சிறப்புக் கட்டுரைகள்

குழந்தை எழுத்​தாளர் சங்​கத்​தின் பவள விழா ஆண்டு

தேனி சுந்தர்

1950 ஆம் ஆண்டு இந்​திய அரசி​யல் வரலாற்​றில் மிக முக்​கிய​மான ஆண்​டு. ஆம், அரசி​யலமைப்​புச் சட்​டம் இயற்​றப்​பட்​டு, உலக அரங்​கில் குடியரசு நாடாக தன்​னைப் பறை​சாற்​றிக் கொண்​டது. அதே ஆண்டு இன்​னொரு வகை​யில் உலக இலக்​கிய வரலாற்​றில் மிக முக்​கிய​மான ஆண்​டாக அமைந்​தது. 1950, ஏப்​ரல் 15 ஆம் நாள் அத்​தகைய சிறப்​பிற்கு காரண​மாக இருந்​தது.

குழந்தை இலக்​கி​யத்​தின் அடை​யாள​மாகத் திகழ்ந்து வரு​கிற அழ.வள்​ளியப்பா சென்​னை​யில், பதிப்​புத்​துறை வித்​தகரும் தனது நண்​பரு​மான பழனியப்​பா​வின் வீட்​டில் ஏப்​ரல் 15 அன்று ஒரு முக்​கிய​மான சந்​திப்​பிற்கு ஏற்​பாடு செய்​திருந்​தார். அந்த வீடு தான் குழந்​தைப் பதிப்பக அலு​வல​க​மாக​வும் அப்​போது செயல்​பட்​டது. எழுத்​தாளர்​கள், கவிஞர்​கள், ஓவியர்​கள், சிறார் இதழ்​களின் ஆசிரியர்​கள், பதிப்​பாளர்​கள் என குழந்தை இலக்​கியச் செழு​மைக்கு வித்​திடு​கிற அனைத்து தரப்​பிற்​கு​மான அழைப்பு அது.

அந்​தச் சந்​திப்பு தான் குழந்தை இலக்​கி​யத்​தின் மிக முக்​கிய​மான சரித்​தர​மாக மாறியது. ‘குழந்தை எழுத்​தாளர் சங்​கம்’ என்​கிற அமைப்பு உரு​வாக்​கப்​பட்​டது. பதிப்​புத்துறை​யில் பல புது​மை​களை முயற்​சித்த சக்தி வை.கோ​விந்​தன் தலை​வ​ராக​வும் அழ.வள்​ளியப்பா மற்​றும் வானதி திரு​நாவுக்​கரசு ஆகியோர் செய​லா​ளர்​களாக​வும் தேர்வு செய்​யப்​பட்​டனர்.

அதன் பிறகு தெய்வ சிகாமணி, ஆர்​.வெங்​கட்​ராமன், கல்வி கோபால​கிருஷ்ணன், சௌந்​தர், நல்ல தம்பி எனப் பலரும் தலை​வர் பொறுப்​பில் இருந்து செயல்​பட்​டனர். 1955 ஆம் ஆண்டு சங்​கத்​தின்தலை​வ​ராக பொறுப்​பேற்​று கொண்டார் அழ.வள்​ளியப்பா. பின்னர், மதுரை காம​ராசர் பல்​கலைக் கழகத்​தில் குழந்தை இலக்கியம் பற்றி பேசிக் கொண்​டிருந்த போது மயங்கி விழுந்த​து; அதன் பின் அவரது மறைவு வரை​யிலு​மாக சுமார் கால் நூற்​றாண்டு காலம் என, சங்​கத்​தின் பொறுப்​பில் இருந்து, குழந்தை இலக்​கி​யத்​தின் பொற்​கால ஆட்​சியை அழ.வள்​ளியப்பா நடத்​தி​னார் என்றே சொல்ல வேண்​டும்.

