியல் தளங்களிலும் கோலோச்சுவதற்கு வழிவகுக்கும் என்று அவர் அஞ்சினார்.
‘மொழிவாரிப் பிரிவினை என்பது வகுப்புவாரிப் பெரும்பான்மையின் வசம் நமது சுதந்திரத்தைத் தாரை வார்த்ததாகவே அமைந்துவிடும். பிரச்சினையின் இந்தக் கூற்றைப் புரிந்துகொள்ள முடியாதவர்கள், மொழிவாரி மாநிலம் என்பதற்குப் பதிலாக ‘ஜாட்’ மாநிலம், ‘ரெட்டி’ மாநிலம், ‘மராட்டியர்’ மாநிலம் என்றால் புரிந்துகொள்வர்’ (அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 1; பக். 134).
இந்தியா முழுவதும் ஒரே தன்மையிலான தீண்டாமைப் பாகுபாடுகளை அனுபவிக்கும் பட்டியல் சாதியினர், அதற்கு எதிராக ஒன்றிணைந்து செயல்பட, பல்வேறு மொழிகள் பேசுவதும் ஒரு தடையாக இருக்கிறது. இந்தியாவில் தலித் மக்களின் எண்ணிக்கை 25 கோடியாக இருந்தாலும், கிராமங்களில் அவர்கள் சிதறுண்ட சிறுபான்மையினராகவே இருப்பதால் நாள்தோறும் அடக்குமுறைகளுக்கு ஆட்படுகின்றனர். மறுபுறம் அம்மக்கள் சந்திக்கும் வன்கொடுமைகள், அந்தந்த மாநிலங்களில் அதே மொழி பேசும் மக்களால்தான் நிகழ்த்தப்படுகின்றன. இந்நிலையில், சாதியால் பிளவுபட்டுள்ள மக்களை மொழி பிணைக்கவில்லை என்பதும் சாதியுணர்வை மொழியுணர்வு மழுங்கடித்துவிடவில்லை என்பதும் தெளிவாகிறது.
அதேநேரத்தில் மதச் சிறுபான்மையினர், தாங்கள் நாடெங்கும் சந்திக்கும் அச்சுறுத்தல்களை மொழிகளைக் கடந்தும் எதிர்கொண்டு, ஒருமித்த உணர்வைப் பெறுவது, அவர்களுக்கு உளவியல் பலத்தை அளிக்கிறது. ஆனால், தலித் மக்கள் இந்து மதத்தினராக இருந்தாலும் வன்கொடுமைகளுக்கு எதிரான ஒருமித்த ஆதரவு, அம்மதத்தினரிடமிருந்தோ, அவர்கள் சார்ந்திருக்கும் மொழி பேசும் மக்களிடமிருந்தோ கிடைப்பதில்லை. இத்தகைய முரண்கள் தீர்க்கப்பட வேண்டும் எனில், நாம் ‘ஒரே நாட்டினர்’ என்கிற அரசமைப்புச் சட்டத்தின் அறவுணர்வை மேலோங்கச் செய்ய வேண்டும் என்று அம்பேத்கர் வலியுறுத்தினார். மத்திய அரசின் ஆதிக்கத்துக்கு எதிரான மாநில சுயாட்சிக் கொள்கையோ, தனிநாடு கோரிக்கையோ இச்சமூகச் சிக்கலுக்கான தீர்வாகாது.
ஒரே தேசமா? - இந்தியாவில் உள்ள 6,000 சாதிகளில் எந்தவொரு தனி சாதியும் தலித் மக்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கைக்கு இணையானது அல்ல. இருப்பினும் தலித் மக்களின் எண்ணிக்கை பலம் அவர்களுக்கான அரணாக மாறவில்லை. தவிர, தனித் தொகுதி உள்ளிட்ட எந்தத் தொகுதியாக இருந்தாலும் - தலித் அல்லாதவர்களே ‘பெரும்பான்மை வாக்காளர்’களாக உள்ள நிலையில் - தலித் மக்கள் எதையும் தீர்மானிக்க முடியாத சிறுபான்மையினராகவே இருக்கின்றனர். எனவேதான், மதச் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் ‘மதவாதம் தலைதூக்குகிறது’ என நாடு முழுவதும் கண்டனம் கிளம்பும் என அஞ்சும் சமூகம், சாதிரீதியான தாக்குதல்களை நாள்தோறும் நிகழ்த்துவதற்குத் தயங்குவதே இல்லை.
மொழி மீதான ஆதிக்கத்தை எதிர்ப்பதற்குச் சாதிகளைக் கடந்து ஓரணியில் திரளும் எந்தவொரு மாநிலமும் - அதே மொழி பேசும் - தலித் மக்கள் மீதான ஆதிக்கத்துக்கும் பாகுபாட்டுக்கும் வன்கொடுமைகளுக்கும் எதிராக அணிதிரள்வதில்லை. தவிர, தலித் அல்லாத பிற சாதியினரும் மொழியுணர்வோடு திருமணம், கோயில், சமூக, பண்பாட்டு உறவுகளை வளர்த்துக்கொள்ளவும் தயாராக இல்லை. அரசியல் ஓர்மையை உருவாக்கும் மொழிப் பெருமிதங்களால் ‘நாம் ஒரே மொழியினர்’ என்கிற சமூக ஓர்மையையும் சமூகக் கலந்துறவாடலையும் உருவாக்க முடிவதில்லை.
அதனால்தான், நாம் ‘ஒரே தேசத்தவர்’ என்பதை நம்புகிறோம் எனில், நாம் மிகப்பெரிய மயக்கத்தில் இருக்கிறோம் என்று வேதனையுடன் சுட்டிக்காட்டிய அம்பேத்கர், ‘ஆயிரக்கணக்கான சாதிகளால் பிளவுபட்டுக் கிடக்கும் மக்கள், எப்படி ‘ஒரே தேசத்தவர்’ ஆக முடியும்? சமூகரீதியாகவோ, உளவியல்ரீதியாகவோ நாம் ஒரே தேசத்தவர் இல்லை என்பதை எவ்வளவு சீக்கிரம் உணர்கிறோமோ அந்த அளவுக்கு நல்லது. அதை உணர்ந்துகொண்டால்தான் உண்மையிலேயே நாம் ஒரு தேசமாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும் அந்த இலக்கை எட்டுவதற்குச் செய்ய வேண்டிய வழிமுறைகளையும் பற்றி நாம் சிந்திக்கத் தொடங்குவோம்’ என்றார்.
மேலும், ‘ ‘தேசம்’ என்பது நடைமுறைச் சாத்தியமாக வேண்டுமானால், நாம் இந்த இடர்பாடுகளை எல்லாம் கடந்துவர வேண்டும். காரணம், தேசம் என்கிற ஒன்று இருந்தால்தான், அங்கே சகோதரத்துவம் இருக்க முடியும்’ என்றார் அம்பேத்கர் (அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 13; பக். 1,217).
நாம் தாய்மொழியை நேசிப்பது உண்மையானால், அத்தாயின் மக்கள் மட்டும் எப்படி வேற்று இனத்தவராக, அந்நியர்களாக இருக்க முடியும்? அம்பேத்கர் முன்னிறுத்தும் ‘இந்தியன்’ என்கிற ஓர்மை, அனைத்து வகையான வேறுபாடுகளையும் துறந்த - நாகர் காலத்து ‘தமிழன்’ - என்கிற ஓர்மைதான்!
ஆசிரியர், ‘தலித் முரசு’
தொடர்புக்கு: dalitmurasu@gmail.com