இன்று புத்​தகத் திரு​விழாக்​கள் தமிழ்​நாடு அரசின் அக்​கறை, முயற்சி காரண​மாக மாவட்​டந்​தோறும் நடை​பெற்று வரு​கின்றன. கிட்​டதட்ட 75 ஆண்​டு​களுக்கு முன்பு நிலைமை அப்​படி அல்ல. ஆனால் சென்​னை​யில் இந்​தி​யா​வின் முதல் புத்​தகத் திரு​விழாவை நடத்​தி​யது குழந்தை எழுத்​தாளர் சங்​கம். படைப்​பாளர்​களின் முழு விவரங்​களை​யும் கணினி​யில் ஒரு தட்​டுத் தட்டி, தேடி எடுக்​கும் காலம் அல்ல அன்​று.

பல்​வேறு புனைப் பெயர்​களில் எழு​திக் கொண்​டிருக்​கும் தங்​கள் விருப்​பத்​திற்​குரிய எழுத்​தாளர்​களை அறி​யும் ஆவல் வாசகர்​களுக்கு மிகு​தி​யாக இருக்​கும். அதை நிறைவு செய்​யும் பொருட்டு அன்றே குழந்தை எழுத்​தாளர் புகைப்​படக் கண்​காட்​சியை நடத்​தி​யது சங்​கம். குழந்தை இலக்​கிய எழுத்​தாளர்​களைத் தேடிக் கண்​டு​பிடிக்​கும் வகை​யில் பல்​வேறு போட்​டிகளை நடத்​தி​யது. நூல் வெளி​யிட முடி​யாதவர்​களின் நிலைமை அறிந்து கையெழுத்து பிர​தி​யை​யும் அனுப்​பலாம் என அறி​வித்து சிறந்த படைப்​பு​கள் நூலாக்​கம் பெற சங்​கமே வழி​வகை செய்​தது. படைப்​பாளர்​களுக்குத் துணை நிற்​கும் ஓவியர்​கள், பதிப்​பாளர்​களை​யும் விழாக்​களில் கவுர​வித்து மகிழ்ந்​தது.

1956ஆம் ஆண்டு, நவம்​பர் 14ம் தேதி நேரு​வின் பிறந்த நாள் அன்று தில்​லி​யில் அனைத்​திந்​திய புத்​தகக் கண்​காட்சி நடை​பெற்றது. விழா​விற்கு வந்திருந்த நேரு அனைத்து மொழிகளி​லும் குழந்​தைகளுக்​காக வெளிவந்த நூல்​கள் பற்றி அழ.வள்​ளியப்​பா​விடம் கருத்​துப் பரி​மாற்​றம் செய்​திருக்​கிறார். அதன் விளைவு, அழ.வள்​ளியப்பா அதை ஒரு பேரியக்​க​மாக மாற்றி விட்​டார். ஆம், அடுத்து 1957ஆம் ஆண்​டிலிருந்து ஒவ்​வொரு குழந்​தைகள் தினத்​தி​லும் குழந்​தைகளுக்​கான நூல்​களை வெளி​யிடு​வதை பதிப்​பகங்​கள், படைப்​பாளர்​களிடம் பேசி வழக்​கப்​படுத்​தி​னார். 1957 – 1975 வரை​யிலும் அப்​படி வெளிவந்த நூல்​களின் எண்​ணிக்கை 783.

குழந்தை எழுத்​தாளர் யார்? எவர்? என்​கிற தொகுப்​பு​களை​யும் சங்​கம் வெளி​யிட்​டது. 1975 ஆம் ஆண்டு சங்​கத்​தின் வெள்ளி விழாவை முன்​னிட்டு 370 பேருடைய விவரங்​களை கொண்ட தொகுப்பு வெளி​யானது. புதி​ய​வர்​களைப் பயிற்​று​விக்க அனுபவம் – அறி​முகம் எனும் நிகழ்ச்​சிகள், வெளி​நாட்டு குழந்தை இலக்​கிய படைப்​பாளி​களு​டன் கலந்​துரை​யாடல் நிகழ்ச்​சிகள், சிறார் நாடகத் திரு​விழாக்​களை நடத்​தி​யது குழந்தை எழுத்​தாளர் சங்​கம். நூல்​கள் வெளி​யிடு​வதோடு தன் பணி​கள் முடிந்து விட்​ட​தாக கரு​தாத சங்​கம், நூல​கத்தந்தை எஸ்​.ஆர்​.ரங்​க​நாதன் தலை​மை​யில்ஒரு​முறை குழு அமைத்​தது. 263 நூல்​களைக் கொடுத்து நூல்​களின் தரம், உள்​ளடக்​கம், வடிவ​மைப்பு பற்றி ஆய்வு செய்து தரக் கோரியது. ஆய்வு முடிவு​களை​யும் பரிசீலனைக்கு எடுத்​துக் கொண்​டனர்.

1959 ஆம் ஆண்​டில் இருந்து குழந்தை இலக்​கிய மாநாடு​களை​யும் நடத்​தத் தொடங்​கியது சங்​கம். 1959, 1961, 1963, 1972, 1977, 1979, 1981, 1987 என எட்டு மாநாடு​களை மிகச் சிறப்​பாக நடத்​தி​யது. மாநாடு​களில் குடியரசுத் தலை​வர், ஆளுநர், முதல்​வர், அமைச்​சர்​கள் என மிக முக்​கிய​மான ஆளு​மை​கள் கலந்து கொண்டு சிறப்​பித்​தனர்.

குழந்​தைகளுக்​காக எழு​திய அமெரிக்க எழுத்​தாளர் மன்றோ லீப், “குழந்​தைகளுக்​காக எழுது​வோர் ஒன்று கூடி சங்​கம் அமைத்​திருப்​பது பாராட்​டிற்​குரியது; வரவேற்​கத் தக்​கது; உலகத்​திற்கே ஒரு புது​மை” என்று பாராட்டி இருக்​கிறார். இத்தகைய சிறப்பு மிக்க பணிகளை மேற்கொண்ட சங்கம் 1975 ஆம் ஆண்டு தமது வெள்ளி விழாவை மிகச் சிறப்பாக கொண்டாடியது. இந்த 2025 ஆம் ஆண்டு வரலாற்றுச் சிறப்பு மிக்க குழந்தை எழுத்தாளர் சங்கத்தின் பவள விழா ஆண்டாகும். ‘‘என் குழந்​தைக்கு என்ன புத்​தகம் வாங்​கித் தரலாம்? எங்கு கிடைக்​கும்?’’ என்று இன்​றும் கூட ஏராள​மான பெற்​றோர்​கள் கேட்​பது உண்​டு. இதற்காகத்தான், 1987 ஆம்ஆண்​டிலேயே குழந்​தைகளுக்​காக வெளிவந்த நூல்​களின் விவரத் தொகுப்​பினைதமிழக அரசு வெளி​யிட வேண்​டும் என சங்​கம் கோரிக்கை வைத்​திருக்​கிறது. இப்​போதும் அந்த கோரிக்கை பொருத்​த​மான ஒன்று தான்.

ஏராள​மான வீடு​களுக்கு குழந்தை இலக்​கிய நூல்​கள் சென்று சேர வேண்​டும். குழந்​தைகளின் கைகளில் அந்​நூல்​கள் தவழ வேண்​டும். விலை குறைய வேண்​டு​மா​யின் குழந்தை இலக்​கிய நூல்​களுக்கு அரசு மானி​யம் வழங்க வேண்​டும் என்​பது குழந்தை எழுத்​தாளர் சங்க வெள்ளி விழா (1975) மா​நாட்​டின் மிக முக்​கிய கோரிக்கை ஆகும். இப்போதும் அந்த கோரிக்கை நீடிக்கிறது. சிறார் இலக்​கிய வளர்ச்​சி​யின் அனைத்​துக்கோணங்​களி​லும் சிந்​தித்து செயல்​பட்ட குழந்தை எழுத்​தாளர் சங்​கத்​தின்​ பணி​களைப்​ போற்​று​வோம்​; குழந்​தை இலக்​கியப்​ பயிர்​ வளர்ப்​போம்​; வளர்​த்​தெடுப்​போம்​.

SCROLL FOR NEXT